Sunday, July 31, 2022

வாக்கு

வாக்கு
செலுத்தியவனை
சாவடிப்பதால்
அந்த பெயரோ

===================

ஆசையே 
துன்பத்துக்கு காரணம் 
என்றாய் ...

ஆசையை 
விட்டு விட வேண்டும் 
என்று நினைப்பதும் 
என்பதும் 
ஒரு ஆசைதானே ...

Thursday, July 14, 2022

ஆசை கொடி

 உள்ளத்தில் 

பல எண்ண கோட்டைகளை 

கட்டுகிறேன் ...

அந்த கோட்டைகளில் 

ஆசை கொடிகளை 

ஏற்றுகிறேன் 

Saturday, July 9, 2022

பொன்னியின் செல்வன்


பூங்குழலியும் சேந்தன் அமுதனும்  


அலைக்கடலும் ஓய்ந்திருக்க 

அகக்கடல்தான் பொங்குவதேன் 

நிலமகளும் துயிலுகையில் 

நெஞ்சகம்தான் பதைப்பதுமேன்'


வானகமும் நானிலமும் 

மோனமதில் ஆழ்ந்திருக்க 

மான் விழியாள் பெண்ணொருத்தி 

மனதில் புயல் அடிப்பதுமேன் 


வாரிதியும் அடங்கி நிற்கும் 

மாருதமும் தவழ்ந்து வரும் 

காரிகையாள் உளந்தனிலே 

காற்று சுழன்றடிப்பதுமேன் 


இடி இடித்து எண் திசையும் 

வெடி படும் அவ்வேளையிலே 

நடன கலை வல்லவர்போல் 

மனம் நாட்டியம்தான் ஆடுவதேன் 


வானதியும் அருள்மொழி வர்மனும் 


வேதனை செய்திடும் வெண்ணிலவில் 

வீணன் எவன் குழலூதுகிறான் 

நாதன் இலா இந்த பேதை தன்னை 

நலிந்திடுதல் என்ன புண்ணியமோ 


வானமும் வையமும் இன்புறவே ஐயன் 

வாய்மடுத்தூதும் குழலிசைதான் 

மானே உன்னை வருத்திடுமோ இந்த 

மானிலம் காணா புதுமையன்றோ 


வந்திய தேவனும் மணிமேகலையும் 


இனிய புனல் அருவிதவழ் 

இன்பமலை சாரலிலே 

கனிகுலவும் மரநிழலில் 

கரம் பிடித்து உகந்ததெல்லாம் 

கனவுதானோடி 

சகியே 

கனவுதானோடி


புன்னை மர சோலையிலே 

பொன்னொளிரும் மாலையிலே 

என்னை வர சொல்லி அவர் 

கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம் 

சொப்பனந்தானோடி 

அந்த 

அற்புதம் பொய்யோடி 


கட்டுக்காவல் தான் கடந்து 

கள்ளரை போல் மெல்ல வந்து 

மட்டில்லா காதலுடன் 

கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் 

நிகழ்ந்ததுண்டொடி 

நாங்கள் 

மகிழ்ந்ததுண்டோடி 


வந்திய தேவனும் குந்தவையும் 


வான சுடர்கள் எல்லாம் 

மானே உந்தனை கண்டு 

மேனி சிலிர்க்குதடி 

மெய் மறந்து நிற்குதடி 


தேனோ உந்தன் குரல்தான் 

தென்றலோ உன் வாய் மொழிகள் 

மீனொத்த விழி மலர்கள் 

வெறி மயக்கம் தருவதேனோ 


ஆதித்த கரிகாலனும் நந்தினியும்


ஆடும் திருகை

அரைச்சுற்று வருமுன்னே

ஓடும் எண்ணம் ஒரு கோடி

காலப்போக்கில் 

காயங்கள் ஆறுமோ 

நெஞ்சின் காயங்களுக்கு 

அஞ்சனமும் உண்டோ 


நிலவில் எரிமலையும் வெடித்ததோ 

பூவென வந்தது நெருப்போ 

உறவுகளின் சிக்கலில்

வாழ்வே சிக்கலானதோ ..


விழிகளில் தெறிப்பது மோகமோ

பழி தீர்க்கும் கரு நாகமோ

உதடுகள் வீசுவது சொல்லின் கலையோ

உயிர் குடிக்கும் சதி வலையோ


சுந்தர சோழன் மந்தாகினி 


குன்றெறிந்து குலம் காத்த 

குமரன் வந்து 

காவானோ தோழி !

மன்றமும் பொதியிலும் 

மகிழ்ந்தே விளங்குவான் 

மலையிடை பொழிலிடை 

மலர்ந்தே வாழ்பவன் 

இன்றிங்கு வந்தெனக்கு 

ஆறுதல் கூறியே 

இடர் ஒழித்து 

இனிமை கூட்டுவானோ தோழி!


