Friday, December 16, 2022

நாளை

நாளைக்கென 
மிச்சமின்றி
எல்லாவற்றையும் 
சொல்லிவிட
துடிக்கிறேன்....

ஏதோ 
மிச்சம் வைத்து
பிரிகிறேன்!!
****************************

கால்பந்து


கால்களின் துடிப்பு 

நிறுத்தி வைக்கிறது 

இமைகளின் துடிப்பை !


பந்தை துரத்துவது 

கால்களா ...

துடிக்க மறந்த 

விழிகளா !


அனல் பறக்கிறது 

பச்சை புல்வெளிகளில் ...

அனல் மூட்டுகிறது 

இதய அறைகளில் !


களமாடுவதோ  கால்கள் 

கோப்பையோ கைகளுக்கு !


வலையில் விழுந்தால் கொண்டாட்டமே 

கால்பந்தும் காதலும் !


களத்தில் கற்ற கலைகள் 

        கனவு சுமக்கும் கைகள் 

காத்திருக்கும் வலைகள் 

        நனவாக்குமோ கால்கள்  

Thursday, December 1, 2022

கவிதை தேடும் கவிதை

 தேனி மலை காட்டுக்குள்ளே 

மூடி வைத்த இருட்டு போல 

சொல்லி வளர்த்த கூந்தலாலே 

நெஞ்சம் 

கந்தலாகி தவிக்கிறேனே !


சேலத்து மாம்பழம் போல் 

இனிக்கும் உன் பேச்சால 

கோலம் கெட்டு திரியுறேனே 

நெஞ்சம் 

விம்மலாகி தவிக்கிறேனே !


நாகை  கடல் மீனை போல 

அலையும் உன் கண்ணாலே 

சோகையாய் ஆனேனே 

நெஞ்சம் 

திசை மாறி தவிக்கிறேனே !


கோவளம் சவுக்கு போல 

வீசும் உன் பார்வையாலே 

மனவளம் கெட்டேனே 

நெஞ்சம் 

கதிகலங்கி தவிக்கிறேனே !


தென்பாண்டி மிளகு போல 

தகிக்கும் உன் நெனப்பால

மெழுகுபோல உருகுறேனே 

நெஞ்சம் 

உருகி தவிக்கிறேனே !


இருட்டுக்கடை அல்வாபோல 

இனிக்கும் உன் காதலால 

குருடனாய் ஆனேனே 

நெஞ்சம் 

இருளாகி தவிக்கிறேனே !


கொல்லிமலை கேணிக்குள்ள 

குளித்துவிட்டு வந்தாலும் 

அடங்காத அக்னியாய் 

நெஞ்சம் 

நீறாய் எரிய தவிக்கிறேனே !


உடன்குடி பனை பழங்கள்ளு 

குடத்தோடு குடித்தவன் போல் 

தடம் மாறி திரியுறேனே ...

நெஞ்சம் 

இடம் மாறி தவிக்கிறேனே !

பிறை நிலா

 பிறை நிலா 


அம்மா வெளியே வா அம்மா 

அழகாய் மேலே பாரம்மா 

சும்மா இருந்த சந்திரனை 

துண்டாய் வெட்டியது யாரம்மா !


வட்ட தோசை சுட்டது போல் 

பாங்காய் இருந்த சந்திரனை 

துட்ட சிறுவன் எவனோ 

தேங்காய் சில்லாய்தான் உடைத்தான் !


மட்டி பயலவன் வெட்டி விட்டு 

மீதி பாதியை என் செய்தான் 

கிட்ட மினுங்கும் கட்டியெல்லாம் 

வெட்டிய மிச்ச துண்டுகளோ !


===========================

தாய் இருந்தென்ன 

மனைவி மக்கள் இருந்தென்ன 

மாய உடல்தான் பெற்று 

மானிடனாய் வாழ்ந்துமென்ன 

ஓயாமல் செல்வம்தான் தேடி 

பேயாய் அலைந்துமென்ன 

வீணாய் வாழ்வுதனை தொலைத்தே 

தீயாய் வெந்து போவதென்ன !!


===========================


வெண்பனி போல 

ஓடிடும் மேகம் 

தேன்கனி தந்து 

தீர்க்காதோ தாகம் !


காடு மலை தாண்டி 

மேனி அழுக்கை போக்கி 

நடை போடும் நதியும்  

மன அழுக்கை போக்கதோ !


தேகம் தழுவி செல்லும் 

வயல் காட்டு தென்றல்தான் 

மோக மனதினை நீவி  

ஆன்ம தாகம் தீர்க்காதோ  !


====================

எங்கும் நிறைந்த 

இயற்கையின் வண்ணங்களே 

பொங்கும் நெஞ்சினில் 

துடிக்கும் எண்ணங்களே !


மற்றொரு பிறவி உண்டேல் 

மலராய் நதியாய் மலையாய் 

இயற்கையே உன்மடியில் 

உற்றிடும் வரம் பெற்றிடேனோ !


========================


படைத்தவன் தான் 

தான் படைத்தவற்றை 

மோத விட்டு பார்க்கிறான் 

யுத்தமென்ற ஒன்றை 

ஆசையோடுதான் படைத்து 

படைத்தவற்றை அழிக்கிறான் 


தேவனே  இன்னும் நீ வர

சுணங்குவதேன்   ...

தர்மம் தனையே காக்க 

தயங்குவதேன்


பூமிக்கும் ஒரு தாகம் 

இருப்பதால்தானோ 

வானில் படைத்தான் 

ஒரு மேகம் !


கல்லணை வற்றினாலும் 

நெஞ்சணையில் வற்றாது 

உன் நெனப்பு 

நம்ம நாட்டுல 

ஊழல்தான் போனாலும் 

விட்டு போகாது 

உன் நெனப்பு !

 

Tuesday, November 29, 2022

குளித்துவிட்டாயா

 சுட்டால் 

இறக்கத்தானே 

வேண்டும் ..!!


நீ மட்டும் 

சுட்டபின்பு 

எப்படி 

பிறந்தாய் !



வறுமை மட்டுமல்ல 

பணமும் 

ஆடைகளில் 

ஜன்னலை 

போடும் !



சுடுகாட்டிற்கு 

போனால் 

குளித்துவிட்டுதான் 

வீட்டிற்குள் 

நுழையலாமாம் ....


சுடுகாடு தாண்டி

வரும் காற்றே ...


குளித்துவிட்டாயா ! 


என் அண்ணனும் அக்காவும் 

தங்கையும் தம்பியும் 

அம்மாவும் நானும் 

பீடி சுற்றுகிறோம் ...

தந்தை 

ஊர் சுற்றுவதால் !


கோவில் இல்லா ஊரில் 

குடியிருக்க வேண்டாம் ...


கோவில் இல்லா 

ஊரைக்கூட 

கண்டுபிடித்துவிடலாம் 

டாஸ்மாக் இல்லா ஊரை 

எங்கே தேடுவேன் !



Saturday, November 19, 2022

இலையுதிர் காலம்

 உனது 

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நான் ஒரு பாத்திரமா ?

இல்லை ...

எனது  

வாழ்க்கை என்னும் 

நாடகத்தில் 

நீ  ஒரு பாத்திரமா ?

================

என்னை 

விழி மூடி 

மயங்க வைத்து 

விழித்திருந்தாய் ..


என்னை 

விழி மூட '

மறக்க வைத்து  

உறங்கி 

போனாய் !

================

தோளில் சாய்த்து 

அமைதி 

தந்தாய் ...


அமைதியாகி 

தோளில் 

சுமக்க 

வைத்தாய் !

===============

உன் மீது 

மலர்களை 

தூவவா ...


இல்லை 


நினைவுகளை 

தூவவா !

===============

நீ  

எனக்கு  

கிடைத்தது  

அழகான விபத்து  ...


நீ 

என்னை 

விட்டு போனது 

ஆபத்தான விபத்து !!

================

விழிகளில் 

தங்கிவிட்ட 

உனது பிம்பத்தை 

கண்ணீர் 

கரைக்காதா !

===============

மண்'

மேலே இருந்த 

புதையல் நீ ...


இதயத்தில் 

புதைந்தாய் !!

==============

உதிராத 

மலரில்லை ...

உதிராத

இலையில்லை ..

ஆனால் ...

நீ .....

மலரா!?

இலையா?

இல்லை ....

வேரா??

================

இலையுதிர் காலத்தை 

தந்தவன் ...

நினைவுகள் 

உதிரும் காலத்தை 

தராமலா 

போய் விடுவான் !

காத்திருக்கிறேன் ...

உனது

நினைவுதிர்காலத்தை

நோக்கி!!

===================

Sunday, November 13, 2022

மழை

 கார்மேக 

தோட்டத்தில் 

பூத்த 

கண்ணாடிப்பூ !


கார்மேக 

கடலில் 

விளைந்த 

கண்ணாடி 

முத்துக்கள் !


பூமா தேவிக்கு 

அடிக்கடி

குடமுழுக்கு !


மேக 

கிளை முறிந்து 

பூமியில் 

விழுந்த  

நீர்க்கனிகள் !


வான் மகள் 

சரியாக 

துவட்டவில்லையோ 

கார்மேக கூந்தலை ...

சொட்டுகிறதே !


எப்போது வருவாய் ...

எப்போது போவாய் 

என்றே தெரியவில்லை 

கைபேசி 

காதல் போல !


பயிரின் 

வித்தும் 

தேடுகிறதே 

மழையின் 

முத்தை !


விதைத்தவனின் 

பயிராய் 

விளைவாயோ ...

அல்லது 

கண்ணீராய் 

விளைவாயோ !


வருணனே...

மிதமாகவே 

வருவாய் ...

அப்போதுதானே 

விதைத்தவனுக்கு 

வருவாய் !


வருணனே ...

பூமாதேவிக்கு 

மிதமாக தூவு 

அர்ச்சனை அரிசியை ...

அதிகமானால் 

எங்களுக்கு 

வாய்க்கரிசியாகி 

விடப்போகிறது !


Saturday, November 5, 2022

வியர்வை கவிதைகள்


எந்த 

கொல்லனிடம் 

கற்றாய் ....

என் 

நெஞ்சுருக்கும் 

கலையை !!


வியர்க்கிறதென  

மரத்தடியில் 

ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்

மரத்திற்கு !!


நீ 

என்னை 

கடந்து சென்றவள் அல்ல 

கடத்தி சென்றவள் !


அகத்தியரை 

தேடிக்கொண்டிருக்கிறேன் 

உன்னை 

கவிதையில் வடிக்கும் 

தமிழை கற்க !!


காதலுக்கு 

சிறப்பு 

தாஜ்மஹாலா 

நீயா !!!


உனது 

சிணுங்கல்தான் 

தேசிய மொழியா 

காதலுக்கு !


உனது 

இதழ் தரும் 

அமுதமொன்று 

போதுமே ...

சாகா வரத்திற்கு !!

 

கூந்தலில்தானே 

சூடியிருக்கிறாய் 

பூக்களை ...

வண்டு ஏன் 

மொய்க்கிறது 

உனது 

முகத்தை !!


உனது 

பார்வை 

மலரும்போதெல்லாம் 

எனது பார்வை 

வண்ணத்து பூச்சியாகி 

விடுகிறது !


உன்னோடு

நிறைய

பேச முடிகிறது ...

நிறைவாகத்தான்

பேச முடியவில்லை !!


உனது

பொழுது பொக்கு

பார்வைக்கே 

பழுதாகி போனது

எனது வாழ்வு!


மண்ணுலகில்

கண்தானம்

செய்துவிட்டால் 

விண்ணுலகம் 

வரும்போது

உன்னை

எவ்வாறு காண்பேன் ...


எழுதுவதை 

நிறுத்திவிடுகிறேன்  ...

உனது நினைவுகள் 

எழுவதை 

நிறுத்தி விட்டால் !

தென்றல்

 

நீ இருக்கும் 

திசையிலிருந்து

வீசுவதல்லவா  

தென்றல் ..

அப்புறம் ஏன் 

தெற்கிலிருந்து 

வீசுவதை மட்டும் 

தென்றல் என்கிறார்கள் !


தென்றல் 

எவ்வளவு 

இதமாக இருக்கிறது 

என்கிறாய் ...

உன்னை தழுவி விட்டு 

தென்றலும் அதையே 

சொல்லி போகிறது !!


நீ நடந்த 

பாதையில் 

தினம் நடக்கிறேன் ...

கொஞ்சமாவது 

மிச்சமிருக்காதா 

நீ 

சுவாசித்த தென்றல் !

வாசலில் கவிதை


பூமித்தாய்க்கு 

வைரக்கிரீடம் ...

அவள் 

கோலம் !!


மார்கழியில் 

நீ 

கோலமிடுவதால்தானோ 

மாதங்களில் 

நான் மார்கழி 

என்றான் 

கண்ணன் !!?


விரல்களால் 

தரையிலும் 

விழிகளால் 

என் மீதும் 

கோலமிடுகிறாய் !!


உன் கோலத்தில்தான் 

கண்விழிக்கிறதா ...

சூரியன் !!?


உள்ளங்கையில் 

நீ 

வரைந்திருக்கும் 

மருதாணி கோலத்தை 

பொறாமையுடன் 

பார்க்கிறது 

தரையில் 

வரைந்த கோலம் !!


பூமியும் 

பூச்சூடிக்கொண்டது 

உனது 

கோலத்தால் !


பூமகள் மீது

ஏனிந்த கரிசனம்...

நீ 

கோலமிடுவாயென 

தினம் 

விண்மீன் புள்ளிகளை வைத்து 

வானமும்

காத்திருக்கிறதே !!


ரோஜாவுக்கு 

வருத்தம் ...

கோலத்தின் நடுவில் 

நீ 

பூசணிப்பூ 

வைத்தபிறகு 

பூசணிப்பூ 

பூக்களின் 

ராணியாகி விட்டதாம் !


உனது 

கோலத்தை 

ரசிக்கத்தானோ 

பனியாய் 

இறங்கி வருகிறது 

மேகம் !!?


வாசலில் 

போட்ட புள்ளிகளை 

இணைத்துவிட்டாய் ...

எனது 

நெஞ்சில் 

போட்ட புள்ளிகளை !!?


நீ

வரைவதெல்லாம் 

கவிதையா என 

என்னை 

எள்ளி நகையாடுகிறது 

நீ 

வரைந்த கோலமும்

உனது கோலமும் !!


Monday, October 31, 2022

போகிறாள் அவள்

நடு நெஞ்சில்
நங்கூரமிட்டு நிற்கும்
ஆசை கப்பலை 
பார்வை புயல்வீசி
சாய்த்துவிட்டு
ஏதுமறியாது
தென்றலாய் 
போகிறாள் அவள்

Sunday, September 11, 2022

கவிதை செய்கிறேன்

 தோசை கல்லில் 

ஊற்றி ஊற்றியே 

கருகி போகிறது ...

பல 

அம்மாக்களின் 

வாழ்வு !


நான் 

கவிதை 

செய்கிறேன் ...

நீ 

காதல் 

செய்வதால் !


