Tuesday, July 21, 2026

விலாசம் மட்டும் இருக்கிறது

நான்
தூங்குவதற்காக
தாலாட்டு
பாடினாய்...
உனது 
இறுதி
உறக்கத்திற்கு
ஒப்பாரியும்
பாட முடியாமல்
தவித்து நிற்கிறது
மனது !!
பசி
வந்தால்
சாப்பிடு
என்றாய்...
துக்கம்
வந்தால்
என்ன செய்ய
என்று
சொல்லாமல்
போய்விட்டாயே!
அடுப்படி 
அனலில் வெந்து
நீ
சமைத்ததை
எளிதில்
ஜீரணிக்க முடிந்தது...
எப்படி
ஜீரணிப்பது
இன்று நீ
நெருப்பில் வேவதை?
உன்
கைப்பிடித்து
நடந்தபோது...
விழுந்ததே
இல்லை!
இப்போது
உன்
நினைவைப்
பிடித்துக்கொண்டு
நடக்கிறேன்...
அடிக்கடி
விழுகிறேன்!
உனது
இடுப்பில் 
இருந்தபோது
சிம்மாசனத்தில் 
இருப்பதாக 
தோன்றியது ...
இப்போது
சொந்த 
வீடு கூட 
குப்பையாய் 
தெரிகிறது !
சீப்புகளை 
வாங்குவதே 
நிறுத்திவிட்டேன்  ...
உன் 
விரல்களை 
விடவா 
என் தலைமுடியை 
அவை 
அழகுபடுத்திவிட 
போகின்றன ?
சட்டை பட்டன் 
லேசாக
இறுகியதற்கே 
நான் 
வளர்ந்து விட்டதாக 
பெருமைப்பட்டாய் ...
வளர்ந்து விட்டேன் ..
இப்போது
இறுகி இருப்பது ...
மனது !
ஊரில் 
யார் இருக்கிறார்கள் 
என்று கேட்கிறார்கள் ...
விலாசம் இருக்கிறது 
என்று நான் 
வெறுமையாய் சொல்வதை 
வியப்போடு 
பார்க்கிறார்கள்!
குடை கொண்டு போ 
என்று 
நீ சொன்னபோது 
சலிப்புடன் 
மறுத்திருக்கிறேன் ...
வானிலை 
செய்திகளை 
பார்க்கும்போது 
புரிகிறது ...
இயற்கையை 
கணிக்கும் சக்தி 
அன்பிற்கும் உண்டு !
உனது 
கணிப்பில் 
நான் 
எப்போதும் 
சரியாக 
தலை துவட்டுவதே 
இல்லை...
இப்போதும் 
நான் 
சரியாக 
தலை துவட்டுவதில்லை ...
உன் 
முந்தானைதான் 
இல்லை !
என்னென்னவோ 
பரிசோதனைகள் 
செய்கிறார்கள் 
மருத்துவமனைகளில் !
எப்படி 
கண்டு பிடித்தாய் ?
என் 
குரலை வைத்தே 
என் 
சிரமங்களை !
நான் 
நோய்வாய் 
படும்போதெல்லாம் 
விரதங்களின் 
நினைவு 
வந்து விடும் 
உனக்கு ...
உன் 
அன்பிற்கு 
ஈடு சொல்ல  
எந்த 
விரதத்தையும் 
சாஸ்திரம் 
இதுவரை 
சொல்லித்தரவில்லை !
எனக்காக 
எல்லா 
விரதத்தையும் 
அனுசரித்தவள் 
நீ ...
உனக்காக 
நான் 
விரதமிருப்பதில்லை ...
நான் 
பசியோடிருப்பதை 
நீ 
விரும்பமாட்டாயே !!
நீ 
புன்னகைக்கும் 
புகைப்படம் 
இருக்கிறது ....
ஆனால் 
இதுவரை  
புன்னகையோடு 
பார்க்க 
முடிந்ததில்லை 
என்னால்  !
இப்பொழுதுதான் 
தெரிகிறது ...
எனது 
துன்பங்களை 
தாங்கும் சக்தி 
எங்கே 
இருந்தது 
என்று !
தர்ப்பணமாய் 
எதை வைப்பது ?
வெறும் 
சோற்று 
உருண்டைகளையா ?
இன்னமும் 
மிச்சமிருக்கிறதே 
நீ 
தந்த உயிர் !
சிலையை
வைத்தே
ஏகலைவன்
வித்தை
கற்றுக் கொண்டான்...
உன்
படத்தின் முன்
தினம் பிரார்த்திக்கறேன்..
கற்றுக்கொடு
உன்
பிரிவைத் தாங்கும்
வித்தையை!
கோவிலுக்கு 
போவதை 
நிறுத்திவிட்டேன் ...
தெய்வத்தை 
ஏன் 
அழைத்து 
வரவில்லை 
என்று அங்கிருக்கும் 
சிலை கேட்டால் 
என்ன சொல்வது ?
கண்டுபிடித்து 
கொடுத்துவிடுவீர்கள்  ..
சிட்டுக்குருவியை ..
தும்பியை ...
வண்ணத்துப்பூச்சியை ...
புகைப்படமே 
தருகிறேன் ...
கண்டு பிடித்து 
தருவீர்களா ?
பிரபஞ்ச 
பேரறிவாமே 
உங்களுக்கு ?
தாயில்லாதவன் 
எப்படி 
அறிவான் ?
தாயின் 
பிரிவை !

No comments:

Post a Comment