Saturday, January 29, 2022

நிமிட கதைகள்

 நிமிட கதைகள் 


ஆன்டி வைரஸ் 

டெவெலப்பருக்கு 

கொரோனா பாசிட்டிவ் !


காய்கறிகள் அனைத்தையும் 

விற்றுவிட்டு 

குழந்தைகளுக்கு 

ரசம் வைக்க ஆரம்பித்தாள் 

காய்கறிக்காரி !


செல்லாத 

நாணயங்கள் மட்டும் 

வீட்டில் இருந்தும் 

பணக்காரராகி விட்டார் ...

ஏலத்தில் விட்டு !


தவளையை 

விழுங்கி கொண்டிருந்த 

பாம்பின் தலைக்கு மேலே 

வட்டமிட்டு கொண்டிருந்தது 

கழுகு !


கோவில் வாசலில் உட்கார்ந்து 

பிச்சை எடுக்கும் 

பிச்சைக்காரனுக்கு தெரியவில்லை 

உள்ளே போய் கடவுளிடம் 

வசதியான வாழ்வை 

வேண்டலாமென்று !


வலையில் சிக்கிய 

கொழுத்த மீனை கண்டு 

குழம்பி 

காலியான வயிறையும் 

காலியான பாக்கெட்டையும் 

தொட்டு பார்த்தான் மீனவன் ...

விற்கவா ...

சாப்பிடவா !


இரும்பு மரங்கள் 

நிறைய எழும்பின ...

இருந்தும் கூடு கட்ட 

முடியவில்லை சிட்டுக்குருவிக்கு ...

செல் போன் டவர் !


மரத்தை வெட்டி 

தயாரிக்கப்பட்ட பேப்பரில் 

சுவரொட்டி அடித்து 

ஊர் முழுதும் ஓட்டினார்கள் 

மரம் வளர்ப்போம் ...

மழை பெறுவோம் !


2122

வீட்டிற்கு ஆறு 

சிலிண்டர்கள் 

இலவசமாக வழங்குவதாக 

சொல்லியிருந்தது ஒரு கட்சி 

தேர்தல் அறிக்கையில் ...

ஆக்சிஜென் சிலிண்டர்கள் !


சந்திராயனை 

வெற்றிகரமாக அனுப்பிவிட்டு 

மகனுக்கு தீபாவளி ராக்கெட் 

வாங்க மறந்து 

வீட்டிற்குள் நுழைந்தார் 

இஸ்ரோ விஞ்ஞானி !


தங்கைக்கு 

ஸ்கூட்டி வாங்கி கொடுக்க 

முடிவு செய்தான் அண்ணன் ...

மகளை ஸ்கூலுக்கு 

கொண்டு விடுவாளே !


மருந்து  கடை முதலாளி 

சுகர் மாத்திரைக்கு அதிகமாய் 

ஆர்டர் செய்தார் ...

பக்கத்தில் 

பேக்கரி கடையும் 

ஆரம்பித்து விட்டார்களாம் !


நிறைய வரிகள் 

இருந்தன ...

இருந்தும் 

ஒருவரி கூட புரியவில்லை ...

வரிக்குதிரை !


கூகிள் மீட் இல் 

பெண் பார்த்து விட்டு 

வாட்சப் பில் மெசேஜ் 

அனுப்பலாம் என்று 

விளம்பரம் போட்டிருந்தது 

மேட்ரிமோனியல் வெப் சைட் !


உங்களுக்கு 

பாசமாக சமைத்து போட்டு 

வளர்த்த பெற்றோருக்கு 

மாத சந்தாவில் 

சாப்பாடு அனுப்பி 

மகிழுங்கள் என 

விளம்பரம் செய்தது ஸ்விக்கி !


கொரோனா வைரஸை 

ஒழிக்க மாட்டீர்களா கடவுளே 

என்று வேண்டியவனிடம் 

பரிதாபமாக

சொன்னார் கடவுள்...

பாவ மன்னிப்பு வழங்கவே 

எனக்கு நேரம் போதவில்லை !


குழந்தை சொல்லும் பொய்யும் 

அழகாக இருக்கிறது...

மிட்டாய் கேட்க மாட்டேன் 

கடைக்கு என்னையும் 

கூட்டிட்டு போ அப்பா !


அடுத்த நாள் காலை 

ஐந்து மணிக்கு 

அலாரம் செட் செய்தவுடன் 

மொபைலில் வந்தது 

வார்னிங் ....

உயிரோடு இருப்பாய் என்று 

நிச்சயமாக தெரியுமா !


தனது மகன் 

சமூக சேவகர் விருது பெறுவதை 

தொலைக்காட்சியில்

அப்பா பார்த்து கொண்டிருந்தார் 

முதியோர் இல்லத்திலிருந்து !


நேரத்திற்கு வீட்டுக்கு வந்து 

சாப்பிடுங்க 

உடம்பை கெடுத்துக்காதீங்க என்று 

மனைவி சொல்லி அனுப்பினாள் 

ஸ்டார் ஹோட்டல் 

முதலாளியான கணவனிடம் !


பழைய சாமான்களை 

கோணியில் போட்டு 

சுமந்து சென்ற சிறுவனை 

வியந்து பார்த்து யோசித்தான் 

புத்தக பை சுமந்த சிறுவன் ...

இவன் எந்த ஸ்கூலில் 

படிக்கிறான் !?



 





No comments:

Post a Comment