Monday, April 26, 2021

நீ சொந்தம்

கவிதையின் பொருள் 
கவிஞனுக்கே சொந்தம் 
அந்த கவிதையே
நீயானால் 
நீ யாருக்கு சொந்தம்!
 

எங்கே ஆக்ஸிஜன் ?

 விரல் நுனியில் 

உலகம் !


எங்கே ஆக்ஸிஜன் ?

அதர்மம் வேகாதோ !

 


நேர்மையின் பாதை 

தனிவழி ஆனதோ !

ஊழலின் பாதையில் 

ஊர்கூடி நடக்குதோ !


அன்பு கொண்ட மனங்கள் 

அறைக்குள் எரியுதோ  !

ஆசை கொண்ட எண்ணங்கள் 

சாலையில்  திரியுதோ !


தர்மத்தின் ஆசானுக்கு

தவறுகளுடன் நேசமோ !

வேதத்தின் ஊற்றில் 

விஷத்தின் வாசமோ !


பணமே இங்கு 

நாட்டை ஆளுதோ !

ஓசோனின் ஓட்டையில் 

அதர்மம் வேகாதோ !

Saturday, April 24, 2021

காற்றும்

கடந்து போகும் காற்றும்
காதல் ஜூரம் கொள்ளும் 

Friday, April 23, 2021

ஐன்ஸ்டீன்களை தேடும்

 ஐன்ஸ்டீன்களை தேடும் 

ஆப்பிள் மரங்கள் !


புத்தர்களை தேடும் 

போதி மரங்கள் !


வியர்வை பூக்களை தேடும் 

மைதான புற்கள் !



மூடிய கதவுகள் திறக்குமோ ...

அறிவு பசியாற அழைக்குமோ !

கவிதை பெண்ணே !

 நீயே என்று 

நானும் சொல்லேன் !


நானா என்று 

நீயும் கேளாய் !


என் கவிதைக்குள் 

ஓடும் கவிதை பெண்ணே !


பலரும் கேட்டு 

சலித்தார்கள் !


நானும் தேடி 

சலித்தேன் !


என் 

கவிதைக்குள் ஓடும் 

கவிதை பெண்ணே ...


நீ யார் !?

பாடாமல் வேறென்ன எனக்கு வேலை !

விழியோர கவிதைகள் 

விழிகளும் கார்த்திகை அகல்களோ - விண்ணில் மின்னும்  அகல்களோ !

பார்த்தன் கையேந்தும் நாணும் - அவள் புருவம் கண்டு நாணும் !

காமன் மலர்கணைகள் அஞ்சும் - அவள் விழி அசைவிற்கு அஞ்சும்  !

அவள் பார்வையில் பூக்குது ஊதாப்பூ வண்டு வந்து தினம் ஊதா பூ !

நெஞ்சில் பூக்க வைத்தாள் காதல் பூவை கண்களில் பூ விரித்த அந்த பூவை !

வந்தது மயிலொன்று எனை நாடி அதன் கண்களில் துடிக்குது எந்தன் நாடி !

விழியிரண்டும் வீசுது கூர் வேலை கவிதையில் வடிப்பதே என் வேலை !

Friday, April 16, 2021

என்றும் நீ என் எல்லையே !

 முகம் காட்டு என் முல்லையே !

கனவில் நீ தரும் தொல்லையே !

உனைப்போல் துணை இல்லையே !

என்றும் நீ என் எல்லையே !


உந்தன் நரம்பில் ஓடுது 

எந்தன் உதிரமே !

கொஞ்சு மொழி சொல்லாதோ 

உந்தன் அதரமே !

உந்தன் கொஞ்சு மொழியே 

டீக்கு மதுரமே !


பூவில் சின்ன பூவில் 

ஒரு பூ பூத்ததோ 

தோளில் எந்தன் தோளில்

அது பண் பாடுதோ !


பழங்கஞ்சி குடிச்சாலும் 

வெங்காயம் கடிச்சாலும் 

தீராத பசியெல்லாம் 

உன் மடியில் தீருமடி !

Wednesday, April 14, 2021

தொடங்கியது மழைக்காலம் !!

 வண்ணத்து பூச்சியின் 

வண்ணங்கள் குலையுது ...


தண்ணீர்ப்பாம்பு 

தவளையை தேடுது ...


நீரில் நாற்று 

மிதக்குது ...

