கனவு நாயகியே
கண் திறந்து நீயும் பார்
பார்க்காமல் போவதுவும் ஏனோ
பரிதவிக்கிறேன் தினம் நானும்
அன்று நீ காணாத காற்று
இன்று நீ எங்கள் இதயத்தின் நாற்று
போராடி போராடி தோற்று
போதும் இனியாவது மனதை மாற்று
விரும்பிய வாழ்க்கை தனை தேடி
திரும்பிய பக்கமெல்லாம் ஓடி
அரும்பியதே ஆசைகள் கோடி
இரும்போ உன் மனது என் சேடி
கடல் கடந்து போனவனுக்கு
விரல் கடக்க துணிவில்லை
விரல் நுனியில் உலகமாம்
நிழல் கூட எனதில்லை
கணினியில் மோகம் கொண்டு
கானல் நீரில் நனைந்து
மனம் ஏங்கும் மோனத்தில்
கனல் மூட்டுது இதயத்தில்
இல்லத்தில் நீ இருந்தால்
அல்லல் வர அஞ்சுமே
வெல்லத் தமிழில் கொஞ்சம்
மெல்லச் சொல் நீயே தஞ்சம்
தளர்ந்து போனது மனது
முதிர்ந்து போனது உடம்பு
உதிர்ந்து போகும் நிலையிலும்
அயர்ந்து போகாது உணர்வு
துள்ளி எழும் நாளில்
வெள்ளியாய் நீ இருந்தாய்
துவண்டு விழும் நாளில்
தோளோடு சாய்ந்து விடு
வட்டமிட்டு போகும் மேகம்
முத்தமிட்டு போகுது நிலவை
சத்தமின்றி நான் அடங்கும்முன்
சொத்தாய் நீ வந்து விடு
No comments:
Post a Comment