Monday, December 30, 2024

தென்றல்

சற்றே 

வெட்கத்துடன் 

வீசுகிறது 

தென்றல் ...


உன்னை 

தழுவி 

வந்ததோ !!


================================


தென்றலே 

கொஞ்சம் 

கேட்டு சொல்லேன் ...


பட்டாம் பூச்சி 

மலரின் காதில்  

சொன்ன 

கவிதையை !


=================================


பொன்வண்டாய் 

பிறக்கிறேன்  ...


சிறு பிள்ளை 

விளையாட்டாய் 

தீப்பெட்டியிலாவது 

சிறையெடுத்துவிடு !!


================================


அழகாகத்தான் 

இருக்கிறது ...

உன்னை நினைத்து 

எழுதிய கவிதையும்..


காதலிக்க 

தொடங்கிவிட்டேன் ...

அந்த 

கவிதையையும் !!


=======================


நிலவு 

வீணை 

மீட்டினால் 

நான் 

எதை 

ரசிப்பது !!


========================


மறக்கத்தானே 

சொன்னாய் ...


எனக்கென்னவோ 

ற வுக்கு பதில் 

ரி யே 

ஒலித்துக்கொண்டிருக்கிறது !!


இரண்டும் 

ஒன்றுதானே !!

========================


கண் விழிக்கவே 

பிடிப்பதில்லை ...


கனவில்தான் 

நீ 

ஏதேதோ 

கதைக்கின்றாயே !!


=========================


புயல்

என்ன செய்து விடும் !!?


தென்றலல்லவா 

எதையெல்லாமோ 

கவர்ந்து 

போகிறது !!


=========================


ஒவ்வொரு 

கவிதைக்கு 

முன்னும் 

பின்னும் 

மாத்திரையாய் 

போட்டு கொள்கிறேன் ...


உனது 

நினைவுகளை !!


=========================


உன் 

மௌனம் கூட 

பிரளயத்தை 

பிரசவிக்கிறது 

என் இதயத்தில் ...


என் 

சொல்லாவது 

அசைக்கிறதா 

உன் 

இதயத்தை !!

========================

Monday, October 14, 2024

எதை எழுதுவது

 எதையாவது 

எழுத வேண்டுமென்று 

சிந்தித்தாலே 

சிந்தனைக்குள் 

நீ 

வந்து விடுகிறாய் ...


எதை 

எழுதுவது !!!


==================

ஆயுள் 

குறைகிறதே 

என்ற 

வருத்தமெல்லாம் 

இல்லை ...


உன்னோடு 

இருக்கப்போகும் 

நாட்கள் 

குறைகின்றதே 

என்ற 

வருத்தம்தான் 

எனக்கு !!


=====================


உன் 

விழியைவிட 

கூர்மையான 

ஆயுதத்தை 

இன்னமும்  

கண்டுபிடிக்கவில்லை

உலகம் !!


=====================


Sunday, October 6, 2024

புண்ணியம்

எண்ணுவதெல்லாம்
நேரினில்
காணும்
புண்ணியம் இருந்தால்
மனம்
எங்கு போகும்..
==================================
நிறைவேறாத
என்
கனவை
பெருமூச்சாய்
வாங்கிக்கொண்டது ..
காற்று !!
==================================
துப்பாக்கி சூடு 
குண்டு வெடிப்பு 
பயங்கர கலவரம் ... 

பயமின்றி 
எல்லா இடத்திலும் 
நுழைந்து வந்தது ...

காற்று !!

=================================
அத்தனை 
மொழிகளையும் 
தன்னில் 
கடத்தி 
என்ன பயன்...

இரைச்சல் 
மொழியைத்தவிர 
வேறெதுவும் 
தெரியவில்லையே ...

காற்றுக்கு!!

============================



Saturday, October 5, 2024

இதழிலிருந்து

 கடற்கரையின் 
மாலைத்தென்றல் 
கவிதை ஊற்றாய் 
மாறாதா !!

கண்ணகி 
சிலையின் 
அருகில் 
நின்றால் 
காவியம் ஓன்று 
தோன்றாதா !!

பாரதி இல்லத்தில் 
காலடி வைத்தால் 
சந்த கவிதைகள் 
இதயத்தில் 
கொட்டாதா !!

சிறுகூடல்பட்டிக்குள் 
நுழைந்தால் 
மனதில் 
பாட்டுவரிகள் 
நுழையாதா !

உன்னைப்பற்றி 
இரண்டு 
வரிகளாவது 
எழுத வேண்டுமே ...
இதழிலிருந்து 
இரண்டு 
வரிகளையாவது கொடு !!

Friday, September 27, 2024

இதயம்

 நிலவு 

தென்றல் 

மழை 

மலை 

அருவி 

என 

கவிதை சொல்ல 

ஆசைதான் ...


என்ன 

செய்வது ..


உன் 

விழிகள் 

மட்டும்தானே 

கவிதை 

பாடம் 

நடத்துகின்றன !


=================


எதைப்பற்றி 

சிந்தித்தாலும் 

அதற்குள் 

நீ 

வந்து விடுகிறாய் ...

கவிதையாக !!

================


என் 

இதயம் 

துளைக்கும் 

உனது 

விழிகளை விடவா 

இன்னொரு 

கூர்மையான 

ஆயுதத்தை 

இவ்வுலகம் 

கண்டு 

பிடித்துவிடப்போகிறது !!


