Monday, August 8, 2022

நதிக்கரை ஞாபகங்கள்


மலை முகட்டில் 

பிறந்து 

அன்னையின் 

காலடி காண 

அடிவாரம் 

தேடி வந்தாயோ !


ஆளில்லா 

காட்டில் 

எதற்கு இந்த 

கானக கச்சேரி !


எங்கே 

கற்றுக்கொண்டாய் ...

கூழாங்கல்லை

பட்டை தீட்டும் 

வித்தையை !


பொன்னி 

நீ ஆனதாலோ 

உன் கரையில் 

பொன்னிற மணல்கள் !


நீ 

மட்டும் இல்லையென்றால் 

சருகை 

குவித்துவிடுவான்

கனல் கக்கும் 

சூரியன்  !


பூமிப்பெண்ணுக்கு  

நரம்பாய் 

நீ ஓடுவதாலோ 

தினம் சிரிக்கிறாள் 

புது பெண்ணாய்!


ஊரோடு

நீ(ர்) ஓடினால் 

ஏரோடு சிறக்கும் 

வயல் ...

சேறோடு சிரிக்கும் 

நாத்து ...

தாரோடு சிறக்கும் 

வாழை !


ஒவ்வொரு 

மாநிலமும் சொல்கிறது 

நீ 

தங்களுக்கென்று ...

நீயேன் ஓடுகிறாய் 

கடலில் 

சங்கமிக்க !


ஓடும் வரைதான் 

நீ பரிசுத்தம் ...

நின்று விட்டால் 

நீயும் சாக்கடையே !


கண்விரித்து பார்த்தேன் 

கா...விரியை ....

கவித்துளிகள் விரிந்தன 

இதய வானில் !


கானம் பாடி 

தொண்டை வற்றி 

குயிலொன்று  வருகிறது 

தாகம் தீர்க்க !

அதன் தாகத்தோடு 

தீர்த்துவிட்டு போ 

எனது 

கவிதை தாகத்தையும் !


No comments:

Post a Comment