inversely proportional
உனக்கும் எனக்குமான
தூரமும்
எனது சந்தோஷமும் !
மழையை கண்ட
மயிலாகி விடுகிறது
உன்னை கண்ட
மனது !
ஒரு குறுஞ்செய்தியிலாவது
சொல்லிவிடு
என்னை மறக்க
என்ன செய்தாயென்று...
நானும் முயற்சிக்கிறேன்
உன்னை மறக்க
யோகா செய்ய சொல்கிறார்
டாக்டர்...
மறுத்து விட்டேன்...
என் இதயத்தில் இருக்கும்
நீ
தத்தளிப்பாயே
மூச்சுக்காற்று இல்லாமல்
காதலுக்கு
ஜாதி மதம்
இல்லையாமே ...
எரிக்கவா புதைக்கவா
என்ற குழப்பத்தில்
இதயத்தில்
உறைந்தே விட்டது
செத்துப்போன
உன் காதல்
கண் சிமிட்டாமல்
உன்னை கண்ட கண்கள்
ஏங்குகின்றன
கண் சிமிட்டும்
நேரமாவது
நீ தென்பட மாட்டாயா
என்று
நீ
சிறுபொறிதான் ..
எரித்தே விட்டாய்
என்
இளமையை
இடைவிடாது
உன் உடையோடு
கதைக்கிறது காற்று ...
இடைவிடாது
இம்சிக்கிறது
உன் இடை
காலம்
குறைந்து கொண்டே
செல்கிறது ...
உன் மீது கொண்ட
காதல் மட்டும்
கூடிக்கொண்டிருக்கிறது !
எதுவும் நிரந்தரமில்லை
என்பது
உன் காதலுக்கு
பொருந்தி விட்டது ...
ஆனால்
உன் நினைவுகளுக்கு
பொருந்தாது போலும் !
உன்னை
மறக்க முயன்று
மறந்து விட்டேன் ...
என்னை !
தமிழகத்துக்கு
விடியலை தர
பலர் போட்டி ....
என் காதலுக்கு
விடியலை
யார் தருவார்
உன்னையன்றி !
யாராவது
நம்மை எப்போதும்
நினைத்துக்கொண்டிருந்தால்
நமக்கும்
அவர் நினைவு
அடிக்கடி வருமாம் ...
உனக்கு
அடிக்கடி வருகிறதா
என் நினைவு !?
அதி நவீன காராம் ..
இருக்கும்
இடத்தில் இருந்தே
இயக்கலாமாம் ...
இதென்ன பிரமாதம் ...
எங்கோ இருந்து
என்னை
இயக்கி கொண்டிருக்கிறாயே
நீ !
மழையாய்
நீ
வந்து போய் விட்டாய் ..
இன்னமும்
சொட்டி கொண்டிருக்கிறது
உன் வாசம் !
நிழலே
நீ ஏன் என்னுடனே
வருகிறாய் -- நான்
நானாவது வருகிறேனே -- நிழல்
என் வழியாகத்தான்
எல்லோரும்
உலகை பார்க்கிறார்கள் ...
இருந்தும்
நான் கர்வம்
கொள்வதில்லை -- ஜன்னல்
பூவும்
அவளிடம்
கேட்கும்
ஆட்டோகிராப்
எத்தனையோ முறை
நாம்
காலடிகளால்
அளந்த இந்த பாதை
இப்போது
அளக்கிறது
எனது கண்ணீரை !
வாடா மலரான
உனக்கு
என்ன அழகினை
தந்து விட போகிறது
நீ
கூந்தல் சூடும்
வாடும் மல்லிகை !
நினைவுகளை மட்டும்
இறக்கி விட்டு போகிறது
தினம்
நீ வந்திறங்கும் பேருந்து !
சீக்கிரம்
காதலித்துவிடு ....
தாமதித்தால்
என்னை காதலிக்காத
நாட்களுக்காக
வருத்தப்படுவாய் !
நீ
எனது
முதல் அழுகையா ...
கடைசி
புன்னகையா !
காளிதாசனுக்கும்
கம்பனுக்கும்
இளங்கோவடிகளுக்கும்
கிடைக்காத
வரிகளை
வரைந்து வைத்திருக்கிறது
உனது உதடுகள் !
மணிக்கணக்கில்
காத்திருந்து
ஏழுமலையானை தரிசித்தேன்
தெய்வத்தோடு !
நம்மூர்
அரசியல்வாதிகளே பரவாயில்லை
உனது
காதல் வாக்குறுதிகளின்
நிலையை நினைக்கும்போது !
