Wednesday, June 29, 2022

ரகசிய பரிசு

சாவிகளோடு 
அனுப்பி விட்டான் ...
திறப்பதற்கு 
கதவை காணோம் ...
சுவர் அல்லவா 
இருக்கிறது ...

பூக்கூடைதான் 
வைத்திருக்கிறேன் ...
ஆனால் ...
முட்களைத்தான் 
போட்டுவிட்டு 
செல்கிறார்கள் ...

வாலறுந்த பட்டம் 
கேள்விப்பட்டிருக்கிறேன் ...
இதென்ன 
என் பட்டம் 
தலை அறுந்து 
தள்ளாடுகிறது ...

எனது 
நம்பிக்கை படிக்கட்டுகள் 
பாசி பிடித்து 
வழுக்குகின்றன ...

ஆனந்தமாய் 
நீந்த முயன்ற போதுதான் 
தெரிந்தது ...
அது 
தண்ணீர் கடலல்ல 
கண்ணீர் கடல் என்று ..

எதிரில் நிற்பது 
எதிர் காலமா ...
எதிரி காலமா ...

ஆன்மா என்னும் புல்லிற்கு
நான் 
ஊற்றிக்கொண்டிருப்பது '
பாவ நீரா ...
புண்ணிய நீரா ..

இறுதி ஊர்வலம் 
உயிருக்கா ...
உடலுக்கா ...

கட்டணமில்லா பயணம் 
என்றுதானே 
சொன்னார்கள் ...
ஏன் சோதிக்கிறான் 
எனது 
பாவ சீட்டையும் 
புண்ணிய சீட்டையும் ..

செல்லும் தூரம் 
அறியாமல் 
ஒரு 
ஓட்ட பந்தயம் ...

யாரோ சொன்னார்கள் 
பந்தயத்தின் முடிவில் 
எல்லோருக்கும் ...
பரிசு நிச்சயமாம் 
என்ன பரிசு 
என்பது மட்டும் ரகசியமாம் !

Sunday, June 19, 2022

கடவுள் 
காப்பாற்றுகிறாரோ இல்லையோ ...
பலரை காப்பாற்றுகிறது 
கோவில் 
உண்டியல் பணம் !

பேச்சடங்கும் நேரத்தில் 
என்னென்ன 
பேச நினைத்தாயோ ...
மூச்சடங்கும் நேரத்தில்
என்னென்ன
நினைவுகள் கொண்டாயோ ..
பேச்சிலும் மூச்சிலும்
கலந்து போன 
உன் நினைவுகளை
எந்த அக்னியில் எரிப்பேனோ!

இது மரண பூமி

நேரத்தை 
மட்டுமல்ல 
உயிர்களையும் அல்லவா 
துரத்திக்கொண்டு 
ஓடுகிறது 
கடிகார முட்கள் ..

உன் கை பட்ட 
மலர் போல 
மணம் தருவது எதுவோ ...
உன் கை பட்ட 
உணவு போல 
சுவை  தருவது எதுவோ ...

எல்லாம் 
வேண்டுமென்று சொல்ல 
பலருண்டு  இங்கு ...
என்னைத்தவிர 
எதுவும் 
வேண்டாமென்று சொல்ல 
உன்னையன்றி யாருண்டு !

எட்ட முடியா 
நட்சத்திரமாகி 
உயர்ந்திருக்கிறது 
உனது பாசக்கோடு ...

என்னை விட்டு 
தனியாக 
போக மாட்டாயே எங்கும் 
என்ன பசப்பு வார்த்தைகள் 
சொல்லி மயக்கி 
அழைத்து போனான் அவன்  !

எப்படி 
பிடித்துப்போனது 
உனக்கு 
எனது பாச கயிறை விட 
அவனது 
மோசக்கயிறை !

ஆன்மாவின் நிழலாய் 
அறம் தொடரும் என்றால் 
நீ செய்த அறம் 
அன்பல்லவா !

உனது 
அன்பிற்கும் அறத்திற்கும் 
ஈடான சிம்மாசனம் 
இல்லையே குபேரனிடத்திலும் ..
என்ன செய்வான் அவன் !