===================

நம் 
காதலை 
நான் 
சந்தித்து விட்டேன் ...
நீ 
எப்போது 
சந்திக்க 
போகிறாய் !
===========
எனது 
காதல் 
தேசத்தின் 
சர்வாதிகாரி 
நீ 
==========
உன்னை 
படைத்தபிறகுதான் 
தன்னை 
படைப்பாளி 
என்று 
சொல்லிக்கொள்கிறானாம் ..
பிரம்மன் !!
=====================  
தினம் தினம் 
காதல் 
திருவிழாதான் 
எனக்கு  ...
இதய கோவிலில் 
உன்னை 
வைத்து 
தினம் 
இழுக்கிறேனே !!
====================
உனது 
இதயக்கோவிலுக்கு 
நேர்ந்து 
விட்டிருக்கிறேன் 
என் 
காதலை ...
என்ன 
செய்ய 
போகிறாய் !!
x

Sunday, September 22, 2024

லட்டு


லட்டு போன்ற 
கன்னங்கள் 
என்று 
கவிதை சொல்ல 
ஆசைதான் ...

மாட்டு கொழுப்பென 
கிண்டல் 
செய்கிறேனென 
நினைத்துகொள்வாயோ 
என்றுதான் 
பயமாக 
இருக்கிறது !!

======================
எப்பொழுது 
கொண்டு 
வருவார்கள் ...

ஒரு வாழ்வு 
ஒரு காதல் 
என்னும் 
சட்டம் !!
====================
இரண்டு 
இதழ்கள் 
இருந்தென்ன ...

ஒரு 
நேரத்தில் 
ஒரு 
முத்தம்தானே 
தருகிறாய் !!

====================

நீ 
சாய்ந்து 
கொள்கையில் 
இலகுவாக 
இருக்கும் 
தோள்கள் ...

நீ 
விலகியபின்னே 
கனத்து 
போகின்றன !!

+++++++++++++++++++++++

எழுதும் 
போதெல்லாம் 
உன்னை 
சிந்திக்கிறேனா ...

இல்லை 
உன்னை 
சிந்திக்கும் 
போதெல்லாம் 
எழுதுகிறேனா ...

=============================

காற்றில்லா 
தேசத்தில் 
கூட 
வாழ்ந்து 
விடுவேன் ...

எப்படி 
வாழ்வேன் ..

உன் 
காதலில்லா 
தேசத்தில் !!

============================

பார்வையை 
விலக்கி 
விடாதே ...

ஒளியிழந்து 
விடப்போகிறது  ..

என் 
விழிகள் !!
=========================
கம்பனின் 
வார்த்தைகளுக்கும் 
மயங்காத 
மனம் ....

மயங்கித்தான் 
போயிற்று ...

உன் 
மௌன 
விழி பார்வையில் !!
======================

உன் 
இதழிலிருந்து 
இரண்டு 
வரிகளை 
கொடு ...

எழுதிக்கொள்கிறேன்
யாரும் 
எழுதாத 
கவிதையொன்றை  !!
==========================
கரையில் 
கிறுக்கியதை 
அழித்துப்போகிறது
கடல் அலையொன்று ...

அழிக்க 
முடியாதவற்றை 
கிறுக்கிப்போகிறது 
மனதில் 
அலையொன்று !!
=========================
ஓசையின்றித்தான் 
ஏதோ 
சொல்லியது 
உன் 
விழிகள் ...

ஏன் 
அதிர்கின்றது 
என் 
இதயம் !!
==========================

மழையோடு 
நீ ...

நனைகின்றது 
என் 
காதல் !!
==========================
விழிகளால் 
தினம்
உரமிட்டு 
செல்கிறாய் ...

வளர்ந்து 
கொண்டே 
இருக்கிறது 
எனது 
காதல் !!

==========================
என் 
இதயத்திற்கு 
இறகு 
கட்டிச் 
செல்கிறாய் ...

உன்னை 
சுற்றியே 
வட்டமடிக்கிறது 
அது !!

========================
இதய மாற்று 
சிகிச்சை 
செய்து கொள்ளலாமா ...

அப்போதாவது 
புரியுமா 
என் 
காதல் 
எத்தகையது 
என்று !!

=========================
ஒரு 
நாள் 
நீ 
பார்வையை 
விலக்கி 
சென்றாலும் ...
ஜோஸ்யக்காரனை 
தேடுகிறேன் ...

பரிகாரம் 
செய்ய !!
========================


Sunday, September 15, 2024

பனிக்கால

 பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்...
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்..
====================================
உன்னை 
பிரிந்தும் 
இன்னமும் 
உயிரோடு 
இருக்கிறேன் ...
உனது 
நினைவுகள் 
கருணை 
காட்டுவதால் !
=========================
திரும்பிக்கூட 
பார்க்காமல்தான் 
என்னை 
கடந்து 
போனாய் ...
அதனால் 
என்ன ...
என்னை 
தழுவிப்போனதே 
உனது 
வாசம் !!
===============================
நடக்கையில் 
சிக்கிக்கொண்ட 
உடையை 
நொடிப்பொழுதில் 
சரி செய்து 
கடந்து போனாய் ...
அந்த 
சிக்கலிலேயே 
இன்னமும் 
சிக்கிக் 
கொண்டிருக்கிறேன் 
நான் ...
=======================
காதலில் 
காத்திருப்பது 
சுகமாமே ....
எப்போது 
காத்திருக்க 
வைக்க 
போகிறாய் ....
======================

உதிர்ந்த 
சருகுகள் 
எல்லாம் 
தவம் 
செய்கின்றன ...
அடுத்த 
பிறவியில் 
உதிர்ந்தாலும் 
உன் 
புன்னகையாகத்தான் 
உதிர 
வேண்டுமாம் !!.
==============
பூக்களின் 
தலைநகரமாக 
அறிவித்து 
விட்டார்களா ...
உன் 
கூந்தலை !!
================
எனது
கவிதையை 
கேட்டு 
சிணுங்கவில்லையே ..
பர்சிலிருக்கும்
உனது 
புகைப்படம் !!

