Sunday, March 27, 2022

பொக்கை வாய்ச்சிரிப்பில்

பொக்கை வாய்ச்சிரிப்பில் 

உலகையே பதுக்கி வைத்தாய் 


மண்ணெண்ணெய் விளக்கொளியில் 

வாழ்க்கை பாடம் சொன்னாய் 


மளிகை கடைக்கும் 

சமையலறைக்கும் 

நெடுந்தூர பயணம் போனாய் 


விறகால் அடுப்பெரித்து 

விறகாய் எரிந்து போனாய் 



குமிழியை திருகினால் 

எரிகிறது அடுப்பு 

மயானத்திலும்தான் !

Saturday, March 26, 2022

கனவில் மேயும் கவிதைகள்

 இறைவனின் தூரிகையில் 

ஆயிரம் கோடி வண்ணங்கள் 

இன்பத்தில் ஆழ்த்தும் 

ஆயிரம் கோடி எண்ணங்கள் 


உலகம் முழுதும் 

அவனது சித்திர கூடம் 

அழியாத கோலங்களை 

அவன் தூரிகை காட்டும் 

 

==============================


ஒத்தையிலே நடந்து போற சிங்கார மயிலே 

ஒத்த வார்த்தை சொல்லிப்போ செவ்விதழாலே 

ஆடு மேய்ச்சு பொடி நடையும் நீ  நடக்கயிலே 

நெஞ்சுக்குள்ள குளிருதடி பட்டப்பகலிலே '


தூரப்பார்வையில் வேக வைக்குது சித்திரை வெயிலே 

ஓரப்பார்வையில் சுழன்றடிக்குது ஐப்பசி புயலே 

ஆட்டு மந்தை ஓட்டிப்போற மந்தார குயிலே  

ஒன்ன தவிர வேறெதுவும் உறைக்காது நெஞ்சிலே 


==================================


புதுசா பூவொண்ணு நெஞ்சுக்குள்ளே ஆடுதடி 

புது ஸ்வரத்தில் பாட்டொண்ணு பாடுதடி  

ஆச ஒன்னு மனசுக்குள்ள ஓடுதடி 

நாடி நரம்பெல்லாம் ஒன்னயே தேடுதடி


கொலுசு சத்தத்துல உசிரும்தான் உருகுதடி 

தின்னுஞ்சோறு தொண்டக்குழியில நிக்குதடி

சூடு வச்ச மீட்டரா இதயம் துடிக்குதடி

ஆடு ஒண்ணு கேலியாத்தான் பாக்குதடி


மலையோரம் அந்தி வெயில் சாயுதடி

மனசோரம் மோகமும்தான் பாயுதடி

கோரப்புல்ல ஆடும்தான் மேயுதடி 

நெஞ்சப்புல்ல ஒந்நெனப்பு மேயுதடி


நினைவுகளில் நீந்தி வரும் நீச்சல்காரி

கனவுகளை மேய்த்து வரும் மேய்ச்சல்காரி

கவிதை பக்கங்களை நிரப்பும் கவிதைக்காரி

உம்மென்றால் ஜென்மத்துக்கும் வீட்டுக்காரி

============================


கூட்டு வண்டி சாலையில தட தடக்குது 

குளிர் காத்துல உசிருந்தான் வெட வெடக்குது 

மின்னலோடு வானமுந்தான் இடி இடிக்குது

பின்னலோடு உனது வெட்கமுந்தான்  துடி துடிக்குது


தூரத்தில் மலை முகட்டில் அந்தி சாயும் வேளை 

பக்கத்தில் தோளோடு தோள் சாயும் சோலை

கூந்தலில் சூடிய சாமந்தியும்  மயக்குது ஆளை

வாசம் கண்டு கால்கள் பின்ன தடுமாறுது காளை


கன்னத்துல கன்னத்த சேக்குறியே 

எண்ணங்கள கலவரமா ஆக்குறியே 

இளநீர இதழிலதான் காட்டுறியே

பதநீர பார்வையால ஊட்டுறியே


தாகம் கொண்டு பூமியுந்தான் தவிச்சு நிக்குது

வேகம் கொண்டு வாடையுந்தான் வீசி அடிக்குது

மேகம் ஒண்ணு மழைத்துளிய கொட்டப் பாக்குது 

மோகம் கொண்டு தேகமுந்தான் மெல்ல வேர்க்குது 


காள மனச காளைகளும் புரிஞ்சு ஓடணும்

காதலப்போல வண்டியுந்தான் வேகம் எடுக்கணும்

வெளக்கேத்தும் முன்னே நாம ஊரு சேரணும் 

வெளக்கேத்தி காலமெல்லாம் சேந்து வாழணும் 


====================================


கண்ணால காதல் மொழி பேசுறியே 

சொல்லால அரிவாள வீசுறியே 


புல்லுக்கட்ட தலையிலதான் சுமக்குறியே 

மல்லுக்கட்டி எம்மனச பொளக்குறியே 


தூண்டா வெளக்கா மனசுல எரியுறியே 

வேண்டாத சாமியில்ல விலகித்தான் ஓடுறியே 


சேத்து வயலா மனசைத்தான் கலக்குறியே 

மௌன மொழி பேசி காதல வளக்குறியே 


பாசமெல்லாம் பாத்தி கட்டி சேத்து வச்சிருக்கேன் 

நேசமெல்லாம் கூடும் நேரம் பாத்து காத்திருக்கேன் !