பகுத்தறிவு பகுத்தறிவு
என்று கூவும் யாரேனும் 
பகுத்து அறிந்து 
சொல்ல வல்லரோ 
நீ 
சென்ற வழியை !

சிலது நடக்கலாம் 
சிலது பொய்த்து போகலாம் 
நடந்தாலும் 
பொய்த்தாலும் 
கனவுகளுக்கு 
முற்று புள்ளி 
வைப்பவன் அவன் !

இந்த வலிக்கு 
நிவாரணத்தை 
யாராலும் 
தர இயலாது ...
அவனாலும் !

யார் சொன்னது 
இது 
ஆன்மீக பூமி 
திராவிட பூமியென்று 
இது தான் வளர்த்த உடலை 
தானே விழுங்கும் 
மரண பூமி !

Saturday, June 18, 2022

காலதேவனின் கடைசி பாடம்


நீ 
கன்னத்தில் வைத்த
திருஷ்டி பொட்டு 
சொல்லியது 
நான் 
எவ்வளவு அழகென்று !

செடிகள் 
கொடுத்து வைத்தவை ...
காய்ந்த மலர்களை 
உதிர்த்துவிட்டு 
எவ்வளவு 
ஆனந்தமாக இருக்கின்றன !

வாங்கிய சம்பளம் 
வசதியை தந்தது ...
உன் 
புடவை மடிப்பு 
காசல்லவா 
சந்தோஷத்தை தந்தது ! 

சிந்தாமல் சாப்பிட 
தெரியும் எனக்கு ...
இருந்தும் 
சிந்தியே சாப்பிடுகிறேன் ..
எங்காவது ஒலிக்காதா 
சிந்தாமல் சாப்பிடு 
என்று ஒரு குரல் !

வளர்பிறையாய் 
நான் வளர ...
தேய் பிறையாய் 
தேய்ந்தாய் நீ !

கட்டை வண்டிக்கும் 
காசின்றி 
கால்களால் சுமந்து 
ஊனமாய் போனாய் !

அணைந்து போன 
கலங்கரை விளக்காய் நீ ...
தடுமாறும் 
மாலுமியாய் நான் !

எப்படி 
எப்படியெல்லாமோ 
மாற்றி மாற்றி 
போட்டு பார்த்தேன் ...
உன் அன்பு கணக்கை 
இன்பினிட்டி என்றே 
சொல்கிறது !

இன்னமும் 
திகட்டவில்லையே 
எனக்கு 
நீ 
காட்டிய அன்பு ...
உனக்கு 
திகட்டி விட்டதோ !

நேற்று வரை 
உன் 
அன்பெனும் சொத்தால் 
கோடீஸ்வரனாக இருந்தவன் 
திடீரென்று 
ஏழையாகி விட்டேன் !

செலுலமாக
அதட்டும் 
அம்மாக்களை 
காணும்போது 
ஏங்கித்தான் 
போகிறது மனது !

முதல் மொழியை 
சொல்லித்தந்த 
உனக்கு 
விடை கொடுக்க 
மொழியில்லையே 
என்னிடம் !

வரிகளில் 
வலிகளை 
இறக்கி வைக்க 
முடியாமல் 
மொழியும் 
தவிக்கிறது !

எதை சாப்பிடுவதென்று
தெரியவில்லை ...
உன் எண்ணங்களை 
ஜீரணிக்க !

முகவரியின்றி
கரைந்து 
போனாய் ...
தேடி அலைகிறது 
நினைவுகள் !

உன் உயிரை 
கட்டி இழுத்த 
காலதேவனுக்கு 
உன் நினைவுகளை 
கட்டி இழுக்க 
சக்தி இல்லாமல் 
போயிற்று !

சொர்க்கத்துக்கு 
உன்னை 
அழைத்து சென்றவன் 
என்னை 
நரகத்தில் அல்லவா 
போட்டு விட்டான் !

காலதேவன் நடத்திய 
கடைசி பாடத்தில் 
நீ வென்று விட்டாய் ...
பரீட்சை எழுதாமலே 
நான் 
தோற்று விட்டேன் !

