1
பூக்களை
விற்பதாய்
நினைக்கிறார்கள்...
நடந்து செல்லும்
ஓர் ஓவியத்தை
யார்
விலை பேச முடியும்?
2
வாசமற்ற
உன் வாழ்வுக்காகத்தான்...
வாசம் நிறைந்த
மலர்களை
விற்றுக்கொண்டிருக்கிறாயோ?
3
பூவொன்று
பூவேந்தி
நிற்கிறதால்தானோ...
இந்த உலகையே
பூவுலகம்
என்று அழைக்கிறார்கள்!
4
எதை
விற்கிறாய்?
பூக்களையா...
இல்லை...
பூக்களைவிட
அழகாகப் பூத்த
புன்னகையையா?
5
"ரோஜா"
என்று சொல்லி...
வேறெதையோ
நீட்டுகிறாயே!
அதை
எந்தப் பெயரில்
வாங்கிக்கொள்வது?
6
"தாமரை இல்லை"
என்று
பொய் சொல்கிறாய்...
அந்தப் பொய்யையே
உன்
தாமரை இதழ்கள்
காட்டிக்கொடுக்கின்றன!
7
கூடையிலுள்ள
பூக்களை...
வண்டுகள்
மொய்க்கவில்லை.
பூக்களுக்கே
பூவாக
நீ
நிற்கும்போது!
8
உன்னைவிட்டு
பிரிந்துவிட்டால்...
கூடையிலுள்ள
பூக்கள்கூட
வாடிவிடாதா?
9
கடந்து செல்கின்றன...
எத்தனையோ
அந்திமாலைகள்.
ஆனால்...
நீ
காத்திருக்கும்
மாலை மட்டும்
இன்னும் வரவில்லை!
10
கையில்
பூக்களுடன்...
எந்த
மாலைக்காக
காத்திருக்கிறாய்?
பூக்கள்
வாங்க வரும்
மாலையா...
உன்
வாழ்வை
மாற்ற வரும்
மாலையா?
11
மாலை வந்தால்
பூக்கள்
வாடிவிடுமோ
என்று
அஞ்சாதே!
மாலையை
எனக்குத்
தொடுத்துவிடு...
அந்த
மாலையோடு
மகிழ்ச்சியாய்
ஏற்றுக்கொள்கிறேன்...
உன்னையும்.
No comments:
Post a Comment