புரண்டு படுக்கும்
பக்கமெல்லாம்
தானும் புரண்டு
என் தூக்கத்தினை
கெடுத்து விடுகின்றன
உன் நினைவுகள் !
முதல் போரிலேயே
என் இதயத்தை
வென்ற பின்னும்
மீண்டும் மீண்டும்
ஏன் படையெடுக்கின்றன
உன் நினைவுகள் !
என் விரல் பிடித்தே
குழந்தையாய்
தொடர்கிறது
உன் நினைவுகள் !
கவிதை மேகங்களை
உருவாக்கி
அனுப்பிக்கொண்டே இருக்கின்றன
கடலாய்
உன் நினைவுகள் !
அல்பாயுசில்
போய் விட்டது
உன் காதல் ...
சாகா வரம் பெற்று
பாடாய் படுத்துகிறது
உன் நினைவுகள் !
கவிதை பக்கங்கள்
என்று நினைத்திருந்தேன் ...
கண்ணீர் பக்கங்களாக்கி
விட்டனவே
உன் நினைவுகள் !
ஒவ்வொரு வினாடியும்
நினைத்து நினைத்து
தாராளமாய்
செலவழித்தும்
தீரவில்லை
உன் நினைவுகள் !
தென்றலும்
வியர்க்க வைக்கும்
என்று
புரிய வைத்தது
உன் நினைவுகள் !
கலர் படமாய்
இருந்த வாழ்க்கையை
கருப்பு வெள்ளை
படமாய் மாற்றி விட்டன
உன் நினைவுகள் !
தேதி கிழிக்கும் போதெல்லாம்
தினம் தினம்
ஒரே ராசி பலனை
சொல்கிறது
நாட்காட்டி ...
உன் நினைவுகள் !
எக்ஸ்பயரி தேதி
போடாமலே
இதயத்தில் உருவாகி
நிறைகின்றன
உன் நினைவுகள் !
நீ
எனக்காக பிறக்கவில்லை
எனில்
எனக்காக
ஏன் பிறந்தன
உன் நினைவுகள்!
வானவில்லாய்
நீ வந்து போய் விட்டாய்
வண்ணங்களாய்
மனதில் நிறைந்திருக்கிறது
உன் நினைவுகள் !
அருகில்
இருந்த நீ
தொலைவில் போனபோது ...
தொலைவில் இருந்து
அருகில் வந்தன
உன் நினைவுகள் !
அன்று
தூங்க விடாமல்
செய்தது
உன் அருகாமை ...
இன்றும்
தூங்க விடாமல்
செய்கிறது
உன் நினைவுகள் !
நீ
இருந்தபோது
பூக்களமாகவும்
நீ
இல்லாதபோது
ரணகளமாகவும்
இருக்கின்றன
உன் நினைவுகள் !
நாட்குறிப்பில்
வேறெதை
எழுதுவது ...
இதயகுறிப்பில்
நிறைந்திருக்கிறதே
உன் நினைவுகள் !
நிச்சயம்
இன்று தூங்கிவிடுவேன்
என்று சபதம் எடுக்கிறேன்
ஒவ்வொரு நாளும் ...
காலையில்
நனைந்து போன
தலையணையை காட்டி
பரிகசிக்கிறது
உன் நினைவுகள் !
தூங்குவதற்காக
இரவுகளை படைத்ததாக
பொய் சொல்கின்றன
வேதங்கள் ...
அது உண்மையானால்
இரவுகளோடு
இறைவன் எதற்காக
படைத்தான்
உன் நினைவுகளை !?
முள்ளும் மலரும்
தனித்தனியாகத்தானே
இருக்கும் ....
இதயத்தில் இரண்டும்
சேர்ந்தே இருக்கின்றன ..
உன் நினைவுகள் !
மேகமாய்
நீ கடந்து போய் விட்டாய் ...
இன்னமும்
மழையாய்
கொட்டிக்கொண்டிருக்கிறதே
உன் நினைவுகள் !
சிறுவயதில்
தும்பியை பிடித்து
நூலில் கட்டி
விளையாடியபோது
தெரியவில்லை ...
பின்பொருநாள்
என்னை கட்டி
விளையாட காத்திருக்கிறது
உன் நினைவுகளென்று !
தயவு செய்து
என்னை
புதைத்த இடத்தில்
செடிகளை நட்டு விடாதீர்கள் ...
மலர்களுக்கு பதில்
செடிகளில் பூக்கக்கூடும்
அவள் நினைவுகள் ...
அவள் நினைவுகளுக்குத்தான்
மரணமில்லையே !!
No comments:
Post a Comment