Tuesday, March 30, 2021

வாங்கி வந்தாயோ

மேருமலை தாண்டி வரும் காற்றே
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் கூந்தல்  நறுமணத்தை 
வாங்கி வந்தாயோ!!

மேருமலை தாண்டி வரும் மேகமே 
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் விழி  கருமையைத்தான்  
வாங்கி வந்தாயோ!!

மேருமலை தாண்டி வரும் பூங்குயிலே 
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் குரல் இனிமையைத்தான்  வாங்கி வந்தாயோ!!

மேருமலை தாண்டி வரும் பட்டாம்பூச்சியே 
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ ...
அவள் சேலை வண்ணங்களை 
வாங்கி வந்தாயோ!!

மேருமலை தாண்டி வரும் முழுநிலவே 
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் முக அழகினைத்தான் 
வாங்கி வந்தாயோ!!

தொலைவேனோ

மின்னும் கண்களில் கரைவேனோ!
பின்னும் நடையினில் தொலைவேனோ!
கண்மை கருப்பினில் கரைவேனோ! 
மின்னல் சிரிப்பினில் தொலைவேனோ! 
சிந்தும் மொழியில் கரைவேனோ!
உந்தும் மூச்சினில் தொலைவேனோ!

வளையோசை கலகலக்க

நறுமுல்லை மலரெடுத்து
குறுநகையும் சேர்த்து வைத்து
வளையோசை கலகலக்க
கட்டுகிறாய்..
என் மனதையும் சேர்த்து ஏன் 
கட்டுகிறாய்!!

கருங்கூந்தல் முன்னெடுத்து
வாசனை நீர் தோய்த்து 
வளையோசை கலகலக்க
பின்னுகிறாய்...
என் மனதையும் சேர்த்து ஏன் 
பின்னுகிறாய்!!

கருகருவென மையெடுத்து 
குறுகுறுவென விழி திறந்து 
வளையோசை கலகலக்க 
தீட்டுகிறாய்  
என் மனதையும் சேர்த்து ஏன் 
தீட்டுகிறாய்!!

சந்தனம் அரைத்தெடுத்து 
ஜவ்வாதும் கலந்து வைத்து 
வளையோசை கலகலக்க 
பூசுகிறாய் 
என் மனதையும் சேர்த்து ஏன் 
பூசுகிறாய் !!

கத்திரிப்பூ சேலையெடுத்து 
இடுப்போரம் கொசுவம் வைத்து 
வளையோசை கலகலக்க 
சூடுகிறாய் 
என் மனதையும் சேர்த்து ஏன் 
சூடுகிறாய் !!

உன்போல் அல்ல

துள்ளுவதெல்லாம் 

உன்போல் மானல்ல

மின்னுவதெல்லாம் 

உன்போல் பொன்னல்ல

பின்னுவதெல்லாம் 

உன்போல் இடையல்ல

அணைப்பதெல்லாம் 

உன்போல்  கரமல்ல

மீட்டுவதெல்லாம் 

உன்போல் விரல்ல

செப்புவதெல்லாம் 

உன்போல்  நாவல்ல

சிந்துவதெல்லாம்  

உன்போல் முத்தல்ல

விம்முவதெல்லாம் 

உன்போல்  விழியல்ல

எழுதுவதெல்லாம் 

உன்போல் கவிதையல்ல

நிரந்தர தலைவி

எனக்கே தெரியாமல் 

எப்போது தாக்கல் செய்தாய் 

உன் காதல் மனுவை !!


என்  ஒவ்வொரு செல்லும் 

பிரச்சார நேரம் முடிந்த பின்னும் 

ஓயாமல் உனக்காக 

பிரச்சாரம் செய்கிறது  !!


உள்ளிருப்பு போராட்டம் 

நடத்துகிறது 

உன் நினைவுகள் !


வாக்குறுதி கேட்டு

விழிகளில் சுற்றுகிறது 

சில கனவுகள் !!


நான் நட்ட 

கொடிக்கம்பத்தில் 

உன் கொடி 

எப்படி பறக்கிறது !


Zero hour மட்டுமல்ல 

எல்லா hour லும் 

உன்னை பற்றிய கேள்விகளே!!