நீ
சிணுங்குகிறாயே!!

==============
உன்னை 
முதல் நாள் 
பார்த்தது 
போலவே 
இருக்கிறாய் ...
வளர்ந்திருப்பது 
எனது 
காதல்தான் !!
==============
நீ 
சிரித்த போதுதானே 
பற்றிக்கொண்டது 
அகல் 
விளக்கு !!
=====================
விட்டுவிடு 
என்கிறது 
வயது ...
இன்னமும் 
இறுக்கிக்கொள் 
என்கிறது 
காதல் ...
நான் 
என்னதான் 
செய்வது !!
x

Sunday, September 8, 2024

போகிறாள் அவள்

 போகிறாள் அவள் !!

================
காதல் குளத்தில் காலாட்டிக் கொண்டே
இயல்பாய் கல்லெறிந்து விட்டு எழும்
அதன் அலைகளில் கால்நனைத்துக் களவாடிப் போகிறாள் அவள் !

பார்த்தவுடனே பார்வையைப் பறிக்கும் மின்சார மின்னலாய்
விழி அம்புகளில் ஆலமை அதிகமாய்த் தடவி
என் இதயத்தைக் குறிவைத்து எய்தி
அதை ஆறாத காயக்களமாக்கிப் போகிறாள் அவள் !

ஆழமான ஆழியிலே பிறந்த வெண்சங்காய்
உயர்ந்திருக்கும் அவள் கழுத்தின் பக்கத்து நுனியில்
அழகான கேள்விக்குறியாய் வ(வி)ளைந்திருக்கும்
மாந்தளிர் செவியின் உத்திரத்திலே துளையிட்டு
தூக்கிலிட்டு தொங்கிச் சிணுங்குகின்ற சிமிக்கியாய்
என்னை துக்கத்தில் தவிக்கவைத்து போகிறாள் அவள் !

பஞ்சுப் பாதம் மண்மீது ஜதி சொல்லி கொஞ்சி நடக்கையில்
வழியில் ஓர் ஜீவனின் வாழ்வையும் வஞ்சிக்கக்கூடாதென
மிகுந்த எச்சரிக்கையாய் மிதிபடாது மென்மையாய்
பாதைக்கு நல்ல பண்ணிசைத்து சுரம் சேர்க்கும்
மலர்ப்பாதம் முத்தமிட்டே மயங்கிக் கிடக்கும் அவளின்
வெள்ளிக் கொலுசொலித்து என்னை மயக்கிப் போகிறாள் அவள் !

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும் நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும் குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர் வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய் உச்சிவரை நேர்வகிடெடுத்து தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து போகிறாள் அவள் !

அசுரமாய் வீசிடும் கடும் சூறைக்காற்றில்
ஆலமரமே அடிவேரோடு சாய்ந்தாலும்
சமயோசிதமாய் சிந்தை கொண்டு செயல்பட்டு
சாதுர்யமாய் சூழ்நிலையைச் சமாளிக்கும்
ஆற்றுமேட்டில் அழகாய் காற்றசைத்தால் ஆடி நிற்கும்
நாணலெனவே நடை பயின்று நடந்து போகிறாள் அவள் !  

மென்மையாய் பணிவு போர்த்திய பெண்மையாய்
வானவெளியில் காற்றடிக்கும் திசையெல்லாம்
கலைந்து போகும் வெண்மேகமாய் என்னைக் கடந்து
வேகமாய் வீசும் காற்றிலே குழம்பித் தவிக்கும்
திசைக்காட்டியாய் என்னை அலைகழித்துப் போகிறாள் அவள் !

காய்ந்திருக்கும் பருவச் சுள்ளிகளை சேகரித்து
அன்பிருக்கும் காதல் பொறிகளை கண்களால் உரசி விட்டு
புகைந்திருக்கும் தீயை துப்பட்டாவால் விசிறிவிட்டு
நெஞ்சுருகும் நெய்யூற்றி அனல் கொழுந்துகளை வளர்த்து விட்டு
துடித்திருக்கும் என் இதயத்திற்கு இதமாய்த் தீ மூட்டிவிட்டு
பதமாய்க் குளிர்காயச் சொல்லிப் போகிறாள் அவள் !

விழிதடாகங்களைச் சுற்றி வட்டமிடும் கருவண்டு கண்களுக்கு
நீள்வட்டமாய் நாள்தோறும் அவள் பூசிடும் கார்மையென
ஆளில்லா நள்ளிரவில் குவிந்திருக்கும் கும்மிருட்டில்
முதன்முதலாய்த் திருடத் துணிந்து வீடு புகும்
பழக்கமில்லா திருடனின் கைகளைப் போல 
என் உள்ளம் நடுங்கவைத்து போகிறாள் அவள் !

காக்கைகளும் குருவிகளும் கூட்டமாக அமர்ந்து
காலைநேரத்தில் கூடிக்கூடி மும்முரமாய் ஊர்க் கதைகள் பேசும்
கனமான மின்கம்பி கடத்துகின்ற மின்சாரமாய்
கணப்பொழுதில் என்னைக் கடத்திப் போகிறாள் அவள் !

உயிர்த்திரியை உயரமாய் உயர்த்தி விட்டு
காதல் தீபம் அதன் தலையில் ஏற்றி வைத்து
தன்னைச் சுற்றி இருளில் தவிப்போருக்கு
மெய் உருகி உருகி வெளிச்சம் அளிக்கும்
மெழுகுவர்த்தியாக என் உயிர் உருக்கிப் போகிறாள் அவள் !

