Saturday, July 9, 2022

பொன்னியின் செல்வன்


பூங்குழலியும் சேந்தன் அமுதனும்  


அலைக்கடலும் ஓய்ந்திருக்க 

அகக்கடல்தான் பொங்குவதேன் 

நிலமகளும் துயிலுகையில் 

நெஞ்சகம்தான் பதைப்பதுமேன்'


வானகமும் நானிலமும் 

மோனமதில் ஆழ்ந்திருக்க 

மான் விழியாள் பெண்ணொருத்தி 

மனதில் புயல் அடிப்பதுமேன் 


வாரிதியும் அடங்கி நிற்கும் 

மாருதமும் தவழ்ந்து வரும் 

காரிகையாள் உளந்தனிலே 

காற்று சுழன்றடிப்பதுமேன் 


இடி இடித்து எண் திசையும் 

வெடி படும் அவ்வேளையிலே 

நடன கலை வல்லவர்போல் 

மனம் நாட்டியம்தான் ஆடுவதேன் 


வானதியும் அருள்மொழி வர்மனும் 


வேதனை செய்திடும் வெண்ணிலவில் 

வீணன் எவன் குழலூதுகிறான் 

நாதன் இலா இந்த பேதை தன்னை 

நலிந்திடுதல் என்ன புண்ணியமோ 


வானமும் வையமும் இன்புறவே ஐயன் 

வாய்மடுத்தூதும் குழலிசைதான் 

மானே உன்னை வருத்திடுமோ இந்த 

மானிலம் காணா புதுமையன்றோ 


வந்திய தேவனும் மணிமேகலையும் 


இனிய புனல் அருவிதவழ் 

இன்பமலை சாரலிலே 

கனிகுலவும் மரநிழலில் 

கரம் பிடித்து உகந்ததெல்லாம் 

கனவுதானோடி 

சகியே 

கனவுதானோடி


புன்னை மர சோலையிலே 

பொன்னொளிரும் மாலையிலே 

என்னை வர சொல்லி அவர் 

கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம் 

சொப்பனந்தானோடி 

அந்த 

அற்புதம் பொய்யோடி 


கட்டுக்காவல் தான் கடந்து 

கள்ளரை போல் மெல்ல வந்து 

மட்டில்லா காதலுடன் 

கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் 

நிகழ்ந்ததுண்டொடி 

நாங்கள் 

மகிழ்ந்ததுண்டோடி 


வந்திய தேவனும் குந்தவையும் 


வான சுடர்கள் எல்லாம் 

மானே உந்தனை கண்டு 

மேனி சிலிர்க்குதடி 

மெய் மறந்து நிற்குதடி 


தேனோ உந்தன் குரல்தான் 

தென்றலோ உன் வாய் மொழிகள் 

மீனொத்த விழி மலர்கள் 

வெறி மயக்கம் தருவதேனோ 


ஆதித்த கரிகாலனும் நந்தினியும்


ஆடும் திருகை

அரைச்சுற்று வருமுன்னே

ஓடும் எண்ணம் ஒரு கோடி

காலப்போக்கில் 

காயங்கள் ஆறுமோ 

நெஞ்சின் காயங்களுக்கு 

அஞ்சனமும் உண்டோ 


நிலவில் எரிமலையும் வெடித்ததோ 

பூவென வந்தது நெருப்போ 

உறவுகளின் சிக்கலில்

வாழ்வே சிக்கலானதோ ..


விழிகளில் தெறிப்பது மோகமோ

பழி தீர்க்கும் கரு நாகமோ

உதடுகள் வீசுவது சொல்லின் கலையோ

உயிர் குடிக்கும் சதி வலையோ


சுந்தர சோழன் மந்தாகினி 


குன்றெறிந்து குலம் காத்த 

குமரன் வந்து 

காவானோ தோழி !

மன்றமும் பொதியிலும் 

மகிழ்ந்தே விளங்குவான் 

மலையிடை பொழிலிடை 

மலர்ந்தே வாழ்பவன் 

இன்றிங்கு வந்தெனக்கு 

ஆறுதல் கூறியே 

இடர் ஒழித்து 

இனிமை கூட்டுவானோ தோழி!


சோர்வு கொள்ளாதே மனமே - உன் 

ஆர்வமெல்லாம் ஒரு நாள் பூரணமாகும் 

காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர் 

காலை மலர்தலும் கண்டனை அன்றோ 

தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும் 

அளிக்குலம் களிக்கும் அருணனும் உதிப்பான் 

சோர்வு கொள்ளாதே மனமே!


புன்னை மரத்தில் அமர்ந்த 

அன்னத்தை கண்டு 

வெண்மதிதான் 

உதித்ததோவென 

மலர்ந்ததோ 

ஆம்பல் மலர் ! 


No comments:

Post a Comment