Tuesday, June 14, 2022

காகிதத்தில் சிக்காத கவிதை

நான் உனக்கு 
கடவுள் கொடுத்த 
வரமென்றாய்  ...
நீயன்றோ எனக்கு 
கடவுள் கொடுத்த 
வரம் ...!

உனக்கு 
வயதான பின்பும் 
உனது 
அன்பு  மட்டும் 
இளமையாய் !

அன்பில் அழகையும் 
கோபத்தில் பாசத்தையும் 
காட்டும் 
வித்தை அறிந்தவள் 
நீ !

மூன்றடியால் 
உலகளந்தவன் 
அளந்திடுவானோ 
உனது 
பாசத்தை !

பாசத்தின் தேசத்திற்கு 
நீ மகாராணி ...
உன் 
அன்பு தேசத்திற்கு 
நான் இளவரசன் !

எனது  
அறியாமைக்கும் 
சுட்டித்தனம் 
என்று பேரிட்டவள் நீ !

நீ 
என் பசியறிந்தவள் 
மட்டுமல்ல 
தன் 
பசி மறந்தவள் !

இன்னமும் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
நீ 
பயமுறுத்தி சோறூட்டிய 
பூச்சாண்டியை !

என் 
விரல் நுனி காயத்திற்கே 
இதயம் 
காயம் பட்டு 
துடித்தவள் நீ ...
இப்போது
இதயம் காயம்பட்டு 
துடிக்கிறேன் நான் ... !

தேவதை ஒன்று
தன் குழந்தைக்கு
தன்னைத்தான்
காட்டி சோறூட்டுகிறது
என
தம்பட்டம் அடித்து
திரிந்தது நிலா!

இன்று
சோறிருக்கிறது ...
நிலாவும் இருக்கிறது ...
காட்டி ஊட்ட
என்னைப்போல்
நாளும் உன்னை
தேடுகிறது
நிலா!

நீ 
நடை பழக்கிய 
நடை வண்டி
நடை தளர்ந்து
அனாதையாய் நிற்கிறது
வாசலில்!

உன் தூளியில்
உறங்கியபோது என்னை  
அணைத்து கொண்ட நித்திரை  
இப்போது 
தள்ளி நின்று 
பரிகசிக்கிறது 
லட்சத்தில்  
கட்டிய என் வீட்டில் !

கடல் நீரை 
கடன் வாங்கி 
அழுதாலும் 
தீருமோ இந்த துன்பம் !

கருவறையில் 
நீ தந்த நிம்மதியை  
இனி  
கல்லறையில்தான் 
பெறுவேனோ !
காகிதத்தில் 
சிக்காத 
கவிதை உன்னை 
இனி என்று காண்பேனோ !

Wednesday, June 8, 2022

போதி மரத்து பித்தன்

உலக அதிசயங்களில் 
சேர்க்கப்படாத
நிரந்தர அதிசயம் நீ !

நான் உணவு உண்ண 
நீ 
பசியை உண்டிருக்கிறாய் !

உனது 
இதய கடிகாரத்திற்கு 
மட்டுமே தெரியும் 
நான் 
தூங்கும் நேரமும் ...
விழிக்கும் நேரமும் !

ஆத்தி சூடி 
படிக்கும்முன் 
அன்பின் சுவடியை 
படித்து காட்டினாய் !

நான் 
அறிவினை சுமக்க ...
என்னையும் 
புத்தகங்களையும் 
பள்ளிக்கு 
சுமந்தாய் !

ஏதோ ஒரு போட்டியில் 
எனக்கு கிடைத்த 
நெகிழி கோப்பையை ...
உலக கோப்பையை போல் 
மகிழ்ந்து பார்த்தாய் !

தெருக்களில் 
நான் பட்ட 
விளையாட்டு காயங்கள் 
உனது இரவுகளை 
காயப்படுத்தியிருக்கின்றன !

தலைவலி வந்தபோது 
விக்ஸ்சும் அம்ரிதாஞ்சனும் 
தோற்றுப்போய் 
சொல்லித்தந்தன  
உன் கை விரல்களின் 
சக்தியை !