கண்ணீரில் உழவன் 

கண்ணும் மிதக்குது ...


கூரையில் சொட்டுது  

நீர்த்திவலை  

சேர்த்து வைக்குது 

ஏழையின் வீட்டு 

தவலை 


குயவன் வலைந்த 

மண்பானை 

நீந்துது சிறு 

தலைப்பிரட்டை ..


தொடங்கியது மழைக்காலம் !!

உன் இதழில் போதை பருகவா

டாஸ்மாக் போறத நிறுத்தவா 

உன் இதழில் போதை பருகவா 

ஊருக்குள் நீ செம கட்டையே ...

உன்னை கண்டா நானும் மட்டையே 


பொன்னாரம் சூடும்  பூவொன்று 

இந்நேரம் மார்பில் ஆடாதா  

செந்தூரம் சூடும் பூவொன்று 

நெஞ்சோரம்  ராகம் பாடாதா ! 


உள்ளங்கையில் உலகம் 

எட்டி நிற்கும் சொந்தம் 

வீடு தேடி வரும் வசதி 

மனதில் கூடி வரும் அசதி 


கவசமே பாடினாலும் 

கவசமே போட்டாலும் 

விதிவசமே வாழ்வு 

காதல் நோயில !!

அரசாங்கமும் 

எச்சரிக்கை செய்யல ..

காதல் எதிர்ப்பு சக்தியும் 

எனக்கு இல்ல ...

லவ் ஷீல்டோ லவ் வாக்ஸினோ 

நானும் போடல ...

ஒன்ன பாத்தபின் நானும் 

காதல் நோயில !!

Tuesday, April 13, 2021

கொரோனாசூடி

அச்சம் தவிர்
ஆவி பிடி
இஞ்சி சேர் 

சித்திரை

வந்திடு சிங்கார சித்திரையே
கொடுமைக்கு கொடு மாத்திரையே 
துடைத்திடு  விழியின் நீர்த்திரையே     
நீக்கிடு எங்கள்  முகத்திரையே
போகணும் பள்ளிக்கு யாத்திரையே
படைக்கணும் சாதனை முத்திரையே
தந்திடு நிம்மதி நித்திரையே

சித்திரை


பச்சை சேலை கட்டி 
கண்ணில் வண்ணம் தீட்டி 
காதல் எண்ணம் கூட்டி
சித்திரை மகளே வா 
புன்னகை பூவாய் வா

மனதின் காயங்கள் ஆற்றிட 
மனிதம் ஏற்றம் பெற்றிட 
புவியின் வளங்கள் காத்திட 
சித்திரை மகளே வா 
இனிய வேனலாய் வா 

வேதனை சாதனை ஆகிட
ஓங்கிய சிந்தனை ஊறிட 
துன்பத்தை நிந்தனை செய்திட 
சித்திரை மகளே வா 
சீரிய துணையாய் வா 

ஏழ்மையை சருகாய் எரிக்க
தீமையை  காலால் உதைக்க 
கயமைகள் கலங்கி ஓட 
சித்திரை மகளே வா 
சுழலும் புயலாய் வா 


Monday, April 12, 2021

எனக்கென்ன ஆச்சு

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

கூட்டத்தில் நானும் தனிமையில் 
தனிமையில் உந்தன் கனவினில் 
கனவினில் கண்ட இனிமையில் 
இனிக்குது காதல் இளமையில் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

பின்னிய கூந்தல் கலைக்கிறேன் 
கலைத்ததை மீண்டும் பின்னுறேன் 
பின்னும் உணர்வில் தவிக்கிறேன் 
தவிப்பில் எதையோ ரசிக்கிறேன் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

உந்தன் நினைவுகள் மூச்சிலே 
மூச்சை மறக்குமோ இதயமே 
இதயம் துடிப்பது கேட்குதே  
கேட்கும் பாடம் மறக்குதே  

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

என்னதான் ஆச்சு உயிருக்கு 
உயிரில் ஏதோ கலக்குது 
கலந்தது என்னை மயக்குது 
மயக்கத்தில் ஏதோ மாறுது

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

அடி எண்ணியே பாதம் நடக்குது
நடக்கையில் சேலையும் சிக்குது 
சிக்கின மனசும் தவிக்குது - இந்த 
தவிப்புதான் மனச  உருக்குது   

