Sunday, March 13, 2022

நான் நிம்மதியாய் உறங்க !

 விரும்பியபோது 

அணிகிறாய் ...

விரும்பாதபோது 

கழற்றுகிறாய் ...

நீ  மூக்குத்தியை 

கையாள்வதைப்போல  

உனது  நினைவுகளையும் 

அணியவும் கழற்றவும் 

முடியவில்லையே என்னால் !


பைவ் ஸ்டாரின் 

அலங்கார அறைகள் வேண்டாம் 

உனது 

இதய அறை 

ஒன்றே போதும் 

நான் நிம்மதியாய் உறங்க !


வெண்புறாவா ....

இல்லை ....

என்னை விழுங்கும் 

காதல் சுறாவா !


கண்கள் இரண்டும் 

மோகம் கொண்டு 

தழுவியதில் 

இதயத்தில் 

கருத்தரித்தது 

உன் நினைவு !

 


இயற்கையின் வர்ண ஜாலங்களை 

எழுதுகோலில் 

சிறையிட்டு பிடிக்க முயன்று   

தோற்று போன 

கவிதைக்காரன் நான் !


பூஜைக்காக கூட 

பூக்களை 

கொய்வதில்லை நான் ...

செடிக்கு வலிக்குமே !


கைகள் இல்லாமல் 

இதயம் களவாடுகிறாய் !

உதடுகளின்றி 

என்னோடு பேசுகிறாய் !

தாலாட்டு பாடாமல் 

தூங்க வைக்கிறாய் !

கால்களின்றி 

என்னோடு நடக்கிறாய் !


தோற்றத்தை காட்டி மயக்க மயில் அல்ல!

கானங்கள் இசைத்து மயக்க குயில் அல்ல!

கோவை அலகால் மயக்க கிளி அல்ல!

வெண் பஞ்சு தேகத்தால் மயக்க  புறா அல்ல!


பருந்தின் சிறகுகள் வேண்டும் 

புறாவின் மென்மை வேண்டும் 

உரச முடியாத உயரத்தில் 

பறந்து களித்திட வேண்டும் !


ஒரு தோசை ஊற்றியதற்கே 

சலித்து போகிறதே மனம் ...

எத்தனை ஆயிரம் முறை 

சலித்திருப்பாள் ...

அம்மா !!


வருடங்கள் கடந்தும் 

வரப்பில் 

அப்பா நட்ட கம்பு 

கம்பீரமாக நிற்கிறது 

மரமாக ...

அவர் சமாதிக்கு நிழல் தந்து !


இருமல் வரும்போதெல்லாம் 

நினைவில் வந்து போகிறது 

அம்மா சொன்ன 

சீராக பொடியும் 

பனை வெல்லமும் !


விரிசல் விழுந்த 

சுவரை  கண்டு 

வீடு பழசாகி விட்டது  

என்று கலங்கினேன் ...

கிடைத்தது 

புது வீடு என்று 

விரிசலில் நுழைந்து கொண்டிருந்தன 

சாரை சாரையாய் எறும்புகள் !



No comments:

Post a Comment