Friday, April 29, 2022

என் மனம் இருந்தது

 


வெற்று காகிதமாய்

என் மனம் இருந்தது 

உன் பெயரை 

அதில் எழுதும் வரை !


தனித்த முற்றமாய் 

என் மனம் இருந்தது 

துளசிச் செடியாய் 

நீ அங்கு தளிர்க்கும் வரை !


ரசமில்லா கண்ணாடியாய் 

என் மனம் இருந்தது 

உன் அழகு 

அதில் விழும் வரை 


வெற்று மேடையாய் 

என் மனம் இருந்தது 

நடன தேவதையாய் 

நீ கால் பதிக்கும் வரை !


பனித்துளியாய் 

என் மனம் இருந்தது 

குளிர் சூரியனாய் 

நீ உதிக்கும் வரை 


ஈர விறகாய் 

என் மனம் இருந்தது 

காதல் தீயாய் 

நீ பற்றி கொள்ளும் வரை 


என்னிடமே 

என் மனம் இருந்தது 

கண் பார்வையால் 

நீ கட்டி இழுக்கும் வரை 


எங்கே தேடுவேன் ...

உன் கண் பார்த்து 

நின்ற நேரத்தை

நீ மண் பார்த்து 

நின்ற கோலத்தை 


தடம் பார்த்து 

தொடர்ந்த இடங்களை 

இடம் பார்த்து 

சூடிய மலர்களை 


உடன் சேர்ந்து 

கழித்த பொழுதை 

கடன் வாங்கி 

களித்த முத்தத்தை 


நினைவு நீரலைகளை 

உறிஞ்சிய மேகத்தை 

கனவு பூமியில்  

பொழிந்த மோகத்தை 


கை கோர்த்து 

நடந்த இடங்களை 

மெய் கோர்த்து 

பதித்த தடங்களை 


சிறகாய் வந்த 

மின்னலை 

சிறகொடித்து போன 

தென்றலை 


மழையில் குடையாய் 

வந்தவளை 

வெயிலில் நிழலாய் 

நின்றவளை 


கனவை பரிசாய் 

தந்தவளை 

நினைவை களவாடி 

போனவளை 



காட்சி பிழையாய் 

ஆனவளை 

காதல் பிழையாய் 

போனவளை 


பன்னீர் துளியை 

நெஞ்சில் ஊற்றி 

களித்தவளை 

கண்ணீர் துளியை 

முற்று புள்ளியாய் 

வைத்தவளை 


Thursday, April 21, 2022

கவிதை மேகங்கள்

பாதையெங்கும் அவள் நினைவு 

நெருஞ்சியாய் குத்துதே !

இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !

கனவில் வரும் பாடலெல்லாம் 

கண்விழிச்சா வாடுதே !

ஏமாத்தும் மேகங்களால் 

பூநாத்து கருகுதே !


=======================


வாடிப்போனதென்னவோ நான் ...

அவள் மலராம் !


சிறகொடித்து போன 

தென்றல் 


நீ தவிர்ப்பதும் 

நான் தவிப்பதும் 


இனிப்பதே இல்லை 

நீ இல்லாமல் ...


நூலறுந்த பட்டமொன்று  

காற்றில் அலைவது போல 

நீயின்றி அலையுது காதலே !


இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !


கண்ணீர் தினம் அரித்தும் கரையவில்லை 

விழியில் உன் பிம்பமே  


அமைதியான காட்டுக்குள்ளே 

ஆர்ப்பரிக்கும்'அருவிபோல 


நிலத்தடி நீர் உறிஞ்சும் 

கருவேலம் மரத்த போல 


வரப்போரம் 

நீ நடந்தா 

நெற்பயிரும் 

தலை நிமிருமடி !


=====


அடிக்கடி 

மேக போர்வையை 

போர்த்திக்கொண்டு 

கண்ணாமூச்சி காட்டுகிறது 

நிலவு !


கடந்து போனது 

ஒரு மேகம்  ...

காதல் மழையை 

பொழிந்து விட்டு !