உன் காதல் மசோதா அன்றி 

வேறெதையும் 

விவாதத்திற்கே எடுக்காமல் 

அடம்  பிடிக்கிறது மனது !!


உன்னை பற்றி 

கனவு காணாமல் இருந்தால் 

வெளிநடப்பு செய்வேனென்று 

பயமுறுத்துகிறது உறக்கம் !!


காதல் சலிப்பில்

உன்னை செல்லமாய்

திட்டும் வார்த்தைகளை கூட

மூளை தன் குறிப்பிலிருந்து

நீக்க எத்தனிக்கிறது !!


உனது ஸ்லீப்பர் செல்லாய் 

எப்போது ஆனது என் இதயம் !!


இலவசமாய் தருவேன் என்று 

சொல்லவேயில்லயே ...

உனது இதயத்தை தராமல் 

 எப்படி பறித்தாய் எனது இதயத்தை!


எல்லா எண்ணங்களும்  

உன் முகத்தை காட்டி 

இதுவே நமது சின்னம் என்று 

மல்லு கட்டுகிறது !!


போதும் உனது காதல் அரசியல் ...

தந்து விடுகிறேன் 

எனது காதல் சாம்ராஜ்யத்தை ...

எப்போது வருவாய் 

நிரந்தர தலைவியாய் பதவியேற்க !!

பெண் நீதி என்றும் நெருப்படி !!

 


எல்லையோரம் அரசமரம் 

ஏங்கித்தான் காத்திருக்கேன் 

மாமனும் வருவானோ 

மனச கொஞ்சம் தருவானோ  !!


ஒத்த மரத்தடியில் 

ஒத்தயில காத்திருக்கேன் 

சொக்கனும்தான் வருவானோ 

சொக்கிப்போய் நிப்பேனோ !!


நிழலிலே நின்னாலும் 

தழலாய் கொதிச்சிருக்கேன் 

நீராய் அணைப்பானோ 

விரகம் தீர்ப்பானோ !!


இரு விழி மயங்கிடவே 

வரும் வழி பாத்திருக்கேன் 

நாயகனும் வருவானோ 

சோகமதை தீர்ப்பானோ !!


மாலையும் சாயுதடி 

மல்லிகையும் வாடுதடி 

என் சேதி கேட்க யாருமில்ல 

பெண் நீதி என்றும் நெருப்படி !!

கவலையுதிர்காலம்

 வேல் முனையும் 

உன் விழியும் 

ஒன்றல்ல கண்ணே ...


ஆறாத'காயம் 

உன் 

விழி தந்த பின்னே !


குளிர்காலம் ...

கோடைக்காலம் ...

மழைக்காலம் ...

வசந்த காலம் ...

இலையுதிர்காலம் ...

என 

இயற்கைக்கு 

காலங்கள் பல படைத்தாய் 

ஏழைக்கு 

கவலையுதிர்காலம் 

என்று படைப்பாய் !!

Sunday, March 28, 2021

கனிமொழி

வார்த்தை ஒன்று கேட்டிடவே 
வாடியிருக்கேன் ராசா 
செம்பவழ  இதழாலே 
கனிமொழி சொல் லேசா!
குக்கரில் போட்ட அரிசியாய் 
தினம் வேகுது எம்மனசு 
மக்கர் பண்ணாம நீ வந்தா
நம் காதலும் தினம் புதுசு! 
பெண்மான் கூட்டத்தில் 
நீயொரு அதிசய பொன்மான்
உன்னோடு வாழ்ந்திருந்தால்
என்றென்றும் நான் சீமான் !
சுட்டும் விழி பார்வையால் 
கட்டிவிடு காதல் நீதி மையம் 
காவியங்கள் காணா காதலை 
காணட்டும் இந்த வையம் !
கிழக்கில்  உதிக்கும் கதிரவன் 
உலகிற்கு  விடியல் - உன் 
மனதில் உதிக்கும் காதலே 
எனக்கென்றும் விடியல் !
ஐயமின்றி  காத்து நிற்பான் 
வள்ளியின் காதலன் பழனிசாமியும் 
கை கோர்த்து நாம் நடந்தால் 
வெற்றி நடை போடும் நம் காதலும் !

