Saturday, December 20, 2025

நிலா

ஏனோ தெரியவில்லை!

கடைசி குச்சி 

பற்ற வைக்கும்போது மட்டும் 

கவனம் 

வந்து விடுகிறது!

🍁

அதிகமாக

ரசிக்கப்பட்டாலும்..

நிலா

அனாதைதான்!

🍁
மறக்கவே முடியாத முகமும்
மறக்கத் துடிக்கின்ற முகமும்
ஒரே முகமாக
அமைந்து விடுகிறது 
************
தேடப்படுபவனும்
தேடுபவனும்
ஒன்றே!
***************
எங்கேயோ
கொண்டு போகிறாய்...
தொடர்கிறேன்...
***************************
இதயத்தை
மூடிக்கொண்டு 
கண்களை 
திறந்து 
எதை
பார்க்கப் போகிறாய்?
***************************
பழக
பழக
புளிக்கும் 
என்றார்கள்...
இனிக்கிறதே?
தப்பாக 
சொல்லிவிட்டார்களோ!?
********************************

Friday, December 19, 2025

கோலம்

 🍁

கோலமாவால் 

வெறும் 

புள்ளிகளையும் 

கோடுகளையும் 

வைத்தே 

கவிதை 

எழுதி விட்டாய் !


எதை 

எழுதுவது 

என்று 

திகைக்கிறது 

எனது 

தமிழும் 

எழுத்தாணியும் !!

🍁

ஒரு ஓவியம்

புவியில்

கவிதை எழுதுவதை

வியந்து பார்க்கிறது 

நிலா!.

🍁

இந்த வார

பட்டிமன்ற 

தலைப்பு .....

எந்த 

நாளில்

உனது

கோலம் அழகு !!?

தீர்ப்பு

காலவரையின்றி

ஒத்தி வைக்கப்பட்டது!!

🍁

நிலம் 

ஏன் அதிர்கிறது?

நீ 

பொட்டு வைப்பதால் 

சிலிர்க்கிறதோ 

பூமி?

🍁 

எப்படி

சம்மதித்தது

கோலமாவு...?

உன் 

விரல்களை விட்டு

இறங்குவதற்கு!!

🍁

கோலம்

எப்படி 

என்கிறாய்!!

எந்த

கோலத்தை

ரசிப்பது

நான்?

***********???**
எனக்குத்தான் 
தெரியுமே...
உனது
கோலத்தை
ரசிக்க
இருவிழி
போதாதென்று!!
***************(*******
உயிர் காக்க
அழைக்கிறான்
மார்க்கண்டேயன் ...

எப்படி
தாண்டி
போவது...?

இந்த
கோலத்தை?
***********************
உன்
காதலால்
நேரான
கோடுகள்
ஆங்காங்கே
வளைகிறதே
நாணத்தால்!!
*******************
கோலமிட்டு 
விட்டாயா?

உதிப்பதற்கு
உத்தரவு
கேட்கிறான் 
சூரியன்!
************************
உன்
கோலத்தை
நகலெடுக்க 
வானில்
நட்சத்திர 
புள்ளிகளை
வைத்துவிட்டு
ஒளிந்து
பார்க்கிறது
நிலா!!
********************
நீ
கோலம்
போட்டதால்தானோ
இதனை
புண்ணிய பூமி
என்கிறார்கள்!!?
***************************
நீ
கோலமிட்ட 
பூமி
இனி ...

கோள வடிவா!?
கோல வடிவா!?
********************
 
எறும்புகளுக்கு
பசிக்குமென்று
அரிசிமாவால்
கோலமிடுகிறாய்!!

உன் கோலத்தை
கலைக்க
மனமின்றி
பசியடக்கும் 
வரம் கேட்கின்றன
எறும்புகள்!!
***********************

Thursday, July 31, 2025

முத்தங்களை

 மழலைக்களின் 

கன்னத்து வயல்களில் 

தாராளமாகாவே 

முத்தங்களை 

விதைக்கிறாய் ...

எனது 

கன்னத்து 

வயலில் மட்டும் 

கருமியாகி விடுகிறாய் !!


========================


Wednesday, June 11, 2025

பட்டாம் பூச்சி

சாயம் போகாத
வர்ணத்தை
பூசி நடப்பது
பட்டாம்பூச்சி
மட்டும்தான்
போலிரூக்கிறது !!
======================

நீ பேசுவது 
காதிலும் 
உன் மௌனம் 
இதயத்திலும் 
ஒலிக்கிறது !!

===========================

எந்த நாடும் 
இன்னமும் 
கண்டு பிடிக்கவில்லை ..
அவள் 
பார்வைக்கணையை விட 
அதிக சேதத்தை 
ஏற்படுத்தும் 
ஏவுகணையை !!