உச்சி வெயில் காட்டிலே
ஒன்னெனப்போ நெஞ்சு கூட்டிலே
கள்ளம் கபடம் இல்லாதவள்
என்று
உன்னை நினைக்க முடியவில்லை
என்னை
களவாடியவள் ஆயிற்றே !
தோட்டத்து பூக்களும்
செல்பி எடுக்க துடிக்கும்
பூ
கற்களால் கட்டப்பட்டது
என்றார்கள் ...
காதலால் கட்டப்பட்டது
என்றேன் நான் !
கவிதைக்கு
பொய் அழகுதான் ...
உன்னை
வர்ணிக்கும் வரிகள் தவிர !
அழுகை கூட
கவிதைதான் ...
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை !
தனிமனித இடைவெளிதானே வேண்டும் ...
தனக்கும் பணத்திற்கும்
இடைவெளி யார் போட்டார்கள் ...
குழம்பினார் விவசாயி !
நம்புங்கள்
ஆன்லைனில்தான் இருக்கிறேன் ...
ஆனால் தெரியாது
அடுத்த வீட்டில்
என்ன நடக்கிறதென்று !
கை கழுவுங்கள்
வைரஸை விரட்டுங்கள்
விளம்பரத்தை கண்டு
நகைத்தான் பிச்சைக்காரன்
வயிற்றை எப்படி கழுவுவது ...
பசியை எப்படி விரட்டுவது!
மரங்களை
வெட்டி கொண்டிருந்தார்கள் ...
அந்த இடத்தில
ஆக்சிஜன் தொழிற்சாலை
வைக்க போகிறார்களாம் !
தட்பவெப்பம்
மாறிய பிறகுதானே
மின்னல் தாக்கும் ...
மின்னல்
தாக்கிய பின்பு
மாறியது
எனது தட்பவெப்பம் !
கண் சிமிட்டாமல்
எவ்வளவு நேரம்
இருக்க முடியுமோ
அவ்வளவு நேரம்
என்னால் இருக்க முடியும்
உண்னை நினைக்காமல் !
கை முழுவதும்
மிட்டாயை வைத்துக்கொண்டு
இன்னும் கொடு என்று
கெஞ்சும் குழந்தை போல
இதயம் முழுக்க
அவள் தந்த
காதலை வைத்துக்கொண்டு
இன்னம் கொடு என அவளிடம்
கெஞ்சுகிறேன் நான் !
எப்பொழுது
நிறுத்துவாய் ...
ஒவ்வொரு நொடியிலும்
நீ நடத்தும்
இதய பிரவேசத்தை !
நீ
வந்தபோதுதான்
காதல் வந்தது ...
நீ
போன போது
காதல்
போகவில்லையே ...
இது என்ன நியாயம் !
புயல்
கரை கடந்து விட்டால்
அமைதி ....
தென்றல் ஓன்று
காதல் கடந்த பின்
ஆரம்பித்தன சேதங்கள் !
கடும் போட்டி
உன் மீது கொண்ட
காதலுக்கும்
பெட்ரோல் விலைக்கும் ...
தினம் அதிகம் அதிகரிப்பது
யாரென !
எந்த
புல்டோசர் கொண்டு
இடிப்பேன் ...
உனக்காக
இதயத்தில் கட்டிய
காதல் கோட்டையை !
நல்லவேளை
என் காதல் கனவுகளுக்கு
அரசாங்கம் GST போடுவதில்லை ...
இல்லையென்றால்
GST கட்ட நான்
குபேரனிடம் அல்லவா
கடன் வாங்க வேண்டும் ...
CAA NRC NPR
எந்த சட்டத்தையும்
மதிக்காமல்
இதயத்தில்
குடியமர்த்தினேன் அவளை ...
நான்
"குடி" மகன் ஆனேன் !
கால நிலையால்
வெப்ப நிலை உயர்வதாக
சொல்கிறது உலகம் ...
எனக்கென்னவோ
உன் காதல் நிலையால்
என் வெப்பநிலை
உயர்வதாகவே படுகிறது !
நான்
கர்வமற்றவன்
என்று
சொல்லிக்கொள்வதுகூட
ஒரு
கர்வம்தானோ !
கண்ணீரால்
காயங்கள் ஆறுமென்றால்
என் கண்ணீரால்
இந்நேரம்
ஆறியிருக்க வேண்டுமே
இப்பிரபஞ்சத்தின்
காயங்களெல்லாம் !
என்
இதயத்தை
ஏன் எடுத்து சென்றாய்
என்று இப்போதுதான்
புரிகிறது ....