=====================


ஒரே வார்த்தைகளுக்கு 

ஒரு நாள் 

ஒரு அர்த்தமும் ....

இன்னொரு நாள் 

இன்னொரு அர்த்தமும் 

வருமா என்ன ....?


உனது 

பழைய காதல் கடிதத்தை 

படித்து பார்த்தேன் !!



உன் நினைவு  

தீப்பெட்டியென 

தெரிந்திருந்தும் 

உரசி பார்க்கவே 

விரும்புகிறது  

எனது மனது  !!



பாவம் இறைவன் ...

உன்னை 

என்னிலிருந்து 

பிரிக்க முடிந்தவனுக்கு 

உன் நினைவுகளை 

என்னிலிருந்து 

பிரிக்கும் 

சக்தி இல்லை !!


மனச்சுவரெங்கும் 

ஆணியடித்து போனாய் ...

நானென்ன செய்வது 

உனது படங்களை 

மாட்டுவதன்றி !!


இமைகளை 

மூடித்தானே 

தூங்குகிறேன் 

எப்படி நுழைகிறது 

உனது நினைவு !!


தேடித்தேடி 

தொலைந்தே 

போனேன் !


திருப்பாவை 

பாடுவாளா என    

பெருமாளையும் 

திருவெம்பாவை 

பாடுவாளா என 

ஈசனையும் 

தினம் தினம்  

பூஜையறையில் 

பதை பதைக்க 

வைத்து விடுகிறாய் !!


இந்திய தேசத்தில் 

இருப்பவர்கள் எல்லாம் 

எனக்கு சகோதரிகள் ...

நீ என் 

காதல் தேசத்தில் 

அல்லவா 

இருக்கிறாய் !


தோலை நோக்கில் 

இருந்தாலும் 

தொல்லை நோக்காக 

அல்லவா இருக்கிறது 

உனது 

பார்வை !!


வாழ்க்கை 

ஆயிரம் காலத்து 

பயிரென்றால் 

உனது காதல் 

அதற்கு மழை !


இறைவன் படைத்த 

இயர்கையை 

ரசிக்கிறாய் ...

நானும் 

ரசிக்கிறேன் !


எதை நினைத்து 

நீ 

என்னை மறந்தாய் ...


எதை நினைத்து 

நான் 

உன்னை மறக்க !?

உண்மை கசக்கும்

 காதல் செடிக்கு 

நீரூற்றும் 

ஆசைகளடி ...

சொல்லாமல் 

தவிக்கும் 

இதயத்தின் 

ஓசைகளடி !


காதல் 

என்பது 

வெறும் 

வார்த்தையடி ...

மனதின் 

கனவுகள் எல்லாம் 

அதில் 

அடங்காதடி !


காரணமின்றி 

சிரிக்க 

வைத்த காதல் ...

காரணமின்றி 

அழவும் 

வைக்குதடி !


தூரத்தில் இருந்தும்  

எனை 

ஆட்சி 

செய்கிறாயடி ...

அருகில் 

இருந்தால் 

என்ன 

ஆவேனடி !


காதல் 

என்ற ஒன்றை மட்டும் 

காதலன்றி 

எதை கொண்டு 

நிறைப்பாயடி !


மறக்க 

முடியாத 

பல நாட்களை 

தந்த நீயும் ...

மறந்து விடாதா 

என

ஒரு நாளை 

ஏன் தந்தாயடி !


உண்மை கசக்கும்

என்ற தத்துவம்

உண்மையென்றால் ...

என் காதல்

உனக்கு கசப்பதில்

வியப்பேதடி ...


Sunday, August 21, 2022

ஆசைத்தெரு

 கோடை குளிரா, குளிரின் கோடையா 


சித்திரையும் 

தேடுகிறது 

நீ 

காதலால் விசிறி விட ...

மார்கழியும் 

தேடுகிறது 

நீ 

காதலால் போர்வை  இட ...


மிச்சமும் நீயே 


உன் 

கண்ணீரை துடைக்க 

ஒன்றே 

ஒன்று மட்டுமே 

மிச்சம் இருக்கிறது 

என்னிடம் ....

எனது காதல் !


காதல் அடகு கடை 


என் 

வாழ்வையே 

வட்டியாக 

கட்டி விட்டேன் ... 

திருப்பவே  முடியவில்லை 

அவள் மீது 

வைத்த பார்வையை கூட !


ஆசைத்தெரு 


எப்படி 

பெயர் வைத்தார்கள் 

நீ 

இருக்கும் தெருவிற்கு 

புத்தர் தெரு என்று ...

அந்த வீதியில் 

நுழைந்தால்தான் 

ஆசையே வருகிறது !


வைரப்புன்னகை 


சில்லறையை 

கொட்டியவர்கள் கூட 

அள்ளிகொண்டு போகிறார்கள் 

நீ எப்படி 

புன்னகையால் 

வைரங்களை சிதறவிட்டு 

அலட்சியமாக போகிறாய் !


காதல் லாக் 


என் 

இதயத்திற்கு எப்படி 

பேஸ்லாக் போட்டாய் 

உன்னை 

காணும்போதெல்லாம் 

தானாக 

திறந்து கொள்கிறதே !


கவிதையும் நீயும் 


நீ 

வந்தபோது 

வாழ்வு கிடைத்தது ...

நீ 

போனபோது 

கவிதை கிடைத்தது !


காதல் முக்தி 


வேத நூல்கள் 

சொல்கின்றன 

முக்தி பெற 

ஏழு ஜென்மம் வேண்டுமாம் ...

காதல் நூல் 

சொல்கிறது 

உன் பார்வை 

போதுமாம் !


காதல் மொழி 


நீ சொல்லால் 

சொல்வதைவிட 

காதலால் சொல்வது 

சட்டென்று 

புரிந்து விடுகிறது 


காதல் தவம் 


சில ஆண்டுகள் 

தவத்திற்கே 

வரம் தருவானாம் சிவன்....

ஜென்மங்களாய் 

செய்கிறேன் 

காதல் தவம் ...

என்ன தருவாய் !


காதல் இல்லத்து அரசி 


சமாதான படுத்தவே 

முடியவில்லை ...

அடம் பிடிக்கும் 

என் 

இதயத்தை ...

உன் வீட்டில் 

வசிக்கிறாளாமே 

அதன் இல்லத்தலைவி !


எதிலும் கவிதை 


உன் 

புன்னகை மட்டுமல்ல 

உன் 

முறைப்பு கூட 

கவிதையை தான் 

சிந்த விடுகிறது ...

நான் 

என்ன செய்ய !


காதல் கொள்ளை கூட்டம் 


பார்வை 

இதழ்கள் 

கொலுசொலி 

என்று .....

ஒரு 

கொள்ளை கூட்டத்தையே 

வைத்திருக்கிறாயே 

என்னை கொள்ளை அடிக்க !


அதிவேக வாகனம் 


காதல் 

என்ற வாகனத்தை 

மட்டும் அனுப்பு ...

நொடியில் 

வந்துவிடுகிறேன் ...

நீ 

எத்தனை 

மைல்களுக்கு 

அப்பால் இருந்தாலும் !


அம்மன் ஆறாட்டு 


அம்மன் 

தானே 

ஆறாடுமா என்ன !


காதலா கவிதையா 


பயமாகத்தான் 

இருக்கிறது ...

நீ ஓருவேளை 

என் 

காதலுக்கு 

சம்மதித்துவிட்டால் ..

கவிதை எழுதுவதை 

நிறுத்திவிடுவேனோ !


காதல் தும்மல் 


நேற்று மாலை 

கண்டபடி 

தும்மல் வந்ததென்றாள் ...

வேறொன்றுமில்லை 

நான்தான் 

உன்னை 

கண்டபடி 

நினைத்து கொண்டேன் !


அசுர காதல் 


காதலிக்கிறேன் 

என்று 

சொல்லும் முன்  ...

கொஞ்சம் யோசித்துவிடு ...

என் 

காதலை தாங்கும் சக்தி 

உன் 

பிஞ்சு இதயத்திற்கு 

உண்டா என்று !


கைராசி 


நீ 

பாகற்காய் தானே 

விதைத்தாய் ...

எப்படி 

முளைத்தது 

கரும்பு !


காதல் தலைப்பு 


சேலைக்கு 

தலைப்பு வைத்திருக்கிறாய் 

நீ ...

உனது 

சேலை மூடியிருக்கும் 

கவிதைக்கு 

தலைப்பு தேடி 

திணறி போகிறேன் 

நான் !


காதல் வளர்ச்சி 


நேற்றுதானே 

பிறந்தாய் ...

என் இதயத்தில் ...

அதற்குள் எப்படி 

வளர்ந்தாய் இப்படி !


காதல் எச்சரிக்கை 


ஒரு 

எச்சரிக்கை பலகை கூட 

இல்லையே 

உன் வீட்டருகில் ...

கவனம் 

காதலில் 

வீழ்ந்து விடுவீர்கள் !


காதல் விளையாட்டு 


சிரமப்பட்டு 

சேர்த்து வைக்கிறேன் 

என் 

இதயத்தை ...

சர்வ சாதாரணமாக 

சிறு பார்வையில் 

கலைத்து போட்டு 

விடுகிறாய் !


காதல் அழகி  


ரதி ஒன்றும் அழகில்லை 

என் 

காதலால் 

அலங்கரித்து பார் 

நீ 

ரதியை விட அழகு !


காதல் நிறக்கூடு 


எனது 

காதல் நிறக்கூட்டில் 

எட்டாவது வண்ணம் 

மட்டுமல்ல 

எட்டா வண்ணம் 

இருப்பதும் 

நீதான் !


மோகம் சுமக்கும் மேகம்

 மோகம் சுமக்கும் மேகம் 


என்னை தாண்டி 

உன் ஊருக்கு வரும் 

மேகங்கள் 

தண்ணீரை மட்டுமல்ல 

என் 

கனவுகளையும் 

சுமந்து வருகின்றன !


கரும்புக்கும் குறும்பு 


கரும்பு கடிக்கும்போது 

உதடு 

கடித்துவிட்டது 

என்றாள் அவள் ....

பின்னே ...

கரும்புக்கும் 

ஆசை இருக்காதா 

தன்னை விட இனிப்பான 

ஒன்றை கடிக்க !


யார் நிலா 


அங்கே  பார் நிலா 

என்று காட்டி 

சோறூட்டினாள் அவள் ...

வியந்து அவள் 

முகத்தையே 

பார்த்தது குழந்தை !


கையோடு கவிதை 


சிறு குழந்தை 

கைக்குள் பதுக்கும் 

மிட்டாய் போல 

இன்னமும்  பதுக்கி 

வைத்திருக்கிறேன் 

ஒரு அந்தி மாலையில் 

நீ கொடுத்த 

பறக்கும் முத்தத்தை !


காதல் விளக்கு 


நீ விளக்கேற்றியபின்னும் 

சந்தேகம் தீரவில்லை ...

விளக்கை ஏற்றியது 

உன் கை தீக்குச்சி ஒளியா...

இல்லை 

உன் விழியின் ஒளியா !


காதல் மாணவன் 


மாணவனாகவே 

இருந்து விட்டு போகிறேன் ...

உன் விழி அசைவிலும் 

கொலுசொலியிலும் 

காதலை 

கற்றுக்கொள்ளும் 

மாணவனாகவே !



Thursday, August 18, 2022

வயல் காட்டு கவிதைகள்


கரும்பு காட்டு கவிதைகள்


உன் 

உயிரின் 

நிழலாய் 

நான் 


என் 

கவிதைகள் 

ஒவ்வொன்றும் 

அனாதையாகவே 

பிறக்கின்றன 

நீ இல்லாமல் !



நீயில்லா ஞாயிறு 

திங்கள் இல்லா வானமாய் 



என்னை 

சுற்றி வலை கட்டி 

ரசிக்கும் 

காதல் சிலந்தி 



தொலைந்துதான் 

போயிருக்கிறது 

என்று 

சமாதான படுத்தி கொள்கிறேன் 

மரணித்த 

என் காதலை எண்ணி 


சில காலமே ஆனாலும் 

பொய்யே ஆனாலும் 

நீ காட்டிய பிரியம் 

பத்திரமாகவே 

இருக்கிறது 

என்னிடம் ...

செல்ல குழந்தையாய் !


சிறுகதையாய் 

வாழ்வில் 

நீ வந்தாய் ...

தொடர்கதையாய் 

உன் 

நினைவுகள் !

Monday, August 8, 2022

நதிக்கரை ஞாபகங்கள்


மலை முகட்டில் 

பிறந்து 

அன்னையின் 

காலடி காண 

அடிவாரம் 

தேடி வந்தாயோ !


ஆளில்லா 

காட்டில் 

எதற்கு இந்த 

கானக கச்சேரி !


எங்கே 

கற்றுக்கொண்டாய் ...

கூழாங்கல்லை

பட்டை தீட்டும் 

வித்தையை !


பொன்னி 

நீ ஆனதாலோ 

உன் கரையில் 

பொன்னிற மணல்கள் !


நீ 

மட்டும் இல்லையென்றால் 

சருகை 

குவித்துவிடுவான்

கனல் கக்கும் 

சூரியன்  !


பூமிப்பெண்ணுக்கு  

நரம்பாய் 

நீ ஓடுவதாலோ 

தினம் சிரிக்கிறாள் 

புது பெண்ணாய்!


ஊரோடு

நீ(ர்) ஓடினால் 

ஏரோடு சிறக்கும் 

வயல் ...

சேறோடு சிரிக்கும் 

நாத்து ...

தாரோடு சிறக்கும் 

வாழை !


ஒவ்வொரு 

மாநிலமும் சொல்கிறது 

நீ 

தங்களுக்கென்று ...

நீயேன் ஓடுகிறாய் 

கடலில் 

சங்கமிக்க !


ஓடும் வரைதான் 

நீ பரிசுத்தம் ...

நின்று விட்டால் 

நீயும் சாக்கடையே !


கண்விரித்து பார்த்தேன் 

கா...விரியை ....

கவித்துளிகள் விரிந்தன 

இதய வானில் !


கானம் பாடி 

தொண்டை வற்றி 

குயிலொன்று  வருகிறது 

தாகம் தீர்க்க !

அதன் தாகத்தோடு 

தீர்த்துவிட்டு போ 

எனது 

கவிதை தாகத்தையும் !


Sunday, July 31, 2022

வாக்கு

வாக்கு
செலுத்தியவனை
சாவடிப்பதால்
அந்த பெயரோ

===================

ஆசையே 
துன்பத்துக்கு காரணம் 
என்றாய் ...

ஆசையை 
விட்டு விட வேண்டும் 
என்று நினைப்பதும் 
என்பதும் 
ஒரு ஆசைதானே ...

Thursday, July 14, 2022

ஆசை கொடி

 உள்ளத்தில் 

பல எண்ண கோட்டைகளை 

கட்டுகிறேன் ...