பின்னால் பின்னல்களாய் கைகோர்த்துக் கொண்டு
குதூகலமாய் ஓடி விளையாடும் பள்ளிப் பிள்ளைகளைப் போல
தட தடவெனவே சத்தமிட்டு குலுங்கி குலுங்கி
தடதடக்கும் இரு தடங்களில் கால்பதித்து
விரைந்தோடும் இரயில்வண்டி போனதுமே நசுங்கும்
ஒற்றை வெள்ளி நாணயமாய் என்னை நசுக்கிப் போகிறாள் அவள் !

அவள்  இருக்கும் திசையே என் ஆசைச் சூரியன்
தினம் உதிக்கும் காலை கிழக்கென
நிதம் எனக்கு உணர்த்திப் போகிறாள் அவள் !
வரும் ஒளி குவிக்கும் அடியாய்
அவள் நினைவுகளை சுமக்கும் ஜாடியாய்
கரிக்காத காதல் கடலுக்கு மூடும் மூடியாய்
என்னை நினைக்க வைத்து நீங்கிப் போகிறாள் அவள் !

நிறம் கருத்து உடல் பருத்து செம்மாந்து நிற்கும்
பேரலங்காரத்துடன் உலா வரும் பட்டத்து யானையைப் போல
இருக்கும் கரு(டு)ம் பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்
உயர்மலையின் மேலிருந்து வீழும் வெள்ளருவியைப் போல
என் நெஞ்சில் பட்டு சிலிர்க்கும் சாரல்களாக சிதறிப் போகிறாள் அவள் !

கைதொட்டால் அகம் மகிழும்
நாசி முகர்ந்தால் மனம் நிறையும்
உடல் பூசினால் பனிச்சிகரமென குளிரும்
பரவுகின்ற மேனியெங்கும் மணம் வீசும்
செங்குருஞ்சி மலைப்பிறந்த சந்தனமென எனது
உள்ளமெல்லாம் நல்வாசம் வீசிப் போகிறாள் அவள் !

தேடுவோருக்கு ஒன்றுமே தட்டுப்படாத
மனம் குழப்பும் சிந்தனைக்கும் மட்டுப்படாத
புரியாத புதிராக அவிழாத முடிச்சுகள் போடும்
பனிக்கால குளிர்க்காற்றைப்போல புத்தி குடையும்
தடயமில்லாத குருதி வழியும் உயிர்க்கொலையைப் போல
என் உள்ளத்தை தடயமின்றி கொன்றுவிட்டுப் போகிறாள் அவள் !

தொட்டால் சுடுகின்ற நெருப்பில்
பட்டால் பொசுங்கும் பஞ்சாய்
விட்டால் மீதமாகும் சாம்பலாய்
என் மனதை சுட்டெரித்துப் பொசுக்கிப் போகிறாள் அவள் !

விழிகள் நூறு வினாக்கள் பார்த்ததும்
சலனங்கள் நூறு சிந்தையில் சுமந்து
நித்தம் நன்றாய் எழுதவும் வகையின்றி
மடித்து வைத்து விரைவாய் வெளியேறவும் மனமின்றி திணறும்
வகையாய் விடையளிக்க விருப்பமின்றித் தவிக்கும்
கடின வினாத்தாளைக் கண்ட ஒரு சராசரி மாணவனைப் போல
விழியால் மட்டும் பேசி விடைசொல்லாது விலகிப் போகிறாள் அவள் !

எழில்நிலவை எட்டிப் பிடிக்கும் ஏக்கத்தில்
நாளெல்லாம் உழைத்துக் களைத்து விட்டு
கொல்லைப்புறக் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து
கவலையுடனே கால் நீட்டிப் படுத்துக் கொண்டு
ஏங்கித் தவிக்கும் ஏதுமற்ற ஓர் ஏழையைப் போல
என்னை ஏங்கவைத்து போகிறாள் அவள் !

உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லதென்று
அன்புடனே அவசியமாய் அம்மா அள்ளிப் போட்டாலும்
மறக்காமல் ஒதுக்கி வைக்கும் பொங்கல் மிளகாய்
என்னைத் தள்ளிவைத்து போகிறாள் அவள் !

காதல் பயிருக்கு பூவேலி போட்டு
பறந்து வரும் பறவைகளை நேரம் பார்த்து
ஏமாற்றவே வைக்கோல் கைவிரித்துக் காத்திருக்கும்
சும்மாவே சிரிக்கும் சோளக்காட்டு பொம்மையைப் போல
என்னை கனவுக் காட்டுக்கு காவல்வைத்து போகிறாள் அவள் !

மனதில் உறுதியாய் கட்டிவைத்த காதல் கோட்டையை
கணப்பொழுதில் கடைக்கண் ஓரத்தில் கண்ணியைப் புதைத்து
தரைமட்டமாக்கி விட்டு சந்தோஷத்துடனே
வந்த காரியம் முடிந்ததென கைத்தட்டிக் கொண்டு
என்னை கலங்க வைத்துப் போகிறாள் அவள் !

காட்டில் மாட்டைத் தொலைத்த மேய்ப்பனுக்கு
தன் தலைத்திரும்பும் திசையெல்லாம்
தவறிய அதன் மணியோசை தவறாமல் கேட்பதைப் போல
என்னுடனே அவள் இல்லாத வேளைகளிலும்
இதயக்கூட்டில் அவளின் நினைவோசை நீங்காமல்
கேட்கவைத்து கரையாமல் போகிறாள் அவள் !