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

கல்லூரி பாடமும் புரியல 
புரிஞ்சதும் மனசுல நிக்கல 
நிக்குற நீயும் மனசுல 
மனச வாட்டுற தீயில   

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

ஒன்ன பாக்காம எனக்கும் பசிக்கல 
பசிக்குது சாப்புட பிடிக்கல 
பிடிச்சது எதுவும் பிடிக்கல  - உனக்கு  
புடிக்காம போனா நான் இல்ல 
 
எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

உந்தன் வார்த்தையே அறிவியல் 
அறிவில் நீயெந்தன் உயிரியல் 
உயிரில் ஏதோ மின்னியல் - அந்த  
மின்னியல் மாற்றுது என் இயல் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

மனசும் பித்தத்தில் அலையுதோ  
அலையும் நினைவுகள் அடங்குமோ   
அடங்காம போனா ஏங்குமோ  
ஏக்கத்தில் உசிரு வாடுமோ  

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு


அன்பு



சிக்கி முக்கி கல்லு ரெண்டு 
முட்டிக் கொண்டது 



பொன்னை உருக்கி வைத்த சிலையோ 
என்னை உருக்க வந்த கலையோ 

உயிரோடு உடலுக்கு உள்ள சொந்தம் 
உன்னோடு எனக்கும் அந்த பந்தம் 

Saturday, April 10, 2021

சொல்லுங்களேன்

 


பிரபஞ்சத்திற்கு 

எல்லையில்லை என்கிறீர்கள் 

தாயின் அன்பிற்கு 

ஏது எல்லை என்றும் 

கொஞ்சம் 

சொல்லுங்களேன் !!


தென்னங்கீற்றும் 

தென்றல்'காற்றும் 

சொல்லாத காதலையா 

நீங்கள் 

சொல்லிவிட போகிறீர்கள் !



======

நீ வரும் நாள்'திருநாளல்ல ..

நீ வரும் நாளெல்லாம் திருநாள் !!


பார்க்க மறுத்தால் 

கண்மணியாய் வருவேன் ...

நினைக்க மறந்தால் 

கனவாய் வருவேன் ...

கூட்டி செல்ல மறந்தால்  

நிழலாய் வருவேன் 

தோள் சாய மறுத்தால் 

தென்றலாய் வருவேன் 

உன்னை சுற்றி யாவும் நானே 

எப்படி மறுப்பாய் !!






சீண்டுகிறான் காமன் ...

 காதல் மழை பொழிகையில் 

நாணக்குடை எதற்கோ !


காதல் வழி சாலையில் 

வேகத்தடை எதற்கோ !


நீ பாராமுகமாய் இருந்தாலும் 

உன் வளையோசை அழைக்கிறதே !


நீ அணிந்த பின்பு 

அழகு போட்டி நடக்கிறது 

உன் கூந்தல் பூக்களுக்கும்  

தாவணி பூக்களுக்கும்! 


உன் பேரை சொல்லி 

அவ்வப்போது வந்து 

சீண்டுகிறான் காமன் ...

சேர்ந்து போர் தொடுக்கலாமா 

அவனிடம் !!


உன்னை காதலிக்கிறேன் 

என்கிறார்கள் ..

எனக்கல்லவா தெரியும் 

நான் காதலை காதலிக்கிறேன் 

என்று !!

Friday, April 9, 2021

கண்டா வர சொல்லுங்க

கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


கண்டா வர சொல்லுங்க 

கையோட கூட்டி வாங்க 


கேட்டுத்தான் வந்தாரய்யா ஓட்டு கேட்டுத்தான் வந்தாரய்யா 

கேட்டுத்தான் வந்தாரய்யா ஓட்டு கேட்டுத்தான் வந்தாரய்யா 

ஓட்டு வாங்கி ஜெயிச்ச மண்ணு காணாமத்தான் தவிக்குதிங்கு 


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


டீயெல்லாம் போட்டாரப்பா துணியெல்லாம் தொவச்சாரப்பா 

டீயெல்லாம் போட்டாரப்பா துணியெல்லாம் தொவச்சாரப்பா 

தோச சுட்டு தந்தாரப்பா 

பாசமுண்ணு நெனச்சோமப்பா


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


மழையில நொந்த போதும் கண்டதில்ல 

வெயில்ல வெந்த போதும் கண்டதில்ல 

ஓட்டு வாங்கி போனான் பாரு 

கேள்வி கேட்கத்தான் நாதியில்ல 


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

Thursday, April 8, 2021

அவள் காதலை சொன்னாள்

பூக்களும் என்னோடு நடக்கிறதே 
வானவில் கைகோர்த்து சிரிக்கிறதே 
வெண்ணிலா தோள்களை தழுவிடுதே 
பட்டாம்பூச்சியாய் இதயமும் பறக்கிறதே 