அந்த கோட்டைகளில் 

ஆசை கொடிகளை 

ஏற்றுகிறேன் 

Saturday, July 9, 2022

பொன்னியின் செல்வன்


பூங்குழலியும் சேந்தன் அமுதனும்  


அலைக்கடலும் ஓய்ந்திருக்க 

அகக்கடல்தான் பொங்குவதேன் 

நிலமகளும் துயிலுகையில் 

நெஞ்சகம்தான் பதைப்பதுமேன்'


வானகமும் நானிலமும் 

மோனமதில் ஆழ்ந்திருக்க 

மான் விழியாள் பெண்ணொருத்தி 

மனதில் புயல் அடிப்பதுமேன் 


வாரிதியும் அடங்கி நிற்கும் 

மாருதமும் தவழ்ந்து வரும் 

காரிகையாள் உளந்தனிலே 

காற்று சுழன்றடிப்பதுமேன் 


இடி இடித்து எண் திசையும் 

வெடி படும் அவ்வேளையிலே 

நடன கலை வல்லவர்போல் 

மனம் நாட்டியம்தான் ஆடுவதேன் 


வானதியும் அருள்மொழி வர்மனும் 


வேதனை செய்திடும் வெண்ணிலவில் 

வீணன் எவன் குழலூதுகிறான் 

நாதன் இலா இந்த பேதை தன்னை 

நலிந்திடுதல் என்ன புண்ணியமோ 


வானமும் வையமும் இன்புறவே ஐயன் 

வாய்மடுத்தூதும் குழலிசைதான் 

மானே உன்னை வருத்திடுமோ இந்த 

மானிலம் காணா புதுமையன்றோ 


வந்திய தேவனும் மணிமேகலையும் 


இனிய புனல் அருவிதவழ் 

இன்பமலை சாரலிலே 

கனிகுலவும் மரநிழலில் 

கரம் பிடித்து உகந்ததெல்லாம் 

கனவுதானோடி 

சகியே 

கனவுதானோடி


புன்னை மர சோலையிலே 

பொன்னொளிரும் மாலையிலே 

என்னை வர சொல்லி அவர் 

கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம் 

சொப்பனந்தானோடி 

அந்த 

அற்புதம் பொய்யோடி 


கட்டுக்காவல் தான் கடந்து 

கள்ளரை போல் மெல்ல வந்து 

மட்டில்லா காதலுடன் 

கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் 

நிகழ்ந்ததுண்டொடி 

நாங்கள் 

மகிழ்ந்ததுண்டோடி 


வந்திய தேவனும் குந்தவையும் 


வான சுடர்கள் எல்லாம் 

மானே உந்தனை கண்டு 

மேனி சிலிர்க்குதடி 

மெய் மறந்து நிற்குதடி 


தேனோ உந்தன் குரல்தான் 

தென்றலோ உன் வாய் மொழிகள் 

மீனொத்த விழி மலர்கள் 

வெறி மயக்கம் தருவதேனோ 


ஆதித்த கரிகாலனும் நந்தினியும்


ஆடும் திருகை

அரைச்சுற்று வருமுன்னே

ஓடும் எண்ணம் ஒரு கோடி

காலப்போக்கில் 

காயங்கள் ஆறுமோ 

நெஞ்சின் காயங்களுக்கு 

அஞ்சனமும் உண்டோ 


நிலவில் எரிமலையும் வெடித்ததோ 

பூவென வந்தது நெருப்போ 

உறவுகளின் சிக்கலில்

வாழ்வே சிக்கலானதோ ..


விழிகளில் தெறிப்பது மோகமோ

பழி தீர்க்கும் கரு நாகமோ

உதடுகள் வீசுவது சொல்லின் கலையோ

உயிர் குடிக்கும் சதி வலையோ


சுந்தர சோழன் மந்தாகினி 


குன்றெறிந்து குலம் காத்த 

குமரன் வந்து 

காவானோ தோழி !

மன்றமும் பொதியிலும் 

மகிழ்ந்தே விளங்குவான் 

மலையிடை பொழிலிடை 

மலர்ந்தே வாழ்பவன் 

இன்றிங்கு வந்தெனக்கு 

ஆறுதல் கூறியே 

இடர் ஒழித்து 

இனிமை கூட்டுவானோ தோழி!


சோர்வு கொள்ளாதே மனமே - உன் 

ஆர்வமெல்லாம் ஒரு நாள் பூரணமாகும் 

காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர் 

காலை மலர்தலும் கண்டனை அன்றோ 

தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும் 

அளிக்குலம் களிக்கும் அருணனும் உதிப்பான் 

சோர்வு கொள்ளாதே மனமே!


புன்னை மரத்தில் அமர்ந்த 

அன்னத்தை கண்டு 

வெண்மதிதான் 

உதித்ததோவென 

மலர்ந்ததோ 

ஆம்பல் மலர் ! 


Sunday, July 3, 2022

மீண்டும் ஒரு முறை

கண்ட காட்சிகள் எல்லாம் 
கண்முன் மீண்டும் விரியுமோ !
கண்டதில் நிஜமெது நிழலெது 
மனமது உண்மை உணருமோ !

தோளில் புத்தகம் சுமந்து 
சிலிர்க்கும் மழையில் நனைவேனோ !
தோளோடு தோளாய் வரும் 
தோழனின் சேட்டையில் சிரிப்பேனோ !

கந்தலான கால் சட்டையணிந்த 
தோழனுக்கு நகைப்பூட்டி மகிழ்வேனோ 
கசங்கிய தாவணி தோழியின் 
சிறு முறைப்பை நகைப்பாய் கடப்பேனோ !

அன்பாய் அதட்டும் ஆசிரியரை 
பள்ளியறையில் காண்பேனோ !
கசப்பான அறிவுரைகள் இன்று 
தேனாய் இனிப்பதை சொல்வேனோ !

ஆல காலனின் நந்தவனத்தில் 
அந்தி சாயும் வேளையில் சேர்வேனோ !
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி 
மனமகிழ்ந்து மெய் தளர்வேனோ !

இளவேனில் வீசும்  சித்திரையில் 
வயல் வரப்பில் பாடி நடப்பேனோ !
இளங்காற்றில் தள்ளாடும் 
கதிர் கண்டு நானும் ரசிப்பேனோ !

வயலறுத்து சிறு கட்டு தான் சுமந்து 
கை வலிக்க களம் கொண்டு சேர்ப்பேனோ !
போரடிக்கும் காளையின் பின்னே 
கால் வலிக்க நடந்து களைப்பேனோ !

துள்ளி விளையாடும் கன்றுடன் 
துள்ளி நானும் களித்திடுவேனோ !
எள்ளி நகையாடும் பெரிசுகளின் 
கள்ளமில்லா உள்ளத்தில் கரைவேனோ !

பயமறியா சிறு பாலகனாய் 
ஊர்குளத்தில் நீராடி களிப்பேனோ !
திசையறியா சிறு குருவியாய் 
ஊர் சுற்றி பொழுதை தொலைப்பேனோ !

புதுத்துணியும்தான் வாங்கி 
தையல் கடையில் காத்திருப்பேனோ !
வெடிக்காத வெடிகளை சேர்த்து 
நெருப்போடு விளையாடி களிப்பேனோ !

கார்த்திகையில் எரியும் 
சொக்கப்பனையின் ஒளியில் உறைவேனோ!
காவிலும் கோவில் விழாவிலும் 
சொக்கும் நாடகத்தில் கரைவேனோ  !

நிஜமாய் நின்றவர்களை 
நிழலெனவாவது காண்பேனோ !
அவர்கள் அன்பிற்கு விலையாய் 
எதைத்தான் நானும் கொடுப்பேனோ !

நடந்த வழியில் மீண்டும் 
ஒரு முறை நடந்திடுவேனோ !
இரு விழியில் கண்டதை மீண்டும் 
ஒரு முறை காண்பேனோ  !




Saturday, July 2, 2022

நிறைவு

பட்டினியோடிருந்தும்
பாடல்கள் எழுதி
தமிழுக்கு
விருந்து வைத்த பாரதி

இலவசம்தான்
லைப்ரரி
ஆளில்லை ...
காசின்றி பொருளில்லை
டாஸ்மாக்கில்
கூட்டம் தாங்கவில்லை 

பணமாகும்
காகிதமும் 
செல்லாதாகும் ஒரு நாள்
மதிப்பை இழப்பதில்லை 
புத்தகமாகும்
காகிதம்

முப்பதாயிரம் கொடுத்து
ஏசி வாங்கி
வீட்டை குளிர்விக்கும்
மனிதனுக்கு தெரியவில்லை
முப்பது ரூபாயில்
மரம் நட்டு
பூமியை 
குளிர்விக்கலாமென்று





Wednesday, June 29, 2022

ரகசிய பரிசு

சாவிகளோடு 
அனுப்பி விட்டான் ...
திறப்பதற்கு 
கதவை காணோம் ...
சுவர் அல்லவா 
இருக்கிறது ...

பூக்கூடைதான் 
வைத்திருக்கிறேன் ...
ஆனால் ...
முட்களைத்தான் 
போட்டுவிட்டு 
செல்கிறார்கள் ...

வாலறுந்த பட்டம் 
கேள்விப்பட்டிருக்கிறேன் ...
இதென்ன 
என் பட்டம் 
தலை அறுந்து 
தள்ளாடுகிறது ...

எனது 
நம்பிக்கை படிக்கட்டுகள் 
பாசி பிடித்து 
வழுக்குகின்றன ...

ஆனந்தமாய் 
நீந்த முயன்ற போதுதான் 
தெரிந்தது ...
அது 
தண்ணீர் கடலல்ல 
கண்ணீர் கடல் என்று ..

எதிரில் நிற்பது 
எதிர் காலமா ...
எதிரி காலமா ...

ஆன்மா என்னும் புல்லிற்கு
நான் 
ஊற்றிக்கொண்டிருப்பது '
பாவ நீரா ...
புண்ணிய நீரா ..

இறுதி ஊர்வலம் 
உயிருக்கா ...
உடலுக்கா ...

கட்டணமில்லா பயணம் 
என்றுதானே 
சொன்னார்கள் ...
ஏன் சோதிக்கிறான் 
எனது 
பாவ சீட்டையும் 
புண்ணிய சீட்டையும் ..

செல்லும் தூரம் 
அறியாமல் 
ஒரு 
ஓட்ட பந்தயம் ...

யாரோ சொன்னார்கள் 
பந்தயத்தின் முடிவில் 
எல்லோருக்கும் ...
பரிசு நிச்சயமாம் 
என்ன பரிசு 
என்பது மட்டும் ரகசியமாம் !

Sunday, June 19, 2022

கடவுள் 
காப்பாற்றுகிறாரோ இல்லையோ ...
பலரை காப்பாற்றுகிறது 
கோவில் 
உண்டியல் பணம் !

பேச்சடங்கும் நேரத்தில் 
என்னென்ன 
பேச நினைத்தாயோ ...
மூச்சடங்கும் நேரத்தில்
என்னென்ன
நினைவுகள் கொண்டாயோ ..
பேச்சிலும் மூச்சிலும்
கலந்து போன 
உன் நினைவுகளை
எந்த அக்னியில் எரிப்பேனோ!

இது மரண பூமி

நேரத்தை 
மட்டுமல்ல 
உயிர்களையும் அல்லவா 
துரத்திக்கொண்டு 
ஓடுகிறது 
கடிகார முட்கள் ..

உன் கை பட்ட 
மலர் போல 
மணம் தருவது எதுவோ ...
உன் கை பட்ட 
உணவு போல 
சுவை  தருவது எதுவோ ...

எல்லாம் 
வேண்டுமென்று சொல்ல 
பலருண்டு  இங்கு ...
என்னைத்தவிர 
எதுவும் 
வேண்டாமென்று சொல்ல 
உன்னையன்றி யாருண்டு !

எட்ட முடியா 
நட்சத்திரமாகி 
உயர்ந்திருக்கிறது 
உனது பாசக்கோடு ...

என்னை விட்டு 
தனியாக 
போக மாட்டாயே எங்கும் 
என்ன பசப்பு வார்த்தைகள் 
சொல்லி மயக்கி 
அழைத்து போனான் அவன்  !

எப்படி 
பிடித்துப்போனது 
உனக்கு 
எனது பாச கயிறை விட 
அவனது 
மோசக்கயிறை !

ஆன்மாவின் நிழலாய் 
அறம் தொடரும் என்றால் 
நீ செய்த அறம் 
அன்பல்லவா !

உனது 
அன்பிற்கும் அறத்திற்கும் 
ஈடான சிம்மாசனம் 
இல்லையே குபேரனிடத்திலும் ..
என்ன செய்வான் அவன் !

பகுத்தறிவு பகுத்தறிவு
என்று கூவும் யாரேனும் 
பகுத்து அறிந்து 
சொல்ல வல்லரோ 
நீ 
சென்ற வழியை !

சிலது நடக்கலாம் 
சிலது பொய்த்து போகலாம் 
நடந்தாலும் 
பொய்த்தாலும் 
கனவுகளுக்கு 
முற்று புள்ளி 
வைப்பவன் அவன் !

இந்த வலிக்கு 
நிவாரணத்தை 
யாராலும் 
தர இயலாது ...
அவனாலும் !

யார் சொன்னது 
இது 
ஆன்மீக பூமி 
திராவிட பூமியென்று 
இது தான் வளர்த்த உடலை 
தானே விழுங்கும் 
மரண பூமி !

Saturday, June 18, 2022

காலதேவனின் கடைசி பாடம்


நீ 
கன்னத்தில் வைத்த
திருஷ்டி பொட்டு 
சொல்லியது 
நான் 
எவ்வளவு அழகென்று !

செடிகள் 
கொடுத்து வைத்தவை ...
காய்ந்த மலர்களை 
உதிர்த்துவிட்டு 
எவ்வளவு 
ஆனந்தமாக இருக்கின்றன !

வாங்கிய சம்பளம் 
வசதியை தந்தது ...
உன் 
புடவை மடிப்பு 
காசல்லவா 
சந்தோஷத்தை தந்தது ! 

சிந்தாமல் சாப்பிட 
தெரியும் எனக்கு ...
இருந்தும் 
சிந்தியே சாப்பிடுகிறேன் ..
எங்காவது ஒலிக்காதா 
சிந்தாமல் சாப்பிடு 
என்று ஒரு குரல் !

வளர்பிறையாய் 
நான் வளர ...
தேய் பிறையாய் 
தேய்ந்தாய் நீ !

கட்டை வண்டிக்கும் 
காசின்றி 
கால்களால் சுமந்து 
ஊனமாய் போனாய் !

அணைந்து போன 
கலங்கரை விளக்காய் நீ ...
தடுமாறும் 
மாலுமியாய் நான் !

எப்படி 
எப்படியெல்லாமோ 
மாற்றி மாற்றி 
போட்டு பார்த்தேன் ...
உன் அன்பு கணக்கை 
இன்பினிட்டி என்றே 
சொல்கிறது !

இன்னமும் 
திகட்டவில்லையே 
எனக்கு 
நீ 
காட்டிய அன்பு ...
உனக்கு 
திகட்டி விட்டதோ !