கவிதை என்ற பெயரில்
உளறல்களின் எல்லை
இவன் காதல் வரிகளுக்கு வரி போட்டா
தீர்ந்திடுமோ கவிதை தொல்லை!

யாரந்த கவிதை நாயகி !!

 


ஒரு நாள் ஆயுள் கொண்ட 

பூக்களை 

குற்றுயிராய் பறித்து 

இறைவனுக்கு படைத்து 

நீண்ட ஆயுள் 

வேண்டினான் மனிதன் !!


உன்னை காதலித்தது கடமை 

விலகி போனது கண்ணியம் 

உன் நினைவோடு வாழ்வது கட்டுப்பாடு 


உன் காதல் உரிமை 

சட்டத்தில் 

நான் நிராகரிக்க பட்டால் 

என்னை நாடு கடத்திவிடு 

உன் நினைவுகள் இல்லாத 

தேசத்திற்கு !


மனிதன் பிறந்த நாள் கொண்டாட 

தன் இறந்த நாளை 

கண்டது 

மெழுகுவர்த்தி !!


கையோடு கை கோர்த்து 

கதைத்தாளில்லை ...

கைபேசியிலும் 

கதைத்தாளில்லை ..

கனவோடு 

கதைக்கிறாள் ...

யாரந்த கவிதை நாயகி !!


யார் சொன்னது 

சிறகின்றி பறக்க முடியாதென்று ..

காதலித்து பார் !!

வெற்றி நடை போடுகிறது

 


உன்னோடு 

கரம் கோர்த்து நடக்கையில் 

வெற்றி நடை போடுகிறது 

நம் காதலே !!


நீ கவிதை என்றால் 

நான் 

கவிதையோடு வாழ்பவன் !


என் 

கவிதை கப்பல் 

கண்ணீர் கடலில் 

பயணிக்கிறது !


என் காதலோடு 

போராட முடியாமல் 

தோற்று போனாள் அவள் ..

இப்போதும் 

என்னோடு போராடி கொண்டிருக்கிறது 

காதல் !! 

Saturday, March 20, 2021

கனவு

கண்ணீரில் நீந்தும் கனவு 

Wednesday, March 17, 2021

காற்றில் உன் வாசம்

காற்றில் உன் வாசம் 
பெட்ரோலாய் எரிக்குதடி
இருவிழியில் உன் நேசம் 
கேஸ் உருளையாய் கனக்குதடி
இதயத்துடிப்பும் 
ஜிஎஸ்டியாய் எகிறுதடி 

எண்ணம்

எந்தன்  காதல்  ஒருதல
உந்தன் மனசும் இருதல
இதயத்தில் நேசம் முட்டல
காதல் கொடியும் நாட்டல
ஆண்பாவத்துக்கு அஞ்சல 
சொல்லாமல் போனாய் ஆறுதல
பிரம்மனும் தலயில் எழுதல
இதயத்தின் புலம்பல் எட்டல
கல்லறையிலாவது சொல் ஒம்பதில
என் காதலுக்கு இப்பிறவி பத்தல 

Monday, March 15, 2021

யாருக்கு சொந்தம்

தோட்டத்து பூக்கள் 
யாருக்கு சொந்தம் ?

செடியை வைத்தவனுக்கா !

இல்லை 

அவள் கூந்தல் வாசம் காண்பதால் 
அவளுக்கா ...

இல்லை 

இறைவன் கழுத்தில் ஆடுவதால் 
ஆலயத்திற்கா ...

இல்லை 

இறுதியில் 
வாடிப்போய் 
மண்ணோடு கலப்பதால் 
மண்ணிற்கா!

தோட்டத்து பூக்கள் 
யாருக்கு சொந்தம்?

சேதி என்னவோ

சேதி என்னவோ !

பூஞ்சோலை தாலாட்டும் தென்றல் 
வண்டுகளுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு பூக்களும்  நாணம் கொண்டதோ !

நீரோடை தாலாட்டும் தென்றல் 
நாணலுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு கெண்டை மீன்கள்  உள்ளம் துள்ளுதோ!

மேகங்கள் தாலாட்டும் தென்றல் 
நிலவுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு விண்மீன்கள் கண் சிமிட்டுதோ!