முன் ஜென்மம் நான் செஞ்ச புண்ணியமடி 

ஏழு ஜென்மமும் நீ இருந்தா சொர்க்கமடி 


========================================







Sunday, March 20, 2022

இதயத்தின் ஓரம் !

சாரல் மழை பொழியும் நேரம் 

நெஞ்சம் முழுதும் ஒரு பாரம் 

கண்ணில் துளிர்க்குது ஈரம் 

இன்னமும் வைத்திருக்கிறாயா 

என் நினைவுகளை 

இதயத்தின் ஓரம் !


யார் சொன்னது 

உன்னை காணாமல்  

நான் மட்டும் தவிக்கிறேனென்று ...

என் எழுதுகோலும் 

கவிதை புத்தகமும் கூட 

ஏங்கி போகின்றன !


புறாவின் உள்ளத்தையும் 

கழுகின் சிறகையும் கேட்டேன் ...

கவிதை வானில் 

சிறகடிக்க ....

கழுகின் உள்ளத்தையும் 

புறாவின் சிறகையும்

தந்து ரசிக்கிறான் 

உலகை கவிதையாய் படைத்தவன்!


உனது காதலெனும் கடலில் 

மூழ்கித்தான் போனேன் ...

கரையேற ஆசைதான் ...

ஆனால் ...

கரையில் உன் காதல் இல்லையே !


உனது 

கண்ணில் பிறந்த காதல் துகள் 

தொற்றாய் காற்றில் பரவி 

நோயாய் நுழைந்தது இதயத்தில் ...

ஓரலைக்கே தாங்கவில்லையே 

என் இதயம் ...

இன்னமும் எத்தனை அலைகளை 

வைத்திருக்கிறாய் !


ஊர் 

உறங்கி விட்டது ...

உறங்க மறுத்து 

உடலுக்குள் இருந்து 

உள்ளத்தை 

உசுப்பேற்றுகிறதே 

உன் 

உயிர் !


முடிவில்லா காதலை 

தந்து போனாய் நீ ...

முடிவில்லா 

கவிதை பயணத்தில் நான் !


உன்னை காணும்போது 

வளர்ந்து ...

உன்னை காணாதபோது 

தேய்ந்து ...

பரிதவிக்கிறேன் நான் ..

ஆனால் ... உன்னை ...

நிலா என்கிறார்களே !


இயல் தமிழ் 

இசை தமிழ் 

நாடக தமிழ் ...

பல இருக்கிறதாம் ...

ஆனால் 

எனக்கு தெரிந்ததென்னவோ 

உனது 

காதல் தமிழ் மட்டுமே !


திரிகூட ராசப்பரும் 

பாரதியும் மட்டுமா சந்த கவிகள் ...

உனது 

கால் கொலுசு கூட 

காதல் கவிதை சொல்லும் 

சந்த கவியே !


என் இதயத்தில் 

வேர் விட்ட காதல் 

உன் இதயத்தில் மட்டும் 

எப்படி 

கிளை விட்டு ... இலையாய் 

உதிர்ந்து போனது !


ஒரே ஒரு 

காதல் விதைதான் 

விதைத்தாய் ...

காதல் காடாகி 

தவிக்குது மனது !



Thursday, March 17, 2022

மண்தான் ஜெயித்துக்கொண்டே

மலர்களை கொய்வதே 

செடியின் மீது காட்டும் 

வன்முறை 

எனும்போது  

உயிர்களை கொய்து 

எதனை  

அடையப் போகிறீர்கள் !


பொம்மைகளை 

ஏந்த வேண்டிய 

கரங்களுக்கு  

குண்டுகளை

அறிமுகம் செய்து 

ஆவதென்ன ! 


கணித சூத்திரங்களை 

கற்று தந்த 

வகுப்பறை 

மனித வக்கிரங்களை 

கற்று தரவில்லையே !


குருவிகளையும் 

ஆடுகளையும் 

துரத்தி  

மகிழ்ந்திருந்த எங்களை 

பீரங்கிகளால் 

துரத்துகிறீர்களே ...

உங்களை மரணம் 

துரத்தும்போது 

என்ன செய்வீர்கள் ! 


பீரங்கிகளின் 

கண்சிமிட்டலில் 

புல்லின் பனித்துளிகள் 

உருகிப்போயின !


கவலையின்றி 

நாங்கள் 

சைக்கிளில் திரிந்த  

தெருக்கள் 

எரிந்து 

கொண்டிருக்கின்றன 

எங்கள்

மனங்களைப்போலவே!


எங்கள் 

வயிற்றில் அடித்துவிட்டு 

வென்று விட்டதாய் 

மாரில் அடித்து கொள்கிறீர்களே ...

உலகத்தை வென்றதாய் 

கொக்கரித்து 

மாண்டு போனவர்களின்  

சாம்பலையாவது  

காட்ட முடியுமா 

உங்களால் !