நேற்று வரை 
உன் 
அன்பெனும் சொத்தால் 
கோடீஸ்வரனாக இருந்தவன் 
திடீரென்று 
ஏழையாகி விட்டேன் !

செலுலமாக
அதட்டும் 
அம்மாக்களை 
காணும்போது 
ஏங்கித்தான் 
போகிறது மனது !

முதல் மொழியை 
சொல்லித்தந்த 
உனக்கு 
விடை கொடுக்க 
மொழியில்லையே 
என்னிடம் !

வரிகளில் 
வலிகளை 
இறக்கி வைக்க 
முடியாமல் 
மொழியும் 
தவிக்கிறது !

எதை சாப்பிடுவதென்று
தெரியவில்லை ...
உன் எண்ணங்களை 
ஜீரணிக்க !

முகவரியின்றி
கரைந்து 
போனாய் ...
தேடி அலைகிறது 
நினைவுகள் !

உன் உயிரை 
கட்டி இழுத்த 
காலதேவனுக்கு 
உன் நினைவுகளை 
கட்டி இழுக்க 
சக்தி இல்லாமல் 
போயிற்று !

சொர்க்கத்துக்கு 
உன்னை 
அழைத்து சென்றவன் 
என்னை 
நரகத்தில் அல்லவா 
போட்டு விட்டான் !

காலதேவன் நடத்திய 
கடைசி பாடத்தில் 
நீ வென்று விட்டாய் ...
பரீட்சை எழுதாமலே 
நான் 
தோற்று விட்டேன் !

Tuesday, June 14, 2022

காகிதத்தில் சிக்காத கவிதை

நான் உனக்கு 
கடவுள் கொடுத்த 
வரமென்றாய்  ...
நீயன்றோ எனக்கு 
கடவுள் கொடுத்த 
வரம் ...!

உனக்கு 
வயதான பின்பும் 
உனது 
அன்பு  மட்டும் 
இளமையாய் !

அன்பில் அழகையும் 
கோபத்தில் பாசத்தையும் 
காட்டும் 
வித்தை அறிந்தவள் 
நீ !

மூன்றடியால் 
உலகளந்தவன் 
அளந்திடுவானோ 
உனது 
பாசத்தை !

பாசத்தின் தேசத்திற்கு 
நீ மகாராணி ...
உன் 
அன்பு தேசத்திற்கு 
நான் இளவரசன் !

எனது  
அறியாமைக்கும் 
சுட்டித்தனம் 
என்று பேரிட்டவள் நீ !

நீ 
என் பசியறிந்தவள் 
மட்டுமல்ல 
தன் 
பசி மறந்தவள் !

இன்னமும் 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
நீ 
பயமுறுத்தி சோறூட்டிய 
பூச்சாண்டியை !

என் 
விரல் நுனி காயத்திற்கே 
இதயம் 
காயம் பட்டு 
துடித்தவள் நீ ...
இப்போது
இதயம் காயம்பட்டு 
துடிக்கிறேன் நான் ... !

தேவதை ஒன்று
தன் குழந்தைக்கு
தன்னைத்தான்
காட்டி சோறூட்டுகிறது
என
தம்பட்டம் அடித்து
திரிந்தது நிலா!

இன்று
சோறிருக்கிறது ...
நிலாவும் இருக்கிறது ...
காட்டி ஊட்ட
என்னைப்போல்
நாளும் உன்னை
தேடுகிறது
நிலா!

நீ 
நடை பழக்கிய 
நடை வண்டி
நடை தளர்ந்து
அனாதையாய் நிற்கிறது
வாசலில்!

உன் தூளியில்
உறங்கியபோது என்னை  
அணைத்து கொண்ட நித்திரை  
இப்போது 
தள்ளி நின்று 
பரிகசிக்கிறது 
லட்சத்தில்  
கட்டிய என் வீட்டில் !

கடல் நீரை 
கடன் வாங்கி 
அழுதாலும் 
தீருமோ இந்த துன்பம் !

கருவறையில் 
நீ தந்த நிம்மதியை  
இனி  
கல்லறையில்தான் 
பெறுவேனோ !
காகிதத்தில் 
சிக்காத 
கவிதை உன்னை 
இனி என்று காண்பேனோ !

Wednesday, June 8, 2022

போதி மரத்து பித்தன்

உலக அதிசயங்களில் 
சேர்க்கப்படாத
நிரந்தர அதிசயம் நீ !

நான் உணவு உண்ண 
நீ 
பசியை உண்டிருக்கிறாய் !

உனது 
இதய கடிகாரத்திற்கு 
மட்டுமே தெரியும் 
நான் 
தூங்கும் நேரமும் ...
விழிக்கும் நேரமும் !

ஆத்தி சூடி 
படிக்கும்முன் 
அன்பின் சுவடியை 
படித்து காட்டினாய் !

நான் 
அறிவினை சுமக்க ...
என்னையும் 
புத்தகங்களையும் 
பள்ளிக்கு 
சுமந்தாய் !

ஏதோ ஒரு போட்டியில் 
எனக்கு கிடைத்த 
நெகிழி கோப்பையை ...
உலக கோப்பையை போல் 
மகிழ்ந்து பார்த்தாய் !

தெருக்களில் 
நான் பட்ட 
விளையாட்டு காயங்கள் 
உனது இரவுகளை 
காயப்படுத்தியிருக்கின்றன !

தலைவலி வந்தபோது 
விக்ஸ்சும் அம்ரிதாஞ்சனும் 
தோற்றுப்போய் 
சொல்லித்தந்தன  
உன் கை விரல்களின் 
சக்தியை !

எனது மேனியில்
காய்ச்சல் வந்தபோதெல்லாம் 
உனது 
இதயத்தில் 
அனல் அடித்திருக்கிறது !

உனது
முந்தானையின் நுனி 
இருந்த தைரியத்தில் 
எனது விழி
அச்சப்பட்டதில்லை 
அழுவதற்கு !

எனக்கு 
முதல் மாச 
சம்பளம் கிடைத்தபோது 
லாட்டரியில் 
கோடி கிடைத்த 
சந்தோஷம் உனக்கு !

என்னிடம் 
பேசுவதற்காகவே 
கைபேசியை 
கற்று கொண்டவள் நீ !

எல்லா பிரார்த்தனைகளையும் 
பூஜைகளையும் 
எனக்கு மட்டுமே 
ஒதுக்கியவள் நீ !

உனக்கு பிடித்ததையெல்லாம் 
மறந்து போனாய் ...
ஆனால் 
எனக்கு 
என்ன பிடிக்கும் என 
என்னை விட 
நன்கு தெரியும் 
உனக்கு !

திருவிழா கூட்டத்திலேயே 
என்னை தொலைத்ததில்லை 
நீ ...
எங்கே தொலைத்தேன்  
உன்னை ...
இன்னமும் புரியவில்லை எனக்கு !

நீ 
காத்திருந்த திண்ணையில் 
தேடி தேடி பார்க்கிறேன் 
உனது 
அன்பின் வாசத்தை !

இன்னும் கொஞ்சம் சாப்பிடு 
என்ற குரல் செவிகளில் 
எங்கோ ஒலிக்கிறது ...
வெறுமையாய் பார்க்கிறேன் 
இலையை !

தாய் பாசம் 
நான் அறிவதற்கோ ...
இல்லை அவன் அறிவதற்கோ ...
உன்னை 
கவர்ந்து போனான் 
காலனும் ....!

ஒரு நாள் கூட 
இருக்க முடியாதே உன்னால் 
என்னோடு பேசாமல் ...
காலனை 
சபிக்க வில்லையா நீ !

எங்கே  
காத்துக்கொண்டிருக்கிறாய்  
எனது கடிதத்தை ...
எனது தொலைபேசி அழைப்பை ...
என்னை ?

போதி மரத்து 
பித்தனாய் 
நானும் காத்திருக்கிறேன் ...
வந்து சொல்வாயா
எனது துன்பத்துக்கு 
காரணத்தை !!!






நேற்றைய மலரின் சருகு !

 நெஞ்சு நிமிர்த்தி 
நிற்கும் வீரம் ...
பிஞ்சு செடிகளுக்கு 
வழி விடும் ஈரம் ...
மலையாகவேனும் 
பிறந்திருக்கலாம் !

இன்று மலர்ந்த மலர் 
மணம் வீசி சிரிக்க 
காலடியில்  மிதிபட்டு 
முனகியது  
நேற்றைய மலரின் சருகு !

அம்மனுக்கு பொற்காலம் ...

 ஏன் 

வரம் தர மறுக்கிறாய் ...

ஒரு வேளை 

என் தவத்தை 

ரசிக்கிறாயோ !


நீ பூஜை செய்யும் 

ராகு காலமே 

அம்மனுக்கு பொற்காலம் ...

உன் 

தரிசனம் கிடைக்கிறதே 

அம்மனுக்கு !


 ஏதோ ஒரு 

அமைதியான பொழுதில்  

உன்னை கண்டேன் ...

அன்றிலிருந்து 

எந்த பொழுதுமே 

அமைதியாக இல்லை !


உனக்கு பிடிக்காதென்றே 

பலவற்றை 

கடந்து போகிறேன் நான் ...

பிடிக்கவில்லை என்று 

என்னை 

கடந்து போனாய் நீ !


Tuesday, June 7, 2022

முதல் குரல்

உலகின் 
ஒவ்வொரு மொழியும் 
தவமிருக்கிறது ...
உனது முதல் குரல் 
தங்கள் மொழியே 
ஆகவேண்டுமென !

இரண்டாம் முறை 
நடை பயின்றேன் 
உன்னோடு !

உயிரற்ற 
பொம்மை கூட 
வாங்கி விட்டதே ...
குழந்தையின் 
அன்பை !

வார்த்தைகளே இல்லாமல் 
ஆறுதல் சொல்லும் 
வித்தை 
உனது 
புன்னகைக்கே உண்டு !

Saturday, June 4, 2022

நீ தேடி வரும்முன்னே

சேவக்கோழி கூவும்முன்னே 

தெனம் தெனம் எழுந்திருக்கேன் 

கண்ணீரால் வாசல் தெளிச்சு 

உயிர்க்கோலம் போட்டிருக்கேன் 


கொஞ்ச நேரம் ஒன்ன பாக்க  

மஞ்ச தேச்சு குளிச்சிருக்கேன் 

கொஞ்சம் வெரசா ஓட சொல்லி 

கெஞ்சி மணிய பாத்திருக்கேன் 


சிறுகனூர் சந்தையிலே 

கூற பொடவ வாங்கி வச்சேன் 

கொசுவம் மடிப்புக்குள்ள 

ஒந்நெனப்ப சொருகி வச்சேன் 


சிவன் கோவில் மல்லிகை பூ

சிடுக்கெடுத்து சூடி வச்சேன் 

சிறு பொழுது ஒன்ன பாக்க 

பொழுது பூரா அலங்கரிச்சேன் 


இளம் காத்தும் சிறு வெயிலும் 

உச்சி வரைக்கும் ஏறியாச்சு   

வெளுத்திருந்த நீல வானம் 

கருத்து நிறம் மாறியாச்சு 


ஜாதி மல்லி  தோட்டத்திலே 

சுத்தி வருது பட்டாம்பூச்சி 

சேதி சொல்லி யார் வருவா 

கத்தி அழுது  மனப்பூச்சி 


தனிச்சிருக்கும் காட்டுக்குயில்  

சத்தம் போட்டு கூவுதிங்கே 

குளிரடிக்கும் ஓடை காத்து 

சத்தமின்றி வீசுதிங்கே 


அடுப்படியில் அரிசியெல்லாம்  

நெருப்போடு பொங்குதிங்கே 

மனப்படியில் மகிழ்ச்சியெல்லாம் 

நீயில்லாம மங்குதிங்கே 


ஒத்தையடி பாதையிலே 

வரும் பாத பாத்திருக்கேன் 

ஒத்தையில ஒந்நேசந்தேடி 

இரு விழிதான் பூத்திருக்கேன் 


காத்துல ஒன் வாசந்தேடி  

சுற்று முற்றும் பாத்திருக்கேன்

சோத்துலதான்  நாட்டமில்ல 

பசிச்சுதானே காத்திருக்கேன்  


வரச்சொல்லி நேரமாச்சு 

அந்தி வெயிலும் சாயலாச்சு 

தெரு முனையில செட்டியாரும் 

கட சாத்தும் நேரமாச்சு 


கஞ்சனூர் கடைசி வண்டி 

கடந்து போகும் நேரமாச்சு 

கஞ்சமான ஒங்காதலால 

மனசுக்குள்ள பாரமாச்சு 


தங்கமுன்னு நெனைச்சேனே 

பித்தளையா போனதுவோ 

துளசியின்னு நெனைச்சேனே

கள்ளி செடியா போனதுவோ


காத்திருந்து காத்திருந்து

சித்தம் கலங்கி போயிடுமோ 

பாத்திருந்து பாத்திருந்து

நாடிச்சத்தம் அடங்கிடுமோ 


நாளெல்லாம் போனாலும் 

பொழுதெல்லாம் கடந்தாலும் 

நாடெல்லாம் சிரிச்சாலும் 

பழுதுன்னு நெனச்சாலும் 


காத்திருப்பேன் என்றென்றும்  

கொண்டு போகும் நாள் பாத்து 

பூத்திருப்பேன் என்றென்றும்

நீ வரும் வழி பாத்து 

 

இரும்பான எம்மனசில் 

நிராசைகள் புகுந்திடுமோ 

கரும்பான காதலைத்தான் 

துரும்பாக அரிச்சிடுமோ 


நீ தேடி வரும் முன்னே 

காலன் தேடி வருவானோ 

உனக்காக துடிக்கும் மூச்சை 

கொள்ளை கொண்டு போவானோ 

Thursday, June 2, 2022

அவர்களுக்கெப்படி தெரியும்

எத்தனை 
வாடி வாசலில் 
பயிற்சி 
எடுக்க வேண்டும் 
நான் ...
உன் விழி வாசலில் 
தடுமாறாமல் இருக்க !

வாடி வாசல் 
என்று 
சீறி வந்தேன் ...
உன் விழி வாசல் 
என்று அறியாமல் !

உன்னிடம் 
தோற்பதற்காகவே 
தினம் தினம் 
படை எடுக்கும் 
போர் வீரன் நான் !

உந்தன் 
இதய வாசல் 
திறக்கும் வரை 
என் 
வாழ்வு ஊசல் 

என் இதயம் 
அவளுக்காக 
துடித்துக்கொண்டிருக்கையில் 
அவள் இதயம் 
எனக்காக 
நடித்துக்கொண்டிருந்தது !

