உலகிற்கு
புள்ளி வைக்க
கற்று தந்தது
கணித மேதைகளா ..
இல்லை
கோலம் போடும்
உனது விரல்களா !?
என்
வாழ்க்கை முழுவதும்
நீ
வரைந்த காதல்!
புள்ளிகளால்
கோலம்
வரைகிறாய்...
பார்வைகளால்
என்
இதயத்தில்
காதலை
வரைகிறாயே!மாவுப் பொடிக்கு
எப்படித் தெரியும்...
உன்
விரல்களில்
பிறந்தால் தான்
அது
கலையாகும் என்று!
கோலம்
அழிந்து போகிறது...
அதை
வரைந்தவள்
நினைவு மட்டும்
அழிவதே இல்லை!
மார்கழிப் பனி
வாசலில்
நிற்கிறது...
உன்
கோலத்தின்
முதல் ரசிகனாக!
வாசலை
அலங்கரிக்கத்தான்
கோலமிட்டாய்...
தெருவிற்கே
திருவிழா
வந்துவிட்டது!
உன்
விரல்கள்
நடனமாடிய
இடமெல்லாம்...
தரைகூட
தன்னை
திருக்கோயில்
என்று
நினைத்துக்கொள்கிறது!
கோலம்
போட
குனிந்தாயா...
இல்லை...
என்
நெஞ்சைக்
கொள்ளையடிக்க
திட்டமிட்டாயா?
கோலத்தின்
வளைவுகள்
முடிகின்ற இடத்தில்...
என்
காதல்
தொடங்குகிறது!
நட்சத்திர
புள்ளிகளை
வைத்துவிட்டு
இறைவனும்
காத்திருக்கிறான் ....
உன்
கோலத்தை
நகலெடுக்க !
ஒவ்வொரு
காலையிலும்
கோலம்
புதிது...
ஆனால்,
அதை
வரையும்
உன்
அழகைப் பார்த்து
பிறக்கும்
என் காதல்
என்றுமே
புதிது!
கோலத்தின்
ஒவ்வொரு
புள்ளியும்...
உன்னைப் பற்றி
எழுதப்படாத
ஒரு
கவிதை!
காற்று
வீசவில்லை ..
நடக்கிறது...
உன்
கோலத்தின்
அழகைக்
கலைத்துவிடக்
கூடாதென்று!
உன்
கோலத்தில்
நிழல் படியாமல்
விலகி செல்கிறது
சூரிய ஒளி...
அழகை
அழிக்க
ஒளிக்குக் கூட
மனமில்லை!
வீழ்ந்தால்
மழையாகவோ
அருவியாகவோ
வீழ வேண்டும்
என்று சொன்னான்
ஒரு முட்டாள் கவிஞன் ...
வீழ்ந்தால்
உன் விரல்களிளிலிருந்து
கோல மாவாய்
வீழ வேண்டும்!
No comments:
Post a Comment