சிவந்த ஞாயிறு கதிரொளி பட்டு உருகும்
சுள்ளென மேனி தொட்டால் உரைக்கும்
பச்சைப் பசும்புல் தலைத்தூங்கும்
குளிர்மார்கழிப் பளிங்குப் பனித்துளியைப் போல
குளிர்நிலவு பார்வையில் என்னை உருகவைத்து போகிறாள் அவள் !

சாலையோரம் சாயாமல் சிலையாகவே நிற்கும்
என்றுமே தல(ட)ம் மாறாத தளிர்களாக வளர்ந்திருக்கும்
தண்டின் நடுவில் சிறு சதுரமாய் இடம் வெட்டி
அதில் நிரந்தரமாய் கார்வண்ண எண் பொறித்த
உயர்மரமாய் என்னைக் காக்கவைத்து போகிறாள் அவள் !

ஊரின் எல்லையில் கேட்க நாதியற்று தனியாக நின்றிருக்கும்
ஊரின் பெயரை தன் தலையெழுத்தே என்று சுமந்திருக்கும் 
சாய்ந்து சரிந்து போய் சிதைந்து கிடக்கும்
இரட்டைக் கால் தாங்கும் ஒற்றை ஊர்பலகையாய்
என்னை அவளின் நினைவுகளை நெஞ்சப்பலகையில்
சுமக்கவைத்து நிற்கதியாய் என்னை நிற்கவைத்துப் போகிறாள் அவள் !

பார்வைப் புயல்களை வீசி நடு நெஞ்சில் நங்கூரமிட்டு
பருவத்தின் ஆரவாரப் பரிவர்த்தனைகளோடு
என் மீது உயிர் பறிக்கும் பெரும்படை திரட்டி
போரிட்டு உள்ளத்தை போர்களமாக்கிப் போகிறாள் அவள் !

என் ஆசை அறிந்திருந்தும்
என் விருப்பம் தெரிந்திருந்தும்
என் உள்ளம் புரிந்திருந்தும்
காதல் வெள்ளம் உள்ளங்களில் கரைபுரண்டிருந்தும்
முள் மூடிய கள்ளியாய் மனதை மறைத்துப் போகிறாள் அவள் !

ஒளிநிலவும் குடைபிடிக்கும் கனவுக்காதலியே !
நான் என் வாழ்வின் விடியலுக்காய்
உன் திசைநோக்கிப்  பார்த்திருக்கிறேன்
மழைமேகம் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
பாளமாய் வெடித்த செம்மண் நிலமாய்
பூம்பாவை பதிலுக்காய் பூத்திருக்கிறேன்

உள்ளங்கால் பாதம் 
தரையில் பட்டதுமே
கொதித்து எழும்பும் காயக் கொப்புளங்களைத் தரும்
கோடைசாலையாய் நித்தம் கொதித்திருக்கிறேன்

பகலெல்லாம் புல்லும் காய்ந்த வெட்டவெளியில்
வீணாகக் காய்ந்துவிட்டு மனமின்றி மலைமறையும்
மாலைமேற்கு அடர்மஞ்சள் சூரியனைப் போல
நான் மனம் மயங்கிக் கிடக்கிறேன்

உன் விருப்பவினா தெரியாமலே
என் காதல் தேர்வை எழுதிவிட்டேன் நான் 
வெறுப்பில் கோபமாய் கிழித்தேறிவாயோ? - இல்லை நீ
விருப்பமாய் என் வாழ்க்கை விடைகளை மதிப்பிடுவாயோ?
உன் முடிவுகளை எதிர்நோக்கி தினம் தினம்
கண்ணுறங்கா மாணவனாய் காத்திருக்கிறேன்

எப்போதும் போகிறாய் என்னை வேண்டுமென்றே நீங்கிவிட்டு
எப்போது வருவாய் என் வாசல் உன் மலர்ப்பாதம் தொட்டு...     

ரயிலேறி விட்டாய் ...

 என் 
இதயத்திலிருந்து 
காதலை 
எடுத்துக்கொண்டு 
உடல் முழுதும் 
முட்களாக்கிவிட்டு 
போகிறாய்  ...
ஆறுதல் தேடி
எதன் மீதும் 
சாய்ந்து 
கொள்ள முடியாமல் 
தவிக்கிறேன் 
நான் !!
===================================
எதை எதையோ 
எடுத்துக்கொண்டு 
நீ 
ரயிலேறி விட்டாய் ...
உன் 
நினைவு 
சுமைகளோடு 
நான் 
தவிக்கிறேன் !!
===================================
சேரவும் 
முடியாமல் 
பிரியவும் 
முடியாமல் 
பயணிப்பது 
இந்த 
தண்டவாளங்கள் 
மட்டுமல்ல ....
நீயும் 
நானும் 
கூடத்தான் !!
===================================
எனது 
ஒவ்வொரு 
கவிதையிலும் 
ஏதோ ஓன்று 
குறைகிறது ...
உனது 
பெயர்தான் !!
===================================
உனது 
குளிர் 
பார்வையிலேயே 
உருகிப்போனது 
எனது 
காதல் 
பனித்துளி !!

======================
காதலைப்பற்றி
பேசுபவர்களை 
மூட நம்பிக்கையை
விதைக்கிறார்கள் 
என்று 
காவல்துறை 
கைது 
செய்யாதா என்ன!!
≈=========================
இன்னமும் 
புரியவில்லை ...

நீ
எனது 
பாவமா...
புண்ணியமா!!!
===============================

Monday, September 2, 2024

மழை

உன்னை 
நனைப்பதால்தானோ
உயரத்திலிருந்து
விழுந்தாலும்
மகிழ்வோடு
விழுகிறது...

மழை!!!!
=====================
நெஞ்சின் 
மூலையில் 
இருக்கும்  
நினைவுகளை 
ஞாபகப்படுத்தும் 
இசை 
போல ...