கவிதைகளை படித்துவிட்டு 
யார்யாரோ கேட்டார்கள் 
காதலி யாரென்று ...
பாவம் ..
அவர்களுக்கெப்படி தெரியும்
கவிதைக்கு தேவை
காதல்தான் ...
காதலி அல்ல என்று
 
எல்லா ஊரு கோவில்லயும் 
எண்ணெய் ஊத்தி 
விளக்கெரியும் ...
எங்க ஊரு கோவில்ல 
கண்ணே நீ 
பத்த வச்சா 
பச்ச தண்ணியும் 
நின்னெரியும் 

விடியல் தருகிறேன் என்று
வீட்டு வாசலில்
கத்திக்கொண்டிருக்கிறார்
ஒரு அரசியல்வாதி 
பாவம்...
அவருக்கெங்கே தெரியும் 
என் விடியல் 
நீதானென்று

ஒவ்வொரு வருடமும் 
காத்திருக்கிறேன் 
நவம்பர் எட்டு, எட்டு மணிக்காக ..
இந்த வருடமாவது 
ஒழிப்பாரா பிரதமர் 
உன் நினைவுகள் 
செல்லாதென்று அறிவித்து 
என் சோகங்களை ...!

இதய சிறையில் இருந்து 
உன்னை விடுதலை செய்ய 
தீர்மானம் போட்டேன் ...
மீண்டும் 
சிறை வைத்து விட்டது உன்னை 
தன் 
சிறப்பு அதிகாரத்தால் !

அறியாமல் 
தொலைந்து போனாயா ...
அறிந்தே 
தொலைவாக போனாயா ...
தெரியாமலே தேடிக்கொண்டிருக்கிறேன் 
நான் !

மரண வலியை 
அனுபவிக்க 
உன்னை 
பிரசவிக்க வேண்டியிருந்தது 
உன் தாய்க்கு ...
எனக்கோ 
உன் பாராமுகமே 
அந்த வலியை 
காட்டிவிடுகிறது !

விழிகளில் வில்லேந்தி 
பார்வை கணைகளோடு 
அவள்  ...
இதழ்களில் சொல்லேந்தி 
கவிதைக்கணைகளோடு 
நான் ...
வெல்வது 
வில்லா? சொல்லா ?

இதயம்

காதலால் 
பட்டை தீட்டுகிறாய் ...
ஒளியேறிக் கொண்டிருக்கிறது
என் இதயம்

தந்தையின் 
காலை கட்டிக் கொண்டு
நானும் வருவேன் 
என அடம் பிடிக்கும்
குழந்தை போல .. 
உன்னோடு வர
அடம் பிடிக்கிறது
என் இதயம்

ஒற்றை பார்வையில் 
கர்ப்பமாக்கி விட்டாய் ...
காதலை பிரசவித்து விட்டு
அனாதையாய் நிற்கிறது
என் இதயம் 

மணி முள்ளும் நீ
நிமிட முள்ளும் நீ
நொடி முள்ளும் நீ
கடிகாரமாய் ஓடுகிறது 
என் இதயம்



Wednesday, May 25, 2022

inversely proportional

 


inversely proportional

உனக்கும் எனக்குமான 

தூரமும் 

எனது சந்தோஷமும் !

Fair & Lovely

 அவள் 

செயற்கையாக அழகூட்டும் 

Fair & Lovely க்கு 

நிரந்தர எதிரி !

மழையை கண்ட

மழையை கண்ட 

மயிலாகி விடுகிறது 

உன்னை கண்ட

மனது !


ஒரு குறுஞ்செய்தியிலாவது

சொல்லிவிடு

என்னை மறக்க 

என்ன செய்தாயென்று...

நானும் முயற்சிக்கிறேன் 

உன்னை மறக்க


யோகா செய்ய சொல்கிறார் 

டாக்டர்...

மறுத்து விட்டேன்...

என் இதயத்தில் இருக்கும் 

நீ 

தத்தளிப்பாயே 

மூச்சுக்காற்று இல்லாமல் 


காதலுக்கு 

ஜாதி மதம்

இல்லையாமே ...

எரிக்கவா புதைக்கவா 

என்ற குழப்பத்தில்

இதயத்தில்

உறைந்தே விட்டது

செத்துப்போன 

உன் காதல் 


கண் சிமிட்டாமல்

உன்னை கண்ட கண்கள்

ஏங்குகின்றன 

கண் சிமிட்டும் 

நேரமாவது

நீ தென்பட மாட்டாயா 

என்று 


நீ

சிறுபொறிதான் ..

எரித்தே விட்டாய் 

என் 

இளமையை 


இடைவிடாது 

உன் உடையோடு 

கதைக்கிறது காற்று ...

இடைவிடாது 

இம்சிக்கிறது 

உன் இடை  


காலம் 

குறைந்து கொண்டே 

செல்கிறது ...

உன் மீது கொண்ட 

காதல் மட்டும் 

கூடிக்கொண்டிருக்கிறது !


எதுவும் நிரந்தரமில்லை 

என்பது 

உன் காதலுக்கு 

பொருந்தி விட்டது ...

ஆனால் 

உன் நினைவுகளுக்கு 

பொருந்தாது போலும் !


உன்னை 

மறக்க முயன்று 

மறந்து விட்டேன் ...

என்னை !


தமிழகத்துக்கு 

விடியலை தர 

பலர் போட்டி ....

என் காதலுக்கு 

விடியலை 

யார் தருவார் 

உன்னையன்றி !


யாராவது 

நம்மை எப்போதும் 

நினைத்துக்கொண்டிருந்தால் 

நமக்கும் 

அவர் நினைவு 

அடிக்கடி வருமாம் ...

உனக்கு 

அடிக்கடி வருகிறதா 

என் நினைவு !?



அதி நவீன காராம் ..

இருக்கும் 

இடத்தில் இருந்தே 

இயக்கலாமாம் ...

இதென்ன பிரமாதம் ...

எங்கோ இருந்து 

என்னை 

இயக்கி கொண்டிருக்கிறாயே 

நீ !


மழையாய் 

நீ 

வந்து போய் விட்டாய் ..

இன்னமும் 

சொட்டி கொண்டிருக்கிறது 

உன் வாசம் !

மாநாடே

 தனியாகத்தானே 

வருகிறாய் ...

பூக்களின் 

மாநாடே 

நடக்கிறதே !

Monday, May 23, 2022

பூக்களின்


நிழலே 

நீ ஏன் என்னுடனே 

வருகிறாய் -- நான் 

நானாவது வருகிறேனே -- நிழல் 


என் வழியாகத்தான் 

எல்லோரும் 

உலகை  பார்க்கிறார்கள் ...

இருந்தும் 

நான் கர்வம் 

கொள்வதில்லை -- ஜன்னல் 


பூவும் 

அவளிடம் 

கேட்கும் 

ஆட்டோகிராப் 


எத்தனையோ முறை 

நாம் 

காலடிகளால் 

அளந்த இந்த பாதை 

இப்போது 

அளக்கிறது 

எனது கண்ணீரை !


வாடா மலரான 

உனக்கு 

என்ன அழகினை 

தந்து விட போகிறது 

நீ 

கூந்தல் சூடும் 

வாடும் மல்லிகை !



நினைவுகளை மட்டும் 

இறக்கி விட்டு போகிறது 

தினம் 

நீ வந்திறங்கும் பேருந்து !


சீக்கிரம் 

காதலித்துவிடு ....

தாமதித்தால் 

என்னை காதலிக்காத 

நாட்களுக்காக 

வருத்தப்படுவாய் !


நீ 

எனது 

முதல் அழுகையா ...

கடைசி 

புன்னகையா !


காளிதாசனுக்கும் 

கம்பனுக்கும் 

இளங்கோவடிகளுக்கும் 

கிடைக்காத 

வரிகளை 

வரைந்து வைத்திருக்கிறது 

உனது உதடுகள் !


மணிக்கணக்கில் 

காத்திருந்து 

ஏழுமலையானை தரிசித்தேன் 

தெய்வத்தோடு !


நம்மூர் 

அரசியல்வாதிகளே பரவாயில்லை 

உனது 

காதல் வாக்குறுதிகளின் 

நிலையை நினைக்கும்போது !


உச்சி வெயில் காட்டிலே 

ஒன்னெனப்போ நெஞ்சு கூட்டிலே 


கள்ளம் கபடம் இல்லாதவள் 

என்று 

உன்னை நினைக்க முடியவில்லை 

என்னை 

களவாடியவள் ஆயிற்றே !


தோட்டத்து பூக்களும் 

செல்பி எடுக்க துடிக்கும் 

பூ 



கற்களால் கட்டப்பட்டது 

என்றார்கள் ...

காதலால் கட்டப்பட்டது

என்றேன் நான் !


கவிதைக்கு 

பொய் அழகுதான் ...

உன்னை 

வர்ணிக்கும் வரிகள் தவிர !


அழுகை கூட 

கவிதைதான் ...

பிறந்த குழந்தையின் 

முதல் அழுகை !



Thursday, May 19, 2022

காதல் வழக்கு

என்
காதல் விண்ணப்பத்திற்கு
நீ
பதில் சொல்லும் முன்
தான் விசாரிக்கும் 
வழக்கிற்கு
இந்திய கோர்ட்டே
பதில் சொல்லி விடும்
போலிருக்கிறதே !

ஒவ்வொரு முறையும்
உன்னிடம்
காதலை சொல்ல 
நெருங்கும் போதெல்லாம்
நாளைக்கு என
வாய்தா வாங்கி கொள்கிறது
மனது


நிமிடத்தில் கதைக்கலாம்

 தனிமனித இடைவெளிதானே வேண்டும் ...

தனக்கும் பணத்திற்கும் 

இடைவெளி யார் போட்டார்கள் ...

குழம்பினார் விவசாயி !


நம்புங்கள் 

ஆன்லைனில்தான் இருக்கிறேன் ...

ஆனால் தெரியாது 

அடுத்த வீட்டில் 

என்ன நடக்கிறதென்று !


கை கழுவுங்கள் 

வைரஸை விரட்டுங்கள் 

விளம்பரத்தை கண்டு 

நகைத்தான் பிச்சைக்காரன் 

வயிற்றை எப்படி கழுவுவது ...

பசியை எப்படி விரட்டுவது!


மரங்களை 

வெட்டி கொண்டிருந்தார்கள் ...

அந்த இடத்தில 

ஆக்சிஜன் தொழிற்சாலை 

வைக்க போகிறார்களாம் !

Tuesday, May 17, 2022

தட்பவெப்பம்

 தட்பவெப்பம் 

மாறிய பிறகுதானே 

மின்னல் தாக்கும் ...

மின்னல் 

தாக்கிய பின்பு 

மாறியது 

எனது தட்பவெப்பம் !


கண் சிமிட்டாமல் 

எவ்வளவு நேரம் 

இருக்க முடியுமோ 

அவ்வளவு நேரம் 

என்னால் இருக்க முடியும் 

உண்னை நினைக்காமல் !


கை முழுவதும் 

மிட்டாயை வைத்துக்கொண்டு 

இன்னும் கொடு என்று 

கெஞ்சும் குழந்தை போல 

இதயம் முழுக்க 

அவள் தந்த

காதலை வைத்துக்கொண்டு 

இன்னம் கொடு என அவளிடம் 

கெஞ்சுகிறேன் நான் !


எப்பொழுது

நிறுத்துவாய் ...

ஒவ்வொரு நொடியிலும் 

நீ நடத்தும் 

இதய பிரவேசத்தை !


நீ 

வந்தபோதுதான் 

காதல் வந்தது ...

நீ 

போன போது 

காதல் 

போகவில்லையே ...

இது என்ன நியாயம் !


Saturday, May 7, 2022

காதல் கடந்த பின்

 புயல் 

கரை கடந்து விட்டால்  

அமைதி ....

தென்றல் ஓன்று 

காதல் கடந்த பின் 

ஆரம்பித்தன சேதங்கள் !

ஒன்றிய காதல்

கடும் போட்டி 

உன் மீது கொண்ட 

காதலுக்கும் 

பெட்ரோல் விலைக்கும் ... 

தினம் அதிகம் அதிகரிப்பது 

யாரென !


எந்த 

புல்டோசர் கொண்டு 

இடிப்பேன் ...

உனக்காக 

இதயத்தில் கட்டிய 

காதல் கோட்டையை !


நல்லவேளை 

என் காதல் கனவுகளுக்கு 

அரசாங்கம் GST போடுவதில்லை ...

இல்லையென்றால் 

GST கட்ட நான் 

குபேரனிடம் அல்லவா 

கடன் வாங்க வேண்டும் ...


CAA NRC NPR 

எந்த சட்டத்தையும் 

மதிக்காமல் 

இதயத்தில் 

குடியமர்த்தினேன் அவளை ...

நான் 

"குடி" மகன் ஆனேன் !


காதல் நிலை

 கால நிலையால் 

வெப்ப நிலை உயர்வதாக 

சொல்கிறது உலகம் ...

எனக்கென்னவோ 

உன் காதல் நிலையால் 

என் வெப்பநிலை 

உயர்வதாகவே படுகிறது !

Wednesday, May 4, 2022

காயங்கள்

 நான் 

கர்வமற்றவன் 

என்று 

சொல்லிக்கொள்வதுகூட 

ஒரு 

கர்வம்தானோ !


கண்ணீரால் 

காயங்கள் ஆறுமென்றால் 

என் கண்ணீரால் 

இந்நேரம் 

ஆறியிருக்க வேண்டுமே 

இப்பிரபஞ்சத்தின் 

காயங்களெல்லாம் !


என் 

இதயத்தை 

ஏன் எடுத்து சென்றாய் 

என்று இப்போதுதான் 

புரிகிறது ....

நீதான் 

இதயமே 

இல்லாதவள் ஆயிற்றே !


இரவு முழுதும் 

விழித்திருக்கிறேன்

அதிகாலையில் உறங்க ...

அதிகாலையில் 

காணும் கனவு 

பலிக்குமாமே !


தலையணை மாறியதால் 

தூக்கம் வரவில்லையோ என

ஏமாந்திருந்தேன் 

இதயம் மாறியது 

அறியாமல் !


எடைக்கு போட்டிருந்தால் 

கடலையாவது 

கிடைத்திருக்கும் ...

கவிதை புத்தகங்கள் !


ஒரே புன்னகையைத்தான் 

தினம் தினம் வீசுகிறாய் ...

எனில் 

புதிது புதிதாய் 

ஜனிக்கிறது கவிதைகள் !


உனக்கும் 

எனக்கும் இடையில் 

எதையாவது 

வைப்பதாக இருந்தால் 

வைத்துவிடு 

நம் காதலை !


நீ அழகென்று 

ஊருக்கே தெரியும் 

எவ்வளவு அழகென்று 

என் 

கண்களுக்கு மட்டுமே 

தெரியும் !


விருப்போடு நினைத்தாலும் 

வெறுப்போடு நினைத்தாலும் 

இனிக்கவே செய்கிறது 

அவள் நினைவு ....

விரும்பி சுவைத்தாலும் 

வெறுப்போடு சுவைத்தாலும் 

இனிக்கும் கரும்பு போல !


வண்ணத்துப்பூச்சியே 

பூக்களும்  

நீயும் பேசிய 

ரகசியங்களை 

கொஞ்சம் சொல்லேன் ...

கவிதை எழுத வேண்டும் 


இதயப்பலகையில் 

பேரெழுதி 

காதல் பாடம் நடத்தி ...

