ஓட்டை உடைசல் பேருந்தில்
சொகுசு பேருந்து என்று
எழுதியிருக்கிறார்களே என்று
அரசாங்கத்தை
திட்டி கொண்டிருந்தேன் ...
நீ ஏறும் வரை !!
=====================
கருவறைக்குள்ளேதானே
தெய்வத்தை காண்பார்கள் ....
கருவறையிலிருந்து
வெளியே வந்தபின்
கண்டேன் !!!
=======================
சொர்க்கம்
பிரகாசமாக இருக்கும்
என்று யார் சொன்னது ?
இருளாகவும் இருக்கும் ...
சொர்க்கத்தில்
இருந்தேனே பத்து திங்கள் !!
=======================
நிலா எவ்வளவு அழகு பார்த்தாயா
என்று சொல்லி சோறூட்டினாய் ...
நிலா என்று என்னைத்தானே
சொன்னாய் .....
வானில் தெரிந்த அந்த
முட்டை பந்திடம் ...!!
=========================
தவறுகளை கண்டு
ஆனந்தம் கொள்ள
உன்னால் மட்டுமே
முடியும் ....
தளிர் நடை பயின்றபோதும்
மழலை லொழியில் உளறிய போதும்
ரசித்தவள் நீயல்லவா !!!
===========================
நீ மறந்து விடுவாய் ..
எனினும் ...
அடுத்த பிறவியில்
நான் தாயாகவும்
நீ சேயாகவும்
பிறந்தால் ...
அப்போதாவது தீர்க்க
முடியுமா ....
பெற்ற கடனையும்
வளர்த்த கடனையும் ..!!
======================
காலம் உன்னை
கவர்ந்து சென்ற பின்பு
நான் கோவிலுக்கு
செல்வதில்லை ....
கோவிலிலுள்ள கற்சிலை
திடீரென்று பேச ஆரம்பித்து
தெய்வம் எங்கே என்று
கேட்டுவிட்டால்
நான் யாரை காட்டுவது !
========================
காதல் என்று ஏமாந்து
ஆயிரம் கவிதை
கிறுக்கிய பின்தான் புரிந்தது ..
வாழ்வில் நான் உச்சரித்த
முதல் வார்த்தையே
கவிதைதான் என்று !
=================
விறகு அடுப்பில்
தினம் எனக்காய் காய்ந்தவள்
விறகு அடுக்கில் எரிய கண்டேன் ..
உயிரணுவில்
இவ்வுலகில் என்னை ஈன்றவளை
ஓர் அணுவேனும் மீண்டும்
எவ்வுலகில் காண்பேன்
===========================
உன் உயிரணுவால்
உலகத்தை காட்டினாய் ...
ஓர் அணுவேனும்
நான் முகம் வாடாது வளர்த்தாய் ...
நீயும் என்னை
ஏமாற்றியிருக்கிறாய் ...
விவரம் தெரியாத வயதில்
கோவிலுக்கு அழைத்து சென்று
இதுதான் தெய்வம் என்று
கற்சிலையை காட்டி விட்டாய் ...
இப்போது புரிகிறது ...
தெய்வம் தன்னை
தெய்வம் என்று
சொல்லி கொள்வதில்லை !
======================