விழிகளில் ஜீவன் துடித்திடும் 
இமைகளும் சாமரம் வீசிடும் 
இரவுகள் அனலை வீசிடும் 
கனவுகள் பனியை பொழிந்திடும் 
மோகத்தில் என்னை கோர்க்கவா ...
மோனத்தில் என்னை சேர்க்கவா  
மேகமே தாகம் தீர்க்கவா (பூக்களும்)

நெஞ்சணை பஞ்சணை ஆகிடுமா 
வஞ்சனையின்றி சுகம் தருமா 
முத்தத்தில் சத்தமும் கேட்டிடுமா 
ரத்தத்தின் நாளமும் உடைந்திடுமா 
உன்னிடம் என்னை பூட்டவா 
உயிரினில் ராகம் மீட்டவா 
காதலின் உச்சத்தை காட்டவா (பூக்களும்)

கேட்பதில்லை

 கனவில் உன்னை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் ...

இரவே கொஞ்சம் நீண்டு விடு !


கூர்க்காக்களை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் 

இரவே சீக்கிரம் விடிந்து விடு !


என் நலமோ ..

பிறர் நலமோ ..

இறைவன் இரண்டையும் 

கேட்பதில்லை !!

பனிநீர் துளியே வாராய் !

 மாதவியை தேடும் கோவலனல்ல ..

மறந்து போகும் நளனுமல்ல ...

தீக்குளிக்க சொல்ல ராமனுமல்ல ...

கோபியர் கொஞ்சும் கண்ணனுமல்ல ...

இதயம் தேடும் காதலன் !



விண்ணும் முரசு கொட்டும் 

வானவில்லும் தோரணம் கட்டும் 

மண்ணும் வாசம் பெறும் 

சிறுபுல்லும் தாகம் அறும் 

மின்னல் ஒளியை தூவும் 

பனிநீர் துளியே வாராய் !

வாளாவிருந்தது ஏனோ ?

 அறியாமல் வரும் ஆபத்தை 

அனிச்சை செயலாய் 

அறிவிக்குமாம் மூளை ..

நீ வரும்போது மட்டும் 

வாளாவிருந்தது ஏனோ ?

எத்திசையில் எங்கே போவேன்

முகிலை பார்க்க போறேன் 

வானவில்லில் ஏறி போறேன் 

மலை முகட்டை பாக்க போறேன் 

தென்றல் தேரேறி போறேன் 

தொடுவானம் பாக்க போறேன் 

அலையில் ஏறி போறேன் 

பூ வாசம் தேடி போறேன் 

வண்டின் முதுகில் ஏறி போறேன் 

உன்னை பாக்க நானும் 

எத்திசையில் எங்கே போவேன் ?

இனிது

உந்தன் திருமுகம் காண்பது இனிது.

உந்தன் குறும்செய்தி படித்தல் இனிது.

உந்தன் கவின் மொழி கேட்டல் இனிது.

உந்தன் கனவில் மிதத்தல் இனிது .

உந்தன் மெய்ப்புறம் தீண்டல் இனிது.

உந்தன் அணைப்பில் கரைதல் இனிது.

உந்தன் அன்பில் என்னை அறிதல் இனிது.

Wednesday, April 7, 2021

அணில்

சுவரின் மேலே ஏறுது 
சுவருக்கு சுவர் தாவுது 
தண்ணீர் பைப்பில் ஏறுது
மொட்டை மாடியில் ஓடுது  

சின்ன சத்தம் கேட்டாலும் 
மரத்துக்கு தான் தாவுது 
துள்ளி ஓடும் அணிலுக்கும் 
மரமே துணைன்னு தெரியுது!!

இருள்

கருக்கொண்டது இருளில்
கல்லறையும் இருளில் 
ஆதியும் இருளே
அந்தமும் இருளே 
இருளே இயற்கை 
வெளிச்சம் செயற்கை 
இருளே நிரந்தரம் 
வெளிச்சம் சிலகாலம் 
புரியாமல் ஏனோ 
தேடுகிறோம்  விடியலை!!