சொல்லாமல் போனாள் 

தேர்வு வைக்காமலே !


புகைப்படம் 

ஒன்றை அனுப்பி 

இதற்கு 

கவிதை எழுது என்றாள் ...

கவிதைக்கு எப்படி 

கவிதை எழுதுவது !


துண்டு காகிதம் 

கிடைக்கும் போதெல்லாம் 

கவிதை கப்பல் 

செய்து பார்க்கிறேன் ..

காதல் மழையே 

எப்போது வருவாய் !


அவளுக்கு தெரியாதா 

காலம் கடந்தவனிடம்

ஆல காலம்  தோற்குமென்று  

இருந்தும் 

தடுக்கச் சொல்லியது

அவளது காதல் !!


இதயத்திற்கு அடங்காத காதலும் 

கண்ணுக்கு அடங்காத உறக்கமும் 

கம்பளிக்கு அடங்காத குளிரும் 

காத்திருக்கின்றன 

உனக்காக !


எங்கிருந்து வந்தது 

இந்த 

நகரும் சிலை !


திராவிட காதல்

சேர்ந்து வாழ்வது 

காதல் மாடல் ...

உன் நினைவுகளோடு 

நான் மட்டும் வாழ்வது 

இது என்ன மாடல் ! 


மொழியை திணிப்பது 

குற்றமாம் ...

எப்படி திணித்தாய் 

இதயத்தில் 

உன் காதல் மொழியை !


மனிதனை 

மனிதன் சுமப்பது 

மட்டும்தானே குற்றம் ... 

இதயத்தை 

இதயம் சுமப்பது அல்லவே !

எனில் சுமந்ததற்க்கு 

ஏனிந்த தண்டனை !


கண்கள்தான் 

காதலுக்கு காரணம்  

என்று நினைத்திருந்தேன் ...

இப்போதுதான் 

புரிந்தது ...

கண்கள் உன் பிம்பத்தை 

இதயத்துக்கு அனுப்பும் 

போஸ்ட் மேன் மட்டுமே !


எந்த சட்டமியற்றி 

தடுப்பேன் ...

என் இதயத்தில் 

உன் நினைவுகளை 

ஏந்தல்களாய் நியமிக்கும் 

உன் அதிகாரத்தை!


என் நினைவுகளை 

ரத்து செய்யும் ரகசியத்தை 

உனக்கு சொன்ன பிரம்மன் 

உன் நினைவுகளை 

ரத்து செய்யும் ரகசியத்தை 

எனக்கு மட்டும் 

சொல்லாமல் விட்டதேனோ !


எத்தனை முறை போட்டும் 

நிறைவேற மாட்டேனென்கிறது ...

ஏழு ஜென்மத்துக்கும் 

உன் நினைவுகளில் இருந்து 

விடுதலை கோரும் 

தீர்மானம் !


என் காதலுக்கு 

விடியல் 

வராவிட்டாலும் பரவாயில்லை ...

என் நினைவுகளையாவது 

தூங்க வைப்பாயா 

உன் மடியில் !



உன் நினைவுகள்

புரண்டு படுக்கும் 

பக்கமெல்லாம் 

தானும் புரண்டு 

என் தூக்கத்தினை 

கெடுத்து விடுகின்றன 

உன் நினைவுகள் !


முதல் போரிலேயே 

என் இதயத்தை 

வென்ற பின்னும் 

மீண்டும் மீண்டும் 

ஏன் படையெடுக்கின்றன 

உன் நினைவுகள் !


என் விரல் பிடித்தே 

குழந்தையாய் 

தொடர்கிறது 

உன் நினைவுகள் !


கவிதை மேகங்களை 

உருவாக்கி 

அனுப்பிக்கொண்டே இருக்கின்றன 

கடலாய்

உன் நினைவுகள் !


அல்பாயுசில் 

போய் விட்டது 

உன் காதல் ...

சாகா வரம் பெற்று 

பாடாய் படுத்துகிறது 

உன் நினைவுகள் !


கவிதை பக்கங்கள் 

என்று நினைத்திருந்தேன் ...

கண்ணீர் பக்கங்களாக்கி 

விட்டனவே 

உன் நினைவுகள் !


ஒவ்வொரு வினாடியும் 

நினைத்து நினைத்து 

தாராளமாய் 

செலவழித்தும் 

தீரவில்லை 

உன் நினைவுகள் !


தென்றலும் 

வியர்க்க வைக்கும் 

என்று 

புரிய வைத்தது 

உன் நினைவுகள் !


கலர் படமாய் 

இருந்த வாழ்க்கையை 

கருப்பு வெள்ளை 

படமாய் மாற்றி விட்டன 

உன் நினைவுகள் !


தேதி கிழிக்கும் போதெல்லாம் 

தினம் தினம் 

ஒரே ராசி பலனை 

சொல்கிறது 

நாட்காட்டி ...

உன் நினைவுகள் !


எக்ஸ்பயரி தேதி

போடாமலே

இதயத்தில் உருவாகி

நிறைகின்றன

உன் நினைவுகள் !


நீ

எனக்காக பிறக்கவில்லை

எனில்

எனக்காக 

ஏன் பிறந்தன

உன் நினைவுகள்!


வானவில்லாய் 

நீ வந்து போய் விட்டாய் 

வண்ணங்களாய் 

மனதில் நிறைந்திருக்கிறது 

உன் நினைவுகள் !


அருகில் 

இருந்த நீ 

தொலைவில் போனபோது ...

தொலைவில் இருந்து 

அருகில் வந்தன 

உன் நினைவுகள் !


அன்று 

தூங்க விடாமல் 

செய்தது 

உன் அருகாமை ...

இன்றும் 

தூங்க விடாமல் 

செய்கிறது 

உன் நினைவுகள் !


நீ 

இருந்தபோது 

பூக்களமாகவும் 

நீ 

இல்லாதபோது 

ரணகளமாகவும் 

இருக்கின்றன 

உன் நினைவுகள் !


நாட்குறிப்பில் 

வேறெதை 

எழுதுவது ...

இதயகுறிப்பில் 

நிறைந்திருக்கிறதே 

உன் நினைவுகள் !


நிச்சயம் 

இன்று தூங்கிவிடுவேன் 

என்று சபதம் எடுக்கிறேன் 

ஒவ்வொரு நாளும் ...

காலையில் 

நனைந்து போன 

தலையணையை காட்டி 

பரிகசிக்கிறது 

உன் நினைவுகள் !


தூங்குவதற்காக 

இரவுகளை படைத்ததாக 

பொய் சொல்கின்றன 

வேதங்கள் ...

அது உண்மையானால் 

இரவுகளோடு 

இறைவன் எதற்காக 

படைத்தான் 

உன் நினைவுகளை !?


முள்ளும் மலரும் 

தனித்தனியாகத்தானே 

இருக்கும் ....

இதயத்தில் இரண்டும் 

சேர்ந்தே இருக்கின்றன ..

உன் நினைவுகள் !


மேகமாய் 

நீ கடந்து போய் விட்டாய் ...

இன்னமும் 

மழையாய் 

கொட்டிக்கொண்டிருக்கிறதே 

உன் நினைவுகள் !


சிறுவயதில் 

தும்பியை பிடித்து 

நூலில் கட்டி 

விளையாடியபோது 

தெரியவில்லை ...

பின்பொருநாள் 

என்னை கட்டி 

விளையாட காத்திருக்கிறது 

உன் நினைவுகளென்று !


தயவு செய்து 

என்னை 

புதைத்த இடத்தில் 

செடிகளை நட்டு விடாதீர்கள் ...

மலர்களுக்கு பதில் 

செடிகளில் பூக்கக்கூடும் 

அவள் நினைவுகள் ...

அவள் நினைவுகளுக்குத்தான் 

மரணமில்லையே !! 

Friday, April 29, 2022

என் மனம் இருந்தது

 


வெற்று காகிதமாய்

என் மனம் இருந்தது 

உன் பெயரை 

அதில் எழுதும் வரை !


தனித்த முற்றமாய் 

என் மனம் இருந்தது 

துளசிச் செடியாய் 

நீ அங்கு தளிர்க்கும் வரை !


ரசமில்லா கண்ணாடியாய் 

என் மனம் இருந்தது 

உன் அழகு 

அதில் விழும் வரை 


வெற்று மேடையாய் 

என் மனம் இருந்தது 

நடன தேவதையாய் 

நீ கால் பதிக்கும் வரை !


பனித்துளியாய் 

என் மனம் இருந்தது 

குளிர் சூரியனாய் 

நீ உதிக்கும் வரை 


ஈர விறகாய் 

என் மனம் இருந்தது 

காதல் தீயாய் 

நீ பற்றி கொள்ளும் வரை 


என்னிடமே 

என் மனம் இருந்தது 

கண் பார்வையால் 

நீ கட்டி இழுக்கும் வரை 


எங்கே தேடுவேன் ...

உன் கண் பார்த்து 

நின்ற நேரத்தை

நீ மண் பார்த்து 

நின்ற கோலத்தை 


தடம் பார்த்து 

தொடர்ந்த இடங்களை 

இடம் பார்த்து 

சூடிய மலர்களை 


உடன் சேர்ந்து 

கழித்த பொழுதை 

கடன் வாங்கி 

களித்த முத்தத்தை 


நினைவு நீரலைகளை 

உறிஞ்சிய மேகத்தை 

கனவு பூமியில்  

பொழிந்த மோகத்தை 


கை கோர்த்து 

நடந்த இடங்களை 

மெய் கோர்த்து 

பதித்த தடங்களை 


சிறகாய் வந்த 

மின்னலை 

சிறகொடித்து போன 

தென்றலை 


மழையில் குடையாய் 

வந்தவளை 

வெயிலில் நிழலாய் 

நின்றவளை 


கனவை பரிசாய் 

தந்தவளை 

நினைவை களவாடி 

போனவளை 



காட்சி பிழையாய் 

ஆனவளை 

காதல் பிழையாய் 

போனவளை 


பன்னீர் துளியை 

நெஞ்சில் ஊற்றி 

களித்தவளை 

கண்ணீர் துளியை 

முற்று புள்ளியாய் 

வைத்தவளை 


Thursday, April 21, 2022

கவிதை மேகங்கள்

பாதையெங்கும் அவள் நினைவு 

நெருஞ்சியாய் குத்துதே !

இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !

கனவில் வரும் பாடலெல்லாம் 

கண்விழிச்சா வாடுதே !

ஏமாத்தும் மேகங்களால் 

பூநாத்து கருகுதே !


=======================


வாடிப்போனதென்னவோ நான் ...

அவள் மலராம் !


சிறகொடித்து போன 

தென்றல் 


நீ தவிர்ப்பதும் 

நான் தவிப்பதும் 


இனிப்பதே இல்லை 

நீ இல்லாமல் ...


நூலறுந்த பட்டமொன்று  

காற்றில் அலைவது போல 

நீயின்றி அலையுது காதலே !


இரும்பரிக்கும் துரும்பு போல 

நெஞ்சரிக்குது காதலே !


கண்ணீர் தினம் அரித்தும் கரையவில்லை 

விழியில் உன் பிம்பமே  


அமைதியான காட்டுக்குள்ளே 

ஆர்ப்பரிக்கும்'அருவிபோல 


நிலத்தடி நீர் உறிஞ்சும் 

கருவேலம் மரத்த போல 


வரப்போரம் 

நீ நடந்தா 

நெற்பயிரும் 

தலை நிமிருமடி !


=====


அடிக்கடி 

மேக போர்வையை 

போர்த்திக்கொண்டு 

கண்ணாமூச்சி காட்டுகிறது 

நிலவு !


கடந்து போனது 

ஒரு மேகம்  ...

காதல் மழையை 

பொழிந்து விட்டு !


காதல் கொண்ட 

இரு மேகங்கள் 

ஆசையோடு உரசியதில் 

பற்றி கொண்டது 

மோக மின்னல் !


நீ 

என் தேடலின் முடிவா ?

தவிப்பின் தொடக்கமா ?


உனக்காக 

கவிதை எழுதுகிறேன் 

என்று யார் சொன்னது ...

உன்னால் 

எழுதுகிறேன் !


கடவுளும் 

நீயும் 

ஒன்றுதான் ...

காட்சி தாராமலே 

காத்திருக்க 

வைப்பதால் !

=====================

Monday, April 18, 2022

இறைவனிடம் கெஞ்ச வைக்கிறாய்

 உன்னை 

பார்த்துக்கொண்டிருப்பதால் 

நேரம் போதவில்லை ...

கடிகாரத்துக்கும் !


எண்ணங்களை கொட்டினாலும் 

வரைய முடியவில்லை என்னாலே ... 

வண்ணங்களை கொட்டியே 

ஓவியம் வரைகிறாய் 

தரையிலே !


இலக்கணமும் இல்லை 

கருத்துக்களும் இல்லை 

எனில் 

உன் மழலைக்கு ஈடாக 

அந்த ஈசன் மொழியும் இல்லை !


========================


என்னென்னமோ பெயர் சொல்லி 

எப்படி எப்படியோ 

கொஞ்சுகிறாய் 


புரியாத கதைகளை 

முகம் பார்த்து 

புலம்பி தீர்க்கிறாய் 


இல்லாத ராகத்தில்  

தாலாட்டு பல பாடி 

தூங்க வைக்கிறாய் 


பசி இல்லாத எனக்கு 

ஊட்டி விட்டு உண்ண சொல்லி 

அடம் பிடிக்கிறாய் 


ஆடை கட்டி பூச்சூடி 

இஷ்டம் போல் அலங்கரித்து 

அழகு பார்க்கிறாய் 


ஊஞ்சலில் அமர வைத்து 

முன்னும் பின்னும் 

ஆட்டுகிறாய் 


ஒரு முறை உயிர் கொடு 

ஒரே ஒரு முத்தம் 

கொடுக்கிறேன் என 

இறைவனிடம் கெஞ்ச வைக்கிறாய் 




Thursday, April 14, 2022

ஆதியும் நீயே அந்தமும் நீயே

மனக்கடலில் நீலநிலா ஒன்று நீராடும்

நீராடும் நிலா அவளிடம்  அழகாடும் 

அழகாடும் அவளை கண்டு சோலையாடும் 

சோலையாடும் பூக்களில் தேனாடும் 


தேனாடும் அவள் விழி-கள் வடிக்கும் 

கள் வடிக்கும் விழிகண்டு மனம் துடிக்கும் 

மனம் துடிக்கும் நேரத்தில் காதல் பிறக்கும் 

காதல் பிறக்கும் இதயத்தில் கவி சிறக்கும் 


கவி சிறக்கும் மொழியிலும் தயக்கங்கள்     

தயக்கங்கள் சொல்லித்தரும் மயக்கங்கள்    

மயக்கங்கள் கொண்டுவரும் நவரசங்கள்

நவரசங்கள் தாங்காது இதயங்கள்


இதயங்கள் இடம் மாறி தடுமாறும் 

தடுமாறும் கால்களும் தடம் மாறும் 

தடம் மாறும் வாலிபத்தில் முறுக்கேறும் 

முறுக்கேறும் ஆசைகள் அவளை நினைத்தே பசி ஆறும் 


பசி ஆறும் அதரங்கள் அனல் மூட்டும் 

அனல் மூட்டும்  எண்ணங்கள் ருசி கூட்டும் 

ருசி கூட்டும் நினைப்புகள் தேரோட்டும்  

தேரோட்டும் காதல்மழை சீராட்டும்


சீராட்டும் மோகங்கள் பஞ்சணை

பஞ்சணையில் என்றுமே நீ துணை  

நீ துணை இருக்க சுவர்க்கம் காணும் நெஞ்சணை 

நெஞ்சணையில் என்றும் கொள்ளாதே  வஞ்சனை 

Saturday, April 9, 2022

உறையும் கனவுகள்

 உன்னை வர்ணித்து  

நான் எழுதிய கவிதை 

வெறும் ஒத்திகை மட்டுமே ...