வீட்டின் 
மூலையில் 
இருக்கும் 
குடையை 
அவ்வப்போது 
ஞாபகப்படுத்திப் 
போகிறது ..

மழை !!
=============================
கரைக்க 
முயல்வதாய் 
நினைத்து 
உன்னழகை 
அதிகப்படுத்தித்
தோற்றுப்  
போனது ..

மழை !!
=============================
மழை 
அல்ல ...

மழையில் 
நனைந்த
நீதான்
பாதிக்கிறாய்...

என் 
இயல்பு 
வாழக்கையை !!
==========================
நீ 
நடக்க 
புல் தரை 
வேண்டுமென்றுதானோ 
பெய்கிறது ...

மழை !!

===========================
சேலை தலைப்பில் 
நீ 
தலை 
துவட்டி விட்டபோது 
தோன்றியது 
தினமும் 
வராதோ ..
 
மழை !!
============================

Saturday, August 31, 2024

பாதை

வாழ்க்கை 
என்னும் 
பாதையில் 
காதல் 
என்னும் 
நிறுத்தத்தில் 
காத்திருக்கிறேன்...

எந்த
பேருந்தில் 
வருகிறாய்!!?

================================÷
உனக்காக 
காத்திருக்கும் 
ஒவ்வொரு 
நொடியும்...
நெஞ்சை 
கிழித்தவாறே 
நகர்கின்றன...

கடிகார
முட்கள் 
==================================


வியர்க்கிறது...

கொஞ்சம் 
அனுப்பிவிடு 
உனையே 
சுற்றிக் 
கொண்டிருக்கும் 
தென்றலை!!!
==================================
ம்...
என்றாள் 
அவள்  ....

ஆகா
என்ன 
அருமையான
கவிதை...
நீயும் 
எழுதறியே 
என்று 
என்னை
முறைத்தது 
நிலா!!

==================================

நீ
புன்னகைக்கும் 
நேரமெல்லாம் 
என்
காதல்
வயலில் 
பயிராகி 
விடுகின்றன ...

ஒரு கோடி 
கவிதைகள்!!!

================================

இளையராஜா 
இசைஞானி 
என்றால்...

இசையாய் 
சிரிக்கும் 
உன்னை 
என்னவென்று 
சொல்வது!!!

==================================

அகராதியை 
புரட்டி 
வார்த்தைகளை 
தேடிக்கொண்டிருந்தேன்
நான்...

மௌன மொழியிலேயே 
கவிதை 
எழுதிக்கொண்டிருந்தாள் 
அவள்!!!!
=====================================
எனது
ஒவ்வொரு 
நாட்குறிப்பையும் 
எழுதாமலே 
நிரப்பி விடுகின்றன..

உனது 
நினைவுகள் 
====================================
எனது
கற்பனை 
வானில் 
தினம் 
பௌர்ணமி....

நிலவாய் 
நீயிருப்பதால்...
=====================================


Sunday, August 11, 2024

பூவாய்

 சருகாய் 

கிடந்தேன் ....


உன் 

காலடி 

பட்டதில் 

மலர்ந்தேன் 

பூவாய் !


தாகத்தில் 

தவித்தேன் 

பாலையில் ...


வந்தாய் 

பனி 

மழையாய் !!


கோடை 

வெயிலிலும் 

துணிவாய் 

நடப்பேன் ...


உனது 

நினைவுகளே 

குடையாய் !!


அன்று 

எண்ணங்கள் 

இருந்தன 

சிறகாய் ...


இன்று 

அவையே 

வீழ்ந்தன 

சருகாய் !!


Friday, August 9, 2024

வயல் காற்று

  
எருக்கிலைக்கு 
தண்ணீர் கட்டி 
எத்தனை பூ 
பூத்தாலும் ...
மருக்கொழுந்து 
வாசம் வருமோ 
தென் பழனி 
வேலவனே!
===============
உச்சியிலே 
சடையிருக்க ...
உள்ளங்கையில் 
வேலிருக்க ...
நெற்றியிலே 
நீறிருக்க ...
என் 
நினைவு தப்பி 
போவதென்ன !!
================
காவடி 
வருகுதென்று 
கரடேறி 
பார்த்ததென்ன ..
கான மயில் கண்டு 
சிந்தை 
முழுதும் 
அழிந்ததென்ன !!
=====================
மயில் 
வரும் 
பாதையில் ...
பருந்தாய் 
சில
நினைவுகள்..
வட்டமிட்டு 
தவிப்பதென்ன !!
==================
ஆட்டு மந்தை 
கூட்டத்திலே 
வேங்கை 
வந்து 
பாய்ந்ததுபோல் ..
வேல் வீச்சு 
விழியிரண்டும் ...
சிந்தைகளை 
சிதறடிப்பதென்ன !!
=====================
அழகாய் 
பூத்தொடுக்க 
அந்தி மல்லி 
பூவிருக்க ...
மந்தியென் 
மனம் பறித்து 
பூச்சூடி 
ஆவதென்ன !! 
===============
வாடாமல்லி 
ஒரு காசு ...
செண்டு மல்லி 
ஒரு காசு ...
வட்டமல்லி 
ஒரு காசு ...
செவந்தி பூவு 
ஒரு காசு ...
கணக்கு போட்டு 
பார்த்தாலும் 
உன் வாசம் 
போலில்லை 
மல்லிகையே !!
============
ஆத்து மீனு 
அரைக்காசு ...
அயிரை மீனு 
அரைக்காசு ...
கெண்டை மீனு 
அரைக்காசு ...
கெளுத்தி மீனும் 
அரைக்காசு ...
உன் 
விழி மீனு 
எத்தனை காசு ...
தவிக்குதடி 
என்னுசுரே !!
==========
நெல்லு 
விளையட்டும்
தஞ்சயிலே ...
சோளம் 
விளையட்டும்
கடலூரிலே ..
உன் 
மனதில் 
காதல் 
விளைந்தாலன்றி 
என் 
பஞ்சம் 
தீர்ந்திடுமோ 
பூங்குயிலே !!
===============
கிழவன்தானடி ..
வாலிப 
கவிஞனாகி 
விடுகிறேன் ...
உன்னோடு 
நடக்கையிலே !
================
விறகு 
கட்டைகளை கூட 
தலையில் 
அனாயாசமாக 
சுமந்து 
விடுகிறாய் 
நீ ...
பூப்போன்ற 
உன் 
நினைவுகளை 
சுமக்க 
முடியாமல் 
தடுமாறுகிறேன் 
நான் !
================

