Saturday, January 24, 2026

சிவசக்தி

கார்மேகமும் 
வர்ணம் பூச
முயல்கிறது ...

உன் 
வருகைக்கு 
கருநிறம்
காட்டினால் 
எதிர்ப்பாகி
விடுமாம்!!
************************************************
கவிஞனாகும்
வரம்
கேட்டான்
ஒருவன் ...

கொடுத்து
விட்டேன் ..

உன்னைப்போல்
ஒரு
காதலியை!!
*************************************************
இலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
காதலுக்கு ...

என்ன
எழுதுவதென்று
தெரியவில்லை ...

உன் 
பெயரைத்தவிர ...
************************************************
சூரியனுக்கு
உன் மீது
என்ன
கரிசனமோ!!
உனது
நிழலில் கூட
கருமை தவிர்த்து
வர்ணஜாலம்
காட்டுகிறானே!!
**************************************************
உன்
பார்வையே
ஆக்கவும்
அழிக்கவும்
செய்கிறதே !!

நான்
என்ன
செய்யப்போகிறேன்..?
இந்த
சூலத்தால்!!
***************************?***********************
என் 
அசைவை 
சக்தி தாண்டவம் 
என்றல்லவா 
சொல்ல வேண்டும் !

சக்தியின்றி 
இங்கே 
சிவம் 
ஜடம்தானே !
***************************?***********************
வார்த்தை கட்டுகளாய் 
நான் எழுதியதை 
நீ 
வாசிக்க ஆரம்பித்தாய் !!

கவிதை பிறந்தது !!
********************************************************
தொலைந்தவர்களை 
மை போட்டு 
பார்ப்பார்களாமே !!

நீ 
கண்ணில் 
மை போட்டதால்தானே 
நான் 
தொலைந்தே 
போனேன் !!
********************************************************
உன்
விழி சொல்லும்
கவிதைகளுக்கு
விளக்க உரை எழுத
திணறி
தவிக்கிறது
இந்த AI
**************************(******************
உன் 
பெயரை 
உச்சரிக்கும் 
ஒவ்வொரு 
நொடியும் 
இதயம்  
புது மொழியை 
கற்று கொள்கிறது !
********************************************************
உன் 
கண்கள்தான் 
நொடிக்கொரு 
கவிதை எழுதுகிறதே !

ஓலைச்சுவடியில் 
என்ன 
எழுத போகிறாய் !?
***************************************************
என் 
சூலாயுதத்தை விட 
பலமாக 
தாக்குகிறதே !!

அப்படி 
என்னதான் 
வைத்திருக்கிறாய் 
கண்களில் !!
***************************************************



Thursday, January 15, 2026

சிவசக்தி காதல்

ஒரு
முட்டாள் கவிஞன்
பாடினானாமே?
நான்
மனிதனாய் பிறந்து
காதலித்து
வேதனையில்
வாட வேண்டுமென்று!!
மடையன் ...
காதலுக்கு
உவமையே
நாமென்று
அறியான் 
போலும்!!
**************************************
உன்
மனதிலாடும் 
சித்தன்
நான்!!
ஏனோ
என்னை
மயானத்திலாடும் 
பித்தன்
என்கிறார்கள்!!
*****************************************
நீ 
தடுக்கவே 
வேண்டாம் ...
இதயத்தில்
இருக்கும்
சக்தியை தாண்ட
ஆலகாலத்திற்கு
சக்தி இருக்கறதா 
என்ன!?
****************************************
மும்மொழி
திட்டம்
இதுதானோ!!?
நீ
பேசும் மொழி..
உனது
கண்களின் மொழி..
உனது
மௌன மொழி!!
******************************************
கண்களாலேயே 
என்
இதயம் முழுதும்
அள்ளிப்போகிறாய் ...
இதயமற்றவனென
பரிகசிக்கிறார்கள்
அடியார்கள்!!
******************************************
நான்
இடப்பாகத்தை
உனக்கு
தந்ததாக
கதை கட்டுகிறார்கள் ...
எனது
எல்லா பாகமும்
நீயே ஆக...
எப்பாகத்தை
தருவது
நான்!?
*****************************************
மனக்கிளையில்
நீ
சாய்ந்த
இடங்களிலெல்லாம்
துளிர்
விட்டிருக்கிறது ...
உன்
நினைவுகள்!!
********************************************
உலகிற்கு
ஒளி கொடுப்பது
நானே
என்கிறார்கள் ...
எனக்கல்லவா
தெரியும்
மின்சாரமாய் 
நீ
இருக்கிறாய்
என்று!!
**********************************************
உயிர் 
கண்களுக்கு
தெரியாதாமே !!
நீ
எப்படி
தெரிகிறாய்
என்
கண்களுக்கு!?
***********************************************
வெறும் 
வார்த்தை கட்டுகளாய் 
நான் கிறுக்கியது 
கவிதை 
ஆகி விட்டது..
நீ படித்த போது!!
************************************************
தென்றல் 
சுமந்து வருகிறது
உன் வாசமும் சுவாசமும் ...

வாசத்தை 
திருடுகிறது 
ரோஜாக்கூட்டம் ...

சுவாசத்தை
திருடுகிறேன்
நான் ...!!
*****************************************************