மஞ்சத்தில் தாலாட்டும் தென்றல்  
கண்களுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு கன்னங்களும் தான் சிவந்ததோ!

உன்னை காத்து

நேற்றிரவு தூக்கமில்லை
நாளெல்லாம் உன் நினைவே
வழிமேல் விழியாக
வேதனையுடன் காத்திருக்கேன்
ஏன் வரவில்லை
என் மேல் கோபமா?
உடம்பு சரியில்லையா
ஊரிலேயே இல்லையா?
காத்திருப்பதில் ஆத்திரமில்லை
கடைசியிலேனும் வந்தால் சரி
உன்னை அடைய எத்தனை காத்திருப்பு
என்னென்ன கஷ்டங்கள்
இன்னொருத்தியை
எண்ணிக் கூடப் பாரேன்-நேற்று
மாத்திரம்தானே லீவு-
பாத்திரம் தேய்க்கணும்
இனியும் தாமதியாது வந்துவிடு
முனியம்மா…

Thursday, March 11, 2021

தேர்தல் 2021

வாய்சவடால்கள் ஆயிரம் 
பொய்கள்தான் ஆயுதம் 
திட்டியவர்கள் கட்டிக்கொள்வார்கள் 
கட்டியவர்கள் வெட்டிக்கொள்வார்கள் 
பள்ளம் பார்த்து வெள்ளம் பாயும் 
பணம் பார்த்து ஆதரவு பாயும் 
கூட்டலுக்கும் கழித்தலுக்கும் 
சாதியும் மதமும் குறியீடாகும் 
அஞ்சுக்கும் பத்துக்கும் கூடும் கூட்டம் 
அஞ்சு வருஷம் அல்லோலப்படும் 
லட்சம் பேர் லாட்டரி வாங்கி 
ஒருவன் லட்சாதிபதி ஆவது போல்
லட்சம் பேர் ஓட்டு போட்டு 
ஒருவன் கோடீஸ்வரன் ஆவான் 
ஜெயித்தால் தனது நேர்மை என்பான் 
தோற்றால் எதிரியின் பணமென்பான்
ஓட்டை பிச்சை கேட்டு ஜெயித்தவன் 
நோட்டை பிச்சை கேட்பான் 
வாக்காளர் காலில் விழுந்தவன் 
கல்வி தந்தையாவான் 
ஒருநாள் தெய்வமான வாக்காளன் 
பூஜை செய்யும் பக்தனாவான் 
கையில் இருப்பது ஓட்டு அல்ல 
அர்ஜூனன் காண்டீபமென அறியாது
குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 
இரந்து நிற்கிறான் வாக்காளன் 


Tuesday, March 9, 2021

எண்ணெய் வளம்

அரேபியாவில மட்டும்தான் 
எண்ணெய் வளம் னு 
பொலம்பறவனுக்கு
நம்மூரு டீக்கடை 
பஜ்ஜியையும் கொஞ்சம் 
காட்டுங்க!!

செஸ் விளையாட்டு 
இந்தியாவில்தான் 
உருவாச்சாம்...
அதுசரி...
கறுப்பனோடு வெள்ளையன் 
மோதும் நிறவெறிக்கும் 
நம்ம நாடுதான் தாய்நாடா!!

Monday, March 8, 2021

வயல் மங்கை

வயல் வரப்பில் அல்ல 
இதய நரம்பில் நடக்கிறாய்!

ஆயுத பூஜைக்காவது 
விடுமுறை எடுத்து கொள்ளுமா...
உன் கண்கள்!

நீ தெருவில் வரும் நேரம் 
தானே மனசுக்குள் அடிக்குது அலாரம் 

சிந்து நதி கரையில் நாகரிகம் 
வளர்ந்திருக்கலாம் 
என் காதல் வளர்ந்ததென்னவோ 
உன் இருவிழி கரையில்தான் 

திருடுவது குற்றமென்று 
கற்றதில்லையோ...
என்னை திருடுகிறதே 
உன் கண்கள்!!

போஸ்ட்,  ஸ்பீடு போஸ்ட்,  தந்தி,  எஸ் எம் எஸ், இமெயில்  என
அனைத்து வசதிகளையும் கொண்டது 
அவள் கண்கள் மட்டுமே!!

