Sunday, June 19, 2022

இது மரண பூமி

நேரத்தை 
மட்டுமல்ல 
உயிர்களையும் அல்லவா 
துரத்திக்கொண்டு 
ஓடுகிறது 
கடிகார முட்கள் ..

உன் கை பட்ட 
மலர் போல 
மணம் தருவது எதுவோ ...
உன் கை பட்ட 
உணவு போல 
சுவை  தருவது எதுவோ ...

எல்லாம் 
வேண்டுமென்று சொல்ல 
பலருண்டு  இங்கு ...
என்னைத்தவிர 
எதுவும் 
வேண்டாமென்று சொல்ல 
உன்னையன்றி யாருண்டு !

எட்ட முடியா 
நட்சத்திரமாகி 
உயர்ந்திருக்கிறது 
உனது பாசக்கோடு ...

என்னை விட்டு 
தனியாக 
போக மாட்டாயே எங்கும் 
என்ன பசப்பு வார்த்தைகள் 
சொல்லி மயக்கி 
அழைத்து போனான் அவன்  !

எப்படி 
பிடித்துப்போனது 
உனக்கு 
எனது பாச கயிறை விட 
அவனது 
மோசக்கயிறை !

ஆன்மாவின் நிழலாய் 
அறம் தொடரும் என்றால் 
நீ செய்த அறம் 
அன்பல்லவா !

உனது 
அன்பிற்கும் அறத்திற்கும் 
ஈடான சிம்மாசனம் 
இல்லையே குபேரனிடத்திலும் ..
என்ன செய்வான் அவன் !

பகுத்தறிவு பகுத்தறிவு
என்று கூவும் யாரேனும் 
பகுத்து அறிந்து 
சொல்ல வல்லரோ 
நீ 
சென்ற வழியை !

சிலது நடக்கலாம் 
சிலது பொய்த்து போகலாம் 
நடந்தாலும் 
பொய்த்தாலும் 
கனவுகளுக்கு 
முற்று புள்ளி 
வைப்பவன் அவன் !

இந்த வலிக்கு 
நிவாரணத்தை 
யாராலும் 
தர இயலாது ...
அவனாலும் !

யார் சொன்னது 
இது 
ஆன்மீக பூமி 
திராவிட பூமியென்று 
இது தான் வளர்த்த உடலை 
தானே விழுங்கும் 
மரண பூமி !

No comments:

Post a Comment