Friday, December 31, 2021

நீ நிரப்பியிருப்பாய் வீட்டை

 

மாரை கிழிக்கிறது 

மார்கழி கனவுகள் 


வீட்டை நிறைக்கும் போட்டியில் ...

கௌரவர்கள் வைக்கோலை நிறைத்தார்கள் 

பாண்டவர்கள் தீபமேற்றினார்கள் 

நானாக இருந்தால் 

உன்னை குடியமர்த்தியிருப்பேன் 

நீ 

நிரப்பியிருப்பாய் வீட்டை 

காதலால் !


நீ 

விட்டுப் போன 

வழியிலேயே 

காத்திருக்கிறேன் ....

என்றாவது ஒரு'நாள் 

வழி தவறியாவது 

வர மாட்டாயா என !


படிப்பதெதுவும் 

மனதில் 

பதியவில்லை ...

மனதோடு 

நீ 

மனப்பாடமாகிப் போனதால் !


மேகத்தை 

கலைக்கும் காற்று போல 

என் சிந்தனைகளை 

கலைத்து போகிறது 

உனது நினைவு !


கடலலை அடிக்கிறது 

காற்று வீசுகிறது 

மழை பெய்கிறது 

சூரியன் சுடுகிறது 

நிலா குளிர்கிறது 

உன் நினைவும் அலைகிறது 

சென்ற வருடத்தை போலவே !


மன்னித்துவிடு ....

உன்னை எப்போதும்  

மறப்பதில்லையென 

என் இதயம் 

சபதமெடுத்திருப்பதால் 

புது வருடத்தில் 

உன்னை நினைப்பேன் என  

சபதமெடுக்க முடியவில்லை !


உளறல்களும் 

பிடித்து போகிறது 

உதிர்ப்பது 

உன் 

உதடுகள் என்றால் !


சுவாசிக்கும் முன்னே 

யோசிக்க 

ஆரம்பித்து விடுகிறது 

மனது ...


வாசிக்கும் முன்னே 

யாசிக்க 

ஆரம்பித்து விடுகிறது

இதயம் !


என் 

நாட்கள் ஒவ்வொன்றையும் 

முத்தாய் கோர்த்து 

மணியாரமாய் அணிந்து 

ஒய்யாரமாய் நடக்கிறாய் ...

வெறுமையாய் 

நடக்கிறேன் நான் !


எண்ணவில்லை 

நீ 

என் எண்ணமாக மட்டுமே 

ஆவாய் என்று !


எங்கோ இருந்து 

பனித்துளி 

நினைவுகளை தூவி 

குளிர வைக்கிறாய் ...


நினைவுகளுக்கு 

உருவமில்லை என்று 

யார் சொன்னது ...

என் நினைவுகளுக்கு 

உருவம் இருக்கிறது 

சந்தேகமானால் 

கண்ணாடியில் பார் !

 

மார்கழி மாதத்து 

நினைவுகள் ஒவ்வொன்றும் 

சித்திரை வெயிலாய் 

ஆடிக் காற்றாய் 

சிதறடிக்குது என்னை !



மாலை மயங்கும் வேளையிலே

மயிலாடும் சோலையிலே

மங்கை முகம் காணையிலே 

மனம் துடிக்குது உவகையிலே !


மார்கழி மாத பூக்களே 

வசந்த ராகம் இசைக்கையிலே 

தென்றல் தாளம் போடையிலே 

மனம் துடிக்குது மோகத்திலே  



No comments:

Post a Comment