Sunday, March 20, 2022

இதயத்தின் ஓரம் !

சாரல் மழை பொழியும் நேரம் 

நெஞ்சம் முழுதும் ஒரு பாரம் 

கண்ணில் துளிர்க்குது ஈரம் 

இன்னமும் வைத்திருக்கிறாயா 

என் நினைவுகளை 

இதயத்தின் ஓரம் !


யார் சொன்னது 

உன்னை காணாமல்  

நான் மட்டும் தவிக்கிறேனென்று ...

என் எழுதுகோலும் 

கவிதை புத்தகமும் கூட 

ஏங்கி போகின்றன !


புறாவின் உள்ளத்தையும் 

கழுகின் சிறகையும் கேட்டேன் ...

கவிதை வானில் 

சிறகடிக்க ....

கழுகின் உள்ளத்தையும் 

புறாவின் சிறகையும்

தந்து ரசிக்கிறான் 

உலகை கவிதையாய் படைத்தவன்!


உனது காதலெனும் கடலில் 

மூழ்கித்தான் போனேன் ...

கரையேற ஆசைதான் ...

ஆனால் ...

கரையில் உன் காதல் இல்லையே !


உனது 

கண்ணில் பிறந்த காதல் துகள் 

தொற்றாய் காற்றில் பரவி 

நோயாய் நுழைந்தது இதயத்தில் ...

ஓரலைக்கே தாங்கவில்லையே 

என் இதயம் ...

இன்னமும் எத்தனை அலைகளை 

வைத்திருக்கிறாய் !


ஊர் 

உறங்கி விட்டது ...

உறங்க மறுத்து 

உடலுக்குள் இருந்து 

உள்ளத்தை 

உசுப்பேற்றுகிறதே 

உன் 

உயிர் !


முடிவில்லா காதலை 

தந்து போனாய் நீ ...

முடிவில்லா 

கவிதை பயணத்தில் நான் !


உன்னை காணும்போது 

வளர்ந்து ...

உன்னை காணாதபோது 

தேய்ந்து ...

பரிதவிக்கிறேன் நான் ..

ஆனால் ... உன்னை ...

நிலா என்கிறார்களே !


இயல் தமிழ் 

இசை தமிழ் 

நாடக தமிழ் ...

பல இருக்கிறதாம் ...

ஆனால் 

எனக்கு தெரிந்ததென்னவோ 

உனது 

காதல் தமிழ் மட்டுமே !


திரிகூட ராசப்பரும் 

பாரதியும் மட்டுமா சந்த கவிகள் ...

உனது 

கால் கொலுசு கூட 

காதல் கவிதை சொல்லும் 

சந்த கவியே !


என் இதயத்தில் 

வேர் விட்ட காதல் 

உன் இதயத்தில் மட்டும் 

எப்படி 

கிளை விட்டு ... இலையாய் 

உதிர்ந்து போனது !


ஒரே ஒரு 

காதல் விதைதான் 

விதைத்தாய் ...

காதல் காடாகி 

தவிக்குது மனது !



No comments:

Post a Comment