எங்கள் ஆட்சி அமைந்ததும் ..
எத்தனை காலம்தான் 
இதையே பிதற்றுவீர்கள் !!

ரசாயன மாற்றம் 
வேதியலில் மட்டுமா ..
பார்வை பரிமாற்றத்திலும்தான் 

பார்வையால் தினம் 
நடத்துகிறாள் உலகப்போர் 

சமூக வலைதளங்களில் 
உறவினர்களை 
பிளாக் செய்வதற்கு 
பெயர்தான் 
நாகரீகம் 

மாவட்ட ஆட்சியரிடம் 
விண்ணப்பித்திருக்கிறேன் 
உன் பாதம் பட்ட இடங்களை 
பட்டா போட்டுத் தர!!

விண்ணை தாண்டி வருவாள் 
என்றிருந்தேன்....
பாவி மக...
வீட்டு மண்ணையே 
தாண்டி வரலியே!

சாதி என்றால் 
சாதித்துக் காட்டு
என்பது தானே பொருள்...

எமன் என்ற நீதிபதி 
தீர்ப்பு எழுத 
லஞ்சம் வாங்குவதில்லை .

எமதர்மன் ஆத்திகன் 
நல்ல நாள் பார்த்து 
அவன் வருவதில்லை!!



Sunday, March 7, 2021

வசைப்பாடல்

அடங்காத முடியொதுக்கி 
அலங்காரம் செய்யுறனே 
கண்ணுலதான் காணலயோ 
கண்மணிக்கு புரியலயோ !

அடங்காத முடியொதுக்கி 
அலங்காரம் செய்யும் மச்சான் 
அங்கங்கே வெள்ள முடி 
அதையுந்தான் என்ன செய்வே!

அப்பப்போ ஒனத்தேடி 
தெருவோரம் சுத்துறனே 
என் வேதன புரியலியா 
சொன்னாலும் வெளங்கலயா!

நொண்டிக்காள போல 
தெருவோரம் சுத்தும் மச்சான் 
களத்துல நீ சுத்தி வந்தா 
கதிரடிக்கும் செலவு மிச்சம்!

செந்தூர பொட்டழகி 
செவப்பி ஒன்ன காணாம 
உண்ணுகிற சோறு 
ஒடம்புலதான்  ஒட்டலடி !!

ஒட்டாத சோத்தயும்தான்
உண்ணுறதில் லாபமில்ல 
நாய்க்குத்தான் போட்டுவிடு 
நன்றியோட வாலாட்டும்!!

நித்தம் மனசுலதான் 
ஒந்நெனப்பு சுத்துதடி 
கண்மூட மறுக்குதடி 
நித்திரையும் வெறுத்ததடி!

நித்தம் எனையெண்ணி 
நித்திரையும் வெறுத்துபுட்டா 
சொக்கு சுருங்கி மச்சான் 
கிழடாத்தான் போயிடுவே!!

ஒத்தயில நான் படுத்தா 
தெள்ளுந்தான் கடிக்குதடி 
ஓரமா நான் படுக்க 
சேதி ஒண்ணு சொல்லடி!

ஒத்தயில உருண்டாலும் 
தெள்ளுந்தான் கடிச்சாலும் 
மச்சான் ஒன் வீரத்துக்கு 
எங்கிட்ட வேலயில்ல !!


கண்டாங்கி

தோப்போரம் பம்புசெட்டு 
வரமஞ்சள் தேச்சுகிட்டு 
பாங்காய் நீ குளிக்கையில 
மஞ்சளுக்கு கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி! 

ரெட்ட ஜட பின்னிகிட்டு 
முன்னாலதான் போட்டுகிட்டு 
முறுக்கிகிட்டு நடக்கயில 
பின்னலுக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி!

