Saturday, July 31, 2021

ஆல்பபெட்

Aனது மனதில் 
Bரமிப்பை ஏற்படுத்தும்
Cல கனவுகள் 
Dனம் இதயத்தில் 
Eனிப்பு மிட்டாயாய் 
Fபோதும் இனிக்கும்  
Gவனில் கரையும் 
Hச்செயல் செய்தாலும் 
Iயமின்றி கலக்கும் 
Jயிக்குமோ 
Kள்வியாகுமோ
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z

தடுக்கணும்

 ஏண்டா, நீட்ட தடுக்கணும், மீதேன தடுக்கணும், ஹைட்ரொ கார்பன தடுக்கணும், மேகதாதுவ தடுக்கணும், ஜிஎஸ்டிய தடுக்கணும், நியூட்ரினோவை தடுக்கணும், துறைமுகத்த தடுக்கணும், நவோதயாவ தடுக்கணும், ஹிந்திய தடுக்கணும், சமஸ்க்ரிதத்தை தடுக்கணும், விவசாய சட்டத்த தடுக்கணும், சாகர் மாலாவை தடுக்கணும், சிஐஏ வ தடுக்கணும்,உரிமைகள் பறி போறத தடுக்கணும், வந்தது வராத்தது எல்லாத்தயும் தடுக்கணும்... உனக்கு எவளோ ஒருத்தியோட பார்வைய தடுக்கிறதுதான் முக்கியமா போச்சா ... எய்ம்ஸ் செங்கல்ல எடுத்து அவ கண்ண குத்திட்டு போயெண்டா !

Friday, July 30, 2021

காகிதம்

தமிழ் தள்ளி நின்று 
என்னை முறைத்தது

விரல்கள் முள்ளாகி 
இதயத்தை குத்தியது

காகிதம் தன்னையே
கசக்கி கொண்டது

என்ன நடந்தது ....

ஓ  ... இன்று ...
உனக்கான கவிதையை
இன்னும் எழுதவில்லையோ!!

================================

என் 
கனவின் முகவரியை கண்டுபிடித்து 
கனவில் நுழைந்து அத்துமீறும் நீ
என்
வீட்டின் முகவரியை 
எப்போது கண்டு பிடிப்பாய்!!

==================================

நீ
என் இதயத்தில் 
மையம் கொண்ட 
வலுவிழக்காத 
கரை கடக்காத
புயல்!

==================================

பூந்தோட்டத்தில் 
ஒரு
நந்தவனம்!!

==================================
 
என் கனவு வீட்டை
எந்த பூட்டு போட்டு பூட்டினாலும் 
அவள் வந்து விடுகிறாள் 
மாஸ்டர் கீயோடு!!
 
==================================

பூக்களின் உலகில் 
நான் ராணி என்றது ரோஜா ...
உன் பெயர் எழுதிய 
காகிதத்தை காட்டினேன் ...
பாவம் ....
செடியே வாடி விட்டது!!

==================================


Thursday, July 29, 2021

மழை

மழை
இடி சத்தத்தில் மிரண்டு
அழ ஆரம்பித்து விட்டனவோ
மேக குழந்தைகள்!


அருவி
நதிமகளை காதலித்து
ஏமாற்றியது யாரோ ...
மலை உச்சியிலிருந்து
குதிக்கிறதே !!


பிறந்த உடன் 
தற்கொலை எண்ணமா ...
மேகத்திலிருந்து
குதித்தது மழைத்துளி!!

நட்சத்திரங்கள்
இவ்வளவு ஏழையா பூமி ..!!
வானக்கூரையில்
இரவு நேரத்தில் 
எவ்வளவு ஓட்டைகள்!

நிலா
விண்மீன் புள்ளிகளை
வைத்துவிட்டு
கோலமிட தெரியாமல்
தவிக்கும் புதுப்பெண்!

எனக்கும் ஆசைதான்
துண்டு சீட்டில் 
தத்துவங்களை கிறுக்க ...
என்ன செய்வது ...
என்னை பிறக்க வைத்ததே
என் தாயும் தந்தையும்
கொண்ட காதல் அல்லவா!!


சொல் நயமும் பொருள் நயமும் 
தேடி எழுத நான் கம்பனல்ல
உவமை நயம் காட்டி உருக வைக்க 
நான் காளிதாசனல்ல

காதல் இலக்கணத்தில் 
கவிதையை கற்று விட்டேன் 
நீ பிரிந்த கணத்தில்
வாழ்வினையே விற்று விட்டேன்!

