Tuesday, November 29, 2022

குளித்துவிட்டாயா

 சுட்டால் 

இறக்கத்தானே 

வேண்டும் ..!!


நீ மட்டும் 

சுட்டபின்பு 

எப்படி 

பிறந்தாய் !



வறுமை மட்டுமல்ல 

பணமும் 

ஆடைகளில் 

ஜன்னலை 

போடும் !



சுடுகாட்டிற்கு 

போனால் 

குளித்துவிட்டுதான் 

வீட்டிற்குள் 

நுழையலாமாம் ....


சுடுகாடு தாண்டி

வரும் காற்றே ...


குளித்துவிட்டாயா ! 


என் அண்ணனும் அக்காவும் 

தங்கையும் தம்பியும் 

அம்மாவும் நானும் 

பீடி சுற்றுகிறோம் ...

தந்தை 

ஊர் சுற்றுவதால் !


கோவில் இல்லா ஊரில் 

குடியிருக்க வேண்டாம் ...


கோவில் இல்லா 

ஊரைக்கூட 

கண்டுபிடித்துவிடலாம் 

டாஸ்மாக் இல்லா ஊரை 

எங்கே தேடுவேன் !



Saturday, November 19, 2022

இலையுதிர் காலம்

 உனது 

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நான் ஒரு பாத்திரமா ?

இல்லை ...

எனது  

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நீ  ஒரு பாத்திரமா ?

================

என்னை 

விழி மூடி 

மயங்க வைத்து 

விழித்திருந்தாய் ..


என்னை 

விழி மூட '

மறக்க வைத்து  

உறங்கி 

போனாய் !

================

தோளில் சாய்த்து 

அமைதி 

தந்தாய் ...


அமைதியாகி 

தோளில் 

சுமக்க 

வைத்தாய் !

===============

உன் மீது 

மலர்களை 

தூவவா ...


இல்லை 


நினைவுகளை 

தூவவா !

===============

நீ  

எனக்கு  

கிடைத்தது  

அழகான விபத்து  ...


நீ 

என்னை 

விட்டு போனது 

ஆபத்தான விபத்து !!

================

விழிகளில் 

தங்கிவிட்ட 

உனது பிம்பத்தை 

கண்ணீர் 

கரைக்காதா !

===============

மண்'

மேலே இருந்த 

புதையல் நீ ...


இதயத்தில் 

புதைந்தாய் !!

==============

உதிராத 

மலரில்லை ...

உதிராத

இலையில்லை ..

ஆனால் ...

நீ .....

மலரா!?

இலையா?

இல்லை ....

வேரா??

================

இலையுதிர் காலத்தை 

தந்தவன் ...

நினைவுகள் 

உதிரும் காலத்தை 

தராமலா 

போய் விடுவான் !

காத்திருக்கிறேன் ...

உனது

நினைவுதிர்காலத்தை

நோக்கி!!

===================

Sunday, November 13, 2022

மழை

 கார்மேக 

தோட்டத்தில் 

பூத்த 

கண்ணாடிப்பூ !


கார்மேக 

கடலில் 

விளைந்த 

கண்ணாடி 

முத்துக்கள் !


பூமா தேவிக்கு 

அடிக்கடி

குடமுழுக்கு !


மேக 

கிளை முறிந்து 

பூமியில் 

விழுந்த  

நீர்க்கனிகள் !


வான் மகள் 

சரியாக 

துவட்டவில்லையோ 

கார்மேக கூந்தலை ...

சொட்டுகிறதே !


எப்போது வருவாய் ...

எப்போது போவாய் 

என்றே தெரியவில்லை 

கைபேசி 

காதல் போல !


பயிரின் 

வித்தும் 

தேடுகிறதே 

மழையின் 

முத்தை !


விதைத்தவனின் 

பயிராய் 

விளைவாயோ ...

அல்லது 

கண்ணீராய் 

விளைவாயோ !


வருணனே...

மிதமாகவே 

வருவாய் ...

அப்போதுதானே 

விதைத்தவனுக்கு 

வருவாய் !


வருணனே ...

பூமாதேவிக்கு 

மிதமாக தூவு 

அர்ச்சனை அரிசியை ...

அதிகமானால் 

எங்களுக்கு 

வாய்க்கரிசியாகி 

விடப்போகிறது !


Saturday, November 5, 2022

வியர்வை கவிதைகள்


எந்த 

கொல்லனிடம் 

கற்றாய் ....