நீதான்
இதயமே
இல்லாதவள் ஆயிற்றே !
இரவு முழுதும்
விழித்திருக்கிறேன்
அதிகாலையில் உறங்க ...
அதிகாலையில்
காணும் கனவு
பலிக்குமாமே !
தலையணை மாறியதால்
தூக்கம் வரவில்லையோ என
ஏமாந்திருந்தேன்
இதயம் மாறியது
அறியாமல் !
எடைக்கு போட்டிருந்தால்
கடலையாவது
கிடைத்திருக்கும் ...
கவிதை புத்தகங்கள் !
ஒரே புன்னகையைத்தான்
தினம் தினம் வீசுகிறாய் ...
எனில்
புதிது புதிதாய்
ஜனிக்கிறது கவிதைகள் !
உனக்கும்
எனக்கும் இடையில்
எதையாவது
வைப்பதாக இருந்தால்
வைத்துவிடு
நம் காதலை !
நீ அழகென்று
ஊருக்கே தெரியும்
எவ்வளவு அழகென்று
என்
கண்களுக்கு மட்டுமே
தெரியும் !
விருப்போடு நினைத்தாலும்
வெறுப்போடு நினைத்தாலும்
இனிக்கவே செய்கிறது
அவள் நினைவு ....
விரும்பி சுவைத்தாலும்
வெறுப்போடு சுவைத்தாலும்
இனிக்கும் கரும்பு போல !
வண்ணத்துப்பூச்சியே
பூக்களும்
நீயும் பேசிய
ரகசியங்களை
கொஞ்சம் சொல்லேன் ...
கவிதை எழுத வேண்டும்
இதயப்பலகையில்
பேரெழுதி
காதல் பாடம் நடத்தி ...
சொல்லாமல் போனாள்
தேர்வு வைக்காமலே !
புகைப்படம்
ஒன்றை அனுப்பி
இதற்கு
கவிதை எழுது என்றாள் ...
கவிதைக்கு எப்படி
கவிதை எழுதுவது !
துண்டு காகிதம்
கிடைக்கும் போதெல்லாம்
கவிதை கப்பல்
செய்து பார்க்கிறேன் ..
காதல் மழையே
எப்போது வருவாய் !
அவளுக்கு தெரியாதா
காலம் கடந்தவனிடம்
ஆல காலம் தோற்குமென்று
இருந்தும்
தடுக்கச் சொல்லியது
அவளது காதல் !!
இதயத்திற்கு அடங்காத காதலும்
கண்ணுக்கு அடங்காத உறக்கமும்
கம்பளிக்கு அடங்காத குளிரும்
காத்திருக்கின்றன
உனக்காக !
எங்கிருந்து வந்தது
இந்த
நகரும் சிலை !
சேர்ந்து வாழ்வது
காதல் மாடல் ...
உன் நினைவுகளோடு
நான் மட்டும் வாழ்வது
இது என்ன மாடல் !
மொழியை திணிப்பது
குற்றமாம் ...
எப்படி திணித்தாய்
இதயத்தில்
உன் காதல் மொழியை !
மனிதனை
மனிதன் சுமப்பது
மட்டும்தானே குற்றம் ...
இதயத்தை
இதயம் சுமப்பது அல்லவே !
எனில் சுமந்ததற்க்கு
ஏனிந்த தண்டனை !
கண்கள்தான்
காதலுக்கு காரணம்
என்று நினைத்திருந்தேன் ...
இப்போதுதான்
புரிந்தது ...
கண்கள் உன் பிம்பத்தை
இதயத்துக்கு அனுப்பும்
போஸ்ட் மேன் மட்டுமே !
எந்த சட்டமியற்றி
தடுப்பேன் ...
என் இதயத்தில்
உன் நினைவுகளை
ஏந்தல்களாய் நியமிக்கும்
உன் அதிகாரத்தை!
என் நினைவுகளை
ரத்து செய்யும் ரகசியத்தை
உனக்கு சொன்ன பிரம்மன்
உன் நினைவுகளை
ரத்து செய்யும் ரகசியத்தை
எனக்கு மட்டும்
சொல்லாமல் விட்டதேனோ !
எத்தனை முறை போட்டும்
நிறைவேற மாட்டேனென்கிறது ...
ஏழு ஜென்மத்துக்கும்
உன் நினைவுகளில் இருந்து
விடுதலை கோரும்
தீர்மானம் !
என் காதலுக்கு
விடியல்
வராவிட்டாலும் பரவாயில்லை ...
என் நினைவுகளையாவது
தூங்க வைப்பாயா
உன் மடியில் !
