Friday, December 24, 2021

ஆட்சியெல்லாம் மதுரையிலே

கண்விழிகள் மூடிவைத்தால்

காண்பது உன் கோலம்

கவலையிலே எவ்வளவு நாள்

கழித்திருப்பேன் காலம்


துவளுகிறேன் அடி தளர்ந்து

துடிக்குதடி நெஞ்சம்

தேவி உன் பார்வை பட்டால் 

தொல்லை எல்லாம் அஞ்சும்


அபிநயத்தில் நின்ற இடம்

தென் குமரி எல்லையோ 

அஞ்சேல் என உன் கரங்கள்

அபயம் அளிப்பதில்லையோ 


காட்சியெல்லாம் தருவதற்கே

கடத்துகிறாய் மிக காலம் ...

ஆட்சியெல்லாம் மதுரையிலே 

ஆள்வதுதான் என்ன நியாயம் ...

மாட்சிமையாய் என் மனதை  

ஆள வருவாய் வருங்காலம் !


பூவிழிக்குள் விழுந்த பிம்பம் கோடி - உன்

பொன்உருவம் போல வருமோடி ..

பாவழிக்குள் தடம் பதிப்பவளே 

பதங்களால் பரதம் படிப்பவளே - என் 

நாவழிக்குள் வந்துதிப்பாயோ 

நல்ல தமிழ் நாளும் தாராயோ ...


தீபவிழி காட்டுதடி மாயம் - அதில் 

தீருமோ என் பிறவிக்காயம் 

ஆர்த்தெழும் மோகங்கள் தீராதோ 

அடைக்கலம் உன்னடி போதாதோ 

போதுமடி புவியில் என் வேஷம் - உன் 

கடைக்கண்ணால் அவியாதோ என் தோஷம்!

No comments:

Post a Comment