பளபளக்கும் மேனியிலே 
கண்டாங்கி சேல சுத்தி 
தளதளன்னு நீ நடக்கையிலே
கண்டாங்கிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கண்டாங்கி சேல சுத்தி 
தென்னயில சாஞ்சுகிட்டு 
பாட்டு நீயும் படிக்கையில 
தென்னைக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கெண்டை கால் தெரிய 
சேலையத்தான் ஒதுக்கிகிட்டு
ஓடையில் நீ நடக்கயில
கெண்டை மீனுக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

வரப்போரம் கன்னுகுட்டி 
வாகாத்தான் அணைச்சுகிட்டு
முத்தம் நீ கொடுக்கயில 
கன்னுகுட்டிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கழுத்தை சுத்தி கருகமணி 
மார்போரம் தொங்கிகிட்டு 
அங்குமிங்கும் ஆடயில
கருகமணிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

சிறுவாடை காத்தடிக்க
தலையணைய கட்டிக்கிட்டு 
சுருண்டு நீயும் தூங்கயில 
தலையணைக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

தோதான நாள் சொன்னா 
அய்யரும் ஓடி வருவாரடி 
சாக்கு போக்கு சொல்லாம 
ஒங்கப்பனும்தான் சம்மதிச்சா 
நாளெல்லாம் சொகந்தாண்டி!


Friday, March 5, 2021

தேர்தல்

சீட்டு சீட்டுண்ணு அலையுறான் 
சீட்டுக்கு பேரம் பேசுறான் 
தாத்தா சம்பாதிச்சது பத்தலயாம் 
பேரனும்தான் தவிக்குறான் 
கொள்ளையடிச்சது போதலயாம் 
கோட்டய புடிக்க அலையுறான்
ஓட்ட வாங்க பாக்குறான் 
நோட்டயும் அள்ளி வீசுறான்

பிரச்சார மேடையில் ஏறியவன் 
காமெடி தர்பார் பண்ணுறான் 
தேர்தலுக்கொரு கூட்டணி போட்டு 
கூச்சமில்லாம கூவுறான் 
சூட்கேசை வாங்கிகிட்டு 
கட்சிக்கு கட்சி தாவுறான் 
குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 
ஓட்ட வித்து வாக்காளனும் ரசிக்குறான்
 
மதச்சார்பற்ற கட்சி என்பான் 
மதத்துக்கு ஓட்டு கணக்கெடுப்பான்
ஜாதி எங்களுக்கு இல்லையென்பான்
ஜாதி பாத்து ஆளு நிப்பான் 
மக்கள் நலனே தலையென்பான் 
தம்மக்கள் நலனை கருதிடுவான் 
பாலும் தேனும் ஓடுமென்பான் 
கல்லும் மண்ணும் கமிஷன் என்பான் 

ஆண்டுக்கணக்கில் ஆண்டபின்னும் 
ஏழையின் வாழ்வில் ஏற்றமில்ல 
பரம்பரையா ஆண்டபின்னும் 
பணத்தின் மோகம் தீரவில்ல 
இலவசங்கள் ஆயிரம் கெடச்சாலும் 
மக்களின் ஆசயும் கொறயவில்ல
ஊழல் நெறஞ்ச நாட்டுல 
லஞ்சமில்லாம தாய்ப்பாலுமில்ல

அழையா விருந்தாளி

அழையா விருந்தாளியா
மனசுக்குள்ள நொழஞ்சுபுட்ட 
இரும்பான எம்மனச
சந்தனமா கொழச்சுபுட்ட 
கரும்பான கனவுகள
செந்துரமா தூவிப்புட்ட
கொழஞ்சு போன எம்மனச 
நெற்றிப்பொட்டா வச்சுகிட்ட 
நாள் பாத்து நான் வரவும் 
செந்தேளா கொட்டிப்புட்ட

கடற்கரை

சுடு மணலில் விளையாட வேணும் 
மணல் வீடு கட்டி பாக்க வேணும்
நண்டோடு நானோட வேணும் 
கைகோர்த்து கபடியாட வேணும் 
கிளிஞ்சல் தேடி கால் வலிக்க வேணும் 
கவலை மறந்து மழலையாக வேணும் 
கடலலையில் கால் நனைக்க வேணும் 
கடலை தின்று கடலை ரசிக்க வேணும் 

புரிஞ்சுக்கடி

ஆவணியும் வந்ததடி 
ஆசைகள தூண்டுதடி
கனவெல்லாம்  பொங்குதடி 
மனசெல்லாம்  தங்குதடி 

தெருவெல்லாம் தேடுதடி
தெரட்டு பாலும் கரையுதடி
நெஞ்சும் வறண்டு போனதடி  
காஞ்சு போயி வாடுதடி 

