பேருந்து நிலையப் பயணத்துக்கான
வாடகை வாகனம் ஓட்டி வந்தவர்
விக்ரஹ ஆராதனையை விரும்பாதவராகவே இருந்தார்
பார்த்துப் பார்த்து பதிவு செய்த
நீண்ட தூரப் பயணப் பேருந்து ஓட்டுநரின் கழுத்தில்
மின்னிக் கொண்டிருந்தது கொலைக் கருவி
குல தெய்வக் கோவிலுக்கு அருகிலிருந்த
சிறு நகரப் பேருந்து நிலைய நுழைவாசலில்
திரும்பிச் செல் என்பதுபோல் கைகாட்டி நின்றது
போலி நாத்திகனின் புதிய சிலை
குளித்துப் புத்தாடை அணிந்து புறப்படத் தங்கிய விடுதி
அமைந்திருந்தது ஆலயத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்
மலைக்கோவிலுக்கு இட்டுச் சென்ற ஆட்டோவில்
மதத்தை அபினாக மிதித்தவனின் ரத்த முக ஸ்டிக்கர்
ஓய்வு நாளானதால் வழி நெடுக
உரித்துத்தொங்கவிடப்பட்டிருந்தன
உன்னை நம்பி வலம் வந்த உயிரினங்கள்
பூ கட்டி, பழம் விற்று, செருப்புக்குக் காவல் இருந்தவரின்
பைக்கில் பொன் நிறத்தில் மின்னுகிறது புரியாத எழுத்து
மலை உச்சியில் நின்று பார்த்தபோது
ஆலயத்துக்குச் சொந்தமான
விற்று முடிக்காத விளை நில பிளாட்களின்
கம்பி வேலிக்கு வெளியே கழுத்து மணி அசைய
தொண்ட வறளச் சுற்றிக்கொண்டிருந்தன காவிப் பசுக்கள்
அர்ச்சகருக்குக் கொடுத்த ஐநூறு ரூபாய்
பிரகாரம் சுற்றி வருவதற்குள் இடம் மாறியிருந்தது
அர்ச்சனைச் சீட்டு கிழித்துக் கொடுத்த அற நிலையத்துறையானுக்கு
கருவறை முன் கை கூப்பி நின்றபோது
மனதில் எழுந்தது ஒரு கேள்வி:
உன் மேல் பக்தியே கொள்ளாதவருக்கும்
என்(எம்) ஒற்றை குல தெய்வப் பயணம் மூலமும்
இத்தனை இகலோக அருள்பாலிக்கிறாயே எம் பகவானே
உன் பக்தர்களுக்கும் கொஞ்சம்
ஓரக்கடைக்கண் காட்டக்கூடாதா?
பசியால் வாடும் உன் ஆவினங்களுக்கு
எட்டாத இடத்தில்தான் முளைக்கவேண்டுமா
உன் இறுதிப் பசும்புல் வெளி?
இதுவும் பறிபோனபின் எங்குதான் மேயும்
உன் திருக்கோவில் ஊரையே சுற்றிச் சுற்றிவரும்
உள் நாட்டுப் பசுக்கள்?
என் சிறு குடத்தில் முகர்ந்து வரும் நன்னீரை
உன் மலைக்கோவில் நந்தவனத்துக்கு
ஒரு சொட்டுகூட மிஞ்சாமல்
எத்தனை கரங்கள் வழிப்பறிக்கின்றன?
வேறு மதப் பயண வழிகள் எதுவுமே
இப்படி விபரீதமாகியிருக்கவில்லையே
அர்ச்சகரின் தட்டில்
அரையணா போட
எத்தனை தசமபாக டோல்கேட்கள்
எத்தனை சதகாக், ஜெசியாக்கள்
எத்தனை தகர உண்டியல்கள்
எத்தனை கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது?
இறுதி இலக்கான உன் சன்னதி மட்டுமல்ல
அதை நோக்கி இட்டுவரும் பாதையும் தரவேண்டாமா
இனிய புனித யாத்திரை அனுபவத்தை.
இட்டுவரும் பயணச் சங்கிலியின்
அத்தனை கண்ணியும் அறுந்தாலும் / அறுத்தாலும்
கிடைப்பதைக் கொண்டு திருப்திப்படும் எளிய பக்தன்
உருண்டு புரண்டாவது உன் நாமம் ஜெபித்தபடி
உன் வாசலுக்கு வந்துகொண்டுதான் இருப்பான்
உன் கடமையை நீ ஆற்றவேண்டாமா
உலகாளும் எம்பெருமனே!
லாயல் கஸ்டமரைப் புறக்கணித்துவிட்டு
புதிய கஸ்டமருக்கு மட்டும்
புதுப் புது சலுகை தருவான் கார்ப்பரேட் வியாபாரி
நீயோ லாயல் பக்தனையும் கைவிட்டுவிட்டு
புதிய பக்தனையும் சேர்க்காமல்
புதிரான வணிகம் செய்கிறாயே
நல்லது...
நீ செய்வது வணிகமில்லை என்கிறாயா?
பக்தி/மதம் வணிகமாவதன் மேல்
அத்தனை வெறுப்பென்றால் பகவானே
நீ அதைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது
வேறு யாரையும் அதைச் செய்யாமலும் தடுத்தாகவேண்டும்.
ஜோ நஹிம் காத்தா ஹை,
வோ கிஸி ஒளர்க்கோ பி,
கானே நஹிம் தேனா சாஹியே மஹோதேவ்!
உன் மதத்தைப் பரப்பவேண்டாம் என்று
நீ நினைப்பது நல்லதுதான்
அடுத்தவனைப் பரப்பவிடாமல் தடுப்பதும் அவசியமே
பயிர் செய்தால் மட்டும் போதாது
வலுவான வேலியும் அமைக்கவேண்டும்.
நீ குப்பை கொட்டாமல் இருந்தால் மட்டும் போதாது
கண்டவன் வந்து குப்பை கொட்டாமலும் காப்பாற்றவேண்டும்.
குலதெய்வப் பயண வழியெங்கும்
உன் கொடி பறக்கவேண்டும் எம்பெருமானே
உன் அருளாலே உன்னையும் காத்துக்கொள்
உலகை ஆளவேண்டிய உத்தமனே
*