Saturday, March 25, 2023

சீனி

சீனி சிரிப்பை 
சிதற விட்டு போகிறாய்
நீ ...
சீனி குவியலில்  
சிற்றெறும்பாய் 
சிக்கிப் போகிறேன் 
நான் !!
==================

மரம் ஓய்வை விரும்பினாலும், 
காற்று விடுவதில்லை...
கரை ஓய்வை விரும்பினாலும், 
அலைகள் விடுவதில்லை...
மனது ஓய்வை விரும்பினாலும் 
உன் நினைவுகள் விடுவதில்லை !!
==========≈=≈=====≈===============
ஏனிந்த 
வன்மம் என்மீது  ..

ஜென்மங்களாய் 
காத்திருக்க 
வைக்கிறாயே !

===============
எந்தன் கனவுகள் 
பிரபஞ்சத்தைவிட 
பெரியதுதான் ...

உன் விழிகளுக்குள் 
எப்படி 
அடைபட்டது 
என்றுதான் புரியவில்லை !!
=====================
எல்லா மழையும் 
ஒரே மாதிரிதான் 
இருக்கிறது !!

நீ மட்டும் 
எப்படி 
ஒவ்வொரு மழையிலும் 
புதுசு புதுசாய் !!
================
நீ சூடும் 
மலர்கள் மட்டுமல்ல 
உன் 
கூந்தல் உதிரும் 
மலர்கள் கூட 
சொல்லி போகிறது 
ஏதோ ஒரு 
கவிதை !!
=================
இரண்டடியால் 
உலகையே 
அளந்து விட்டானாமே 
ஒருத்தன் ....
முடிந்தால் 
அளக்க சொல் 
உன் மீது 
நான் கொண்ட 
காதலை !!
=================
என் பார்வையை 
தொலைத்து விட்டு 
வந்திருக்கிறேன் ...
நீ 
என்னை
தொலைத்து விட்டு 
போன இடத்தில் !!
=====================
உச்சி வெயில் 
தகிக்கிறது ...
கொஞ்சம் 
விசிறிவிட்டு போ 
உன் 
விழிச்சிறகால் !!
================
ஓராண்டு 
ஆயுள் நீட்டி கிடைத்தால் 
என்ன செய்வாய் 
என்று கேட்டாள் ...
வேறென்ன 
உன்மீது 
இன்னொரு ஆயிரம் 
கவிதைகள் 
எழுதியிருப்பேன் !!
================
சுவாசிக்க 
காற்று  இல்லாமல் 
உயிரற்று கிடக்கின்றன 
சில வரிகள் ...
வாசிக்க 
நீ இல்லாமல் !!!
==============
உடலின் 
ஒவ்வொரு செல்லிலும் 
எழுதி வைத்திருக்கிறேன் 
உன் பெயரை ...

உன் 
கையிலிருக்கும் 
செல்லிலாவது '
வைத்திருக்கிறாயா 
என் பெயரை !
=================

வாசிக்க வா என
உன்னை
அழைக்குது
எனது கவிதை இதழ் ...

வா ... சிக்க ... வா என
என்னை
அழைக்குது 
உனது கவிதை இதழ்
======================

No comments:

Post a Comment