அரும்பு போல மொளச்சதடி
துரும்பாத்தான் நெனச்சேனடி
உடும்பு போல காதலடி 
இரும்பாத்தான் ஆனதடி 

ஒத்தயில தவிக்குதடி 
நெலவும்தான் ஏசுதடி
மாமன் மனச புரிஞ்சுக்கடி 
மனசு வச்சு  கட்டிக்கடி 

கிளியே

மோட்டு வளைய பாத்து பாத்து 
எந்தூக்கம் போகுதடி 
காட்டு மல்லி வாசம் வந்து 
எம்மோகம் கூட்டுதடி 
போட்டு வச்ச ஆசைகள
சொல்ல மனசு துடிக்குதடி 

பாக்கு மர வேரப்போல 
பாவி மனசு பின்னுதடி  
சாக்கு போக்கு சொல்லி தினம் 
சிக்கிகிட்டு தவிக்குதடி 
சீக்கு கோழி போல என்ன 
துவள வச்சு ரசிக்குதடி  

தென்ன ஓல சலசலக்க 
தேன் நிலவும் தேயுதடி 
தெனம் தெனம் ஒந்நெனப்பு 
தென்னங்கள்ளா ஊறுதடி 
மனசு முழுக்க காதலோட 
மடி சாஞ்சா போதுமடி 

Thursday, March 4, 2021

நீ இல்லா

என்னையே ஏமாற்றி வாழ்கிறேன் 
பூவில்லா நந்தவனம் அழகென்று 
நிலவில்லா அமாவாசை அழகென்று 
அலையில்லா கடல் அழகென்று 
ஆசையில்லா மனம் அழகென்று 
நீரில்லா நதி அழகென்று 
நீயில்லா வாழ்வு அழகென்று 
என்னையே ஏமாற்றி வாழ்கிறேன் 

கைகாரி

அன்ன நடையில் 
என்னை முடக்கிய கைகாரி 
கெஞ்சும் குரலில் 
என்னை ஊமையாக்கிய  கைகாரி 
சிறுவிழி வீச்சில் 
என்னை சிறையெடுத்த கைகாரி 
நெற்றிப் பொட்டில்
என்னை ஒட்டி வைத்த கைகாரி 
மேலாடை சரிவில் 
என்னை பித்தனாக்கிய கைகாரி 
ஆசைப் புள்ளிகளில் 
என்னை ஆட வைத்த கைகாரி 
ஒரு நாள் இரவில் 
என்னை புத்தனாக்கிய கைகாரி 


அம்மா

 விழித்திருந்து என்னை 
தூங்கச் செய்தாய் 
பசித்திருந்து என்னை 
உண்ணச் செய்தாய் 

வலியோடிருந்து என்னை 
சிரிக்க செய்தாய்
கூண்டிலிருந்து என்னை 
உலகம் காண செய்தாய்

உன்னால் உலகை அறிந்தேன் 
எனைக்கண்டு உலகை மறந்தாய் 
உள்ளங்கையில் உலகம் இன்று 
உனையினி காண்பது என்று!!

எல்லாம் நீ

வெயில் கால நிழலும்  நீ 
மழைக்கால குடையும் நீ 
வசந்தகால தென்றலும் நீ 
இலையுதிர்கால நீரும் நீ 
பனிக்கால வியர்வை நீ 
குளிர் கால நெருப்பு நீ 
வருங்கால வாழ்வு நீ
காதல் காலம் நீயானால் 
எக்காலமும்  சுகமே நீ

கற்கண்டு

செதுக்கிய செலையா
நீ நடந்து வந்தா 
நிலவும் அனலாகும் 
வெயிலும் பனியாகும் 

செம்பவழ உதட்டுல 
சிரிப்பும் செதறயில
காயும் கனியாகும் 
கல்கண்டும் கரையும்

பால் கலந்த கருப்பட்டியா 
கொஞ்சி நீயும் பேசயில 
மனசும் கெறங்கும் 
உசுரும் உருகும் 

கையோட கை சேத்து 
ஒன்னோட நடந்தா 
காத்தும் கை கட்டும்
ஆயுசும் அடங்கும் 

அன்பு

எந்த ஆயுதம் கொண்டு 
மோதினாலும் 
ஏன் 
அன்பையே 
ஆயுதமாய் கொண்டு 
மோதினாலும் 
அவளிடம் மட்டும் 
தோற்றுப் போவீர்கள் 
அவள்... தாய்!