எனது மேனியில்
காய்ச்சல் வந்தபோதெல்லாம் 
உனது 
இதயத்தில் 
அனல் அடித்திருக்கிறது !

உனது
முந்தானையின் நுனி 
இருந்த தைரியத்தில் 
எனது விழி
அச்சப்பட்டதில்லை 
அழுவதற்கு !

எனக்கு 
முதல் மாச 
சம்பளம் கிடைத்தபோது 
லாட்டரியில் 
கோடி கிடைத்த 
சந்தோஷம் உனக்கு !

என்னிடம் 
பேசுவதற்காகவே 
கைபேசியை 
கற்று கொண்டவள் நீ !

எல்லா பிரார்த்தனைகளையும் 
பூஜைகளையும் 
எனக்கு மட்டுமே 
ஒதுக்கியவள் நீ !

உனக்கு பிடித்ததையெல்லாம் 
மறந்து போனாய் ...
ஆனால் 
எனக்கு 
என்ன பிடிக்கும் என 
என்னை விட 
நன்கு தெரியும் 
உனக்கு !

திருவிழா கூட்டத்திலேயே 
என்னை தொலைத்ததில்லை 
நீ ...
எங்கே தொலைத்தேன்  
உன்னை ...
இன்னமும் புரியவில்லை எனக்கு !

நீ 
காத்திருந்த திண்ணையில் 
தேடி தேடி பார்க்கிறேன் 
உனது 
அன்பின் வாசத்தை !

இன்னும் கொஞ்சம் சாப்பிடு 
என்ற குரல் செவிகளில் 
எங்கோ ஒலிக்கிறது ...
வெறுமையாய் பார்க்கிறேன் 
இலையை !

தாய் பாசம் 
நான் அறிவதற்கோ ...
இல்லை அவன் அறிவதற்கோ ...
உன்னை 
கவர்ந்து போனான் 
காலனும் ....!

ஒரு நாள் கூட 
இருக்க முடியாதே உன்னால் 
என்னோடு பேசாமல் ...
காலனை 
சபிக்க வில்லையா நீ !

எங்கே  
காத்துக்கொண்டிருக்கிறாய்  
எனது கடிதத்தை ...
எனது தொலைபேசி அழைப்பை ...
என்னை ?

போதி மரத்து 
பித்தனாய் 
நானும் காத்திருக்கிறேன் ...
வந்து சொல்வாயா
எனது துன்பத்துக்கு 
காரணத்தை !!!






நேற்றைய மலரின் சருகு !

 நெஞ்சு நிமிர்த்தி 
நிற்கும் வீரம் ...
பிஞ்சு செடிகளுக்கு 
வழி விடும் ஈரம் ...
மலையாகவேனும் 
பிறந்திருக்கலாம் !

இன்று மலர்ந்த மலர் 
மணம் வீசி சிரிக்க 
காலடியில்  மிதிபட்டு 
முனகியது  
நேற்றைய மலரின் சருகு !

அம்மனுக்கு பொற்காலம் ...

 ஏன் 

வரம் தர மறுக்கிறாய் ...

ஒரு வேளை 

என் தவத்தை 

ரசிக்கிறாயோ !


நீ பூஜை செய்யும் 

ராகு காலமே 

அம்மனுக்கு பொற்காலம் ...

உன் 

தரிசனம் கிடைக்கிறதே 

அம்மனுக்கு !


 ஏதோ ஒரு 

அமைதியான பொழுதில்  

உன்னை கண்டேன் ...

அன்றிலிருந்து 

எந்த பொழுதுமே 

அமைதியாக இல்லை !


உனக்கு பிடிக்காதென்றே 

பலவற்றை 

கடந்து போகிறேன் நான் ...

பிடிக்கவில்லை என்று 

என்னை 

கடந்து போனாய் நீ !


Tuesday, June 7, 2022

முதல் குரல்

உலகின் 
ஒவ்வொரு மொழியும் 
தவமிருக்கிறது ...
உனது முதல் குரல் 
தங்கள் மொழியே 
ஆகவேண்டுமென !

இரண்டாம் முறை 
நடை பயின்றேன் 
உன்னோடு !