காதல் கொண்ட 

இரு மேகங்கள் 

ஆசையோடு உரசியதில் 

பற்றி கொண்டது 

மோக மின்னல் !


நீ 

என் தேடலின் முடிவா ?

தவிப்பின் தொடக்கமா ?


உனக்காக 

கவிதை எழுதுகிறேன் 

என்று யார் சொன்னது ...

உன்னால் 

எழுதுகிறேன் !


கடவுளும் 

நீயும் 

ஒன்றுதான் ...

காட்சி தாராமலே 

காத்திருக்க 

வைப்பதால் !

=====================

Monday, April 18, 2022

இறைவனிடம் கெஞ்ச வைக்கிறாய்

 உன்னை 

பார்த்துக்கொண்டிருப்பதால் 

நேரம் போதவில்லை ...

கடிகாரத்துக்கும் !


எண்ணங்களை கொட்டினாலும் 

வரைய முடியவில்லை என்னாலே ... 

வண்ணங்களை கொட்டியே 

ஓவியம் வரைகிறாய் 

தரையிலே !


இலக்கணமும் இல்லை 

கருத்துக்களும் இல்லை 

எனில் 

உன் மழலைக்கு ஈடாக 

அந்த ஈசன் மொழியும் இல்லை !


========================


என்னென்னமோ பெயர் சொல்லி 

எப்படி எப்படியோ 

கொஞ்சுகிறாய் 


புரியாத கதைகளை 

முகம் பார்த்து 

புலம்பி தீர்க்கிறாய் 


இல்லாத ராகத்தில்  

தாலாட்டு பல பாடி 

தூங்க வைக்கிறாய் 


பசி இல்லாத எனக்கு 

ஊட்டி விட்டு உண்ண சொல்லி 

அடம் பிடிக்கிறாய் 


ஆடை கட்டி பூச்சூடி 

இஷ்டம் போல் அலங்கரித்து 

அழகு பார்க்கிறாய் 


ஊஞ்சலில் அமர வைத்து 

முன்னும் பின்னும் 

ஆட்டுகிறாய் 


ஒரு முறை உயிர் கொடு 

ஒரே ஒரு முத்தம் 

கொடுக்கிறேன் என 

இறைவனிடம் கெஞ்ச வைக்கிறாய் 




Thursday, April 14, 2022

ஆதியும் நீயே அந்தமும் நீயே

மனக்கடலில் நீலநிலா ஒன்று நீராடும்

நீராடும் நிலா அவளிடம்  அழகாடும் 

அழகாடும் அவளை கண்டு சோலையாடும் 

சோலையாடும் பூக்களில் தேனாடும் 


தேனாடும் அவள் விழி-கள் வடிக்கும் 

கள் வடிக்கும் விழிகண்டு மனம் துடிக்கும் 

மனம் துடிக்கும் நேரத்தில் காதல் பிறக்கும் 

காதல் பிறக்கும் இதயத்தில் கவி சிறக்கும் 


கவி சிறக்கும் மொழியிலும் தயக்கங்கள்     

தயக்கங்கள் சொல்லித்தரும் மயக்கங்கள்    

மயக்கங்கள் கொண்டுவரும் நவரசங்கள்

நவரசங்கள் தாங்காது இதயங்கள்


இதயங்கள் இடம் மாறி தடுமாறும் 

தடுமாறும் கால்களும் தடம் மாறும் 

தடம் மாறும் வாலிபத்தில் முறுக்கேறும் 

முறுக்கேறும் ஆசைகள் அவளை நினைத்தே பசி ஆறும் 


பசி ஆறும் அதரங்கள் அனல் மூட்டும் 

அனல் மூட்டும்  எண்ணங்கள் ருசி கூட்டும் 

ருசி கூட்டும் நினைப்புகள் தேரோட்டும்  

தேரோட்டும் காதல்மழை சீராட்டும்


சீராட்டும் மோகங்கள் பஞ்சணை

பஞ்சணையில் என்றுமே நீ துணை  

நீ துணை இருக்க சுவர்க்கம் காணும் நெஞ்சணை 

நெஞ்சணையில் என்றும் கொள்ளாதே  வஞ்சனை 

Saturday, April 9, 2022

உறையும் கனவுகள்

 உன்னை வர்ணித்து  

நான் எழுதிய கவிதை 

வெறும் ஒத்திகை மட்டுமே ...

