Sunday, April 4, 2021

காப்பி

மை விழியில் அபினை வைத்து
மயக்குகிற பேரழகி
மானினத்தை விஞ்சு கின்ற
காலெடுத்த நடையழகி!
கண்ணாடி மேனி கொண்ட
கஞ்சாச் சிரிப்பழகி!

கற்றைக் குழல் முடியோ
கரு மேகம் போலழகு
கை நீண்ட வெள்ளரியோ
கட்டழகின் வெளிப்பாடு
மெய்யெங்கும் மின்சார
எழில் கொண்ட பேரழகி!

வண்ணம் குலையாத
வட்டத் தட்டழகு
முன்னம் கூர் வைத்த
முத்தான மாரழகு
மாமுனியைக் கொல்லும்
மலை கொண்ட பேரழகு!

தேன் கொண்ட வாய்ச்சாரம்
தீராத மதுவழகு
சிரிக்கும் பல் வரிசை
மின்னல் போல் அழகு
பேசும் தேவதையோ
பித்தாக்கும் வான் நிலவு!

சிங்காரி சிற்றிடையோ
தேவனயே மயங்க வைக்கும்
கைகாரிப் பார்வையிலே
காந்தர்வன் வீழ்ந்திடுவான்
பளிங்கான மெய்யழகில்
படைத்தவனே அசந்திடுவான்!

பொன்னை உருக்கிச் சேர்த்த
சந்தனத்துச் சித்திரமோ
நிலவை அரைத்திணைத்த
கதிரவனின் ஒளி எழிலோ
என்ன சொல்ல பேரழகை
என் தமிழில் தேடுகின்றேன்!



===================///////


No comments:

Post a Comment