அந்த பயணம்

நல்லுடை உடுத்த வேணும் 
அலங்காரம் செய்ய வேணும் 
பர்சில் பணமும் வேணும் 
பசித்திருந்தால் உணவு வேணும் 

போணுமேண்ணு

ஓடி ஓடி உற்ற செல்வம் 
ஒதுங்கி இருந்து பார்க்குமே 
கூடி கூடி கற்ற கல்வி 
தள்ளி இருந்து தவிக்குமே 
தேடி தேடி தின்ற உடம்பு 
வாடி சோர்ந்து போகுமே 
முடி நரைத்து அடி தளர்ந்து
மூப்பும் நோயும் சேருமே
வீடிருந்தும் உறவிருந்தும் 
விட்டு போக வேணுமே 
நாடி அவனை சரணடைந்தால் 
நற்கதியும் கிட்டுமே!!

மின்னலாய் பூவொன்று

 கருவிழி கண்மை 

என் ஆசையை எழுதுதே !

இரு இதழ் அமுதமெல்லாம் 

என்னை குடிக்குதே !

நித்திரையில் கனவுகள் 

என்னை எழுப்புதே !

தென்றலொன்று புயலாய் 

என்னை சுருட்டுதே !

மின்னலாய் பூவொன்று 

என்னை சாய்க்குதே !

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப்

 எனக்கு பிறகுதான் 

குருவி பிறந்ததா !

நான் பிறக்கும் வரை 

மயில் நடனம் ஆடவில்லையா !

நான் பிறக்கும் முன் ரோஜா 

பூக்கவில்லையா !

தென்றல் வீசவில்லையா !

நிலாதான் வானில் தவழவில்லையா !

முறைத்தாள் அவள் ...


எல்லாம் 

உன்னை படைக்கும் முன் 

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப் 

என்று அவளுக்கு  

எப்படி புரிய வைப்பேன் !

பாரதி நம்ம ஜாதிதானே !

 வேட்பாளர் 

தனது வாக்குறுதியை 

காசோலை போல் 

எழுதி தந்தாலென்ன !!


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

ஒரே மதம் 

ஒரே ஜாதி 

ஒரே இனம் 

ஒரே மொழி 

காதலிக்கலாமா !!


டாஸ்மாக்கை மூடி விட்டால் 

என்ன செய்வதென்று 

கலங்காதே தமிழா ..

பேஸ் புக் கமெண்ட் இருக்கு 

நல்ல வார்த்தைகளில் 

திட்டுவதற்கு !!!


தலைவரே!

என்ன திடீர்னு காக்கை குருவிக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கணும்னு பேசிக்கிட்டுருக்கீங்க ?

டேய் ... நேத்துதாண்டா படிச்சேன் ... காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதி சொல்லிருக்காராமே !

பாரதி நம்ம ஜாதிதானே !


புல்லின் தலையில் பனித்துளி !!

 


நான் மட்டுமல்ல 

இரவும் கண்ணீர் வடித்திருக்கிறது 

நீ இல்லாமல் ...

காலையில் 

புல்லின் தலையில் பனித்துளி !!


செடியில் பூத்ததென்னவோ 

வெள்ளை ரோஜாதான் ...

உன் அழகை கண்டு 

அதுவும் வெட்கத்தில் 

சிவந்து விட்டது  !!

உலகில் இத்தனை கவிதைகளா !!

 உலகிற்கு வெளிச்சம் தர 

நீங்கள் 

சூரியன் ஆக வேண்டியதில்லை ...

சூரியன் இல்லா நேரத்தில் 

விளக்காக இருங்கள் போதும் !!


நிழலின் அருமை 

வெயிலில் தெரியுமாம் ...

சூரியன் இன்றியும் 

உயிர்கள் வாழா !


தடுக்கி விழுந்து விட்டு 

தரை மீது கோபப்பட்டு 

தரையை அடித்து அழும் 

குழந்தை போல 

காதலில் விழுந்து ..

காதல் மீது கோபப்பட்டு 

கலங்கும் குழந்தை நான் !!


