Sunday, September 6, 2026

தலைப்பைத் தேடி

இதுவரை
எனது கவிதைகளுக்கு
தலைப்பை
தேடிக்கொண்டிருந்தேன்...

இப்போது
வார்த்தைகளையே
தேடுகிறேன்!
உனது 
காதல் 
எனது இதயத்தை 
மட்டுமே 
திருடியது 
என்று ஏமாந்திருந்தேன் ...

வாழ்க்கையும் 
போனது அறியாமல் !
என்னில் 
எதை தேடினாய் 
என்று புரிந்தபோது 
தொலைத்து 
விட்டிருந்தேன் 
என்னையே !
நீ சேர்ந்தபோது 
என்னைத் தொலைத்து 
மகிழ்ந்தேன் ..

நீ பிரிந்தபோது
என்னை 
இன்னொரு முறை 
தொலைத்தேன் ...

மகிழத்தான் 
முடியவில்லை !
இதயத்தில் 
என் காதலை 
புதைத்து 
வைத்து 
மகிழ்ந்திருந்தேன் ...

என்னை 
எங்கு 
புதைத்து 
வைத்திருந்தாய் 
நீ !?
உலகில் அழகானவள் 
என்று 
புகழ்ந்தாய் என்னை ...

அந்த அழகில்தான் 
எனது காதல் கல்லறை 
எழுப்பப்பட்டிருக்கிறது ...

உலகின் அழகான 
மெரீனாவில் 
கல்லறை போல !
ஐ லவ் யூ 
என்பது 
எனக்கு மந்திரம் ..

உனக்கோ 
அது 
எல்லோருக்கும் 
சொல்லும் 
குட் மார்னிங் !
எல்லா 
பாதைகளும் 
ரோம் நோக்கி 
என்று 
எழுதியது 
யாரோ ?

எனது 
எல்லா பாதைகளும் 
துயரத்தை 
நோக்கியே !
இறைவன் மீது 
பாரத்தை 
போட்டுவிடு என்கிறார்கள் ...

அவனே 
என்மீது போட்டிருக்கிறான் ..
அவனுடைய 
பாரத்தையும் சேர்த்து !
கொடுத்த 
பரிசையெல்லாம் 
திருப்பி 
கொடுத்துவிட்டாய் ...

உன்னை 
சந்திப்பதற்கு முன்பிருந்த 
என்னை 
எப்படி  
திருப்பிக் கொடுப்பாய் !?
நீயும் 
கடவுள்தான் ...

பகவத் கீதையின் 
700 ஸ்லோகங்கள் 
சொல்லித்தராத 
ஒரு தத்துவத்தை ...

பிரிந்தபோது
நீ சொன்ன
ஒரு வார்த்தை 
சொல்லித்தந்து விட்டதே !
என்னை 
நல்ல கவிதை 
என்று 
சொல்லியிருக்கிறாய் ...

ஏன் கிழித்தாய் ?

நல்ல கவிதையை !?
கன்னங்கள்
ரோஜாப்பூ என்றாய்...

ரோஜாப்பூவில்
பனித்துளிதானே
வடிய வேண்டும்?

கண்ணீரை
ஏன்
வடிய விட்டாய்!?
கடவுளுக்கும் 
மாலை போடுகிறார்கள் ..

பிணத்துக்கும் 
மாலை போடுகிறார்கள் ...

நான் 
கடவுளாக நினைத்து 
மாலையிட்டேன் ...

நீ 
எதை நினைத்து 
மாலையிட்டாய் !?
ஒரு 
காதல் வேண்டும்  
என்று தொடங்கி  ...

ஒரு 
காதலே போதும் 
என்று 
முடிந்து போனது 
எனது கனவுகள் !
உன்னோடு 
இருந்தபோது 
என்னவாக இருந்தேன் 
என்று 
நினைக்கத் 
தோன்றவில்லை ...

நீ 
பிரியும்போது 
என்னவாக இருக்கிறேன் 
என்று தெரியவில்லை !
விஷத்தை 
வீசிச்செல்கிறாய் ...

விதையாக 
போட்டு வைக்கிறேன் ...

ஒரு நாள் 
உனக்காக 
அது காத்திருக்கும் 
மரமாக !!
எனது காதல்
என்றும்
எனக்கு
வரமாகவே இருக்கும்...

இறைவனிடம்
உனக்காக 
வேண்டிக்கொள்கிறேன்..
உனது காதல்(?)
உனக்கு
சாபமாக மாறாதிருக்க!
மறு உலகிலும்
சேர்ந்திருப்போம்
என்றாய் ....

அது
நடக்காது ..

காரணம்...
நான்
நரகத்திற்கு
வரப்போவதில்லை...

No comments:

Post a Comment