Sunday, March 7, 2021

கண்டாங்கி

தோப்போரம் பம்புசெட்டு 
வரமஞ்சள் தேச்சுகிட்டு 
பாங்காய் நீ குளிக்கையில 
மஞ்சளுக்கு கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி! 

ரெட்ட ஜட பின்னிகிட்டு 
முன்னாலதான் போட்டுகிட்டு 
முறுக்கிகிட்டு நடக்கயில 
பின்னலுக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி!

பளபளக்கும் மேனியிலே 
கண்டாங்கி சேல சுத்தி 
தளதளன்னு நீ நடக்கையிலே
கண்டாங்கிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கண்டாங்கி சேல சுத்தி 
தென்னயில சாஞ்சுகிட்டு 
பாட்டு நீயும் படிக்கையில 
தென்னைக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கெண்டை கால் தெரிய 
சேலையத்தான் ஒதுக்கிகிட்டு
ஓடையில் நீ நடக்கயில
கெண்டை மீனுக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

வரப்போரம் கன்னுகுட்டி 
வாகாத்தான் அணைச்சுகிட்டு
முத்தம் நீ கொடுக்கயில 
கன்னுகுட்டிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

கழுத்தை சுத்தி கருகமணி 
மார்போரம் தொங்கிகிட்டு 
அங்குமிங்கும் ஆடயில
கருகமணிக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

சிறுவாடை காத்தடிக்க
தலையணைய கட்டிக்கிட்டு 
சுருண்டு நீயும் தூங்கயில 
தலையணைக்கு கெடச்ச சொகம் 
எனக்கும்தான் கெடைக்குமோடி !

தோதான நாள் சொன்னா 
அய்யரும் ஓடி வருவாரடி 
சாக்கு போக்கு சொல்லாம 
ஒங்கப்பனும்தான் சம்மதிச்சா 
நாளெல்லாம் சொகந்தாண்டி!


No comments:

Post a Comment