Sunday, November 21, 2021

அருள்வாய் சிவனே !

 கண்டத்தில் விடம் கொண்ட சிவனே ...

நெஞ்சத்து விடம் நீக்கி 

அருள்வாய் சிவனே !


மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!


ஊற்றை சடலமடா 

உப்பிருந்த பாண்டமடா 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று உரைப்பாயோ 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று கிட்டுமாயின் 

ஊற்றை சடலம் விட்டே 

உன்னடி சேரேனோ !!


மாமன் மகளோ 

மச்சினியோ நானறியேன் 

காமன் கணையெனக்கு 

கனலாக வேகுதடி 

மாமன் மகளாகி 

மச்சினியும் நீயானால் 

காமன் கணைகளெல்லாம் 

கண் பார்த்தால் வேகாதோ !!


பற்றற்ற நீரினிலே  

பாசி படர்ந்தது போல் 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீருதில்லை 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீர்ந்தாலும் 

பற்றற்ற நீராகும் 

பாசியும் வேறாகுமோ !!


சாய சரக்கெடுத்தே 

சாதிலிங்கம் தான் சேர்த்து 

மாயப்பொடி கலந்து 

வாலுழுவை நெய்யூற்றி 

பொட்டென்று இட்டு விட்டாள் 

புருவத்திடை இட்ட மருந்தால் 

இப்பருவம்  ஆனேனோ !!


புல்லரிடத்தே போய் 

பொருள் தனக்கு கையேந்தி 

பல்லை மிக காட்டி 

பரக்க விழிக்கிறேண்டி 

புல்லரிடம் போகாமல் 

பல்லை மிக காட்டாமல் 

பரக்க விழிக்காமல் 

பொருளெனக்கு தாராயோ !!


 உன்மீது 

காமக் கணை எறிந்த 

மன்மதனை எரித்திட்டாய் ...

கயவர்களிடம் குடி கொண்டு 

குழந்தைகளையும் எரிக்கும் 

காமனை ஏன் விட்டு வைக்கிறாய் 

சுயநல சிவனே !

உன் நெற்றிக்கண்ணின் 

அனலும் வெந்ததோ !

ஜடமாய் ஆனாயோ !

யாவரும் உன் 

குழந்தைகளன்றோ !

நெற்றிக்கண் 

திறக்காயோ சிவனே!

No comments:

Post a Comment