அதற்கே 

மயங்கி கிடக்கிறது 

என் 

கவிதை புத்தகம் !


எல்லோரும் 

எதை அணிந்தால் 

அழகாக தெரிவோம் 

என்று தேட ....

அழகு தேடுகிறது 

உன்னை அணிவதற்கு !


=============================

வரை படம் போடாமல் 

மேஸ்திரி இல்லாமல் 

கொத்தனார் இல்லாமல் 

சித்தாள் இல்லாமல் 

வீடு கட்டி கொண்டது 

சிட்டுக்குருவி !


தோட்டத்தின் மூலையில் 

செடியின் ஓரத்தில் 

பூத்திருந்தது 

அந்த அழகான பூ ...

எனக்கு முன்னே 

அந்த பூவை 

கண்டு பிடித்திருந்தது 

ஒரு பட்டாம் பூச்சி !


அலகிடுக்கில் 

சுள்ளியை அள்ளி சென்று 

சுலபமாய் 

கட்டிவிடுகிறாய் 

சிறு கூட்டை ...


பணமின்றி 

மனிதரின்றி 

இயந்திரமின்றி 

காதலிக்கு கூட 

கட்டமுடியவில்லை 

சிறு வீட்டை !


மரத்தை கொத்தி 

மரத்தில் இடம் பிடிக்கும் 

மரம்கொத்தி போல 

மனதை  கொத்தி 

மனதில் இடம் பிடித்தது 

மனம் கொத்தி ஓன்று !

 