அம்மா

வாடிய முகம்தான் 
ஆனாலும் அழகிதான்
கசங்கிய சேலைதான் 
ஆனாலும் தேவதைதான் 
மெத்த படித்தவள்தான்
ஆனாலும் ஆசான்தான் 
ஒளிவட்டம் இல்லைதான் 
ஆனாலும் தெய்வம்தான் 

Wednesday, March 3, 2021

கவிதை நடை

அகராதி முழுதும் 
சலித்தும் புரியவில்லை...
கவிதை நடை என்றால் 
என்னவென்று...
நீ
நடக்கும்போது புரிந்தது!!

தொடாமல்

தீண்டாமல் தாக்கும் மின்சாரம் 
தொடாமல் குளிரும் பனி 

பிரபஞ்சம்

பிரபஞ்சம் விரிவடைந்து 
கொண்டே போகிறதாம்...
உன் மீது நான் கொண்ட 
காதலைப்போல!!

Tuesday, March 2, 2021

இதயம் தோற்றது

ஒவ்வொரு துளி 
இரத்தத்தையும் 
சுத்தம் செய்யும் போதும் 
இதயம் தோற்றுத்தான் 
போகிறது 
இரத்தத்தில் கலந்த 
உன் நினைவை 
அழிக்க முடியாமல்!

தாயின் மணக்கொடி

என் தந்தையிடம்
லஞ்சம் பெற்றே 
அரசாங்க ஆஸுபத்திரியில் 
அறுக்கப்பட்டது 
என் தாயின் தொப்புள்கொடி 

வேட்பாளர்

அன்பான 
வாக்காள பெரியோர்களே 
எங்கள் குடும்பமே 
வாக்கு மாறா குடும்பம் 
என் தாத்தா 
உங்கள் தாத்தாவிடம் 
சொன்னதையே 
நான் உங்களிடம் 
சொல்கிறேன் 
என் பேரனும் 
உங்கள் பேரனிடம் 
இதையே சொல்வான்...

ஏழ்மையை ஒழிப்போம் 

செவ்வாய்

செவ்வாயில் தண்ணீர் 
உண்டா என
வீண் ஆராய்ச்சி ....
தண்ணீர் இருந்திருந்தால் 
ஈரமற்ற வார்த்தைகள் 
உன் செவ்வாயில் 
ஒலித்திருக்குமா!!

கோவணம்

நல்லவளை 
ஏழையின் கோவணம் 
நிறம் வெள்ளையடி 
இல்லையென்றால் 
அதையும் உருவி 
ஏற்றுவார்கள் 
கட்சிக்கொடி 

தொலைந்தது

உன் கருவிழியில்
தொலைந்ததடி என் கனவு 
உன் கன்னக்குழியில் 
தொலைந்ததடி என் கவலை 
உன் கள்ளச்சிரிப்பில் 
தொலைந்ததடி என் காயம் 
உன் கல்யாணபந்தலில்
தொலைந்ததடி என் காதல் 

அம்மா

தங்கம்தான் பொறக்குதுன்னு 
தவமிருந்து பெத்தாயோ
வைரம்தான் பொறக்குதுன்னு
வரம் கேட்டு பெத்தாயோ

ஆலமரமென வளர்த்தாயோ 
அரளிவிதையாய் போனேனோ 
கனவென்ன கண்டாயோ
நனவாக்க மறந்தேனோ 

இதயத்தில் சுமந்தவளை
கவிதையில் தாலாட்டி ... 
தாலாட்டி வளத்த ஒனக்கு 
ஒத்த வரி எழுதலியே 

கவிதையென்று கிறுக்குவதெல்லாம் 
அலங்கார பொய்களம்மா 
நித்திய ஜோதி உன்னை 
எழுத்தில் எப்படி வடிப்பேனம்மா?