வயல் காற்று கவிதைகள்


Saturday, August 3, 2024

துளி மழை

உன் மீது 
விழுந்து 
தெறித்த
சிறு 
மழைத்துளியே 
அடை மழையாய் 
நனைக்கிறது 
என்னை !!

==============================

உனது 
சிறு 
துளிப்பார்வையே 
நனைக்கிறது 
என்னை 
அடை மழையாய் !!

==============================

சில வினாடிகளே 
அடை மழையாய் 
ஆர்ப்பரித்து 
கடந்து விட்டாய் ...

இன்னமும் 
சிலிர்ப்பு 
தீரவில்லை 
எனக்கு !!

=====================

சாரல் 
மழையாய் 
உனது 
பார்வை 
பட்டாலும்  ...

அடை மழையாய் 
எனக்குள் 
பெருக்கெடுக்கிறது 
மோகம் !!

======================

அடை மழை 
என்ன 
செய்துவிடும் 
என்னை  ...

உனது 
கடைக்கண் 
பார்வைதான் 
அதிர வைக்கிறது 
பிரளயமாக !!
=============

தண்ணீரோடு 
சில
நினைவுகளையும் 
கொட்டிப்போகிறது 
அடை மழை !!

Friday, August 2, 2024

வயநாடு

 


யார் 

செய்த 

பாவங்களை 

கழுவி 

தள்ளினாய் 

மழையே !!


============================


பாதகங்களை செய்தவர் 

பங்களாக்களில் 

படுத்துறங்க 

பாமரன் மேல் 

ஏனிந்த 

பகை !!


============================


வஞ்சத்தில் 

கோடிகள் 

சேர்த்தவருக்கு 

பாலூட்டுகிறாய் ...


பஞ்சத்தில் 

இருப்பவனுக்கு 

பாலூற்றுகிறாய்!!

======================

ஊழலில் 

திளைப்பவன் 

கோடிகளில் 

படுத்துறங்க 


ஏழையை

தெருக்கோடியிலும் 

உறங்க விட 

மறுக்கிறாய் !!


==========================


நீ 

கழுவி 

ஊற்றுவது 

மலைகளை 

அல்ல ...


உயிர்களை !!


Friday, July 26, 2024

இரயிலில்

 இன்னமும் 
தேடிக்
கொண்டிருக்கிறேன் ...
முதன் 
முதலில் 
இரயிலில் 
பயணித்த 
சிறுவனின் 
உற்சாகத்தை !!
----------------------------
உன்னை 
வழியனுப்பி 
விட்டேன் ...
உன் 
நினைவுகளை 
எப்படி 
வழியனுப்புவது !!
-----------------------------
இந்த 
தண்டவாளங்கள் 
ஏதோ 
ஒரு புள்ளியில் 
சந்திப்பதுபோல் 
பொய் பிம்பம் 
காட்டுகின்றன ...
உன்னையும் 
என்னையும் 
போல !!
--------------------------------
பயணசீட்டு 
இல்லாமல் 
இதயத்தில் 
எப்போதும் 
பயணித்துக்கொண்டே 
இருக்கிறது ...
உன்னுடனான 
நினைவுகள் !!
------------------------------
முன்னோக்கித்தான் 
செல்கிறது 
இரயில் ...
எண்ணங்கள் 
எனோ 
பின்னோக்கி ...
ஜன்னலோர 
மரங்களைப்போல !!
---------------------------------
 வாழ்க்கை 
பயணத்தில் 
உடன் 
வருவேன் 
என்றாய் ...
இதோ 
மீண்டும் 
ஒரு 
இரயில் 
பயணம் 
தனியாய் !!
----------------------------------
ஒரு 
நாள் 
வரத்தான் 
போகிறது ...
உன்னையும் 
என்னையும் 
ஏற்றிச்செல்ல 
இறுதி 
இரயிலொன்று !!
=====================
இரு விழிகள் 
முகிலானது 
பருவ மழை தான் 
தூவுது 
இருந்தும் 
என்ன 
வெயில் 
காயுது 
இருதயத்தில் 
அனல் 
மேவுது 

Wednesday, July 24, 2024

வலி

 வழி 

காட்டுவாய் 

என்றிருந்தேன் ...


வலி 

காட்டிவிட்டு 

அல்லவா 

போகிறாய் !!


======================================


மூச்சடைக்க

 எனது 

கருப்பு வெள்ளை 

கனவுகளுக்கு 

வண்ணம் 

சேர்த்தவள் 

நீ !!


கனவு 

காண்பதே 

வாடிக்கை 

ஆகி விட்டது 

எப்போதும் !!


========================


ஒவ்வொரு 

கனவிலும் 

தேடிக்கொண்டே 

இருக்கிறேன் ...


