Wednesday, June 11, 2025

பட்டாம் பூச்சி

சாயம் போகாத
வர்ணத்தை
பூசி நடப்பது
பட்டாம்பூச்சி
மட்டும்தான்
போலிரூக்கிறது !!
======================

நீ பேசுவது 
காதிலும் 
உன் மௌனம் 
இதயத்திலும் 
ஒலிக்கிறது !!

===========================

எந்த நாடும் 
இன்னமும் 
கண்டு பிடிக்கவில்லை ..
அவள் 
பார்வைக்கணையை விட 
அதிக சேதத்தை 
ஏற்படுத்தும் 
ஏவுகணையை !!

===========================

கூட்டத்தில் இருந்தபோது 
உணரவில்லை  ...
தனித்து 
விடப்பட்டபோது 
புரிந்தது ...
நான் யாரென்று!!!!

===========================

குற்றவாளிகள் 
தப்பித்து 
விடுகிறார்கள் ...
நிரபராதிகளுக்கு 
ஆயுள் கால தண்டனை ...
காதல் நீதி மன்றத்தில் !!

===========================

இரவும் 
பகலும் 
வீண்தானோ !!?
என் 
உறக்கமும் 
விழிப்பும் 
உன் 
கட்டுப்பாட்டில் 
இருப்பதால் !!!

===========================

சிரிப்பு 
புன்னகை 
கோபம் 
தாபம் 
தவிப்பு 
ஊடல் 
வியப்பு 
என 
என்னென்ன உணர்வுகளையோ 
வெளிப்படுத்துகிறாய் ...
காதலை தவிர 
வேறெதையும் 
வெளிப்படுத்த 
தெரியவில்லை 
எனக்கு !!

===========================

எழுத முடியாத 
ஒரு 
கவிதையில் 
ஒளிந்திருக்கிறது 
உனது 
பெயர் !!!

===========================

அஞ்சாதே !!
அடுத்த பிறவியில் 
உன்னை 
ஏமாற்றும்படி 
இறைவனால் 
என்னை படைத்து 
உனக்கு தண்டனை கொடுக்க 
முடியாது !!
அவனுக்கு தெரியாது ..
எந்த பிறவியிலும் 
உன்னை ஏமாற்ற 
என்னால் முடியாதென்று !!

===========================

உனது 
ஒவ்வொரு 
நினைவுகளும் 
முற்று புள்ளிக்கு பதில் 
காற் புள்ளியையே 
விட்டு விட்டு 
செல்கிறது 

=====================

உன் காதல்
சிறந்ததா...
என் காதல்
சிறந்ததா ...
என்ற போட்டிக்கிடையே
நான்தான் சிறந்தவன்
என்று
நீரூபித்து போகிறது
காலம் !!

============================
கண்களால் 
நாற்று நட்டு ...
உதடுகளால் 
உரமிட்டு ...
காதலால்  
மழை பொழிந்து ...
விளைய செய்து 
விடுகிறாய் ..
என் 
கவிதை 
வயலை !!

==============================
தொலைந்து 
போனதென்னவோ 
சாவிதான் ...

உடைப்பட்டது 
பூட்டு !!

=================================

நீ 
தொலைத்த 
இடத்தில்தான் 
இன்னமும் 
இருக்கிறேன் ...

என்றாவது 
ஒருநாள் 
தேடி 
வருவாயென !!

=================================