Friday, December 10, 2021

காளிதாசனே ... கண்ணதாசனே !

 உன்னிடம் 

எல்லாமே 

கவிதையாக தெரிகிறது  ..

என்னிடம் எதுவுமே 

கவிதையாகாமல் 

நழுவுகிறது !


உனக்கு 

விருந்தாக வந்த கவிதை 

எனக்கு 

பசியாகிப் போனது !


உனக்கு 

பூக்களம் போட்ட 

கவிதை 

எனக்கு 

போர்க்களம் 

அமைக்கிறது !


உனக்கு 

தாய்ப்பால் ஊட்டிய கவிதை 

எனக்கு 

கள்ளிப்பால் 

ஊட்ட முனைகிறது !


உன் கவிதை வானில் 

என்றும் பௌர்ணமி ..

என் 

கவிதை வானில்  

என்றும் அமாவாசை !


நினைக்கும் போதெல்லாம் 

கவிதையை பிரசவிக்க 

உன்னால் முடிகிறது ...

என் கவிதைகள் 

கர்பத்திலேயே 

கரைகிறது !


நீ 

எழுதுகோல் பிடித்தால் 

எரிமலை கூட 

பூக்களை தூவுகிறது ...

எனக்கோ 

பூந்தோட்டம் கூட 

தீமழை பொழிகிறது !


காய்ந்த சருகும் 

உன் கவிதையில் 

காதல் சின்னம் ஆனது ...

தாஜ்மகால் கூட 

என் கவிதையில் 

தடுமாறுகிறது !


புயல் காற்றையும்

எழுதுகோலில் 

நிரப்பி விட்டாய் ...

தென்றல் கூட 

என்னிடம் 

தெறித்து ஓடுகிறது !


கவிதைக் கடல் 

உன் 

குவளைக்குள் அடங்கி 

விட்டது ...

குவளை நீர் கூட 

என்னை 

மூழ்கடிக்கிறது !


உன் 

ஒரு வார்த்தையே  

காதலை

குளிர் காய

வைக்கிறது ...

என் நயமான வார்த்தைகளில் கூட

காதல்

கோபத்தில் 

வியர்க்கிறது !


உனது 

காதல் மாளிகையில் 

வார்த்தைகள் 

தென்றலாய் வீசுகிறது ...

எனது 

காதல் குடிசையை 

வார்த்தைகள்

புயலாய் கடக்கிறது !


உனது 

வார்த்தைகளில் கூட 

கவிதையை தேடும் உலகம் 

எனது கவிதையில் 

வார்த்தைகளை 

தேடுகிறது !


உனது 

கவிதை புறா 

தொடு வானில் 

சிறகடிக்கிறது ...

எனது 

கவிதை கழுகு 

தரையில் 

தள்ளாடுகிறது !


அவித்த 

நெல்மணிகள் கூட 

உனது 

புஞ்செய் நிலத்தில் 

கவிதையாய் 

முளைக்கிறது ...

விதை நெல் கூட 

எனது நஞ்செயில் 

கருகிப்போகிறது !


உன் மடியில்

பச்சை குழந்தையாய்

கொஞ்சி விளையாடும்

கவிதை 

எனது முன்னால்

பாசக்கயிறு வீசி

எமனாய் நிற்கிறது!


புரிகிறது 

நீ 

கவிதையை 

வரமாக 

வாங்கி வந்தவன் ...

நானோ 

அதனை 

சாபமாக 

வாங்கி வந்தவன் !






No comments:

Post a Comment