===========================

கூட்டத்தில் இருந்தபோது 
உணரவில்லை  ...
தனித்து 
விடப்பட்டபோது 
புரிந்தது ...
நான் யாரென்று!!!!

===========================

குற்றவாளிகள் 
தப்பித்து 
விடுகிறார்கள் ...
நிரபராதிகளுக்கு 
ஆயுள் கால தண்டனை ...
காதல் நீதி மன்றத்தில் !!

===========================

இரவும் 
பகலும் 
வீண்தானோ !!?
என் 
உறக்கமும் 
விழிப்பும் 
உன் 
கட்டுப்பாட்டில் 
இருப்பதால் !!!

===========================

சிரிப்பு 
புன்னகை 
கோபம் 
தாபம் 
தவிப்பு 
ஊடல் 
வியப்பு 
என 
என்னென்ன உணர்வுகளையோ 
வெளிப்படுத்துகிறாய் ...
காதலை தவிர 
வேறெதையும் 
வெளிப்படுத்த 
தெரியவில்லை 
எனக்கு !!

===========================

எழுத முடியாத 
ஒரு 
கவிதையில் 
ஒளிந்திருக்கிறது 
உனது 
பெயர் !!!

===========================

அஞ்சாதே !!
அடுத்த பிறவியில் 
உன்னை 
ஏமாற்றும்படி 
இறைவனால் 
என்னை படைத்து 
உனக்கு தண்டனை கொடுக்க 
முடியாது !!
அவனுக்கு தெரியாது ..
எந்த பிறவியிலும் 
உன்னை ஏமாற்ற 
என்னால் முடியாதென்று !!

===========================

உனது 
ஒவ்வொரு 
நினைவுகளும் 
முற்று புள்ளிக்கு பதில் 
காற் புள்ளியையே 
விட்டு விட்டு 
செல்கிறது 

=====================

உன் காதல்
சிறந்ததா...
என் காதல்
சிறந்ததா ...
என்ற போட்டிக்கிடையே
நான்தான் சிறந்தவன்
என்று
நீரூபித்து போகிறது
காலம் !!

============================
கண்களால் 
நாற்று நட்டு ...
உதடுகளால் 
உரமிட்டு ...
காதலால்  
மழை பொழிந்து ...
விளைய செய்து 
விடுகிறாய் ..
என் 
கவிதை 
வயலை !!

==============================
தொலைந்து 
போனதென்னவோ 
சாவிதான் ...

உடைப்பட்டது 
பூட்டு !!

=================================

நீ 
தொலைத்த 
இடத்தில்தான் 
இன்னமும் 
இருக்கிறேன் ...

என்றாவது 
ஒருநாள் 
தேடி 
வருவாயென !!

=================================

Saturday, April 26, 2025

இளையராஜா

 இளையராஜாவை 

படைத்தபின்புதான் 

நான் 

சிறந்த படைப்பாளி 

என்று 

எனக்கே 

திமிர் வந்தது 

     -- ப்ரம்மா 


=================

பூவுலகிற்க்கு 

நல்லிசை வழங்க 

தனது 

வீணையை 

இளையராஜா 

என்ற 

பெயரில் 

அனுப்பியது 

கலைவாணி


==================

தனது 

குழந்தையை 

பிறர் புகழும்போது 

தாய்க்கு 

ஒரு பெருமிதம்  வருமே ...


ஒரு அற்புத 

குழந்தையை 

பெத்த தாயே 

இப்படி என்றால் ...


இளையராஜாவுக்கு தான் 

எத்தனை இசை குழந்தைகள் ..?

ஒவ்வொரு 

பாடலையும் 

நாங்கள் கொண்டாடி 

தீர்க்கிறோம் ...

இளையராஜாவுக்கு 

பெருமிதம் 

வராதா என்ன ?


அதை 

கர்வம் என்றால் 

என்ன சொல்வது  ?

Tuesday, April 1, 2025

சித்திரப்பூ சேலை


மீன் கடிக்கும் 

மெல்லிதழை ...

நான் கடித்தால் 

ஆகாதா !!

தேனின் ருசி 

தெரிந்தவன் நான்

தேனீயாய் மாறேனா !!


மஞ்சள் பூசும் 

இடமெல்லாம் 

என் மனம் பூசல் 

ஆகாதா !

கொஞ்சம் என்னை 

குங்குமமாய் 

குழைத்தெடுத்தால் 

வாறேனா !


