Wednesday, June 8, 2022

போதி மரத்து பித்தன்

உலக அதிசயங்களில் 
சேர்க்கப்படாத
நிரந்தர அதிசயம் நீ !

நான் உணவு உண்ண 
நீ 
பசியை உண்டிருக்கிறாய் !

உனது 
இதய கடிகாரத்திற்கு 
மட்டுமே தெரியும் 
நான் 
தூங்கும் நேரமும் ...
விழிக்கும் நேரமும் !

ஆத்தி சூடி 
படிக்கும்முன் 
அன்பின் சுவடியை 
படித்து காட்டினாய் !

நான் 
அறிவினை சுமக்க ...
என்னையும் 
புத்தகங்களையும் 
பள்ளிக்கு 
சுமந்தாய் !

ஏதோ ஒரு போட்டியில் 
எனக்கு கிடைத்த 
நெகிழி கோப்பையை ...
உலக கோப்பையை போல் 
மகிழ்ந்து பார்த்தாய் !

தெருக்களில் 
நான் பட்ட 
விளையாட்டு காயங்கள் 
உனது இரவுகளை 
காயப்படுத்தியிருக்கின்றன !

தலைவலி வந்தபோது 
விக்ஸ்சும் அம்ரிதாஞ்சனும் 
தோற்றுப்போய் 
சொல்லித்தந்தன  
உன் கை விரல்களின் 
சக்தியை !

எனது மேனியில்
காய்ச்சல் வந்தபோதெல்லாம் 
உனது 
இதயத்தில் 
அனல் அடித்திருக்கிறது !

உனது
முந்தானையின் நுனி 
இருந்த தைரியத்தில் 
எனது விழி
அச்சப்பட்டதில்லை 
அழுவதற்கு !

எனக்கு 
முதல் மாச 
சம்பளம் கிடைத்தபோது 
லாட்டரியில் 
கோடி கிடைத்த 
சந்தோஷம் உனக்கு !

என்னிடம் 
பேசுவதற்காகவே 
கைபேசியை 
கற்று கொண்டவள் நீ !

எல்லா பிரார்த்தனைகளையும் 
பூஜைகளையும் 
எனக்கு மட்டுமே 
ஒதுக்கியவள் நீ !

உனக்கு பிடித்ததையெல்லாம் 
மறந்து போனாய் ...
ஆனால் 
எனக்கு 
என்ன பிடிக்கும் என 
என்னை விட 
நன்கு தெரியும் 
உனக்கு !

திருவிழா கூட்டத்திலேயே 
என்னை தொலைத்ததில்லை 
நீ ...
எங்கே தொலைத்தேன்  
உன்னை ...
இன்னமும் புரியவில்லை எனக்கு !

நீ 
காத்திருந்த திண்ணையில் 
தேடி தேடி பார்க்கிறேன் 
உனது 
அன்பின் வாசத்தை !

இன்னும் கொஞ்சம் சாப்பிடு 
என்ற குரல் செவிகளில் 
எங்கோ ஒலிக்கிறது ...
வெறுமையாய் பார்க்கிறேன் 
இலையை !

தாய் பாசம் 
நான் அறிவதற்கோ ...
இல்லை அவன் அறிவதற்கோ ...
உன்னை 
கவர்ந்து போனான் 
காலனும் ....!

ஒரு நாள் கூட 
இருக்க முடியாதே உன்னால் 
என்னோடு பேசாமல் ...
காலனை 
சபிக்க வில்லையா நீ !

எங்கே  
காத்துக்கொண்டிருக்கிறாய்  
எனது கடிதத்தை ...
எனது தொலைபேசி அழைப்பை ...
என்னை ?

போதி மரத்து 
பித்தனாய் 
நானும் காத்திருக்கிறேன் ...
வந்து சொல்வாயா
எனது துன்பத்துக்கு 
காரணத்தை !!!






No comments:

Post a Comment