நீ
கன்னத்தில் வைத்த
திருஷ்டி பொட்டு
சொல்லியது
நான்
எவ்வளவு அழகென்று !
செடிகள்
கொடுத்து வைத்தவை ...
காய்ந்த மலர்களை
உதிர்த்துவிட்டு
எவ்வளவு
ஆனந்தமாக இருக்கின்றன !
வாங்கிய சம்பளம்
வசதியை தந்தது ...
உன்
புடவை மடிப்பு
காசல்லவா
சந்தோஷத்தை தந்தது !
சிந்தாமல் சாப்பிட
தெரியும் எனக்கு ...
இருந்தும்
சிந்தியே சாப்பிடுகிறேன் ..
எங்காவது ஒலிக்காதா
சிந்தாமல் சாப்பிடு
என்று ஒரு குரல் !
வளர்பிறையாய்
நான் வளர ...
தேய் பிறையாய்
தேய்ந்தாய் நீ !
கட்டை வண்டிக்கும்
காசின்றி
கால்களால் சுமந்து
ஊனமாய் போனாய் !
அணைந்து போன
கலங்கரை விளக்காய் நீ ...
தடுமாறும்
மாலுமியாய் நான் !
எப்படி
எப்படியெல்லாமோ
மாற்றி மாற்றி
போட்டு பார்த்தேன் ...
உன் அன்பு கணக்கை
இன்பினிட்டி என்றே
சொல்கிறது !
எப்படியெல்லாமோ
மாற்றி மாற்றி
போட்டு பார்த்தேன் ...
உன் அன்பு கணக்கை
இன்பினிட்டி என்றே
சொல்கிறது !
இன்னமும்
திகட்டவில்லையே
எனக்கு
நீ
காட்டிய அன்பு ...
உனக்கு
திகட்டி விட்டதோ !
நேற்று வரை
உன்
அன்பெனும் சொத்தால்
கோடீஸ்வரனாக இருந்தவன்
திடீரென்று
ஏழையாகி விட்டேன் !
செலுலமாக
அதட்டும்
அம்மாக்களை
காணும்போது
ஏங்கித்தான்
போகிறது மனது !
முதல் மொழியை
சொல்லித்தந்த
உனக்கு
விடை கொடுக்க
மொழியில்லையே
என்னிடம் !
வரிகளில்
வலிகளை
இறக்கி வைக்க
முடியாமல்
மொழியும்
தவிக்கிறது !
எதை சாப்பிடுவதென்று
தெரியவில்லை ...
உன் எண்ணங்களை
ஜீரணிக்க !
முகவரியின்றி
கரைந்து
போனாய் ...
தேடி அலைகிறது
நினைவுகள் !
உன் உயிரை
கட்டி இழுத்த
காலதேவனுக்கு
உன் நினைவுகளை
கட்டி இழுக்க
சக்தி இல்லாமல்
போயிற்று !
சொர்க்கத்துக்கு
உன்னை
அழைத்து சென்றவன்
என்னை
நரகத்தில் அல்லவா
போட்டு விட்டான் !
காலதேவன் நடத்திய
கடைசி பாடத்தில்
நீ வென்று விட்டாய் ...
பரீட்சை எழுதாமலே
நான்
தோற்று விட்டேன் !
No comments:
Post a Comment