சோர்வு கொள்ளாதே மனமே - உன் 

ஆர்வமெல்லாம் ஒரு நாள் பூரணமாகும் 

காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர் 

காலை மலர்தலும் கண்டனை அன்றோ 

தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும் 

அளிக்குலம் களிக்கும் அருணனும் உதிப்பான் 

சோர்வு கொள்ளாதே மனமே!


புன்னை மரத்தில் அமர்ந்த 

அன்னத்தை கண்டு 

வெண்மதிதான் 

உதித்ததோவென 

மலர்ந்ததோ 

ஆம்பல் மலர் ! 


Sunday, July 3, 2022

மீண்டும் ஒரு முறை

கண்ட காட்சிகள் எல்லாம் 
கண்முன் மீண்டும் விரியுமோ !
கண்டதில் நிஜமெது நிழலெது 
மனமது உண்மை உணருமோ !

தோளில் புத்தகம் சுமந்து 
சிலிர்க்கும் மழையில் நனைவேனோ !
தோளோடு தோளாய் வரும் 
தோழனின் சேட்டையில் சிரிப்பேனோ !

கந்தலான கால் சட்டையணிந்த 
தோழனுக்கு நகைப்பூட்டி மகிழ்வேனோ 
கசங்கிய தாவணி தோழியின் 
சிறு முறைப்பை நகைப்பாய் கடப்பேனோ !

அன்பாய் அதட்டும் ஆசிரியரை 
பள்ளியறையில் காண்பேனோ !
கசப்பான அறிவுரைகள் இன்று 
தேனாய் இனிப்பதை சொல்வேனோ !

ஆல காலனின் நந்தவனத்தில் 
அந்தி சாயும் வேளையில் சேர்வேனோ !
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி 
மனமகிழ்ந்து மெய் தளர்வேனோ !

இளவேனில் வீசும்  சித்திரையில் 
வயல் வரப்பில் பாடி நடப்பேனோ !
இளங்காற்றில் தள்ளாடும் 
கதிர் கண்டு நானும் ரசிப்பேனோ !

வயலறுத்து சிறு கட்டு தான் சுமந்து 
கை வலிக்க களம் கொண்டு சேர்ப்பேனோ !
போரடிக்கும் காளையின் பின்னே 
கால் வலிக்க நடந்து களைப்பேனோ !

துள்ளி விளையாடும் கன்றுடன் 
துள்ளி நானும் களித்திடுவேனோ !
எள்ளி நகையாடும் பெரிசுகளின் 
கள்ளமில்லா உள்ளத்தில் கரைவேனோ !

பயமறியா சிறு பாலகனாய் 
ஊர்குளத்தில் நீராடி களிப்பேனோ !
திசையறியா சிறு குருவியாய் 
ஊர் சுற்றி பொழுதை தொலைப்பேனோ !

புதுத்துணியும்தான் வாங்கி 
தையல் கடையில் காத்திருப்பேனோ !
வெடிக்காத வெடிகளை சேர்த்து 
நெருப்போடு விளையாடி களிப்பேனோ !

கார்த்திகையில் எரியும் 
சொக்கப்பனையின் ஒளியில் உறைவேனோ!
காவிலும் கோவில் விழாவிலும் 
சொக்கும் நாடகத்தில் கரைவேனோ  !

நிஜமாய் நின்றவர்களை 
நிழலெனவாவது காண்பேனோ !
அவர்கள் அன்பிற்கு விலையாய் 
எதைத்தான் நானும் கொடுப்பேனோ !

நடந்த வழியில் மீண்டும் 
ஒரு முறை நடந்திடுவேனோ !
இரு விழியில் கண்டதை மீண்டும் 
ஒரு முறை காண்பேனோ  !




Saturday, July 2, 2022

நிறைவு

பட்டினியோடிருந்தும்
பாடல்கள் எழுதி
தமிழுக்கு
விருந்து வைத்த பாரதி

இலவசம்தான்
லைப்ரரி
ஆளில்லை ...
காசின்றி பொருளில்லை
டாஸ்மாக்கில்
கூட்டம் தாங்கவில்லை 

பணமாகும்
காகிதமும் 
செல்லாதாகும் ஒரு நாள்
மதிப்பை இழப்பதில்லை 
புத்தகமாகும்
காகிதம்

முப்பதாயிரம் கொடுத்து
ஏசி வாங்கி
வீட்டை குளிர்விக்கும்
மனிதனுக்கு தெரியவில்லை
முப்பது ரூபாயில்
மரம் நட்டு
பூமியை 
குளிர்விக்கலாமென்று