உன் பார்வை டோஸ்கள்
காதல் நோயை கூட்டுதடி
இதயம் முழுதும்
காதல் வைரசை கொட்டுதடி !

மழை விழுந்தால் 
மண்ணெங்கும் மண் வாசம் - உன் பார்வை விழுந்தால்
மனமெங்கும் பூ வாசம்

என் மன வாய்க்காலில்
வென்னீர் பாய்ச்சும் மங்கையடி ...
என் கவிதை வாய்காலில்
தண்ணீர் பாய்ச்சும் கங்கையடி

என் உயிர் துடிப்பை
உன் விழித்துடிப்பில் காட்டுகிறாய்
உன் இதழ் துடிப்பில் 
என் இதயத்தை வாட்டுகிறாய்

மோகமென்னும் திராவகத்தை
ஊற்றுகிறாய் ...
தேகமெங்கும் தீமுகத்தை
ஏற்றுகிறாய்!

காமதேவன் வேடம் பூண்டு 
காதல் வலை விரித்தான் 
கால தேவன் எனை கொள்ள
பாச வலை விரித்தான்

காதலென்னும் மென்பொருள்
இயங்க மறுக்குதடி
அப்டேட் ஒன்று நீ தந்தால்
வாழ்வே பூட் ஆகுமடி



Tuesday, July 27, 2021

உன் கொலுசு !

 பெயரில்லா ராகத்தை 

என் உயிரில் இசைக்கிறது 

உன் கொலுசொலி !


என் காதல் தேசத்திற்கு 

தேசிய கீதம் கிடைத்தது 

நீ கொலுசணிந்து 

வந்தபோது !


பிரபஞ்சமே ஆட 

ஆடும் உன்னை 

ஆட்ட ராஜன் 

என்றல்லவா 

சொல்லியிருக்க வேண்டும் ...

ஏன் 

"நட" ராஜன் என்கிறார்கள் !!


இலவசமாக 

இசை கச்சேரி 

நடத்துகிறது 

உன் கொலுசு !

வைரப் பூங்கொடிக்கு

 பூலோக தோட்டத்தில் பூத்த  

வைரப் பூங்கொடிக்கு 

கார்மேக தோட்டத்தில் பூத்த 

கண்ணாடி பூக்களால்  

அபிஷேகம் !



மண்ணில் விதைத்த 

வித்துக்களுக்கு 

விண்ணின் பரிசாக 

கண்ணாடி முத்துக்கள் !


தெற்கிலிருந்து தென்றல் 

கிழக்கிலிருந்து கொண்டல் 

மேற்கிலிருந்து மேலை 

வடக்கிலிருந்து வாடை 

எத்திசையிலிருந்து 

எந்த பெயரில் வந்தாலென்ன 

அவள் மேனி தழுவி வரும்போது 

மட்டும் நீ பூங்காற்று !


தண்ணீர் வரி கேட்காமல் 

வாரி இறைக்கிறாய் வான் மழையே ...

எனில் 

கண்ணீர் வரும் அளவிற்கா 

வாரி இறைப்பது !!


நிலவு தேவதைக்கு 

இவ்வளவு அர்ச்சனையா  ...

நட்சத்திர பூக்களால் !! 


ஆவணி தென்றலும் 

கடந்து செல்ல  

தயங்குகிறது 

தாவணி தென்றலை  !


பட்டு புடவை 

கட்டிக்கொண்டு 

அழகா இருக்கிறேனா 

என்கிறாய் ...

எப்படி பொய் சொல்வது 

உன்னை விட 

பட்டுப்புடவை அழகென்று !



Sunday, July 25, 2021

கல்வெட்டு நினைவுகள்

 முன்பொரு நாள் 

நீ உருவாக்கிய 

அழகிய தருணங்கள் 

இன்று உன்னால்  

அழும் தருணங்கள் 


உன் கண்வெட்டு 

செதுக்கிய 

கல்வெட்டு நினைவுகள் 


படித்து கிழித்து விட்டாய் 

என் இதயத்தை 


என் வாழ்வெனும் கதைக்கு 

திரைக்கதை எழுதிய இறைவன் 

வெறும் பரபரப்பிற்காக 

சேர்த்த கதாபாத்திரமோ 

நீ 


நீ

வரமா இருக்கணும்னுதான்

நெனச்சேன் ...

