Sunday, December 1, 2019

பொழுது விடிந்தும்...

கீழ்வானம் சிவந்தது!
தூக்கம் கலைத்தன
கதிரவன் கதிர்கள்!

கொஞ்சி பேசும் கிளியே!
வஞ்சியவள்
துஞ்சி எழுந்தாளா என்று
கொஞ்சம் கண்டு வருவாயா?

வயல் நாற்றுகளை
தாலாட்டும் தென்றலே!
கயல் விழியாள்
கண் விழித்தாளா என்று
கேட்டுவிட்டு வருவாயா?

வாசல் கோலத்தில்
அவள் பாதம் பதிந்ததா?
வாசனை பூக்களில்
அவள் கூந்தல் கலந்ததா?

பனித்துளி சிரிப்போடு
பார்வை மலர்ந்தாளா?
என் பெயரை
முதல் மூச்சாக
இன்றும் உச்சரித்தாளா?

துடிக்கும் கன்னத்தில்
அவள் அன்பின்
எச்சமிருக்கிறது!

கொதிக்கும் நெஞ்சினில்
அவள் மார்பின் சூடு
இன்னும் மிச்சமிருக்கிறது!

சிணுங்கும்
அவள் வளையோசை
செவிகளில் இன்னமும்
கேட்கிறது!

மயக்கும்
அவள் குரலோசை
மனதை இன்னமும்
மயக்குகிறது!

பிரியும் நேரத்தில்
அவள் கண்களில்
கண்ட கலக்கம்
இன்றும்
என்னைக் கலங்க வைக்கிறது!

சொல்லாமல் சொன்ன
ஆயிரம் வார்த்தைகளை
கண்ணீரே
அன்று மொழிபெயர்த்தது!

வானம்
தெளிந்துவிட்டது!
அவள் உறக்கம்
தெளிந்துவிட்டதா?

இல்லை...
நானின்றி
அவளும்
தூக்கம் தொலைத்தாளோ?

நிலவைப் பார்த்து
என்னை நினைத்தாளோ?
நினைவின் சுமையில்
தலையணை நனைத்தாளோ?

குளிர் காலத்திலும்
என் பிரிவு
அவளுக்கு
வெப்பத்தையே
கொடுக்கும்!

வெயில் காலத்திலும்
அவள் நினைவு
எனக்குள்
மழையாகவே
பொழிகிறது!

கொன்றையும் பூத்தது;
வசந்தமும் வந்தது.

என் வாழ்க்கை மட்டும்
இலையுதிர் காலமாய்
இன்னும்
நிற்கிறது!

காதலர்கள்
சேர்ந்திருப்பதற்கே
காலங்கள் பிறக்கின்றன;
பிரிவை விதைப்பதற்கு
காலமே
பிறக்கவில்லையே!

காலதேவனே!
இரு மனம்
கலந்தவர்களை
வேறாக்கிய
பாவம்
உனக்கெதற்கு?

அவளை
என்னிடத்தில்
சேர்த்துவிடு...

இன்றேல்...

என்னை
அவளிடத்தில்
கொண்டு போய்விடு!

ஏனெனில்...

உயிர்
உடலில் இருப்பதால்
இங்கு யாருக்கும் 
வாழ்வில்லை ...

இதயத்தில் 
காதல்
இருப்பதால்தான்...

உலகமே 
வாழ்கிறது!

No comments:

Post a Comment