=====================================================

சித்திரை தேரோடும் பொன் வீதியில் 

பத்தரை மாற்று ஒன்று பவனியில் 

முத்திரை பதிக்குமோ வாழ்வினில் 

நித்திரை கெடுக்குமோ அவனியில் 


அலை வீசி கொந்தளிக்கும் கடலே 

ஆசை வீசி ஆர்ப்பரிக்கும் உடலே  

மோகம் கொண்ட மனதின் தேடலே  

தாகம் கொண்ட நதியின் பாடலே  


விழியிரண்டில் காவியம் பார்த்தேன் 

வீணில் ஆசைகள் விழிகளில் சேர்த்தேன் 

கவிதையாய் பேச வார்த்தைகள் கோர்த்தேன் 

காற்றாடி ஓடியும் முழுவதும் வேர்த்தேன் 


காணாவிடில் துருவப் பனியாய் உறைகிறேன் 

கண்டாலோ தீயில்  பனியாய் கரைகிறேன் 

கவிதையென்று எதையோ வரைகிறேன் 

காதல் சங்கத்தில் அதனை உரைக்கிறேன் 


சித்திரையும் குளிருது வாடையில்   

மார்கழியும் தகிக்குது கோடையில்

சொல்லொன்று சொல்லு ஜாடையில்  

என் காதலை ஏற்றிடுவேன் மேடையில் 


இதய வீதியில் உலா வரும் தேரே  

பார்வையாலே நடத்துகிறாள் உலகப் போரே 

அவளின்றி உறவுக்கு வழி யாரே  

மலரின்றி மணக்குமோ வாழை நாரே 


நிலாமுகத்தில் புன்னகை மலரும் 

பொழுதும் அவள் முகம் காணவே புலரும் 

கண்டாலோ  பூஞ்சோலையும் மலரும் 

காணாவிடில்  பூவும் சருகாய் உலரும் 


என்னென்ன ஆசைகள் விரியும் 

எப்போது உனக்கு அவை புரியும் 

நகக்கீறல் கண்ணாடியில் தெரியும் 

மனக்கீறல் எந்த ஆடியில் தெரியும் 


உணர்வுகள் வேர்களாய் எழுது 

ஆலமரமாய் நினைவுகள் விழுது 

காணாது தினம் தினம் அழுது 

விழியிரண்டும் ஆயின பழுது 


கொஞ்சும் குரல் யாழினை வெல்லும் 

மொழிகள் யாவும் தம்முடையதென சொல்லும் 

பாராமுகம் என்றும் என்னை கொல்லும் 

அவளின்றி என் வாழ்வு எங்கே செல்லும் 


செந்தூரமும் அவள் நெற்றி தேடும் 

சோலை பூவும் அவள் கூந்தல் நாடும் 

அவள் படம் இல்லாத புகைப்பட ஏடும் 

நீரில்லா செடியாய் உடனே வாடும் 


அவள் கனவோடு இரவு சிறக்கும் 

அவள் நினைவோடு காலை பிறக்கும்  

அவளை காணவே விழிகள் திறக்கும் 

அவளின்றி காண்பவை மறக்கும் 


ஓரப்பார்வையும் உயிர்வரை தீண்டும் 

இதயம் காதல் பசியில் அவளை வேண்டும் 

அவளின்றி கழியும் ஒவ்வோர் ஆண்டும் 

கண்ணீர் துளிகள் விழியை தாண்டும் 


முப்பொழுதும் அவள் எண்ணங்கள் கோர்க்கும் 

எப்பொழுதும் வசந்தங்கள் சேர்க்கும் 

இமைப்பொழுதும் அவளின்றி வேர்க்கும் 

அப்பொழுதே என் ஆவி தீர்க்கும் 


நொடிகள் யுகங்களாய் கடக்கும்  

மனம் போன பாதையில் கால்கள் நடக்கும் 

பாதையும் அவளை எதிர்பார்த்தே கிடக்கும் 

அவள் காலடியே சொர்க்கமென்று கேட்கும் 


நாட்கள் ஒவ்வொன்றாய் குறையும் 

நெஞ்சில் நிராசைகள் நிறையும் 

அவள் நினைவுகள் எப்போது மறையும் 

கல்லறையிலும் அவள் கனவுகள் உறையும் 


Thursday, April 7, 2022

பசிக்கு மாற்றாக

 விறகிற்கு மாற்றாக 

மண்ணெண்ணையை கண்டுபிடித்தீர்கள் !

மண்ணெண்ணெய்க்கு மாற்றாக 

எரிவாயுவை கண்டுபிடித்தீர்கள் !

எரிவாயுவிற்கு மாற்றாக

மின்னடுப்பை கண்டுபிடித்தீர்கள் !

மின்னடுப்பிற்கு மாற்றாகவும் 

எதையாவது கண்டு பிடித்து விடுவீர்கள் !


பசிக்கு மாற்றாக 

எதை எப்போது 

கண்டு பிடிப்பீர்கள் ?

Saturday, April 2, 2022

உறவுக்கு வண்ணம் பூசி

 கருவிழி தூரிகையால் 

மோக வண்ணங்களை 

தீட்டுகிறாய் நெஞ்சில் ...

உறவுக்கு வண்ணம் பூசி 

வருவாயோ வாழ்வில் !


காணும் யாவும் 

உன் வண்ணங்களை காட்டி 

பற்ற வைக்கிறது 

உன் நினைவு தீயை ...

அதன் 

சாம்பலிலாவது 

கரையுமோ உன் எண்ணங்கள !


வண்ணங்களால் 

நிறைந்த உன் காதல் 

கருப்பு வெள்ளை விழியில் 

வழிய வைத்தது 

நிறமற்ற நீரை !


கொஞ்சிய வண்ணம் 

நீ சொன்ன வார்த்தைகளில்  

சாயம் போய் விட்டது ...

இன்னமும் வண்ணங்களை 

காட்டி மாயம் செய்கிறது 

உன் எண்ணங்கள் !


என் 

கருப்பு இரவுகள் 

ஒவ்வொன்றும் 

வானவில் இரவுகளாகவே 

கழிகின்றன 

வண்ண மயமான 

உன் கனவுகளால் !