வராம இருக்கணும்னு

நெனக்கலியே .... !!


மனதில் ஆலகாலத்தோடு

பூமியில் அலையுது 

சில ஜீவனே !

ஆலகாலத்தை 

கழுத்தில் வைத்திருக்கிறாயா

இல்லை இந்த ஜீவன்களின்

மனதில் இறக்கி விட்டாயா

சிவனே!


லவ்பிஎல் 

காதல் கோப்பையாய் 

கிடைப்பாய் என்றிருந்தேன் 

சியர் கேர்ளாய் 

ஆடிவிட்டு போய் விட்டாய்!!


என் காதல் கதையை

எழுதும்போது மர்ம கதை

எழுத்தாளனாகி விட்டான்

இறைவன் ..

கிளைமாக்ஸில்

கதாநாயகியை 

வில்லியாக்கி விட்டானே!



ஆடி

 ஆடி தள்ளுபடியில் 

"எதையாவது" தரக்கூடாதா 

என்று கேட்டேன் ...

அவள் காதலையே 

தள்ளுபடி செய்து போனாள் !


காதலர்களாகவே இருப்பதாலோ 

ஆடியில் மட்டுமின்றி 

வாழ்நாள் முழுதும் பிரிவு !

Thursday, July 22, 2021

விழி

வழியில் விழி பதித்து நடப்பதா...
இல்லை ... உன்
விழியில் வழி தேடி கிடப்பதா !


நீ பிறந்த பிறகு 
அழகு என்ற சொல்லுக்கு
புதிய அர்த்தம் சேர்த்து
தன்னை
புதுப்பித்து கொண்டிருக்கிறது
அகராதி


நான்
இரண்டு வரி கவிதையை
எழுதி முடிப்பதற்குள்
ஒரு
கவியரங்கத்தையே
நடத்தி விடுகிறதே
உன் கண்கள்!

மணலில் 
கவிதை எழுத முடியுமா ..
உன் காலடி தடங்கள்!


Wednesday, July 21, 2021

துணி

உந்தன் கால் கொலுசொலிக்கு
100.0 ரிக்டரில்
அதிர்ந்த என் மனது 
உனது நினைவுகளில் 
புதையுண்டு கிடக்கிறது ...
காதல் பேரிடராக அறிவித்து
உன்னையே நிவாரணமாக
தருவாயா!!!


நீட்டை கூட தடுதது விடலாம் 
வேட்டையாடும் உந்தன்
நினைவுகளை எந்த
சட்டம் கொண்டு தடுப்பது!

அரிச் புடைக்க தெரியாத நீ
இதயங்களை புடைக்க
எப்படி கற்றுக்கொண்டாய்!!


இதயங்களை 
சிதறடிக்கும் உன்னை
காதல் தடுப்பு சட்டத்தில்
கைது செய்யுமா
அரசாங்கம் !!

உடல்களை சிதறடிப்பது
மனித வெடிகுண்டு என்றால் 
இதயங்களை சிதறடிக்கும்
உன்னை
என்னவென்று அழைப்பது!!

துணி துவைக்கும் சாக்கில்
நீ ஆற்றங்கரைக்கு வருவது 
என்னை துவைக்கத்தானே!!


ஆயுதம்


கெஞ்சும் இதழ்களில் 
செந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கணங்களில் 
சிந்தை அறுந்திடும்

ஏந்திழை மேனியில்
மோகினி நாட்டியம்
எந்தன் மேனியில்
மோகத்தின் தாண்டவம்

மயக்கும் விழிகளில்
மன்மதன் ஆயுதம்
தாக்கும் கணங்களில்
என் மனம் சிதறிடும்

====================================

குச்சி ஐஸ் ஒண்ணு வாங்கி 
ரெண்டு பேரும் சுவச்ச கத
நாவல் பழம் தின்னுபுட்டு 
நிறம் பாத்து ரசிச்ச கத
உனக்கு நானும் எனக்கு நீயும்
பிரசாதம் வாங்கி ருசிச்ச கத
உனக்கு நானும் எனக்கு நீயும்
நட்சத்திர பலன் பாத்து ரசிச்ச  கத

நெனவிருக்கா  ... நெனப்பிருக்கா ...

