மலர்களை கொய்வதே
செடியின் மீது காட்டும்
வன்முறை
எனும்போது
உயிர்களை கொய்து
எதனை
அடையப் போகிறீர்கள் !
பொம்மைகளை
ஏந்த வேண்டிய
கரங்களுக்கு
குண்டுகளை
அறிமுகம் செய்து
ஆவதென்ன !
கணித சூத்திரங்களை
கற்று தந்த
வகுப்பறை
மனித வக்கிரங்களை
கற்று தரவில்லையே !
குருவிகளையும்
ஆடுகளையும்
துரத்தி
மகிழ்ந்திருந்த எங்களை
பீரங்கிகளால்
துரத்துகிறீர்களே ...
உங்களை மரணம்
துரத்தும்போது
என்ன செய்வீர்கள் !
பீரங்கிகளின்
கண்சிமிட்டலில்
புல்லின் பனித்துளிகள்
உருகிப்போயின !
கவலையின்றி
நாங்கள்
சைக்கிளில் திரிந்த
தெருக்கள்
எரிந்து
கொண்டிருக்கின்றன
எங்கள்
மனங்களைப்போலவே!
எங்கள்
வயிற்றில் அடித்துவிட்டு
வென்று விட்டதாய்
மாரில் அடித்து கொள்கிறீர்களே ...
உலகத்தை வென்றதாய்
கொக்கரித்து
மாண்டு போனவர்களின்
சாம்பலையாவது
காட்ட முடியுமா
உங்களால் !
மண்ணும்
மலையும்
நதியும்
காற்றும்
வெல்ல வேண்டியவை அல்ல
மானுடத்தின்
கவசங்கள் என்பதை
எப்போது உணர்வீர்கள் !
எரிவது
உயிரற்ற கட்டிடங்கள் அல்ல
எங்கள்
எதிர்காலமும்
உங்கள்
புண்ணியங்களும் !
மிச்சமிருக்கும்
எச்சங்கள் சொல்லும்
உங்கள்
பாவக்கணக்கை !
ஜென்மங்கள் எடுத்தாலும்
மண்ணை
உங்களால் ஜெயிக்க இயலாது
மண்தான் ஜெயித்துக்கொண்டே
இருக்கும் !
No comments:
Post a Comment