Saturday, June 4, 2022

நீ தேடி வரும்முன்னே

சேவக்கோழி கூவும்முன்னே 

தெனம் தெனம் எழுந்திருக்கேன் 

கண்ணீரால் வாசல் தெளிச்சு 

உயிர்க்கோலம் போட்டிருக்கேன் 


கொஞ்ச நேரம் ஒன்ன பாக்க  

மஞ்ச தேச்சு குளிச்சிருக்கேன் 

கொஞ்சம் வெரசா ஓட சொல்லி 

கெஞ்சி மணிய பாத்திருக்கேன் 


சிறுகனூர் சந்தையிலே 

கூற பொடவ வாங்கி வச்சேன் 

கொசுவம் மடிப்புக்குள்ள 

ஒந்நெனப்ப சொருகி வச்சேன் 


சிவன் கோவில் மல்லிகை பூ

சிடுக்கெடுத்து சூடி வச்சேன் 

சிறு பொழுது ஒன்ன பாக்க 

பொழுது பூரா அலங்கரிச்சேன் 


இளம் காத்தும் சிறு வெயிலும் 

உச்சி வரைக்கும் ஏறியாச்சு   

வெளுத்திருந்த நீல வானம் 

கருத்து நிறம் மாறியாச்சு 


ஜாதி மல்லி  தோட்டத்திலே 

சுத்தி வருது பட்டாம்பூச்சி 

சேதி சொல்லி யார் வருவா 

கத்தி அழுது  மனப்பூச்சி 


தனிச்சிருக்கும் காட்டுக்குயில்  

சத்தம் போட்டு கூவுதிங்கே 

குளிரடிக்கும் ஓடை காத்து 

சத்தமின்றி வீசுதிங்கே 


அடுப்படியில் அரிசியெல்லாம்  

நெருப்போடு பொங்குதிங்கே 

மனப்படியில் மகிழ்ச்சியெல்லாம் 

நீயில்லாம மங்குதிங்கே 


ஒத்தையடி பாதையிலே 

வரும் பாத பாத்திருக்கேன் 

ஒத்தையில ஒந்நேசந்தேடி 

இரு விழிதான் பூத்திருக்கேன் 


காத்துல ஒன் வாசந்தேடி  

சுற்று முற்றும் பாத்திருக்கேன்

சோத்துலதான்  நாட்டமில்ல 

பசிச்சுதானே காத்திருக்கேன்  


வரச்சொல்லி நேரமாச்சு 

அந்தி வெயிலும் சாயலாச்சு 

தெரு முனையில செட்டியாரும் 

கட சாத்தும் நேரமாச்சு 


கஞ்சனூர் கடைசி வண்டி 

கடந்து போகும் நேரமாச்சு 

கஞ்சமான ஒங்காதலால 

மனசுக்குள்ள பாரமாச்சு 


தங்கமுன்னு நெனைச்சேனே 

பித்தளையா போனதுவோ 

துளசியின்னு நெனைச்சேனே

கள்ளி செடியா போனதுவோ


காத்திருந்து காத்திருந்து

சித்தம் கலங்கி போயிடுமோ 

பாத்திருந்து பாத்திருந்து

நாடிச்சத்தம் அடங்கிடுமோ 


நாளெல்லாம் போனாலும் 

பொழுதெல்லாம் கடந்தாலும் 

நாடெல்லாம் சிரிச்சாலும் 

பழுதுன்னு நெனச்சாலும் 


காத்திருப்பேன் என்றென்றும்  

கொண்டு போகும் நாள் பாத்து 

பூத்திருப்பேன் என்றென்றும்

நீ வரும் வழி பாத்து 

 

இரும்பான எம்மனசில் 

நிராசைகள் புகுந்திடுமோ 

கரும்பான காதலைத்தான் 

துரும்பாக அரிச்சிடுமோ 


நீ தேடி வரும் முன்னே 

காலன் தேடி வருவானோ 

உனக்காக துடிக்கும் மூச்சை 

கொள்ளை கொண்டு போவானோ 

No comments:

Post a Comment