உனக்கான கவிதையை
எழுத முயற்சித்து ...
தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் ...
இமை கொட்ட முடியாமல் நானும் ...
மை கொட்ட முடியாமல் என் பேனாவும் ...
உன் அழகில் மெய்மறந்து !
விடு கதை என்ற பெயரில்
நீ
விடும் கதைகள் கூட
சுவாரஸ்யமாகத்தான்
இருக்கிறது ...
என்
கனவு புத்தகத்தில் !
மனதை இரும்பாக்கி கொண்டேன்
உன்
கண்ணில் இருப்பது
காந்தம் என்றறியாமல் !
பார்வை என்னும்
உளிகொண்டு
காதல் என்னும் சிலையை
என்
இதயக்கோவிலில்
செதுக்கிவிட்டு
நாத்திகமாகி விட்டாயே !
காதல் என்ற
நோயை தந்த நீ
மறதி என்ற
மருந்தையும்
தந்தே போயிருக்கலாம் !
மனம் என்னும் வீதியில்
நிழற்குடை அமைத்து
காத்திருக்கிறேன்
நீ இளைப்பாற ...
ஆனால்
வருவதென்னவோ
உன்
நினைவுகள் மட்டுமே !
காதலை
குற்றமாக
செய்து போனவள் நீ ...
நான் எப்படி
ஆயுள் கைதியானேன் !?
ஒவ்வொரு
திரியாய் ஏற்றுகிறாய் ...
இதயத்தில்
ஒளி ஏற்றுகிறது
காதல் !
உனக்கு
மலர் பாதங்கள் என்று
யார் சொன்னது ...
அழிக்கவே முடியவில்லையே
என் இதய வீதியில்
நீ
உலா வந்த தடங்களை !
அழகு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் நீ அல்ல ...
நீ
அழகை விட
கொஞ்சம் கூடுதலானவள் !
நீ
விட்டு சென்ற இடத்திலேயே
நிற்கிறது
என் காதல் !
நீ
எங்கே .. எதை ...
தேடிக்கொண்டிருக்கிறாய் !
நீரூற்றாமலே
பூத்திருக்கிறதே
அழகாய்
ஒரு
புன்னகை பூ !
நிலவில்
நீர் இருக்கிறதா
என்று
எதற்கு வீண் ஆராய்ச்சி ...
பூத்திருக்கிறதே
புன்னகை பூ !
No comments:
Post a Comment