உன்னை 

ஒவ்வொரு முறை 

நினைக்கும்போதும் 

விண்ணில் ஒரு 

நட்சத்திரம் தோன்றுமென 

வரமளித்தான் இறைவன் ...

எண்ணி பார்த்துக்கொள் 

உன்னை எத்தனை முறை 

நினைத்தேன் என ....!!!


என் கவிதை தாள் 

காணாமல் போய் விட்டது ...

எனவே ... வாசிக்கிறேன் ...

பொங்கும் கடலலையை 

வீசும் தென்றலை 

மலை சிகரத்தை 

கொட்டும் அருவியை 

பறவை கூட்டத்தை 

சிலிர்க்கும் மழையை

மழலையின் சிரிப்பை 

தவழும் நிலவை  ..

உலகில் இத்தனை கவிதைகளா !!


வேறு யாராகவேனும் 

பிறந்திருக்கலாம் என்று 

நினைத்திருக்கிறாயா என்றாள் அவள் ...

ஒரு முறை 

பேருந்து பயணத்தில் 

பக்கத்து இருக்கை 

குழந்தையை 

நீ கொஞ்சியபோது 

நினைத்திருக்கிறேன் ...

அந்த குழந்தையாய் 

பிறந்திருக்க கூடாதா என்று !!


Tuesday, April 6, 2021

பக்தி

ஆன்மிகத்தோடு சேரும்போது 
உணவு பிரசாதமாகிறது 
பசி விரதமாகிறது 
நீர் தீர்த்தமாகிறது 
பாடல் கீர்த்தனையாகிறது 
செயல் சேவையாகிறது 
வேலை கர்மாவாகிறது 
பயணம் புனித யாத்திரையாகிறது 
வீடு ஆலயமாகிறது 
மனிதன் மகானாகிறான்!!

உன் நெனப்புனால

குறுக்க நெடுக்க 

நடந்து என்னை  

கிறங்க வச்சு 

தொலைச்சவளே ..


மண் பாத்து 

நடந்து எனக்கு 

மண்ணில் 

குழி பறிச்சவளே ...


பாத்ததெல்லாம் 

பாத்துபுட்டு 

பாக்கு வெட்டியா 

வெட்டியவளே ...


செஞ்சதெல்லாம் 

செஞ்சுபுட்டு 

மிஞ்சிக்கிட்டு 

போனவளே ...


கிறுக்கி 

உன் நெனப்புனால 

கிறுக்கா 

நானும் திரியுறேனே  ...


பக்கம் நீயும் 

இல்லாம 

பரிதவிச்சு 

உருகுறேனே ...


பாசாங்கு 

செய்யுறேன்னு 

பாவி மனச 

தேத்துறேண்டி ...


நடந்ததெல்லாம் 

நெனச்சு நானும் 

கனவிலயே 

கருகிறேண்டி ...


பாசம் வச்ச 

பய எனக்கு 

மோசம் செஞ்ச 

கொடும ஏண்டி 


வெவரம் கெட்ட 

பய எனக்கு  

வெவரமாத்தான் 

சொல்லேண்டி ..


பாடையிலே 

போகுமின்னே 

வெரசாத்தான் 

சொல்லிப்புடு ...


பசல நோயில 

போயிடுவேன் 

கொள்ளி நீயும் 

வச்சுப்புடு !!




உன் நினைவும்

இதயத்தை 

காற்று உரசும்போதெல்லாம் 

உன் நினைவும் 

உரசுகிறது !!


எத்தனை கவிதைகள் 

காகித வரியில் ...

அத்தனையும்  

டெபாசிட் இழந்தது 

உன் ஒரே ஒரு 

இதழ் வரியில்!


முனிவர்கள் 

பாக்கியம் செய்தவர்கள் ...

முக்தி பெற்றார்கள் ..

நீ பிறக்கும் முன்னே 

பிறந்ததினால் !!


நச்சரிக்குது உன் பேரை 

நினைவுகள் இன்று !

எச்சரிக்குது இதயம் அதனை 

காதல் என்று !


எப்பொழுதும் கனவில் 

கொஞ்சிடும் கிளியே 

சில பொழுதுகள் 

நிஜத்தில் தருவாயா ...

நிஜமென கொஞ்சம் 

கொஞ்சிட வருவாயா !!