உயிரற்ற 
பொம்மை கூட 
வாங்கி விட்டதே ...
குழந்தையின் 
அன்பை !

வார்த்தைகளே இல்லாமல் 
ஆறுதல் சொல்லும் 
வித்தை 
உனது 
புன்னகைக்கே உண்டு !

Saturday, June 4, 2022

நீ தேடி வரும்முன்னே

சேவக்கோழி கூவும்முன்னே 

தெனம் தெனம் எழுந்திருக்கேன் 

கண்ணீரால் வாசல் தெளிச்சு 

உயிர்க்கோலம் போட்டிருக்கேன் 


கொஞ்ச நேரம் ஒன்ன பாக்க  

மஞ்ச தேச்சு குளிச்சிருக்கேன் 

கொஞ்சம் வெரசா ஓட சொல்லி 

கெஞ்சி மணிய பாத்திருக்கேன் 


சிறுகனூர் சந்தையிலே 

கூற பொடவ வாங்கி வச்சேன் 

கொசுவம் மடிப்புக்குள்ள 

ஒந்நெனப்ப சொருகி வச்சேன் 


சிவன் கோவில் மல்லிகை பூ

சிடுக்கெடுத்து சூடி வச்சேன் 

சிறு பொழுது ஒன்ன பாக்க 

பொழுது பூரா அலங்கரிச்சேன் 


இளம் காத்தும் சிறு வெயிலும் 

உச்சி வரைக்கும் ஏறியாச்சு   

வெளுத்திருந்த நீல வானம் 

கருத்து நிறம் மாறியாச்சு 


ஜாதி மல்லி  தோட்டத்திலே 

சுத்தி வருது பட்டாம்பூச்சி 

சேதி சொல்லி யார் வருவா 

கத்தி அழுது  மனப்பூச்சி 


தனிச்சிருக்கும் காட்டுக்குயில்  

சத்தம் போட்டு கூவுதிங்கே 

குளிரடிக்கும் ஓடை காத்து 

சத்தமின்றி வீசுதிங்கே 


அடுப்படியில் அரிசியெல்லாம்  

நெருப்போடு பொங்குதிங்கே 

மனப்படியில் மகிழ்ச்சியெல்லாம் 

நீயில்லாம மங்குதிங்கே 


ஒத்தையடி பாதையிலே 

வரும் பாத பாத்திருக்கேன் 

ஒத்தையில ஒந்நேசந்தேடி 

இரு விழிதான் பூத்திருக்கேன் 


காத்துல ஒன் வாசந்தேடி  

சுற்று முற்றும் பாத்திருக்கேன்

சோத்துலதான்  நாட்டமில்ல 

பசிச்சுதானே காத்திருக்கேன்  


வரச்சொல்லி நேரமாச்சு 

அந்தி வெயிலும் சாயலாச்சு 

தெரு முனையில செட்டியாரும் 

கட சாத்தும் நேரமாச்சு 


கஞ்சனூர் கடைசி வண்டி 

கடந்து போகும் நேரமாச்சு 

கஞ்சமான ஒங்காதலால 

மனசுக்குள்ள பாரமாச்சு 


தங்கமுன்னு நெனைச்சேனே 

பித்தளையா போனதுவோ 

துளசியின்னு நெனைச்சேனே

கள்ளி செடியா போனதுவோ


காத்திருந்து காத்திருந்து

சித்தம் கலங்கி போயிடுமோ 

பாத்திருந்து பாத்திருந்து

நாடிச்சத்தம் அடங்கிடுமோ 


நாளெல்லாம் போனாலும் 

பொழுதெல்லாம் கடந்தாலும் 

நாடெல்லாம் சிரிச்சாலும் 

பழுதுன்னு நெனச்சாலும் 


காத்திருப்பேன் என்றென்றும்  

கொண்டு போகும் நாள் பாத்து 

பூத்திருப்பேன் என்றென்றும்

நீ வரும் வழி பாத்து 

 

இரும்பான எம்மனசில் 

நிராசைகள் புகுந்திடுமோ 

கரும்பான காதலைத்தான் 

துரும்பாக அரிச்சிடுமோ 


நீ தேடி வரும் முன்னே 

காலன் தேடி வருவானோ 

உனக்காக துடிக்கும் மூச்சை 

கொள்ளை கொண்டு போவானோ 

Thursday, June 2, 2022

அவர்களுக்கெப்படி தெரியும்

எத்தனை 
வாடி வாசலில் 
பயிற்சி 
எடுக்க வேண்டும் 
நான் ...
உன் விழி வாசலில் 
தடுமாறாமல் இருக்க !

