கண்ட காட்சிகள் எல்லாம்
கண்முன் மீண்டும் விரியுமோ !
கண்டதில் நிஜமெது நிழலெது
மனமது உண்மை உணருமோ !
தோளில் புத்தகம் சுமந்து
சிலிர்க்கும் மழையில் நனைவேனோ !
தோளோடு தோளாய் வரும்
தோழனின் சேட்டையில் சிரிப்பேனோ !
கந்தலான கால் சட்டையணிந்த
தோழனுக்கு நகைப்பூட்டி மகிழ்வேனோ
கசங்கிய தாவணி தோழியின்
சிறு முறைப்பை நகைப்பாய் கடப்பேனோ !
அன்பாய் அதட்டும் ஆசிரியரை
பள்ளியறையில் காண்பேனோ !
கசப்பான அறிவுரைகள் இன்று
தேனாய் இனிப்பதை சொல்வேனோ !
ஆல காலனின் நந்தவனத்தில்
அந்தி சாயும் வேளையில் சேர்வேனோ !
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி
மனமகிழ்ந்து மெய் தளர்வேனோ !
இளவேனில் வீசும் சித்திரையில்
வயல் வரப்பில் பாடி நடப்பேனோ !
இளங்காற்றில் தள்ளாடும்
கதிர் கண்டு நானும் ரசிப்பேனோ !
வயலறுத்து சிறு கட்டு தான் சுமந்து
கை வலிக்க களம் கொண்டு சேர்ப்பேனோ !
போரடிக்கும் காளையின் பின்னே
கால் வலிக்க நடந்து களைப்பேனோ !
துள்ளி விளையாடும் கன்றுடன்
துள்ளி நானும் களித்திடுவேனோ !
எள்ளி நகையாடும் பெரிசுகளின்
கள்ளமில்லா உள்ளத்தில் கரைவேனோ !
பயமறியா சிறு பாலகனாய்
ஊர்குளத்தில் நீராடி களிப்பேனோ !
திசையறியா சிறு குருவியாய்
ஊர் சுற்றி பொழுதை தொலைப்பேனோ !
புதுத்துணியும்தான் வாங்கி
தையல் கடையில் காத்திருப்பேனோ !
வெடிக்காத வெடிகளை சேர்த்து
நெருப்போடு விளையாடி களிப்பேனோ !
கார்த்திகையில் எரியும்
சொக்கப்பனையின் ஒளியில் உறைவேனோ!
காவிலும் கோவில் விழாவிலும்
சொக்கும் நாடகத்தில் கரைவேனோ !
நிஜமாய் நின்றவர்களை
நிழலெனவாவது காண்பேனோ !
அவர்கள் அன்பிற்கு விலையாய்
எதைத்தான் நானும் கொடுப்பேனோ !
நடந்த வழியில் மீண்டும்
ஒரு முறை நடந்திடுவேனோ !
இரு விழியில் கண்டதை மீண்டும்
ஒரு முறை காண்பேனோ !
No comments:
Post a Comment