படிக்கட்டில் 

ஏறி வரும் 

பாதத்தெழில் 

பாரப்பதற்கு 

படிக்கட்டின் 

இடையிலோர் 

பலகையாய் 

மாறேனா !


முக்காலும் 

துணி மறைத்து 

உன் சொக்காயை 

இடுகையிலே 

சொக்காகி 

மூலை 

சுவராகி போவேனா !!


Wednesday, February 12, 2025

பிறவாமல்

 ஒரு 

வீட்டை 

எரிக்கும்போது 

தீயதாக 

தோன்றும் 

நெருப்பு ...


உணவு 

சமைக்கும்போது 

நல்லதாகி 

விடுகிறது !!


=======================

மரணத்தை 

தடுக்க 

முடியாது ...


பிறந்தது 

மரணித்தே 

தீரும் !!


மரணத்தை 

தடுக்க 

ஒரே 

வழிதான் 

இருக்கிறது ...


பிறவாமல் 

இருத்தல் !!


================


இன்பத்தை 

பெருக்குவதற்கு 

எளிய 

வழி 


துன்பத்தை 

குறைத்து 

கொள்வதே !!


=======================


அனுபவிப்பதால் 

ஆசைகள் 

பூர்த்தி 

அடைவதில்லை ...


நெய் ஊற்றுவதால் 

நெருப்பு 

அணைவதில்லை !!


=======================


உடல் 

போக முடியாத 

எல்லைக்கு 

உடலின் 

உள்ளிருக்கும் 

ஏதோ 

போக 

முயல்கிறது !!


அது 

எதுவென்றுதான் 

புரியவில்லை !!


=======================


கங்கை 

நீர் 

முழுவதும் 

கடலை அடைந்தபின் 

கங்கையை 

எளிதாக 

கடந்துவிடலாம் 

என்று 

காத்திருக்கிறேன் ...


யுகங்களாய் 

காத்திருக்க 

நேருமோ !!

=======================

சில நேரங்களில் 

தூங்க வைக்கிறது ...


சில நேரங்களில் 

தூக்கத்தை கெடுக்கிறது ...


எப்படி வகைப்படுத்துவது 

உன் நினைவுகளை !!?


=======================

நிறைய இருக்கிறது 
நினைவின் நிலவறையில் ...

என்னோடு 
எரிந்து போகுமோ !!
இல்லை 
புதைக்கப்பட்டுவிடுமோ !!

இன்னொருவனை 
காலம் 
படைக்காமலா போய்விடும் ...!!

இதே நினைவுகளோடு !!!

=======================


Saturday, February 1, 2025

தாய்

இன்னும் 
ஒரு வாய் 
சாப்பிடு என்று 
போராடி 
ஊட்டிய
தாய்க்கு 
கடைசியில் 
ஒரு வாய் 
தண்ணீர்தான் 
விட முடிகிறது...

Friday, January 24, 2025

குடையாய்

 கோவிலுக்குள் 

என்னை 

ஈர்த்தது ...


வாசலில் 

கண்ட 

உனது 

காலணி !!


======================

எங்காவது 

மறந்து 

வைத்து 

விட மாட்டோமா என்று 

உன் 

நினைவுகளை 

தினம் 

சுமந்து பார்க்கிறேன் 

குடையாய் ...


======================

நிலவை 

மறைத்தது 

குடை !!


=====================


இமைகளை 

எதற்கு 

படைத்தானோ 

இறைவன் !!


அடிக்கடி 

சிமிட்டி 

உன்னை 

பார்க்கும் 

நேரத்தை 

குறைத்து 

விடுகிறதே !!


=====================


மழையில் 

நனைந்தாலும்  

உனது கைப்பிடியில் 

குளிர் 

காய்ந்து விடுகிறது  ...


குடை !!


=====================


தாலாட்டை  

சொல்லித்தந்த 

உனது 

மௌனம்தான் 

இன்று 

ஒப்பாரியையும் 

சொல்லித்தந்து 

போகிறது !!

 

=====================

எனது 

நாட்குறிப்பில் 

மட்டுமல்ல ...

வினாடி குறிப்பிலும்  

இல்லை ...

உன்னை 

நினைக்காத 

பொழுதுகள் !!


=====================

உன்னை 

பார்க்கும் 

போதெல்லாம் 

கவிதை 

படிப்பதாய் 

சொல்கின்றன 

எனது 

கண்கள் !!

=====================

நான் 

பேசினால் 

காதல் ...


நீ 

பேசினால் 

கவிதை !!

=====================

மழைக்கும் 
கவிதை 
பிடிக்கும் 
போலிருக்கிறது ...

அடிக்கடி 
வந்து 
விடுகிறதே 
உன்னை 
நனைக்க !!