Sunday, April 4, 2021

முருகா

[தேவதை இளம் தேவி என்னை சுற்றும் ஆவி]
பழனி மலை வேலா பார்வதி குமாரா 
பரமசிவன் மைந்தா ஞாலம் காக்க வா 
ஓம் என்று சொல்லி அழைத்தேன் 

ஆடிமாச புயல் காற்றில் 
ஐப்பசியின் அடை மழையில் 
மொத்த பயிருமே  கொத்தாய் அழுகுதே 
நீர் மறந்த நதிகளெல்லாம் 
மணல் மேடு ஆனதிங்கே 
மணற்கொள்ளையே தாங்கவில்லையே
காற்றும் காசுக்கே குடிநீரும் காசுக்கே 
அபயம் வேண்டி உன்னை தேட 
தரிசனமும் இங்கு காசுக்கே (பழனி)
 
பெட்ரோலென்ன டீசலென்ன 
ஃப்ரிட்ஜென்ன ஏசியென்ன 
புவியின் வெப்பமே எமனாய் ஆனதே
பிளாஸ்டிக்கும் கலப்படமும் 
கெமிக்கலான சாப்பாடும் 
பாசக்கயிற்றையே மெல்ல வீசுதே
சிலைகள் கடத்தியே சிலரின் வாழ்க்கையே 
உலகம் காக்க உன்னை தேட 
உந்தன் சிலையும் போலியே (பழனி)

பணம் காச கண்டுபுட்டா 
நேர்மையென்ன நியாயமென்ன
நீதிகளும்தான் வேஷம் போடுதே 
வீட்டிலுள்ள சொந்தங்களும் 
நாட்டிலுள்ள நட்புகளும் 
செல் போனிலே போலி நேசம் காட்டுதே
அன்பும் போஸ்டிலே ஆதரவும் ஷேரிலே 
தர்மம் வேண்டி உன்னை தேட 
எந்தன் பாட்டும் டிஜிட்டலே (பழனி)

காப்பி

மை விழியில் அபினை வைத்து
மயக்குகிற பேரழகி
மானினத்தை விஞ்சு கின்ற
காலெடுத்த நடையழகி!
கண்ணாடி மேனி கொண்ட
கஞ்சாச் சிரிப்பழகி!

கற்றைக் குழல் முடியோ
கரு மேகம் போலழகு
கை நீண்ட வெள்ளரியோ
கட்டழகின் வெளிப்பாடு
மெய்யெங்கும் மின்சார
எழில் கொண்ட பேரழகி!

வண்ணம் குலையாத
வட்டத் தட்டழகு
முன்னம் கூர் வைத்த
முத்தான மாரழகு
மாமுனியைக் கொல்லும்
மலை கொண்ட பேரழகு!

தேன் கொண்ட வாய்ச்சாரம்
தீராத மதுவழகு
சிரிக்கும் பல் வரிசை
மின்னல் போல் அழகு
பேசும் தேவதையோ
பித்தாக்கும் வான் நிலவு!

சிங்காரி சிற்றிடையோ
தேவனயே மயங்க வைக்கும்
கைகாரிப் பார்வையிலே
காந்தர்வன் வீழ்ந்திடுவான்
பளிங்கான மெய்யழகில்
படைத்தவனே அசந்திடுவான்!

பொன்னை உருக்கிச் சேர்த்த
சந்தனத்துச் சித்திரமோ
நிலவை அரைத்திணைத்த
கதிரவனின் ஒளி எழிலோ
என்ன சொல்ல பேரழகை
என் தமிழில் தேடுகின்றேன்!



===================///////


Saturday, April 3, 2021

வீசாதே

சிங்கள நங்கையின் 
இதழ் சுவைத்து 
கேரள நங்கையின்
கன்னம் வருடி 
தமிழ் மகளின் 
கூந்தல் கலைத்து 
ஆந்திர கிளிகளின்
மார்போடு விளையாடி 
இன்னமும் 
ஆசை தீராமல் 
வடக்கத்திகளை தேடும் 
தென் மேற்கு தென்றலே 
என் நாயகன் 
மேனியை தழுவாதே!!



Friday, April 2, 2021

எனை வென்றிடுமோ காலம் !

 கதிரவன் துயிலெழும் காலை 

பனிப்பூக்கள் முத்தமிடும் சோலை 

அதை பார்க்காமல் 

எனக்கென்ன வேலை !


