Saturday, November 5, 2022

வாசலில் கவிதை


பூமித்தாய்க்கு 

வைரக்கிரீடம் ...

அவள் 

கோலம் !!


மார்கழியில் 

நீ 

கோலமிடுவதால்தானோ 

மாதங்களில் 

நான் மார்கழி 

என்றான் 

கண்ணன் !!?


விரல்களால் 

தரையிலும் 

விழிகளால் 

என் மீதும் 

கோலமிடுகிறாய் !!


உன் கோலத்தில்தான் 

கண்விழிக்கிறதா ...

சூரியன் !!?


உள்ளங்கையில் 

நீ 

வரைந்திருக்கும் 

மருதாணி கோலத்தை 

பொறாமையுடன் 

பார்க்கிறது 

தரையில் 

வரைந்த கோலம் !!


பூமியும் 

பூச்சூடிக்கொண்டது 

உனது 

கோலத்தால் !


பூமகள் மீது

ஏனிந்த கரிசனம்...

நீ 

கோலமிடுவாயென 

தினம் 

விண்மீன் புள்ளிகளை வைத்து 

வானமும்

காத்திருக்கிறதே !!


ரோஜாவுக்கு 

வருத்தம் ...

கோலத்தின் நடுவில் 

நீ 

பூசணிப்பூ 

வைத்தபிறகு 

பூசணிப்பூ 

பூக்களின் 

ராணியாகி விட்டதாம் !


உனது 

கோலத்தை 

ரசிக்கத்தானோ 

பனியாய் 

இறங்கி வருகிறது 

மேகம் !!?


வாசலில் 

போட்ட புள்ளிகளை 

இணைத்துவிட்டாய் ...

எனது 

நெஞ்சில் 

போட்ட புள்ளிகளை !!?


நீ

வரைவதெல்லாம் 

கவிதையா என 

என்னை 

எள்ளி நகையாடுகிறது 

நீ 

வரைந்த கோலமும்

உனது கோலமும் !!


No comments:

Post a Comment