வாடி வாசல் 
என்று 
சீறி வந்தேன் ...
உன் விழி வாசல் 
என்று அறியாமல் !

உன்னிடம் 
தோற்பதற்காகவே 
தினம் தினம் 
படை எடுக்கும் 
போர் வீரன் நான் !

உந்தன் 
இதய வாசல் 
திறக்கும் வரை 
என் 
வாழ்வு ஊசல் 

என் இதயம் 
அவளுக்காக 
துடித்துக்கொண்டிருக்கையில் 
அவள் இதயம் 
எனக்காக 
நடித்துக்கொண்டிருந்தது !

கவிதைகளை படித்துவிட்டு 
யார்யாரோ கேட்டார்கள் 
காதலி யாரென்று ...
பாவம் ..
அவர்களுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு தேவை
காதல்தான் ...
காதலி அல்ல என்று
 
எல்லா ஊரு கோவில்லயும் 
எண்ணெய் ஊத்தி 
விளக்கெரியும் ...
எங்க ஊரு கோவில்ல 
கண்ணே நீ 
பத்த வச்சா 
பச்ச தண்ணியும் 
நின்னெரியும் 

விடியல் தருகிறேன் என்று
வீட்டு வாசலில்
கத்திக்கொண்டிருக்கிறார்
ஒரு அரசியல்வாதி 
பாவம்...
அவருக்கெங்கே தெரியும் 
என் விடியல் 
நீதானென்று

ஒவ்வொரு வருடமும் 
காத்திருக்கிறேன் 
நவம்பர் எட்டு, எட்டு மணிக்காக ..
இந்த வருடமாவது 
ஒழிப்பாரா பிரதமர் 
உன் நினைவுகள் 
செல்லாதென்று அறிவித்து 
என் சோகங்களை ...!

இதய சிறையில் இருந்து 
உன்னை விடுதலை செய்ய 
தீர்மானம் போட்டேன் ...
மீண்டும் 
சிறை வைத்து விட்டது உன்னை 
தன் 
சிறப்பு அதிகாரத்தால் !

அறியாமல் 
தொலைந்து போனாயா ...
அறிந்தே 
தொலைவாக போனாயா ...
தெரியாமலே தேடிக்கொண்டிருக்கிறேன் 
நான் !

மரண வலியை 
அனுபவிக்க 
உன்னை 
பிரசவிக்க வேண்டியிருந்தது 
உன் தாய்க்கு ...
எனக்கோ 
உன் பாராமுகமே 
அந்த வலியை 
காட்டிவிடுகிறது !

விழிகளில் வில்லேந்தி 
பார்வை கணைகளோடு 
அவள்  ...
இதழ்களில் சொல்லேந்தி 
கவிதைக்கணைகளோடு 
நான் ...
வெல்வது 
வில்லா? சொல்லா ?

இதயம்

காதலால் 
பட்டை தீட்டுகிறாய் ...
ஒளியேறிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

தந்தையின் 
காலை கட்டிக் கொண்டு
நானும் வருவேன் 
என அடம் பிடிக்கும்
குழந்தை போல .. 
உன்னோடு வர
அடம் பிடிக்கிறது
என் இதயம்

ஒற்றை பார்வையில் 
கர்ப்பமாக்கி விட்டாய் ...
காதலை பிரசவித்து விட்டு
அனாதையாய் நிற்கிறது
என் இதயம் 

மணி முள்ளும் நீ
நிமிட முள்ளும் நீ
நொடி முள்ளும் நீ
கடிகாரமாய் ஓடுகிறது 
என் இதயம்