நினைத்தபோது 

வண்ணங்களை 

மாற்றிக்கொள்ளுகிறாய் 

உன் எண்ணங்களில் ....

உன் வண்ணங்களை தவிர 

வேறெதையும் அறியாது 

தவிக்கிறது 

என் எண்ணங்கள் !


உன் எண்ணங்கள் 

ஒவ்வொன்றும் 

நெஞ்சில் 

பூக்க வைக்கிறது 

பூக்களை 

பல வண்ணங்களில் ...

பூச்சூட வருவாயோ ...

வேர்களில் 

வெந்நீர் ஊற்றி போவாயோ !


கருமையே அழகு ...

உன் 

கருவண்ண கூந்தலில் 

இடம் கிடைத்ததால் 

வண்ண பூக்களும் !


பொய் வண்ணம் 

பூசி வந்த 

உன் காதலுக்கு முன்னால் 

தோற்றுப்போனது 

நிற பேதமற்ற 

என் காதல் !


ஓவியம் ஒன்று 

காதல் ஓவியத்தை 

தீட்டியது நெஞ்சில் ...

தீட்டி முடிந்ததும் 

கலைந்து போனது 

வார்த்தை புயல் 

ஒன்றில் !


உன் அழகு வண்ணங்களை 

வெண்மை கொண்ட காகிதத்தில் 

வடிக்க முனைகிறது 

கரு மை கொண்ட 

பேனா !

  




புன்னகை பூ

 உனக்கான கவிதையை 

எழுத முயற்சித்து ...

தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் ... 

இமை கொட்ட முடியாமல் நானும் ...

மை கொட்ட முடியாமல் என் பேனாவும் ...

உன் அழகில் மெய்மறந்து !


விடு கதை என்ற பெயரில் 

நீ 

விடும் கதைகள் கூட 

சுவாரஸ்யமாகத்தான் 

இருக்கிறது ...

என் 

கனவு புத்தகத்தில் !


மனதை இரும்பாக்கி கொண்டேன் 

உன் 

கண்ணில் இருப்பது 

காந்தம் என்றறியாமல் !


பார்வை என்னும் 

உளிகொண்டு 

காதல் என்னும் சிலையை 

என் 

இதயக்கோவிலில் 

செதுக்கிவிட்டு 

நாத்திகமாகி விட்டாயே !


காதல் என்ற 

நோயை தந்த நீ 

மறதி என்ற 

மருந்தையும் 

தந்தே போயிருக்கலாம் !



மனம் என்னும் வீதியில் 

நிழற்குடை அமைத்து 

காத்திருக்கிறேன்

நீ இளைப்பாற ...

ஆனால் 

வருவதென்னவோ 

உன் 

நினைவுகள் மட்டுமே !


காதலை 

குற்றமாக 

செய்து போனவள் நீ ...

நான் எப்படி 

ஆயுள் கைதியானேன் !?


ஒவ்வொரு 

திரியாய் ஏற்றுகிறாய் ...

இதயத்தில் 

ஒளி ஏற்றுகிறது 

காதல் !


உனக்கு 

மலர் பாதங்கள் என்று 

யார் சொன்னது  ...

அழிக்கவே முடியவில்லையே 

என் இதய வீதியில்

நீ 

உலா வந்த தடங்களை ! 


அழகு என்ற வார்த்தைக்கு 

அர்த்தம் நீ அல்ல ...

நீ 

அழகை விட 

கொஞ்சம் கூடுதலானவள் !


நீ 

விட்டு சென்ற இடத்திலேயே 

நிற்கிறது 

என் காதல் !

நீ 

எங்கே .. எதை ...

தேடிக்கொண்டிருக்கிறாய் !


நீரூற்றாமலே 

பூத்திருக்கிறதே 

அழகாய் 

ஒரு 

புன்னகை பூ !


நிலவில் 

நீர் இருக்கிறதா 

என்று 

எதற்கு வீண் ஆராய்ச்சி ...

பூத்திருக்கிறதே 

புன்னகை பூ !