அதற்கே 

மயங்கி கிடக்கிறது 

என் 

கவிதை புத்தகம் !


எல்லோரும் 

எதை அணிந்தால் 

அழகாக தெரிவோம் 

என்று தேட ....

அழகு தேடுகிறது 

உன்னை அணிவதற்கு !


=============================

வரை படம் போடாமல் 

மேஸ்திரி இல்லாமல் 

கொத்தனார் இல்லாமல் 

சித்தாள் இல்லாமல் 

வீடு கட்டி கொண்டது 

சிட்டுக்குருவி !


தோட்டத்தின் மூலையில் 

செடியின் ஓரத்தில் 

பூத்திருந்தது 

அந்த அழகான பூ ...

எனக்கு முன்னே 

அந்த பூவை 

கண்டு பிடித்திருந்தது 

ஒரு பட்டாம் பூச்சி !


அலகிடுக்கில் 

சுள்ளியை அள்ளி சென்று 

சுலபமாய் 

கட்டிவிடுகிறாய் 

சிறு கூட்டை ...


பணமின்றி 

மனிதரின்றி 

இயந்திரமின்றி 

காதலிக்கு கூட 

கட்டமுடியவில்லை 

சிறு வீட்டை !


மரத்தை கொத்தி 

மரத்தில் இடம் பிடிக்கும் 

மரம்கொத்தி போல 

மனதை  கொத்தி 

மனதில் இடம் பிடித்தது 

மனம் கொத்தி ஓன்று !

 

=====================================================

சித்திரை தேரோடும் பொன் வீதியில் 

பத்தரை மாற்று ஒன்று பவனியில் 

முத்திரை பதிக்குமோ வாழ்வினில் 

நித்திரை கெடுக்குமோ அவனியில் 


அலை வீசி கொந்தளிக்கும் கடலே 

ஆசை வீசி ஆர்ப்பரிக்கும் உடலே  

மோகம் கொண்ட மனதின் தேடலே  

தாகம் கொண்ட நதியின் பாடலே  


விழியிரண்டில் காவியம் பார்த்தேன் 

வீணில் ஆசைகள் விழிகளில் சேர்த்தேன் 

கவிதையாய் பேச வார்த்தைகள் கோர்த்தேன் 

காற்றாடி ஓடியும் முழுவதும் வேர்த்தேன் 


காணாவிடில் துருவப் பனியாய் உறைகிறேன் 

கண்டாலோ தீயில்  பனியாய் கரைகிறேன் 

கவிதையென்று எதையோ வரைகிறேன் 

காதல் சங்கத்தில் அதனை உரைக்கிறேன் 


சித்திரையும் குளிருது வாடையில்   

மார்கழியும் தகிக்குது கோடையில்

சொல்லொன்று சொல்லு ஜாடையில்  

என் காதலை ஏற்றிடுவேன் மேடையில் 


இதய வீதியில் உலா வரும் தேரே  

பார்வையாலே நடத்துகிறாள் உலகப் போரே 

அவளின்றி உறவுக்கு வழி யாரே  

மலரின்றி மணக்குமோ வாழை நாரே 


நிலாமுகத்தில் புன்னகை மலரும் 

பொழுதும் அவள் முகம் காணவே புலரும் 

கண்டாலோ  பூஞ்சோலையும் மலரும் 

காணாவிடில்  பூவும் சருகாய் உலரும் 


என்னென்ன ஆசைகள் விரியும் 

எப்போது உனக்கு அவை புரியும் 

நகக்கீறல் கண்ணாடியில் தெரியும் 

மனக்கீறல் எந்த ஆடியில் தெரியும் 


உணர்வுகள் வேர்களாய் எழுது 

ஆலமரமாய் நினைவுகள் விழுது 

காணாது தினம் தினம் அழுது 

விழியிரண்டும் ஆயின பழுது 


கொஞ்சும் குரல் யாழினை வெல்லும் 

மொழிகள் யாவும் தம்முடையதென சொல்லும் 

பாராமுகம் என்றும் என்னை கொல்லும் 

அவளின்றி என் வாழ்வு எங்கே செல்லும் 


செந்தூரமும் அவள் நெற்றி தேடும் 

சோலை பூவும் அவள் கூந்தல் நாடும் 

அவள் படம் இல்லாத புகைப்பட ஏடும் 

நீரில்லா செடியாய் உடனே வாடும் 


அவள் கனவோடு இரவு சிறக்கும் 

அவள் நினைவோடு காலை பிறக்கும்  

அவளை காணவே விழிகள் திறக்கும் 

அவளின்றி காண்பவை மறக்கும் 


ஓரப்பார்வையும் உயிர்வரை தீண்டும் 

இதயம் காதல் பசியில் அவளை வேண்டும் 

அவளின்றி கழியும் ஒவ்வோர் ஆண்டும் 

கண்ணீர் துளிகள் விழியை தாண்டும் 


முப்பொழுதும் அவள் எண்ணங்கள் கோர்க்கும் 

எப்பொழுதும் வசந்தங்கள் சேர்க்கும் 

இமைப்பொழுதும் அவளின்றி வேர்க்கும் 

அப்பொழுதே என் ஆவி தீர்க்கும் 


நொடிகள் யுகங்களாய் கடக்கும்  

மனம் போன பாதையில் கால்கள் நடக்கும் 

பாதையும் அவளை எதிர்பார்த்தே கிடக்கும் 

அவள் காலடியே சொர்க்கமென்று கேட்கும் 


நாட்கள் ஒவ்வொன்றாய் குறையும் 

நெஞ்சில் நிராசைகள் நிறையும் 

அவள் நினைவுகள் எப்போது மறையும் 

கல்லறையிலும் அவள் கனவுகள் உறையும் 


Thursday, April 7, 2022

பசிக்கு மாற்றாக

 விறகிற்கு மாற்றாக 

மண்ணெண்ணையை கண்டுபிடித்தீர்கள் !

மண்ணெண்ணெய்க்கு மாற்றாக 

எரிவாயுவை கண்டுபிடித்தீர்கள் !

எரிவாயுவிற்கு மாற்றாக

மின்னடுப்பை கண்டுபிடித்தீர்கள் !

மின்னடுப்பிற்கு மாற்றாகவும் 

எதையாவது கண்டு பிடித்து விடுவீர்கள் !


பசிக்கு மாற்றாக 

எதை எப்போது 

கண்டு பிடிப்பீர்கள் ?

Saturday, April 2, 2022

உறவுக்கு வண்ணம் பூசி

 கருவிழி தூரிகையால் 

மோக வண்ணங்களை 

தீட்டுகிறாய் நெஞ்சில் ...

உறவுக்கு வண்ணம் பூசி 

வருவாயோ வாழ்வில் !


காணும் யாவும் 

உன் வண்ணங்களை காட்டி 

பற்ற வைக்கிறது 

உன் நினைவு தீயை ...

அதன் 

சாம்பலிலாவது 

கரையுமோ உன் எண்ணங்கள !


வண்ணங்களால் 

நிறைந்த உன் காதல் 

கருப்பு வெள்ளை விழியில் 

வழிய வைத்தது 

நிறமற்ற நீரை !


கொஞ்சிய வண்ணம் 

நீ சொன்ன வார்த்தைகளில்  

சாயம் போய் விட்டது ...

இன்னமும் வண்ணங்களை 

காட்டி மாயம் செய்கிறது 

உன் எண்ணங்கள் !


என் 

கருப்பு இரவுகள் 

ஒவ்வொன்றும் 

வானவில் இரவுகளாகவே 

கழிகின்றன 

வண்ண மயமான 

உன் கனவுகளால் !


நினைத்தபோது 

வண்ணங்களை 

மாற்றிக்கொள்ளுகிறாய் 

உன் எண்ணங்களில் ....

உன் வண்ணங்களை தவிர 

வேறெதையும் அறியாது 

தவிக்கிறது 

என் எண்ணங்கள் !


உன் எண்ணங்கள் 

ஒவ்வொன்றும் 

நெஞ்சில் 

பூக்க வைக்கிறது 

பூக்களை 

பல வண்ணங்களில் ...

பூச்சூட வருவாயோ ...

வேர்களில் 

வெந்நீர் ஊற்றி போவாயோ !


கருமையே அழகு ...

உன் 

கருவண்ண கூந்தலில் 

இடம் கிடைத்ததால் 

வண்ண பூக்களும் !


பொய் வண்ணம் 

பூசி வந்த 

உன் காதலுக்கு முன்னால் 

தோற்றுப்போனது 

நிற பேதமற்ற 

என் காதல் !


ஓவியம் ஒன்று 

காதல் ஓவியத்தை 

தீட்டியது நெஞ்சில் ...

தீட்டி முடிந்ததும் 

கலைந்து போனது 

வார்த்தை புயல் 

ஒன்றில் !


உன் அழகு வண்ணங்களை 

வெண்மை கொண்ட காகிதத்தில் 

வடிக்க முனைகிறது 

கரு மை கொண்ட 

பேனா !

  




புன்னகை பூ

 உனக்கான கவிதையை 

எழுத முயற்சித்து ...

தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் ... 

இமை கொட்ட முடியாமல் நானும் ...

மை கொட்ட முடியாமல் என் பேனாவும் ...

உன் அழகில் மெய்மறந்து !


விடு கதை என்ற பெயரில் 

நீ 

விடும் கதைகள் கூட 

சுவாரஸ்யமாகத்தான் 

இருக்கிறது ...

என் 

கனவு புத்தகத்தில் !


மனதை இரும்பாக்கி கொண்டேன் 

உன் 

கண்ணில் இருப்பது 

காந்தம் என்றறியாமல் !


பார்வை என்னும் 

உளிகொண்டு 

காதல் என்னும் சிலையை 

என் 

இதயக்கோவிலில் 

செதுக்கிவிட்டு 

நாத்திகமாகி விட்டாயே !


காதல் என்ற 

நோயை தந்த நீ 

மறதி என்ற 

மருந்தையும் 

தந்தே போயிருக்கலாம் !



மனம் என்னும் வீதியில் 

நிழற்குடை அமைத்து 

காத்திருக்கிறேன்

நீ இளைப்பாற ...

ஆனால் 

வருவதென்னவோ 

உன் 

நினைவுகள் மட்டுமே !


காதலை 

குற்றமாக 

செய்து போனவள் நீ ...

நான் எப்படி 

ஆயுள் கைதியானேன் !?


ஒவ்வொரு 

திரியாய் ஏற்றுகிறாய் ...

இதயத்தில் 

ஒளி ஏற்றுகிறது 

காதல் !


உனக்கு 

மலர் பாதங்கள் என்று 

யார் சொன்னது  ...

அழிக்கவே முடியவில்லையே 

என் இதய வீதியில்

நீ 

உலா வந்த தடங்களை ! 


அழகு என்ற வார்த்தைக்கு 

அர்த்தம் நீ அல்ல ...

நீ 

அழகை விட 

கொஞ்சம் கூடுதலானவள் !


நீ 

விட்டு சென்ற இடத்திலேயே 

நிற்கிறது 

என் காதல் !

நீ 

எங்கே .. எதை ...

தேடிக்கொண்டிருக்கிறாய் !


நீரூற்றாமலே 

பூத்திருக்கிறதே 

அழகாய் 

ஒரு 

புன்னகை பூ !


நிலவில் 

நீர் இருக்கிறதா 

என்று 

எதற்கு வீண் ஆராய்ச்சி ...

பூத்திருக்கிறதே 

புன்னகை பூ !








Sunday, March 27, 2022

பொக்கை வாய்ச்சிரிப்பில்

பொக்கை வாய்ச்சிரிப்பில் 

உலகையே பதுக்கி வைத்தாய் 


மண்ணெண்ணெய் விளக்கொளியில் 

வாழ்க்கை பாடம் சொன்னாய் 


மளிகை கடைக்கும் 

சமையலறைக்கும் 

நெடுந்தூர பயணம் போனாய் 


விறகால் அடுப்பெரித்து 

விறகாய் எரிந்து போனாய் 



குமிழியை திருகினால் 

எரிகிறது அடுப்பு 

மயானத்திலும்தான் !