விரும்பி 

தொலைத்த 

நினைவுகளை !!


=========================


உனது 

காதல் 

பட்ஜெட் 

எனது 

இதய 

மாநிலத்துக்காக 

அல்லவோ !!


=========================


கவிதை 

வரிகளை 

உனது 

புன்னகையில் 

ஒளித்து 

வைத்துக்கொண்டு 

என்னை 

கவிதை 

எழுத 

சொன்னால் ..

என்னதான் 

எழுதுவது !!


=========================


நீதான் 

என்னுலகம் 

என்று 

சொல்ல 

யாருமில்லை ...


ஒருவேளை 

இன்னமும் 

கிராமமாகவே 

இருக்கிறேனோ !!


=========================


சற்று 

தள்ளியே 

இரு ...


மூழ்கடிக்கும் 

என் அன்பில் 

மூச்சடைக்க 

போகிறது 

உனக்கு !


=========================


Monday, July 22, 2024

மனக்குடத்தை

 பிறக்கும்போது 

ஒருத்தியின் 

பனிக்குடத்தை 

உடைத்து 

பிறந்த 

பலனோ என்னவோ ...


எனது 

மனக்குடத்தை 

உடைத்து 

போகிறாள் 

இன்னொருத்தி !!

======================================

எங்கிருந்து 

காப்பியடித்தாய் 

இக்கவிதைகளை 

என்று கேட்டாள் ...


அவ்வப்போது 

வீசும் 

உனது 

கவிதை 

விழிகளில் 

இருந்துதான் !!


======================================

கிழவன்தான் ...


வாலிப 

கவிஞனாகி விடுகிறேன் 

உன்னை 

காணும் போதெல்லாம் !

======================================

Tuesday, July 16, 2024

பசுமைப் புரட்சி

 உன் 

நினைவுகள் 

உரசுவதால் ...


என்

இதயத்திலும் 

பசுமைப் 

புரட்சி !!


==========

வயல் 

வரம்பில் 

அல்ல ...


இதய 

நரம்பில் 

அல்லவா 

நடக்கிறாய் !!


=================

நீ 

வயல் வரம்பில் 

தடுமாறியபோது ...


இதய 

நரம்பொன்று 

இடம் 

மாறியது !!


===================


வரம்பில்தானே 

நடக்கிறாய் 


ஏன் 

ஏரோடுகிறது 

என் 

இதய 

நரம்பில் !!


=============


நெற்பயிர் 

வளர்ந்து 

விடும் ...


எப்போது 

வருவாய் 

காதல் 

பயிர் 

வளர்க்க !!


Monday, July 8, 2024

விழி ஊசி

உன்னை 

வர்ணித்து 

ஏதேதோ

கிறுக்கிக் கொண்டிருந்தேன்...


ஜன்னல் வழியே

எட்டிப் பார்த்து

வீணாய்

கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறது

நிலா!!!

======================

 நிலவிடம்தானே 

கொடுத்து 

அனுப்பினேன் 

எனது 

காதல் 

கவிதைகளை ...


பொறாமை 

கொண்டு 

தரவில்லையோ 

உன்னிடம் !!


============


கிழிந்துதான் 

கிடக்கிறது 

இதயம் ...


காதல் 

கோர்த்த 

உன் 

விழி ஊசி 

வேண்டி !!


=============

போதைக்கு 

எதிரி 

நான் ...


கள்ளச்சாராயமாய் 

உன் 

நினைவுகள் !!


=================

மனதோடு 

உன் 

நினைவுகள் 

மல்லுக்கட்டும்

போதெல்லாம் 


மல்லுக்கட்டி 

பார்க்கிறேன் 

கவிதை 

புத்தகத்தில் !!

==================

உன்னை 

சந்தித்தது 

முதல் 

மரணம் 

வரை 

காதல் தசையாமே ...


பரிகாரம் 

சொல்வாயா !!


================

என்னுயிரை 

பறிக்கும் 

அளவிற்கு 

எமனுக்கு 

சக்தி 

இல்லை போலும் ...


அதனால்தான் 

அனுப்பியிருக்கிறான் 

உனது 

காதலை !!


==================

24 மணி நேரத்தில் 

நினைவுகளை 

அழிக்கும்  

இதயத்தை படைக்கும் 

வித்தையை 

இறைவன் 

அறியான் போலும் ...


இந்த 

ஸ்டேட்டஸ் 

போல !!


=====================

Saturday, February 24, 2024

கவிதைகள்

 உவமைகளை 

அள்ளி 

வீசுவது 

கமபனா ...

காளிதாசனா ...

வியந்து 

பார்த்தேன் ...


அதே 

வியப்போடு 

நின்றன 

வாத்ஸாயனின் 

விழிகள் !!


=========

விழிகளால் 

கொஞ்சம் 

தொட்டு 

பார்க்கிறேனே ..


விரல்களால் 

தொட 

முடியாத 

அந்த 

தூரத்து நிலவை !


===============

நிலவை 

தொட 'கோடிகளில் 

சந்திரயான் 

எதற்கு ...!


பத்து பைசா 

ஓலை 

சுவடியில் 

காளிதாசன் 

தொட்டு விட்டானே 

கவிதையால் !!

=============

கவிதையாய் 

நீ 

நடக்கும் 

நடையில்தான் ....


எனது 

கவிதை 

சமையலறையில் 

சுவையாய் 

தயாராகின்றன 

சில 

கவிதைகள் !!

===========

கவிதைகளில் 

இழைந்து 

ஓடும் 

தாகம்  .....


தாகம் தீர்க்க 

ஆயிரம் 

குவளை

நீருமாய் 

அலைகிறதோ 

ஒரு 

மேகம்