மண்ணும் 

மலையும் 

நதியும் 

காற்றும் 

வெல்ல வேண்டியவை அல்ல 

மானுடத்தின் 

கவசங்கள் என்பதை 

எப்போது உணர்வீர்கள் !


எரிவது 

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல 

எங்கள் 

எதிர்காலமும் 

உங்கள் 

புண்ணியங்களும் !

மிச்சமிருக்கும் 

எச்சங்கள் சொல்லும் 

உங்கள் 

பாவக்கணக்கை !


ஜென்மங்கள் எடுத்தாலும் 

மண்ணை 

உங்களால் ஜெயிக்க இயலாது 

மண்தான் ஜெயித்துக்கொண்டே 

இருக்கும் !

 


Sunday, March 13, 2022

நான் நிம்மதியாய் உறங்க !

 விரும்பியபோது 

அணிகிறாய் ...

விரும்பாதபோது 

கழற்றுகிறாய் ...

நீ  மூக்குத்தியை 

கையாள்வதைப்போல  

உனது  நினைவுகளையும் 

அணியவும் கழற்றவும் 

முடியவில்லையே என்னால் !


பைவ் ஸ்டாரின் 

அலங்கார அறைகள் வேண்டாம் 

உனது 

இதய அறை 

ஒன்றே போதும் 

நான் நிம்மதியாய் உறங்க !


வெண்புறாவா ....

இல்லை ....

என்னை விழுங்கும் 

காதல் சுறாவா !


கண்கள் இரண்டும் 

மோகம் கொண்டு 

தழுவியதில் 

இதயத்தில் 

கருத்தரித்தது 

உன் நினைவு !

 


இயற்கையின் வர்ண ஜாலங்களை 

எழுதுகோலில் 

சிறையிட்டு பிடிக்க முயன்று   

தோற்று போன 

கவிதைக்காரன் நான் !


பூஜைக்காக கூட 

பூக்களை 

கொய்வதில்லை நான் ...

செடிக்கு வலிக்குமே !


கைகள் இல்லாமல் 

இதயம் களவாடுகிறாய் !

உதடுகளின்றி 

என்னோடு பேசுகிறாய் !

தாலாட்டு பாடாமல் 

தூங்க வைக்கிறாய் !

கால்களின்றி 

என்னோடு நடக்கிறாய் !


தோற்றத்தை காட்டி மயக்க மயில் அல்ல!

கானங்கள் இசைத்து மயக்க குயில் அல்ல!

கோவை அலகால் மயக்க கிளி அல்ல!

வெண் பஞ்சு தேகத்தால் மயக்க  புறா அல்ல!


பருந்தின் சிறகுகள் வேண்டும் 

புறாவின் மென்மை வேண்டும் 

உரச முடியாத உயரத்தில் 

பறந்து களித்திட வேண்டும் !


ஒரு தோசை ஊற்றியதற்கே 

சலித்து போகிறதே மனம் ...

எத்தனை ஆயிரம் முறை 

சலித்திருப்பாள் ...

அம்மா !!


வருடங்கள் கடந்தும் 

வரப்பில் 

அப்பா நட்ட கம்பு 

கம்பீரமாக நிற்கிறது 

மரமாக ...

அவர் சமாதிக்கு நிழல் தந்து !


இருமல் வரும்போதெல்லாம் 

நினைவில் வந்து போகிறது 

அம்மா சொன்ன 

சீராக பொடியும் 

பனை வெல்லமும் !


விரிசல் விழுந்த 

சுவரை  கண்டு 

வீடு பழசாகி விட்டது  

என்று கலங்கினேன் ...

கிடைத்தது 

புது வீடு என்று 

விரிசலில் நுழைந்து கொண்டிருந்தன 

சாரை சாரையாய் எறும்புகள் !



Tuesday, March 1, 2022

கவிதையில் ஒருவன்

நம்பிக்கை இல்லைதான் ...
இருந்தும்
பார்க்கிறேன் கிளிஜோசியம் ...
என்னால் கிடைக்கிறதே
கிளிக்கு 
ஒரு நெல்மணி!

எந்த புள்ளியில் 
ஆரம்பித்தாய் கோலத்தை ...
தெரியவில்லை!!
எந்த புள்ளியில்
ஆரம்பித்தது எனது காதல் ...
தெரியவில்லை!!

வர்ணங்கள் போர்த்தி வரும் 
வசந்த காலங்கள் 
மௌனம் போர்த்தி வரும் 
மனதின் ஓசைகள் 

நிழல் போல 
யாத்திரையில் 
கூட வருவாயோ...
நிழல் தேடி 
வழியில் 
எனை பிரிவாயோ !

நானறியா 
பனித்துளி ஓன்று 
உள்ளம் தொட்டதோ !
நானறியா 
மலர்  ஓன்று 
மொட்டு விட்டதோ ! 

ஒற்றை புன்னகையில் 
உலகை விற்று 
வித்தை காட்டுகிறாய் 
சின்ன சின்ன 
பாதம் வைத்து 
பின்னல் நடை போடுகிறாய் !