மொத்த கதயும் மறந்து என்னை
பித்தனாக்கி போன கத !!


Sunday, July 18, 2021

மத்தாப்பு

பொற்காசுகளுக்காக 
கவிதை எழுதும்
சில்லரை கவிஞனல்ல நான் ...
பொற்சிலைக்காகவே 
கவிதை எழுதும் 
சித்திரக் கவிஞன் !

====================================

நீ நெருப்புதான்...
என் 
கவிதை மத்தாப்புகளுக்கு !

≈===================================

சிறு வயதில் கற்ற 
பம்பர விளையாட்டை
பருவ வயதில்
என்னிடமே விளையாடுகிறாய் ...
விழிச்சரடை வீசி
சுற்ற வைக்கிறாய்
என் இதயத்தை 
பம்பரமாய் !

====================================

எனது காதல் பஞ்சாங்கத்தில் ... 
உன்னை காணா நாட்கள் 
அமாவாசை!
உன்னோடு பேசா நாட்கள் 
சிவராத்திரி!
நீ இருக்கும் திசை தவிர்த்து
எல்லா திசையும் சூலமே !

====================================

துணிகளை வெளுத்து
என் இதயத்தை 
கறையாக்கி விட்டாயே!

=================================/==

ஆலய வாசலில்
தலைமுடியை 
நேர்ச்சை தருவதாக வேண்டி
தரையில் விழுந்து வணங்கிய
என் காதில் கிசுகிசுத்தது பூமி ...
"நீயே எனக்கு நேர்ந்து விடப்பட்டவன்"

====================================

பட்டி மன்றம் நடத்தி 
பார்த்து விடலாமா ...
என் கவிதை விளைய
சிறந்த காதல் பரப்பு ...
உன் விழியும் 
விழி சார்ந்த இடமுமா?
அல்லது 
உன் உதடும்
உதடு சார்ந்த இடமுமா?

====================================

தீண்டாமையை நான் வெறுக்கிறேன் ...
உன் விழிகளை
தீண்டா மையை !

====================================

நீ காத்திருக்கும்
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடை கூட
கடவுளிடம் விண்ணப்பம் போடுகிறது 
பேருந்து இப்போதைக்கு 
வரக்கூடாதென்று ..  
நான் என்ன சொல்லி 
வேண்டுவது !!?

====================================

தேனிலவிற்கு
எங்கே போகலாம் 
என்று கேட்கிறாயே ...
நான்
உன்னையல்லவா
தேன்நிலவு என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !!

====================================

உன்னிடம்
மையம் கொண்டிருக்கும்
காதல் அழுத்த
வாழ்வு மண்டலம்
எப்போது வலுப்பெறுமோ ...
எப்போது என்னில் 
காதல் மழை பொழியுமோ ...
இல்லை ...
என்னை கபந்து 
சென்று விடுமோ !

====================================

எந்த டிகிரியில்
உன் பார்வை விழுந்தாலும் 
நூறு டிகிரிக்கு 
எகிறி விடுகிறது
காதல் வெப்பம் !

====================================

Saturday, July 17, 2021

காய்ந்த சருகிற்கு

 


சீதை காத்திருந்த அசோகவனமெங்கே  

தமயந்தி காத்திருந்த சோலையெங்கே 

கண்ணகி காத்திருந்த மாளிகையெங்கே 

மாதவி காத்திருந்த குடிலெங்கே 

சந்திரமதியின் துயரமெங்கே 


காய்ந்த சருகிற்கு 

கைவருமோ நாட்டியம் ...

கற்று கொடுக்க முயல்கிறதே 

களத்துமேட்டு காற்று ! 



ஓசையின்றி இருந்தாலும் 

ஆசையின்றி இருந்திடாதோ 


தூரத்து குயிலின் கூவலொன்று  

உரசி பார்க்குது  ஏக்கங்களை  


விருப்பத்தோடு போட்ட விதை 

நெருப்பாக முளைக்குதிங்கு  

எங்கோ ஒலிக்கும் பாடலொன்று 

தூங்கும் உணர்வுகளை எழுப்புதிங்கு  


Friday, July 16, 2021

தண்ணி

ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற அலையெல்லாம்
வாடுகின்ற என் மனதின் 
தேடுதலை சொல்லிடாதோ!