வண்டுக்கு பூ விடும் தூது 

பொன்வண்டு தேனுண்ணும் போது 

அதை பார்க்காமல் 

சுகமிங்கு ஏது !


ஆம்பல் பூப்பூக்கும் ஏரி 

வாவென்று அழைக்கும் வரவேற்பு கூறி 

அதை பார்க்காமல் 

போவேனோ தேரில் ஏறி !


இயற்கை காட்டும் வண்ண ஜாலம் 

மனதிற்கு அழகூட்டும் கோலம்  

அதை என்றும் எழுதாமல் 

எனை வென்றிடுமோ காலம் !

எழுத ஆசை ...

 மரணத்தை பற்றி 

கவிதை ஒன்று 

அனுபவித்து 

எழுத ஆசை ...


ஸ்டேட்டஸில் 

எப்படி 

போடுவதென்றுதான் 

தெரியவில்லை !


பூத்திருப்பதால்

 பருவ காற்றில் 

சிறகு கட்டி 

பறக்க வைத்தாய் !


எய்ம்ஸ் செங்கல்லாய் 

காதலை நட்டு 

காக்க வைத்தாய் !


கவலையின்றி 

போயிருப்பேன் 

கனவில் மட்டும் 

காதலித்திருந்தால் ...


கல்லறையிலும் 

காத்திருப்பேன் 

நினைவில் 

என்றும் நீ 

பூத்திருப்பதால் !

விடியலுக்காக

 மௌனமும் மொழிதான் 

எனில் ...

எவ்வளவு நாள்தான் 

மௌன மொழியில் பேசுவாய் !


சுடு சொல்லாக இருந்தாலும் 

ஒரு சொல் சொல்லிவிடு !


உயிரோடு விளையாடும் 

வேதனையான விளையாட்டை 

எங்கே கற்றாய் !


ரோஜாவாக பூக்கவில்லை 

என் மனதில் 

வாடா மல்லியாய் 

பூத்து விட்டாய் !


தண்ணீராய் 

தென்பட வேண்டாம் ...

கானல் நீராய் கூட 

அவள் தென்படவில்லை !




உன்மீது 

அளவிற்கு'அதிகமாக அன்பு 

சேர்த்திருக்கிறேன் ...

வேண்டுமென்றால் 

சோதனையிட்டு பார் 

உன் இதயத்தை அனுப்பி !


பெப்ரவரி 14ல் 

என்னை நேசிப்பதாய் பொய் 

சொல்ல வேண்டாம் ...

ஏப்ரல் 1ல் 

என்னை வெறுப்பதாய் 

சொல்லிவிடு ...

பொய் என்று நம்பி 

வாழ்ந்து விட்டு போகிறேன் !



என்னை போலவே 

சூரியனும் காத்திருக்கிறான் 

விடியலுக்காக !

சரித்திரத்தை எழுது

 பழைய நினைவுகளை 

தூசி தட்டி பார்க்கிறேன் ...

அதிலும் உன் நெடி !!


புதிய நினைவுகளை 

சலித்து'பார்க்கிறேன் ...

அதிலும் உன் நெடி !!


===================

போதையின் கூட்டில் 

போலி இன்பம் எதற்கு !

இளமையின் கனவில் 

இனிய ராகம் பாடு !


 உயிரை சருகாக்கும்

மாயங்கள் எதற்கு !

உண்மையின் நிழலில் 

இன்பத்தை தேடு !

 

உடலை கரியாக்கும்

ஊதாரித்தனம் எதற்கு 

சத்தியத்தின் நிழலில் 

சரித்திரத்தை எழுது ! 

புதிய கீதை

மதங்களின் சடங்கு அறிவீர்  
மனிதத்தின் குரல்   கேட்பீரோ !
மனிதத்தை  அடகு வைத்து 
சமத்துவத்தை கொள்ள இயலுமோ !
இரத்தத்தில் குளிக்கும் மதம் 
அன்பில் என்று குளித்திடுமோ !
தேசம் கடந்த நேசத்தை 
மோசமின்றி உரைப்பீரோ!
நோய்த்தொற்றின் வேகத்தில் 
நேசமும் இங்கு பரவிடாதோ!
இறைவனுக்காக போராடுவோரே 
சத்தியமே இறைவன் என்று அறிவீரோ!

பின்னல்

விழி ஊசி கொண்டு 
தைத்தாள் காதல் செண்டு