புரண்டு படுக்கும்
பக்கமெல்லாம்
தானும் புரண்டு
என் தூக்கத்தினை
கெடுத்து விடுகின்றன
உன் நினைவுகள் !
முதல் போரிலேயே
என் இதயத்தை
வென்ற பின்னும்
மீண்டும் மீண்டும்
ஏன் படையெடுக்கின்றன
உன் நினைவுகள் !
என் விரல் பிடித்தே
குழந்தையாய்
தொடர்கிறது
உன் நினைவுகள் !
கவிதை மேகங்களை
உருவாக்கி
அனுப்பிக்கொண்டே இருக்கின்றன
கடலாய்
உன் நினைவுகள் !
அல்பாயுசில்
போய் விட்டது
உன் காதல் ...
சாகா வரம் பெற்று
பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகள் !
கவிதை பக்கங்கள்
என்று நினைத்திருந்தேன் ...
கண்ணீர் பக்கங்களாக்கி
விட்டனவே
உன் நினைவுகள் !
ஒவ்வொரு வினாடியும்
நினைத்து நினைத்து
தாராளமாய்
செலவழித்தும்
தீரவில்லை
உன் நினைவுகள் !
தென்றலும்
வியர்க்க வைக்கும்
என்று
புரிய வைத்தது
உன் நினைவுகள் !
கலர் படமாய்
இருந்த வாழ்க்கையை
கருப்பு வெள்ளை
படமாய் மாற்றி விட்டன
உன் நினைவுகள் !
தேதி கிழிக்கும் போதெல்லாம்
தினம் தினம்
ஒரே ராசி பலனை
சொல்கிறது
நாட்காட்டி ...
உன் நினைவுகள் !
எக்ஸ்பயரி தேதி
போடாமலே
இதயத்தில் உருவாகி
நிறைகின்றன
உன் நினைவுகள் !
நீ
எனக்காக பிறக்கவில்லை
எனில்
எனக்காக
ஏன் பிறந்தன
உன் நினைவுகள்!
வானவில்லாய்
நீ வந்து போய் விட்டாய்
வண்ணங்களாய்
மனதில் நிறைந்திருக்கிறது
உன் நினைவுகள் !
அருகில்
இருந்த நீ
தொலைவில் போனபோது ...
தொலைவில் இருந்து
அருகில் வந்தன
உன் நினைவுகள் !
அன்று
தூங்க விடாமல்
செய்தது
உன் அருகாமை ...
இன்றும்
தூங்க விடாமல்
செய்கிறது
உன் நினைவுகள் !
நீ
இருந்தபோது
பூக்களமாகவும்
நீ
இல்லாதபோது
ரணகளமாகவும்
இருக்கின்றன
உன் நினைவுகள் !
நாட்குறிப்பில்
வேறெதை
எழுதுவது ...
இதயகுறிப்பில்
நிறைந்திருக்கிறதே
உன் நினைவுகள் !
நிச்சயம்
இன்று தூங்கிவிடுவேன்
என்று சபதம் எடுக்கிறேன்
ஒவ்வொரு நாளும் ...
காலையில்
நனைந்து போன
தலையணையை காட்டி
பரிகசிக்கிறது
உன் நினைவுகள் !
தூங்குவதற்காக
இரவுகளை படைத்ததாக
பொய் சொல்கின்றன
வேதங்கள் ...
அது உண்மையானால்
இரவுகளோடு
இறைவன் எதற்காக
படைத்தான்
உன் நினைவுகளை !?
முள்ளும் மலரும்
தனித்தனியாகத்தானே
இருக்கும் ....
இதயத்தில் இரண்டும்
சேர்ந்தே இருக்கின்றன ..
உன் நினைவுகள் !
மேகமாய்
நீ கடந்து போய் விட்டாய் ...
இன்னமும்
மழையாய்
கொட்டிக்கொண்டிருக்கிறதே
உன் நினைவுகள் !
சிறுவயதில்
தும்பியை பிடித்து
நூலில் கட்டி
விளையாடியபோது
தெரியவில்லை ...
பின்பொருநாள்
என்னை கட்டி
விளையாட காத்திருக்கிறது
உன் நினைவுகளென்று !
தயவு செய்து
என்னை
புதைத்த இடத்தில்
செடிகளை நட்டு விடாதீர்கள் ...
மலர்களுக்கு பதில்
செடிகளில் பூக்கக்கூடும்
அவள் நினைவுகள் ...
அவள் நினைவுகளுக்குத்தான்
மரணமில்லையே !!