Thursday, June 2, 2022

அவர்களுக்கெப்படி தெரியும்

எத்தனை 
வாடி வாசலில் 
பயிற்சி 
எடுக்க வேண்டும் 
நான் ...
உன் விழி வாசலில் 
தடுமாறாமல் இருக்க !

வாடி வாசல் 
என்று 
சீறி வந்தேன் ...
உன் விழி வாசல் 
என்று அறியாமல் !

உன்னிடம் 
தோற்பதற்காகவே 
தினம் தினம் 
படை எடுக்கும் 
போர் வீரன் நான் !

உந்தன் 
இதய வாசல் 
திறக்கும் வரை 
என் 
வாழ்வு ஊசல் 

என் இதயம் 
அவளுக்காக 
துடித்துக்கொண்டிருக்கையில் 
அவள் இதயம் 
எனக்காக 
நடித்துக்கொண்டிருந்தது !

கவிதைகளை படித்துவிட்டு 
யார்யாரோ கேட்டார்கள் 
காதலி யாரென்று ...
பாவம் ..
அவர்களுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு தேவை
காதல்தான் ...
காதலி அல்ல என்று
 
எல்லா ஊரு கோவில்லயும் 
எண்ணெய் ஊத்தி 
விளக்கெரியும் ...
எங்க ஊரு கோவில்ல 
கண்ணே நீ 
பத்த வச்சா 
பச்ச தண்ணியும் 
நின்னெரியும் 

விடியல் தருகிறேன் என்று
வீட்டு வாசலில்
கத்திக்கொண்டிருக்கிறார்
ஒரு அரசியல்வாதி 
பாவம்...
அவருக்கெங்கே தெரியும் 
என் விடியல் 
நீதானென்று

ஒவ்வொரு வருடமும் 
காத்திருக்கிறேன் 
நவம்பர் எட்டு, எட்டு மணிக்காக ..
இந்த வருடமாவது 
ஒழிப்பாரா பிரதமர் 
உன் நினைவுகள் 
செல்லாதென்று அறிவித்து 
என் சோகங்களை ...!

இதய சிறையில் இருந்து 
உன்னை விடுதலை செய்ய 
தீர்மானம் போட்டேன் ...
மீண்டும் 
சிறை வைத்து விட்டது உன்னை 
தன் 
சிறப்பு அதிகாரத்தால் !

அறியாமல் 
தொலைந்து போனாயா ...
அறிந்தே 
தொலைவாக போனாயா ...
தெரியாமலே தேடிக்கொண்டிருக்கிறேன் 
நான் !

மரண வலியை 
அனுபவிக்க 
உன்னை 
பிரசவிக்க வேண்டியிருந்தது 
உன் தாய்க்கு ...
எனக்கோ 
உன் பாராமுகமே 
அந்த வலியை 
காட்டிவிடுகிறது !

விழிகளில் வில்லேந்தி 
பார்வை கணைகளோடு 
அவள்  ...
இதழ்களில் சொல்லேந்தி 
கவிதைக்கணைகளோடு 
நான் ...
வெல்வது 
வில்லா? சொல்லா ?

No comments:

Post a Comment