விண்ணிலாடும் கார்முகிலும் 
மண்ணிலாடும் பூங்கொடியும்  
கண்ணிலாடும் கனவுகளின் 
வண்ணங்களை சொல்லிடாதோ !

ஏற்றமில்லை என்னில் 
தோற்றமில்லை கண்ணில் 
மறந்துபோன கவிதைகளை 
காற்று வந்து சொல்லிடாதோ !




கண்ணம்மா

களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா !
களச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
உழச்ச வேர்வ ஊத்துப்போல கண்ணம்மா !
ஊத்துதடி தொடச்சு விடு கண்ணம்மா !

பசிச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
பழஞ்சோறு எனக்குப் போதும் கண்ணம்மா !
உரிச்சு வச்ச வெங்காயம் கண்ணம்மா !
உடன் கடிக்கப் போதுமடி கண்ணம்மா !

விரல் கூட்டிக் கவளச்சோறு கண்ணம்மா !
விரும்பி எனக்கு ஊட்டிடடி கண்ணம்மா !
எழந்த தெம்பு எல்லாமும் கண்ணம்மா !
ஏத்தத் தண்ணி போலேறும் கண்ணம்மா !

முந்தானக் கொட பிடிச்சு கண்ணம்மா !
முழுவெயில மறச்சு நில்லு கண்ணம்மா !
கொஞ்ச நேரம் கண்ணசரக் கண்ணம்மா !
ஒம்மடியக் கடன் கொடுடி கண்ணம்மா !

களத்து மேட்டுக் காவலிலே கண்ணம்மா !
கனிஞ்ச காதல் உடன்வருமே கண்ணம்மா !
முடிச்சிடவே பல கடமை கண்ணம்மா !
முழுவாழ்வும் தொண இருடி கண்ணம்மா !

கூட்டு வண்டி

கூட்டு வண்டி கடகடக்குது 
குளிர்காத்து சுழன்றடிக்குது
மாட்டு மணி சத்தமும்தான் 
எம்மனச கிறங்கடிக்குது 
எளநீர் மனசழகி 
எளஞ்சிரிப்பு முகத்தழகி 
தோள் சாஞ்சு கத சொல்லும் 
பதநீர் பேச்சழகி 
கட்டு புல்ல இழுக்கும் காள 
எட்டி நட போடுதடி
கொட்டும்மழ பெய்யுமுன்ன 
கூடு போய் சேர்வோமடி 
ஒட்டி நீயும் தொணயிருந்தா 
போறவழி சொர்க்கமடி 
வெட்டி விட்டு நீ போனா
காதல் வழியும் நரகமடி

Sunday, July 4, 2021

ஊசி

காதற்ற ஊசியும் கூட வராது
காதோடு பேசிய காதல் மொழிகள்
கூட வருமோ !!

========================

ஆலமரமாய் என் காதல்
அதில் ஆணிவேர் நீயடி!

=========================

மேகம் விடும்  மழைத்துளிகள்
விண்ணில் நடத்துது பந்தயமே...
தேகம் தொடும் முதல் துளிக்கு 
மண்ணில் கிட்டுது  சாந்தியுமே!

===============================

ஒத்தயடி பாதையில 
ஒத்த கொட புடிச்சுகிட்டு 
ஒரசிகிட்டு நடக்கயில 

ஒன்ன தாண்டி வரும் காத்தும் 
போதையில் தள்ளாடுதடி 

============================

கருத்தரித்து பிறப்பவன் பிள்ளையன்று
பெற்றோர்
கருத்தறிந்து நடப்பவன் பிள்ளை

==================================

நீர் பொங்கும் கடலே 
கைகோர்த்து நடந்த தடங்களை 
அலை வீசி அழித்து விட்டாய் 
மனதோடு பதிந்த தடங்களை 
எதை வீசி அழித்திடுவாய்!!

===================================

சேத்து வயலில் நீ நடந்தா 
முப்போகம் வெளயுமடி 
நேத்து நட்ட சிறு நாத்தும் 
தலைதூக்கி ரசிக்குமடி 

கயல்விழி பார்வையாலே 
கருவாடா போனேனடி
வயல்வெளி தென்றல்கூட 
சுடுங்காத்தா போச்சுதடி 
 
வரப்போரம் போகும்பெண்ணே 
மனசோரம் வருவாயடி 
வரப்போகும் ஆவணியில் 
கழுத்தோரம் தங்கத்தாலியடி

====================================