அடங்காத முடியொதுக்கி
அலங்காரம் செய்யுறனே
கண்ணுலதான் காணலயோ
கண்மணிக்கு புரியலயோ !
அடங்காத முடியொதுக்கி
அலங்காரம் செய்யும் மச்சான்
அங்கங்கே வெள்ள முடி
அதையுந்தான் என்ன செய்வே!
அப்பப்போ ஒனத்தேடி
தெருவோரம் சுத்துறனே
என் வேதன புரியலியா
சொன்னாலும் வெளங்கலயா!
நொண்டிக்காள போல
தெருவோரம் சுத்தும் மச்சான்
களத்துல நீ சுத்தி வந்தா
கதிரடிக்கும் செலவு மிச்சம்!
செந்தூர பொட்டழகி
செவப்பி ஒன்ன காணாம
உண்ணுகிற சோறு ஒடம்புலதான் ஒட்டலடி !!
ஒட்டாத சோத்தயும்தான்
உண்ணுறதில் லாபமில்ல
நாய்க்குத்தான் போட்டுவிடு
நன்றியோட வாலாட்டும்!!
நித்தம் மனசுலதான்
ஒந்நெனப்பு சுத்துதடி
கண்மூட மறுக்குதடி
நித்திரையும் வெறுத்ததடி!
நித்தம் எனையெண்ணி
நித்திரையும் வெறுத்துபுட்டா
சொக்கு சுருங்கி மச்சான்
கிழடாத்தான் போயிடுவே!!
ஒத்தயில நான் படுத்தா
தெள்ளுந்தான் கடிக்குதடி
ஓரமா நான் படுக்க
சேதி ஒண்ணு சொல்லடி!
ஒத்தயில உருண்டாலும்
தெள்ளுந்தான் கடிச்சாலும்
மச்சான் ஒன் வீரத்துக்கு
எங்கிட்ட வேலயில்ல !!
No comments:
Post a Comment