Saturday, March 26, 2022

கனவில் மேயும் கவிதைகள்

 இறைவனின் தூரிகையில் 

ஆயிரம் கோடி வண்ணங்கள் 

இன்பத்தில் ஆழ்த்தும் 

ஆயிரம் கோடி எண்ணங்கள் 


உலகம் முழுதும் 

அவனது சித்திர கூடம் 

அழியாத கோலங்களை 

அவன் தூரிகை காட்டும் 

 

==============================


ஒத்தையிலே நடந்து போற சிங்கார மயிலே 

ஒத்த வார்த்தை சொல்லிப்போ செவ்விதழாலே 

ஆடு மேய்ச்சு பொடி நடையும் நீ  நடக்கயிலே 

நெஞ்சுக்குள்ள குளிருதடி பட்டப்பகலிலே '


தூரப்பார்வையில் வேக வைக்குது சித்திரை வெயிலே 

ஓரப்பார்வையில் சுழன்றடிக்குது ஐப்பசி புயலே 

ஆட்டு மந்தை ஓட்டிப்போற மந்தார குயிலே  

ஒன்ன தவிர வேறெதுவும் உறைக்காது நெஞ்சிலே 


==================================


புதுசா பூவொண்ணு நெஞ்சுக்குள்ளே ஆடுதடி 

புது ஸ்வரத்தில் பாட்டொண்ணு பாடுதடி  

ஆச ஒன்னு மனசுக்குள்ள ஓடுதடி 

நாடி நரம்பெல்லாம் ஒன்னயே தேடுதடி


கொலுசு சத்தத்துல உசிரும்தான் உருகுதடி 

தின்னுஞ்சோறு தொண்டக்குழியில நிக்குதடி

சூடு வச்ச மீட்டரா இதயம் துடிக்குதடி

ஆடு ஒண்ணு கேலியாத்தான் பாக்குதடி


மலையோரம் அந்தி வெயில் சாயுதடி

மனசோரம் மோகமும்தான் பாயுதடி

கோரப்புல்ல ஆடும்தான் மேயுதடி 

நெஞ்சப்புல்ல ஒந்நெனப்பு மேயுதடி


நினைவுகளில் நீந்தி வரும் நீச்சல்காரி

கனவுகளை மேய்த்து வரும் மேய்ச்சல்காரி

கவிதை பக்கங்களை நிரப்பும் கவிதைக்காரி

உம்மென்றால் ஜென்மத்துக்கும் வீட்டுக்காரி

============================


கூட்டு வண்டி சாலையில தட தடக்குது 

குளிர் காத்துல உசிருந்தான் வெட வெடக்குது 

மின்னலோடு வானமுந்தான் இடி இடிக்குது

பின்னலோடு உனது வெட்கமுந்தான்  துடி துடிக்குது


தூரத்தில் மலை முகட்டில் அந்தி சாயும் வேளை 

பக்கத்தில் தோளோடு தோள் சாயும் சோலை

கூந்தலில் சூடிய சாமந்தியும்  மயக்குது ஆளை

வாசம் கண்டு கால்கள் பின்ன தடுமாறுது காளை


கன்னத்துல கன்னத்த சேக்குறியே 

எண்ணங்கள கலவரமா ஆக்குறியே 

இளநீர இதழிலதான் காட்டுறியே

பதநீர பார்வையால ஊட்டுறியே


தாகம் கொண்டு பூமியுந்தான் தவிச்சு நிக்குது

வேகம் கொண்டு வாடையுந்தான் வீசி அடிக்குது

மேகம் ஒண்ணு மழைத்துளிய கொட்டப் பாக்குது 

மோகம் கொண்டு தேகமுந்தான் மெல்ல வேர்க்குது 


காள மனச காளைகளும் புரிஞ்சு ஓடணும்

காதலப்போல வண்டியுந்தான் வேகம் எடுக்கணும்

வெளக்கேத்தும் முன்னே நாம ஊரு சேரணும் 

வெளக்கேத்தி காலமெல்லாம் சேந்து வாழணும் 


====================================


கண்ணால காதல் மொழி பேசுறியே 

சொல்லால அரிவாள வீசுறியே 


புல்லுக்கட்ட தலையிலதான் சுமக்குறியே 

மல்லுக்கட்டி எம்மனச பொளக்குறியே 


தூண்டா வெளக்கா மனசுல எரியுறியே 

வேண்டாத சாமியில்ல விலகித்தான் ஓடுறியே 


சேத்து வயலா மனசைத்தான் கலக்குறியே 

மௌன மொழி பேசி காதல வளக்குறியே 


பாசமெல்லாம் பாத்தி கட்டி சேத்து வச்சிருக்கேன் 

நேசமெல்லாம் கூடும் நேரம் பாத்து காத்திருக்கேன் !


முன் ஜென்மம் நான் செஞ்ச புண்ணியமடி 

ஏழு ஜென்மமும் நீ இருந்தா சொர்க்கமடி 


========================================







Sunday, March 20, 2022

இதயத்தின் ஓரம் !

சாரல் மழை பொழியும் நேரம் 

நெஞ்சம் முழுதும் ஒரு பாரம் 

கண்ணில் துளிர்க்குது ஈரம் 

இன்னமும் வைத்திருக்கிறாயா 

என் நினைவுகளை 

இதயத்தின் ஓரம் !


யார் சொன்னது 

உன்னை காணாமல்  

நான் மட்டும் தவிக்கிறேனென்று ...

என் எழுதுகோலும் 

கவிதை புத்தகமும் கூட 

ஏங்கி போகின்றன !


புறாவின் உள்ளத்தையும் 

கழுகின் சிறகையும் கேட்டேன் ...

கவிதை வானில் 

சிறகடிக்க ....

கழுகின் உள்ளத்தையும் 

புறாவின் சிறகையும்

தந்து ரசிக்கிறான் 

உலகை கவிதையாய் படைத்தவன்!


உனது காதலெனும் கடலில் 

மூழ்கித்தான் போனேன் ...

கரையேற ஆசைதான் ...

ஆனால் ...

கரையில் உன் காதல் இல்லையே !


உனது 

கண்ணில் பிறந்த காதல் துகள் 

தொற்றாய் காற்றில் பரவி 

நோயாய் நுழைந்தது இதயத்தில் ...

ஓரலைக்கே தாங்கவில்லையே 

என் இதயம் ...

இன்னமும் எத்தனை அலைகளை 

வைத்திருக்கிறாய் !


ஊர் 

உறங்கி விட்டது ...

உறங்க மறுத்து 

உடலுக்குள் இருந்து 

உள்ளத்தை 

உசுப்பேற்றுகிறதே 

உன் 

உயிர் !


முடிவில்லா காதலை 

தந்து போனாய் நீ ...

முடிவில்லா 

கவிதை பயணத்தில் நான் !


உன்னை காணும்போது 

வளர்ந்து ...

உன்னை காணாதபோது 

தேய்ந்து ...

பரிதவிக்கிறேன் நான் ..

ஆனால் ... உன்னை ...

நிலா என்கிறார்களே !


இயல் தமிழ் 

இசை தமிழ் 

நாடக தமிழ் ...

பல இருக்கிறதாம் ...

ஆனால் 

எனக்கு தெரிந்ததென்னவோ 

உனது 

காதல் தமிழ் மட்டுமே !


திரிகூட ராசப்பரும் 

பாரதியும் மட்டுமா சந்த கவிகள் ...

உனது 

கால் கொலுசு கூட 

காதல் கவிதை சொல்லும் 

சந்த கவியே !


என் இதயத்தில் 

வேர் விட்ட காதல் 

உன் இதயத்தில் மட்டும் 

எப்படி 

கிளை விட்டு ... இலையாய் 

உதிர்ந்து போனது !


ஒரே ஒரு 

காதல் விதைதான் 

விதைத்தாய் ...

காதல் காடாகி 

தவிக்குது மனது !



Thursday, March 17, 2022

மண்தான் ஜெயித்துக்கொண்டே

மலர்களை கொய்வதே 

செடியின் மீது காட்டும் 

வன்முறை 

எனும்போது  

உயிர்களை கொய்து 

எதனை  

அடையப் போகிறீர்கள் !


பொம்மைகளை 

ஏந்த வேண்டிய 

கரங்களுக்கு  

குண்டுகளை

அறிமுகம் செய்து 

ஆவதென்ன ! 


கணித சூத்திரங்களை 

கற்று தந்த 

வகுப்பறை 

மனித வக்கிரங்களை 

கற்று தரவில்லையே !


குருவிகளையும் 

ஆடுகளையும் 

துரத்தி  

மகிழ்ந்திருந்த எங்களை 

பீரங்கிகளால் 

துரத்துகிறீர்களே ...

உங்களை மரணம் 

துரத்தும்போது 

என்ன செய்வீர்கள் ! 


பீரங்கிகளின் 

கண்சிமிட்டலில் 

புல்லின் பனித்துளிகள் 

உருகிப்போயின !


கவலையின்றி 

நாங்கள் 

சைக்கிளில் திரிந்த  

தெருக்கள் 

எரிந்து 

கொண்டிருக்கின்றன 

எங்கள்

மனங்களைப்போலவே!


எங்கள் 

வயிற்றில் அடித்துவிட்டு 

வென்று விட்டதாய் 

மாரில் அடித்து கொள்கிறீர்களே ...

உலகத்தை வென்றதாய் 

கொக்கரித்து 

மாண்டு போனவர்களின்  

சாம்பலையாவது  

காட்ட முடியுமா 

உங்களால் !


மண்ணும் 

மலையும் 

நதியும் 

காற்றும் 

வெல்ல வேண்டியவை அல்ல 

மானுடத்தின் 

கவசங்கள் என்பதை 

எப்போது உணர்வீர்கள் !


எரிவது 

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல 

எங்கள் 

எதிர்காலமும் 

உங்கள் 

புண்ணியங்களும் !

மிச்சமிருக்கும் 

எச்சங்கள் சொல்லும் 

உங்கள் 

பாவக்கணக்கை !


ஜென்மங்கள் எடுத்தாலும் 

மண்ணை 

உங்களால் ஜெயிக்க இயலாது 

மண்தான் ஜெயித்துக்கொண்டே 

இருக்கும் !

 


Sunday, March 13, 2022

நான் நிம்மதியாய் உறங்க !

 விரும்பியபோது 

அணிகிறாய் ...

விரும்பாதபோது 

கழற்றுகிறாய் ...

நீ  மூக்குத்தியை 

கையாள்வதைப்போல  

உனது  நினைவுகளையும் 

அணியவும் கழற்றவும் 

முடியவில்லையே என்னால் !


பைவ் ஸ்டாரின் 

அலங்கார அறைகள் வேண்டாம் 

உனது 

இதய அறை 

ஒன்றே போதும் 

நான் நிம்மதியாய் உறங்க !


வெண்புறாவா ....

இல்லை ....

என்னை விழுங்கும் 

காதல் சுறாவா !


கண்கள் இரண்டும் 

மோகம் கொண்டு 

தழுவியதில் 

இதயத்தில் 

கருத்தரித்தது 

உன் நினைவு !

 


இயற்கையின் வர்ண ஜாலங்களை 

எழுதுகோலில் 

சிறையிட்டு பிடிக்க முயன்று   

தோற்று போன 

கவிதைக்காரன் நான் !


பூஜைக்காக கூட 

பூக்களை 

கொய்வதில்லை நான் ...

செடிக்கு வலிக்குமே !


கைகள் இல்லாமல் 

இதயம் களவாடுகிறாய் !

உதடுகளின்றி 

என்னோடு பேசுகிறாய் !

தாலாட்டு பாடாமல் 

தூங்க வைக்கிறாய் !

கால்களின்றி 

என்னோடு நடக்கிறாய் !


தோற்றத்தை காட்டி மயக்க மயில் அல்ல!

கானங்கள் இசைத்து மயக்க குயில் அல்ல!

கோவை அலகால் மயக்க கிளி அல்ல!

வெண் பஞ்சு தேகத்தால் மயக்க  புறா அல்ல!


பருந்தின் சிறகுகள் வேண்டும் 

புறாவின் மென்மை வேண்டும் 

உரச முடியாத உயரத்தில் 

பறந்து களித்திட வேண்டும் !


ஒரு தோசை ஊற்றியதற்கே 

சலித்து போகிறதே மனம் ...

எத்தனை ஆயிரம் முறை 

சலித்திருப்பாள் ...

அம்மா !!


வருடங்கள் கடந்தும் 

வரப்பில் 

அப்பா நட்ட கம்பு 

கம்பீரமாக நிற்கிறது 

மரமாக ...

அவர் சமாதிக்கு நிழல் தந்து !


இருமல் வரும்போதெல்லாம் 

நினைவில் வந்து போகிறது 

அம்மா சொன்ன 

சீராக பொடியும் 

பனை வெல்லமும் !


விரிசல் விழுந்த 

சுவரை  கண்டு 

வீடு பழசாகி விட்டது  

என்று கலங்கினேன் ...

கிடைத்தது 

புது வீடு என்று 

விரிசலில் நுழைந்து கொண்டிருந்தன 

சாரை சாரையாய் எறும்புகள் !



Tuesday, March 1, 2022

கவிதையில் ஒருவன்

நம்பிக்கை இல்லைதான் ...
இருந்தும்
பார்க்கிறேன் கிளிஜோசியம் ...
என்னால் கிடைக்கிறதே
கிளிக்கு 
ஒரு நெல்மணி!

எந்த புள்ளியில் 
ஆரம்பித்தாய் கோலத்தை ...
தெரியவில்லை!!
எந்த புள்ளியில்
ஆரம்பித்தது எனது காதல் ...
தெரியவில்லை!!

வர்ணங்கள் போர்த்தி வரும் 
வசந்த காலங்கள் 
மௌனம் போர்த்தி வரும் 
மனதின் ஓசைகள் 

நிழல் போல 
யாத்திரையில் 
கூட வருவாயோ...
நிழல் தேடி 
வழியில் 
எனை பிரிவாயோ !

நானறியா 
பனித்துளி ஓன்று 
உள்ளம் தொட்டதோ !
நானறியா 
மலர்  ஓன்று 
மொட்டு விட்டதோ ! 

ஒற்றை புன்னகையில் 
உலகை விற்று 
வித்தை காட்டுகிறாய் 
சின்ன சின்ன 
பாதம் வைத்து 
பின்னல் நடை போடுகிறாய் !


 

Tuesday, February 15, 2022

காதல்

இருபத்திநான்கு மணியில்
மாண்டு விடுகிறது
வாட்ஸ்அப்பின் காதல் ஸ்டேட்டஸ்
மாண்டாலும் மாளாது
நெஞ்சத்தின் காதல் ஸ்டேட்டஸ்

அன்பே !
உன்னை சந்தித்ததே பிழையோ ...
என் 
கவிதையிலும் 
சந்திப்பிழை !

பதிலளிக்கப்படாத பிரார்த்தனைகள்
கோரப்படாத அன்பு
அசையாத ஏமாற்றங்கள்
தீர்க்கப்படாத ஏக்கங்கள் 
நிறைவேறாத எதிர்பார்ப்புகள்
இன்னும் இருக்கின்றதே 
ஒரு மலை அளவு  ....
எந்த ஜென்மத்தில் 
தீர்த்து வைப்பாய் !

பொய்பொருள் காண்பதறிவு

ராதையே!
யமுனையில் ஓடுவது 
வெள்ளமா ...
உனது காதலா !!

பாதி உடல் தந்து
கஞ்சனானாய் சிவனே ...
முழுவதும் தந்து
முடித்திருப்பேன் ஜீவனே!!

தாயைப்போல் காதலி தேடியும்
உனக்கு கிடைக்கவில்லை
காதலியையும் தாய்போல் எண்ணும்
என் மனம்போல் உனக்கில்லை

நீயிருக்கும் இடமே 
அயோத்தி என்றவளை
மூழ்க வைத்தாய் தீயிலே...
எந்த கங்கையில் மூழ்கி
பாவம் நீக்கி
தெய்வமானாய் ராமனே!!

பன்னிரு செவியிருந்தும்
கேட்டிலன் தணிகை வேலனே ...
உன்னைப்போல் வாழ்வு கொடு
என்றவனை
பழனி வேலன் போல் மாற்றி
வஞ்சனை செய்தானே!

சேவல் கூவியதை
தெளிவாய் செவியுற்ற சிவனே
காதல் நெஞ்சத்தின்
கேவல் கேளாது 
கல்லாய் சமைந்த ஜடனே!!

உலகாளும் ஐயனே   .
சரங்களை
நீ குத்த சொன்னது
சரங்குத்தியிலா ...
உன்னை நெஞ்சத்தில் ஆளும்
மாளிகைப்புறத்தின்
காதல் நெஞ்சத்திலா!












Monday, February 14, 2022

கருவறை கவிதைகள்

இறந்தபிறகு
சொர்கத்தில் இருப்பேனோ
நரகத்தில் இருப்பேனோ
பிறப்பதற்கு முன்
சொர்கத்தில் தான்
இருந்தேன் !!