Friday, November 23, 2012

விடியல் காத்திருப்பதில்லை


என்னை விட உன்னை நேசித்தவருண்டு 
உன்னை விட என்னை எவரும் நேசித்ததில்லை !!!

உன் தேவைகள் யதார்த்தமானவை ..
என்  உணர்வுகள் புரிந்து கொண்டன - தாமதமாய் !!!!

அக்கரை  ஒன்றும் தூரமில்லை ...
அதிக தூரம் வந்துவிட்டேன் !!!

லாபம் இன்றி ஏது வியாபாரம் ....
காரணம் வாழ்க்கை இங்கு ஆதாரம் !!!!

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை ...
வழக்கிட இனி மனதும் இல்லை  !!!!!

என்னோடு வர உனக்கு விருப்பமில்லை - ஆனால் 
எனக்கு விருப்பமில்லை நீ தனித்திருப்பதில் !!!

தோற்பது யாராக இருந்தாலும் ....
ஜெயிப்பது நீயாக இருக்க வேண்டும் !!!!

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று ....
எதை இழந்தேன் என்று புரியவில்லை !!

வாள் பட்ட காயம் கூட ஆறிவிடும் ...
நாள் பட்ட விதை முளைப்பதில்லை !!!

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு ....
உணர்வுகளை மீறினால் வாழ்வும் நஞ்சு !!!

நீ நீயாக இருக்க  ...
நான் நானாகவே இருக்கிறேன்  !!!!

பொருந்தாத காலத்தில்  .....
நீங்காத நினைவுகள் !!!!!!!

உதிர்ந்து  போன சருகாய்  ...
கலைந்து போன கனவுகள் !!!!

நான் ஒன்றும் பினிக்ஸ் பறவை அல்ல ...
சாம்பலில் இருந்து எழ !!!!

நெருங்கி வருகிறது ....
விடியல் அல்ல ... அஸ்தமனம் !!!

மீண்டும் விடியலாம் ..... ஆனால் ..
விடியல் காத்திருப்பதில்லை !!!!

Thursday, November 22, 2012

மாறன் செய்த காயம்


கொத்து கொத்தாய்  மலர்கள் 
பூஜைக்கு போவதேதோ !!
முத்து முத்தாய் ஆசைகள் 
என் காதலும் அது போல் தானோ !!!

விழியோரம் தினம் தினம் 
உலா வரும் கரு மேகங்கள் !!!
தோழி உனக்கு புரியாதோ 
என் மனதின் தாபங்கள் !!!

பனித்துளி சுமக்கும் மலர்கள் 
பகலவன் வரும் வரை !!
நீர்த்துளி சுமக்கும் விழிகள் 
தோழி நீ வரும் வரை !!

புரிந்தும் பாரா  முகமாய்
புறக்கண் காட்டும் உன் மாயம் !!
தெரிந்தும் தொடருது என் நினைவு 
இது மாறன் செய்த காயம் !!

கனவு நாயகியே


கனவு   நாயகியே 
கண் திறந்து நீயும் பார் 
பார்க்காமல் போவதுவும் ஏனோ 
பரிதவிக்கிறேன் தினம் நானும் 

அன்று நீ காணாத   காற்று 
இன்று நீ எங்கள் இதயத்தின் நாற்று 
போராடி போராடி தோற்று 
போதும் இனியாவது  மனதை மாற்று 

விரும்பிய வாழ்க்கை தனை தேடி 
திரும்பிய பக்கமெல்லாம் ஓடி 
அரும்பியதே ஆசைகள் கோடி 
இரும்போ உன் மனது என் சேடி 

கடல் கடந்து போனவனுக்கு  
விரல் கடக்க துணிவில்லை 
விரல் நுனியில் உலகமாம் 
நிழல் கூட எனதில்லை 

கணினியில் மோகம் கொண்டு 
கானல் நீரில் நனைந்து 
மனம் ஏங்கும்  மோனத்தில் 
கனல் மூட்டுது இதயத்தில் 

இல்லத்தில் நீ இருந்தால் 
அல்லல்  வர அஞ்சுமே 
வெல்லத் தமிழில் கொஞ்சம் 
மெல்லச்  சொல் நீயே தஞ்சம் 

தளர்ந்து போனது மனது 
முதிர்ந்து போனது உடம்பு 
உதிர்ந்து போகும் நிலையிலும் 
அயர்ந்து போகாது உணர்வு 

துள்ளி எழும்  நாளில் 
வெள்ளியாய் நீ இருந்தாய் 
துவண்டு விழும் நாளில் 
தோளோடு சாய்ந்து விடு 

வட்டமிட்டு போகும் மேகம் 
முத்தமிட்டு போகுது நிலவை 
சத்தமின்றி நான் அடங்கும்முன் 
சொத்தாய் நீ வந்து விடு