என் 

நெஞ்சுருக்கும் 

கலையை !!


வியர்க்கிறதென  

மரத்தடியில் 

ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்

மரத்திற்கு !!


நீ 

என்னை 

கடந்து சென்றவள் அல்ல 

கடத்தி சென்றவள் !


அகத்தியரை 

தேடிக்கொண்டிருக்கிறேன் 

உன்னை 

கவிதையில் வடிக்கும் 

தமிழை கற்க !!


காதலுக்கு 

சிறப்பு 

தாஜ்மஹாலா 

நீயா !!!


உனது 

சிணுங்கல்தான் 

தேசிய மொழியா 

காதலுக்கு !


உனது 

இதழ் தரும் 

அமுதமொன்று 

போதுமே ...

சாகா வரத்திற்கு !!

 

கூந்தலில்தானே 

சூடியிருக்கிறாய் 

பூக்களை ...

வண்டு ஏன் 

மொய்க்கிறது 

உனது 

முகத்தை !!


உனது 

பார்வை 

மலரும்போதெல்லாம் 

எனது பார்வை 

வண்ணத்து பூச்சியாகி 

விடுகிறது !


உன்னோடு

நிறைய

பேச முடிகிறது ...

நிறைவாகத்தான்

பேச முடியவில்லை !!


உனது

பொழுது பொக்கு

பார்வைக்கே 

பழுதாகி போனது

எனது வாழ்வு!


மண்ணுலகில்

கண்தானம்

செய்துவிட்டால் 

விண்ணுலகம் 

வரும்போது

உன்னை

எவ்வாறு காண்பேன் ...


எழுதுவதை 

நிறுத்திவிடுகிறேன்  ...

உனது நினைவுகள் 

எழுவதை 

நிறுத்தி விட்டால் !

தென்றல்

 

நீ இருக்கும் 

திசையிலிருந்து

வீசுவதல்லவா  

தென்றல் ..

அப்புறம் ஏன் 

தெற்கிலிருந்து 

வீசுவதை மட்டும் 

தென்றல் என்கிறார்கள் !


தென்றல் 

எவ்வளவு 

இதமாக இருக்கிறது 

என்கிறாய் ...

உன்னை தழுவி விட்டு 

தென்றலும் அதையே 

சொல்லி போகிறது !!


நீ நடந்த 

பாதையில் 

தினம் நடக்கிறேன் ...

கொஞ்சமாவது 

மிச்சமிருக்காதா 

நீ 

சுவாசித்த தென்றல் !

வாசலில் கவிதை


பூமித்தாய்க்கு 

வைரக்கிரீடம் ...

அவள் 

கோலம் !!


மார்கழியில் 

நீ 

கோலமிடுவதால்தானோ 

மாதங்களில் 

நான் மார்கழி 

என்றான் 

கண்ணன் !!?


விரல்களால் 

தரையிலும் 

விழிகளால் 

என் மீதும் 

கோலமிடுகிறாய் !!


உன் கோலத்தில்தான் 

கண்விழிக்கிறதா ...

சூரியன் !!?


உள்ளங்கையில் 

நீ 

வரைந்திருக்கும் 

மருதாணி கோலத்தை 

பொறாமையுடன் 

பார்க்கிறது 

தரையில் 

வரைந்த கோலம் !!


பூமியும் 

பூச்சூடிக்கொண்டது 

உனது 

கோலத்தால் !


பூமகள் மீது

ஏனிந்த கரிசனம்...

நீ 

கோலமிடுவாயென 

தினம் 

விண்மீன் புள்ளிகளை வைத்து 

வானமும்

காத்திருக்கிறதே !!


ரோஜாவுக்கு 

வருத்தம் ...

கோலத்தின் நடுவில் 

நீ 

பூசணிப்பூ 

வைத்தபிறகு 

பூசணிப்பூ 

பூக்களின் 

ராணியாகி விட்டதாம் !


உனது 

கோலத்தை 

ரசிக்கத்தானோ 

பனியாய் 

இறங்கி வருகிறது 

மேகம் !!?


வாசலில் 

போட்ட புள்ளிகளை 

இணைத்துவிட்டாய் ...

எனது 

நெஞ்சில் 

போட்ட புள்ளிகளை !!?


நீ

வரைவதெல்லாம் 

கவிதையா என 

என்னை 

எள்ளி நகையாடுகிறது 

நீ 

வரைந்த கோலமும்

உனது கோலமும் !!