Tuesday, June 14, 2022

காகிதத்தில் சிக்காத கவிதை

நான் உனக்கு 
கடவுள் கொடுத்த 
வரமென்றாய்  ...
நீயன்றோ எனக்கு 
கடவுள் கொடுத்த 
வரம் ...!

உனக்கு 
வயதான பின்பும் 
உனது 
அன்பு  மட்டும் 
இளமையாய் !

அன்பில் அழகையும் 
கோபத்தில் பாசத்தையும் 
காட்டும் 
வித்தை அறிந்தவள் 
நீ !

மூன்றடியால் 
உலகளந்தவன் 
அளந்திடுவானோ 
உனது 
பாசத்தை !

பாசத்தின் தேசத்திற்கு 
நீ மகாராணி ...
உன் 
அன்பு தேசத்திற்கு 
நான் இளவரசன் !

எனது  
அறியாமைக்கும் 
சுட்டித்தனம் 
என்று பேரிட்டவள் நீ !

நீ 
என் பசியறிந்தவள் 
மட்டுமல்ல 
தன் 
பசி மறந்தவள் !

இன்னமும் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
நீ 
பயமுறுத்தி சோறூட்டிய 
பூச்சாண்டியை !

என் 
விரல் நுனி காயத்திற்கே 
இதயம் 
காயம் பட்டு 
துடித்தவள் நீ ...
இப்போது
இதயம் காயம்பட்டு 
துடிக்கிறேன் நான் ... !

தேவதை ஒன்று
தன் குழந்தைக்கு
தன்னைத்தான்
காட்டி சோறூட்டுகிறது
என
தம்பட்டம் அடித்து
திரிந்தது நிலா!

இன்று
சோறிருக்கிறது ...
நிலாவும் இருக்கிறது ...
காட்டி ஊட்ட
என்னைப்போல்
நாளும் உன்னை
தேடுகிறது
நிலா!

நீ 
நடை பழக்கிய 
நடை வண்டி
நடை தளர்ந்து
அனாதையாய் நிற்கிறது
வாசலில்!

உன் தூளியில்
உறங்கியபோது என்னை  
அணைத்து கொண்ட நித்திரை  
இப்போது 
தள்ளி நின்று 
பரிகசிக்கிறது 
லட்சத்தில்  
கட்டிய என் வீட்டில் !

கடல் நீரை 
கடன் வாங்கி 
அழுதாலும் 
தீருமோ இந்த துன்பம் !

கருவறையில் 
நீ தந்த நிம்மதியை  
இனி  
கல்லறையில்தான் 
பெறுவேனோ !
காகிதத்தில் 
சிக்காத 
கவிதை உன்னை 
இனி என்று காண்பேனோ !

No comments:

Post a Comment