உன்னை வர்ணித்து
நான் எழுதிய கவிதை
வெறும் ஒத்திகை மட்டுமே ...
அதற்கே
மயங்கி கிடக்கிறது
என்
கவிதை புத்தகம் !
எல்லோரும்
எதை அணிந்தால்
அழகாக தெரிவோம்
என்று தேட ....
அழகு தேடுகிறது
உன்னை அணிவதற்கு !
=============================
வரை படம் போடாமல்
மேஸ்திரி இல்லாமல்
கொத்தனார் இல்லாமல்
சித்தாள் இல்லாமல்
வீடு கட்டி கொண்டது
சிட்டுக்குருவி !
தோட்டத்தின் மூலையில்
செடியின் ஓரத்தில்
பூத்திருந்தது
அந்த அழகான பூ ...
எனக்கு முன்னே
அந்த பூவை
கண்டு பிடித்திருந்தது
ஒரு பட்டாம் பூச்சி !
அலகிடுக்கில்
சுள்ளியை அள்ளி சென்று
சுலபமாய்
கட்டிவிடுகிறாய்
சிறு கூட்டை ...
பணமின்றி
மனிதரின்றி
இயந்திரமின்றி
காதலிக்கு கூட
கட்டமுடியவில்லை
சிறு வீட்டை !
மரத்தை கொத்தி
மரத்தில் இடம் பிடிக்கும்
மரம்கொத்தி போல
மனதை கொத்தி
மனதில் இடம் பிடித்தது
மனம் கொத்தி ஓன்று !
=====================================================
சித்திரை தேரோடும் பொன் வீதியில்
பத்தரை மாற்று ஒன்று பவனியில்
முத்திரை பதிக்குமோ வாழ்வினில்
நித்திரை கெடுக்குமோ அவனியில்
அலை வீசி கொந்தளிக்கும் கடலே
ஆசை வீசி ஆர்ப்பரிக்கும் உடலே
மோகம் கொண்ட மனதின் தேடலே
தாகம் கொண்ட நதியின் பாடலே
விழியிரண்டில் காவியம் பார்த்தேன்
வீணில் ஆசைகள் விழிகளில் சேர்த்தேன்
கவிதையாய் பேச வார்த்தைகள் கோர்த்தேன்
காற்றாடி ஓடியும் முழுவதும் வேர்த்தேன்
காணாவிடில் துருவப் பனியாய் உறைகிறேன்
கண்டாலோ தீயில் பனியாய் கரைகிறேன்
கவிதையென்று எதையோ வரைகிறேன்
காதல் சங்கத்தில் அதனை உரைக்கிறேன்
சித்திரையும் குளிருது வாடையில்
மார்கழியும் தகிக்குது கோடையில்
சொல்லொன்று சொல்லு ஜாடையில்
என் காதலை ஏற்றிடுவேன் மேடையில்
இதய வீதியில் உலா வரும் தேரே
பார்வையாலே நடத்துகிறாள் உலகப் போரே
அவளின்றி உறவுக்கு வழி யாரே
மலரின்றி மணக்குமோ வாழை நாரே
நிலாமுகத்தில் புன்னகை மலரும்
பொழுதும் அவள் முகம் காணவே புலரும்
கண்டாலோ பூஞ்சோலையும் மலரும்
காணாவிடில் பூவும் சருகாய் உலரும்
என்னென்ன ஆசைகள் விரியும்
எப்போது உனக்கு அவை புரியும்
நகக்கீறல் கண்ணாடியில் தெரியும்
மனக்கீறல் எந்த ஆடியில் தெரியும்
உணர்வுகள் வேர்களாய் எழுது
ஆலமரமாய் நினைவுகள் விழுது
காணாது தினம் தினம் அழுது
விழியிரண்டும் ஆயின பழுது
கொஞ்சும் குரல் யாழினை வெல்லும்
மொழிகள் யாவும் தம்முடையதென சொல்லும்
பாராமுகம் என்றும் என்னை கொல்லும்
அவளின்றி என் வாழ்வு எங்கே செல்லும்
செந்தூரமும் அவள் நெற்றி தேடும்
சோலை பூவும் அவள் கூந்தல் நாடும்
அவள் படம் இல்லாத புகைப்பட ஏடும்
நீரில்லா செடியாய் உடனே வாடும்
அவள் கனவோடு இரவு சிறக்கும்
அவள் நினைவோடு காலை பிறக்கும்
அவளை காணவே விழிகள் திறக்கும்
அவளின்றி காண்பவை மறக்கும்
ஓரப்பார்வையும் உயிர்வரை தீண்டும்
இதயம் காதல் பசியில் அவளை வேண்டும்
அவளின்றி கழியும் ஒவ்வோர் ஆண்டும்
கண்ணீர் துளிகள் விழியை தாண்டும்
முப்பொழுதும் அவள் எண்ணங்கள் கோர்க்கும்
எப்பொழுதும் வசந்தங்கள் சேர்க்கும்
இமைப்பொழுதும் அவளின்றி வேர்க்கும்
அப்பொழுதே என் ஆவி தீர்க்கும்
நொடிகள் யுகங்களாய் கடக்கும்
மனம் போன பாதையில் கால்கள் நடக்கும்
பாதையும் அவளை எதிர்பார்த்தே கிடக்கும்
அவள் காலடியே சொர்க்கமென்று கேட்கும்
நாட்கள் ஒவ்வொன்றாய் குறையும்
நெஞ்சில் நிராசைகள் நிறையும்
அவள் நினைவுகள் எப்போது மறையும்
கல்லறையிலும் அவள் கனவுகள் உறையும்
No comments:
Post a Comment